— அழகு குணசீலன்—
இலங்கையின் சமகால பாரிய நெருக்கடிகள் இரண்டு. ஒன்று முக்கால் நூற்றாண்டுகளாக புரையோடிப்போயிருக்கின்ற இனநெருக்கடி. மற்றையது மூன்று ஆண்டுகளாக மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி. இன நெருக்கடிக்கு பயங்கரவாத பிரச்சினை என்றும், பொருளாதார பிரச்சினை என்றும் பெயர் சூட்டி பல தசாப்தங்களாக அரசாங்கம் மேற்கொண்ட யுத்தமும், அதற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் மேற்கொண்ட எதிர் ஆயுதப்போராட்டமுமே இன்றைய பொருளாதார நெருக்கடியின் மூல காரணமாகும். மற்றையவற்றை துணைக் காரணங்கள் அல்லது பொருளாதார நெருக்கடியை துரிதப்படுத்திய அரசியல், பொருளாதார கொள்கைவகுப்பு சார்ந்த உடனடிக்காரணங்கள் என்று கூறமுடியும்.
இந்த நிலையில் தேசிய சமாதானப்பேரவை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை சமகாலத்தில் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. அதில் உள்ள வாசகங்கள் கவனிக்கத்தக்கவை.
“இனப்போரும், கடந்த காலத்தைய பாரிய வன்முறைகளும் வெறுமனே குற்றவியல் செயற்பாடுகள் அல்ல. அவை ஒரு பெரிய அரசியல் போராட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பால் நீண்ட உறுதிப்பாட்டுக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடிய பரந்தளவிலான அரசியல் கருத்தொருமிப்பு தேவைப்படுகிறது. உண்மையைக் கண்டறிவதிலும், பொறுப்பு கூற வைப்பதிலும் உள்ள நாட்டம் சகலருக்கும் ஒரேமாதிரியானதாகவும், அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 37 வருடங்களுக்கு முன்னர் அத்து மீறல்கள் இடம்பெற்ற பட்டலந்தைக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் ஒரே மாதிரியான நீதி அவசியமாகிறது.”
இந்த அறிக்கையில் உள்ள பல வார்த்தைப் பிரயோகங்கள் பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் இடையிலான கைகுலுக்கலுக்கு இந்திய ஊடகங்களையும் விஞ்சி “சால்வை” போடும் இலங்கை ஊடகங்களுக்கும், பத்தி எழுத்தாளர்களுக்கும் சமர்ப்பணம். இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை அநுரகுமார அரசாங்கம் தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த, மோடி அரசாங்கம் தனது பாதுகாப்பு தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் தீர்கப்படாத ஒரு இனநெருக்கடி இருக்கிறது என்பதையும், அதற்கு 13 வது திருத்தத்தின் ஊடாக பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு உண்டு என்பதையும் இரு தலைவர்களும் கண்டும் காணாதவர்களாக, கேட்டும் கேட்காதவர்களாக அரசியல் குறுக்கு ஒழுங்கைக்குள் கைகுலுக்கி இருக்கிறார்கள்.
இதற்கான பொறுப்பை தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகள் மீது குந்தி இருந்து அரசியல் சவாரி செய்யும் தமிழ்த்தேசிய அரசியலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் மோடியை கிழக்கிற்கு – திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் கூட இவர்களால் சாதிக்க முடியவில்லை. இது கடந்த பல தசாப்தங்களாக தமிழ்த்தேசிய அரசியல் கடைப்பிடித்த காலாவதியான இராஜதந்திர அணுகுமுறையின் படுதோல்வி. இது தமிழ்த்தேசிய தரப்பை புது டெல்லியில் இருந்து தூர விலக்கி வைத்து இருப்துடன், கொழும்பை டெல்லிக்கு மிக நெருக்கமாகவும் கொண்டு வந்துள்ளது. ஆக, பிரதமர் மோடிக்கு சூட்டாமல் ஜனாதிபதி அநுரகுமார “மித்ர விபூஷண” என்ற நட்பின் அடையாளமான கிரீடத்தை யாருக்கு சூட்டமுடியும்?
ஏற்கனவே முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி மவ்மூன் அப்துல் கயூம், பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த விருது வழங்கல் ஊடாக இலங்கை இந்தியாவுக்கும், பிராந்தியத்திற்கும் இன்னொரு செய்தியை சொல்லி இருக்கிறது. இந்தியாவுடனான சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இதை இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால அரசியலில் குறைத்து மதிப்பிட முடியாது.
“SRI LANKA WON’T ALLOW ITS LAND TO BE USED AGAINST INDIA”.
என்ற ஜனாதிபதியின் வாசகத்தை பாராளுமன்றத்தில் மீட்டல் வகுப்பு நடாத்தி ஆமோதித்து இருக்கிறார் சிறிதரன் எம்.பி.
“THIS VISIT HAS REAFFIRMED THE DEEP CULTURAL, SPIRITUAL AND
CIVILISATIONAL TIES BETWEEN OUR TWO NATIONS”.
என்று பேசினார் மோடி.
இங்கு பிரதமர் மோடி கூறியுள்ள கலாச்சார உறவு இந்திய இந்துத்துவாவுக்கும், இலங்கை பௌத்தத்திற்கும் உரியதன்றி வேறென்ன? தமிழ்த்தேசிய அரசியல் “தொப்பிள் கொடி” அரசியலை ஒரு தலைக்காதலாக பேசிக்கொண்டிருக்க, மறுபக்கத்தில் உண்மையான காதலர்கள் ஓடிப்போய்விட்டார்கள்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான குறிப்பிட்ட ஏழு ஒப்பந்தங்கள் தொடர்பாக ஊடகங்கள் நிறையவே பேசிவிட்டன. ஒப்பந்தங்கள் குறித்த உள்ளடக்கம் இல்லாமல் வெறும் வாயை மென்ற கதைகளாகவே இவை இருந்தன. அரசாங்கம் ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை வெளிப்படையாகப்பேச இன்னும் தயாராக இல்லை. அமைச்சர்கள் ஆளுக்கொரு கதையை அளந்து விடுகிறார்கள். இறுதியாக தகவல் அறியும் உரிமையின் கீழ் பாராளுமன்றத்தில் கேட்குமாறு ஒரு “பொறி” வைக்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கான பதிலை அரசாங்கம் பையில் வைத்திருக்கிறது. அந்தப்பதில் இப்படி இருக்கும். “நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன் கருதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக வெளியிட முடியாது” என்பதாகும். மேலும் சொன்னால் நீங்கள் அதை வெளிப்படுத்த கோருவது தேசத்துரோகம் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.
பிரதமர் மோடியை திருகோணமலைக்கு வருமாறு ஆறு.திருமுகன் டெல்லிக்கு அழைப்பிதழ் கடிதம் அனுப்பினார். இது இரா.சம்பந்தர் மோடிக்கு அனுப்பிய கடிதம் போன்றதுதான். அது இன்னும் மோடியின் கைக்கு கிடைக்கவில்லை போலும். ஆனால் அநுர அரசாங்கம் அலுவல்களை திட்டமிட்டு கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறிய கட்டியம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.
“தற்போது கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட ஒரு குழு செயற்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது” என்றார் அவர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு இளைஞரை, “அந்த சட்டத்தை நீக்குவதாக கூறி கதிரையைப்பிடித்த” ஜனாதிபதி, தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சராக ஒப்பமிட்டார்.
இவற்றின் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மோடி திருகோணமலைக்கு செல்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. ஆனால் இந்திய உதவித்திட்டங்களை இன்னோரு கையால் பெற்றுக்கொண்டது. திருகோணமலையின் சிங்களமயமாகும் காட்சிகளை மோடியின் கண்களில் படாமல் தடுப்பது அரசாங்கத்தின் திட்டம்.
இந்து – பௌத்த மதங்களுக்கு இடையே பாலம் கட்டுபவர்கள் உண்மையில் செய்திருக்க வேண்டியது என்ன? புத்தசாசன அமைச்சு ஒன்றை அரசாங்கத்தில் நிறுவிக்கொண்டு, சகல மதங்களையும் சரிசமமாக கையாள்வோம் என்பவர்கள் செய்திருக்க வேண்டியது என்ன? வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரம் போன்று, திருக்கோணேஸ்வரத்திற்கும் அழைத்து சென்றிருந்தால், இது விடயத்திலாவது ஒரு சமப்படுத்தலை செய்கிறார்கள் என்று கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அதைச் செய்யாமல் மோடிக்கு இராமேஸ்வரத்திற்கு வழிகாட்டி விட்டார்கள். இதில் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி மறைமுக ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். திருகோணமலை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த வெளிவிவகார பிரதி அமைச்சரும் மௌன விரதம் பூண்டார். யாழ்ப்பாணம், கொழும்பு இந்திய தூதரகங்களில் தேனீருக்கு அடிபிடிப்படும் தமிழ்த்தேசிய எம்.பி.க்கள் இது விடயத்தில் போதிய கால அவகாசத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பு புரிந்துணர்வு இணக்கப்பாடு தொடர்பாக மார்ச் 29, 2025 இல் டெல்லியில் ஒரு கசிவு ஏற்படும் வரை பெரிதாக யாரும் அறிந்திருக்கவும் இல்லை, அலட்டிக்கொள்ளவும் இல்லை. விபரங்கள் இன்னும் பாராளுமன்றத்திற்கு தெரியாது. அமைச்சரவைக்கு தெரியாது. ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, விஜய ஹெரத் மற்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோரே விபரம் தெரியாமல் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசி மழுப்புகிறார்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை வெளியிடுமாறும்/ இரத்துச் செய்யுமாறும் வீதியில் வன்முறையில் இறங்கிய ஜனநாயக போராளிகள் இவர்கள்தான்.
துறைமுக முதலீடுகள் மூலம் சீனாவின் இருப்பு இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் இந்த முதலீடுகள் இந்தியாவுக்கு விருப்புக்குரியதாக இல்லை. ஏனெனில் இந்த முதலீடுகள் இராணுவ நோக்கில் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை இந்தியாவுக்கு உண்டு. இந்த முகச்சுழிப்பை , புன்சிரிப்பாக்குவதற்கு பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுத்திருக்கிறது. “மித்திரசக்தி” மகுடத்தின் கீழ் இந்தியாவும், இலங்கையும் கூட்டு இராணுவ, கடற்படை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கட்டுப்பாடு குறித்து இருக்கின்ற அச்சத்தை இந்தியாவைக் கொண்டு அமெரிக்கா சற்று குறைக்கும் இராணுவ மூலோபாயமாகவும் இது அமைகிறது. அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களில் சீனா கால்பதித்துள்ள நிலையில் இந்தியா காங்கேசன்துறை, திருகோணமலை துறைமுங்களில் கால் பதிக்கிறது. இதற்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறது. இந்த பனிப்போரில் இலங்கையின் நிலை ஒரு காலத்தில் ஆப்பிழுத்தி குரங்கின் கதையாகாது என்று எப்படி நம்புவது.
இந்தியா தனது இராணுவ, பொருளாதார நலன் சார்ந்து இராஜதந்திர நகர்வுகளை நகர்த்துகின்ற நிலையில் , அதற்கு துணை போவதன் மூலம் வடக்கு கிழக்கின் சுயாதீனத்தை இந்திய இராணுவ நலன்களுக்காக அநுரகுமார அரசாங்கம் அடவுவைத்துள்ளது. இதைப்புரிந்து கொள்ளும் பூகோள அரசியல் அறிவற்ற தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியாவுக்காக இலவசமாக சாக இந்துசமுத்திரத்தில் சீனாவுக்கு எதிராக கேடயங்களுடன் நிலையெடுக்க மோடியினதும்,அநுரவினதும் கட்டளைக்காக காத்திருக்கிறார்கள்.
இப்போது இந்த தமிழ்த்தேசிய தரகு அரசியல் மோடிக்கு வெறும் செல்லாக்காசு. சிங்கள தேசத்தின் மூலஸ்தானத்தில் அவர் இடம்பிடித்துவிட்டார் . இதற்கு இந்தியா கொடுத்த விலை ஈழத்தமிழர்கள். மற்றும் 13 வது திருத்தத்தையும், அதிகாரப்பரவலாக்கத்தையும் கைகழுவியது. ஈழத்தமிழர் அரசியல் அநுரவின் கைகளுக்கு நழுவியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்திற்கு பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி.
இனி: படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் அனைத்தும் அந்த ஆண்டவனே!