மன்னாரில் ஒரு அரகலய – மக்கள் போராட்டம்….!

மன்னாரில் ஒரு அரகலய – மக்கள் போராட்டம்….!

 — அழகு குணசீலன் —

மன்னார்த்தீவில்  கற்றாலை மின்உற்பத்தி  திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த மன்னார் மக்களின் போராட்டத்தின் வடிவமும், இயல்பும், அதற்கு எதிராக அரச இயந்திரத்தை பாதுகாக்கும் படைத்தரப்பின் மக்கள் விரோத செயற்பாடுகளும்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்ட காட்சிகளை மீண்டும் காட்டுகின்றன. ஒரு வித்தியாசம் அன்று எந்த அரசியல் சக்தி மேற்குலக அரவணைப்புடன் அரகலயவுக்கு பின்னால் நின்று வேதம் ஓதியதோ, அந்த சக்தி இப்போது அதிகாரத்தில் அமர்ந்து, அன்றைய அதிகார சக்திகளின் பாணியில் படையினரை போராட்டக்காரர்களுக்கு எதிராக களத்தில் இறக்கியிருக்கிறது.

இந்த நூற்றாண்டில் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்திற்கு ஊக்கியாக அமைகின்ற காரணங்கள் சில. மனிதாபிமானமற்ற வகையில் அதிகார சக்திகளால் நடாத்தப்படும் போர்கள். இங்கு வலதுபக்கம், இடது பக்கம் என்று வேறுபாடின்றி மக்கள் போருக்கு எதிராக அணிதிரள்கிறார்கள். அடுத்தது காலிமுகத்திடல் போன்ற அனைத்து மக்களையும் பாதிக்கின்ற பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் தங்களை பாதிக்கும் அதிகார வர்க்கத்தின் பொருளாதார தீர்மானங்ளை எதிர்த்து போராட்ட களத்தில் குதிக்கிறார்கள். இவை இரண்டையும் தவிர்த்து மக்களின் ஜனநாயக கோரிக்கைகள் ஆட்சியாளர்களால் அலட்சியப்படுத்தப்படும்போது, குறிப்பாக அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட வாழ்வில் வயிற்றில் அடிக்கும் திட்டங்கள் அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களின் அல்லது உள்நாட்டு தனியார் துறையினரின் இலாபத்தை முதன்மைப்படுத்தி செயற்படுத்த முற்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆட்சேபித்து மக்கள் போராடுகிறார்கள்.

 இந்த வகையில் மன்னார் மக்களின் போராட்டம் மூன்றாவது வகைக்குள் அடக்கக்கூடியது. இது விடயமாக கடந்த சில மாதங்களாக நடந்த சில நிகழ்வுகளை சுருக்கமாக குறிப்பிடுவது இந்த மன்னார் மக்களின் போராட்டத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி அமைச்சரவையின் துறை சார்ந்த முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

* ஆகஸ்ட் பதின்மூன்றாம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதுவிடயமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த முடிவு குறித்து முதலில் தங்களுடன் பேசப்படும் என்று மன்னார் மக்கள் எதிர்பார்த்தனர்.

* இந்த நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில் செப்டம்பர் இருபத்தியிரண்டாம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று, அதே தினத்தில் மன்னார் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

* இதன்படி ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக குறிப்பிட்ட காற்றாலை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த  ஒருதலைப்பட்சமாக முடிவாகியுள்ளது. 

மன்னார் மக்கள் ஜனாதிபதி தங்களுக்கு அளித்த வாக்குறுதியை – போக்குக்காட்டி மீறி விட்டார் என்று  கருதுகின்றனர். இந்த நிலையில் தான் இரவோடிரவாக காற்றைலை உபகரணங்களை பொலிஸ் பாதுகாப்புடன் ஏற்றி வந்த இராட்சத வாகனங்களை மறித்து மக்கள் போராடினர். இந்த மன்னார் மக்களின் போராட்டம் இரண்டு மாதங்களாக தொடர்கிறது என்பது அரசாங்கமும், அரசியல்வாதிகளும் அறியாத ஒன்றல்ல.

சரி இந்த நிலையில் மன்னார் தீவு மக்கள் என்ன சொல்கிறார்கள்.

1. நாங்கள் அபிவிருத்திக்கு திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

2. இந்தக் காற்றாலைத் திட்டம் எங்கள் வாழ்வாதாரத்துடன் விளையாடுகிறது, இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகிறது, இதனால் இதற்கு மாற்றுத் தீர்வு காணப்பட வேண்டும். 

3.காற்றாடிகள்  சுழல்கின்ற போது பாரிய இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக அளவுக்கு அதிகமான சத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. குறிப்பாக குழந்தைகள், சிறு பிள்ளைகளின் அமைதியற்ற இயல்புக்கு இது எதிர்காலத்தில் காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் / துறைசார் நிபுணர்கள் தரை, ஆகாய, நீர் வழி போக்குவரத்துக்களிலேயே இதுகுறித்து கவனம் செலுத்துகின்ற காலம் இது.

4.மன்னார் தீவிலுள்ள பனைமரங்கள் அங்கு வாழும் மக்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக அமைகின்றன.  அப்படி இருந்தும் பனை மரங்களை தங்கள் சொந்தத்தேவைகளுக்கு வெட்டுவதற்கு தடைவிதித்துள்ள அரசாங்கம் இந்த திட்டத்திற்காக ஆயிரக்கணக்கில் பனை மரங்களை எப்படி வெட்ட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.  வடக்கு மக்களின் பொருளாதார வாழ்வியலில் பனைகளின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடிய ஒரு வளம் அல்ல.

5. பனைமரங்கள் மன்னார் தீவின் நிலத்தடி நீரைப்பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பை செய்கின்றன. பனை மரங்கள் அளிக்கப்பட்டால் மன்னார் தீவில் நிலக்கீழ் நீர் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

6.காற்றாலைகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் வகையில் வீதி அமைக்கப்படவேண்டும். இந்த வீதி ஒரு மீற்றர் உயரத்தில் அமைக்கப்படும்போது, இது  வெள்ளம் வடிவதற்கு தடையாக அமைவதுடன், வயல்கள், குடியிருப்பு நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கவும் வழிவகுக்கிறது. 

7. இத்திட்டத்தின் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட காற்றாலைகள் மக்கள் குடியிருப்பில் இருந்து தூரத்தில் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது அமைக்கப்படவுள்ள 21 காற்றாலைகளும் மக்கள் குடியிருப்புக்களுக்கு  நெருக்கமாக அமைவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

8. சர்வதேச மட்டத்தில் காற்றாலை திட்டங்களின் போது முதன்மை பெறும் விடயம் பறவைகளின் பாதுகாப்பாகும். இது இலங்கை மன்னார் பிரதேசத்திற்கும் பொருத்தமான ஒன்று. இப்பிரதேசத்திற்கு 30 நாடுகளில் இருந்து 250 வகையான பறவை இனங்கள் புலம் பெயர்வதாக புலம்பெயர் உயிரின பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகின்ற 15 இலட்சம் பறவைகளில் 10 இலட்சம் மன்னார் பிரதேசத்தில் மட்டும் அடைக்கலம் புகுகின்றன என்றும் அந்த அமைப்பின் ஆய்வுகள் கூறுகின்றன.

 பொருளாதார அபிவிருத்தி கோட்பாடுகள் அபிவிருத்தி திட்டம் ஒன்றினால் ஏற்படும் நன்மைகளை மட்டும் முதன்மை படுத்தி மதிப்பீடு செய்யும் காலம் மலையேறிவிட்டது. இந்த நூற்றாண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உலகம் அதிகம் பேசுகின்ற காலம். அதன் பாதிப்புக்களை மக்கள் புவியியல் காலநிலை சார்ந்து ஆண்டுதோறும் அனுபவித்துவருகின்றனர். இந்த அனுபவங்களில் இருந்துதான் மன்னார் போராடுகிறது என்பதை அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை அபிவிருத்தி கொள்கை வகுப்பாளர்களுக்கு இருக்கிறது. இதில் அரசாங்கம்தான் கவனம் செலுத்துவதற்கு மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறதே அன்றி வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளும், நிறுவனங்களும் அல்ல.

மன்னார் காற்றாலை திட்டம் குறித்து 2014 இல் கருக்கூட்டப்பட்டது. இதன்படி இலங்கை மின்சார சபை 30 காற்றாலைகளை அமைத்தது. இதன் மூலம் 2020 இருந்து 103 மெகாவாட் ‌மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இலங்கையின் பாரிய முதலாவது காற்றாலை மின் உற்பத்தி திட்டம் என்பதும், தேசிய மட்டத்தில் இணைக்கப்பட்டு செயற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னார் -தம்பபவனி திட்டம் என்ற பெயரைக்கொண்ட இத்திட்டத்தை அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச 2020 டிசம்பர் 8ம் திதி திறந்த வைத்தார். அப்போது அவர் கூறிய ஒரு விடயம் முக்கியமானது.

“இப்போது வரை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் துறைக்கு சொந்தமானவை. ஆனால் மன்னாரில் திறக்கப்படும் இந்த காற்றாலை மின் நிலையம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான முதல் காற்றாலை மின் நிலையமாக வரலாற்றில் இடம்பெறுகிறது”

 இந்த தேசிய முதலீட்டு போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.  விதேசிய அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அந்த  இந்தியாவின் அதானி நிறுவனம் கொந்துராத்து ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டதன் பின்னர் உள்ளூர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் ‌ 52 காற்றாலைகளை நிறுவி 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது. மன்னார் கடற்கரையில் 13 கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அமையவுள்ள இத்திட்டம் 150 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.  இது முழுமையாக செயற்படும் போது இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கான மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். 

குறிப்பிட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்ட களநிலை ஆய்வறிக்கை பல விடயங்களை மறைத்து ஒரு தலைப்பட்சமாக பேசுகிறது என்றும், மன்னார் வாழ் மக்களின் சமூக, பொருளாதார இருப்பை புறக்கணித்த ஆய்வு இது என்றும் சிவில் அமைப்புக்கள் பலவும் குற்றம்சாட்டுகின்றன.

இந்த நிலையில் பொருளாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கை அற்ற கோஷங்களை  மட்டும்  மூலதனமாக இட்டு  அறிக்கை அரசியல் செய்கின்ற தமிழ்த்தேசிய அரசியலும் மன்னார் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைக்கு பொறுப்புக் கூறவேண்டும். வெறுமனே அநுர அரசாங்கத்தின் தலையில் மட்டும் மிளகாய் அரைத்து தப்பிக்க முடியாது.

இந்திய நிறுவனத்திற்காக அன்று மூடிய வாயை திறக்க முடியாமல் தமிழ்த்தேசிய அரசியல் இன்று திண்டாடுகிறது. 

தமிழ்த்தேசியத்திற்கே விலை பேசுகின்ற இவர்களுக்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன……?