எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் 

எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் சகல  தமிழ் அரசியல் கட்சிகளும்  முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட  தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு  தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்திருக்கின்றன. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும்போது தமிழ்க்கட்சிகள் ‘அனர்த்தத்தை’ தவிர்ப்பதற்காக விவேகத்துடன் முகங்கொடுக்க ஒரு அரசியல் சமராக  உள்ளூராட்சி தேர்தல்கள் விளங்குகின்றன.

2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை கைப்பற்றியதன் மூலம் படைத்த முன்னென்றுமில்லாத சாதனை தமிழ் தேசியவாத அரசியலின்  எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியது. தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாக அரசியல் இணக்கத்தீர்வொன்றை காண்பது தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் வரலாற்றைக்கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு தமிழ்க்கட்சிகளை தடுமாற வைத்தது.

உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான 16 வருடங்களில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதில் தமிழ்க்கட்சிகள் நிலவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில்  நடைமுறைச் சாத்தியமான  அணுகுமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதால் அவற்றின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் கணிசமானளவுக்கு  திரும்பினார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், கடந்தகால அனுபவங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கின்ற படிப்பினைகளின் அடிப்படையில் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும் பக்குவமும் ஆற்றலும் இல்லாத தமிழ்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை ஒரு தற்காலிக தடுமாற்றம் என்றே நோக்குகின்றன என்று தெரிகிறது. 

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளை விடவும் தமிழ் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும்  மொத்தமாக கிடைத்த வாக்குகள் மிகவும் அதிகமானவை என்பதால் தேர்தல் முடிவுகளை தமிழ்த் தேசியவாதத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதாக வியாக்கியானம் செய்யமுடியாது என்று வாதிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அத்துடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தினாலேயே தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட விரும்பியதாகவும் அவற்றின் தலைவர்கள் இன்னமும் நினைக்கிறார்கள். 

மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை வழமையாக வெறுத்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட உள்ளூராட்சி தேர்தல்களுக்காக, சில உதிரிக்கட்சிகளுடன் என்றாலும், புதியதொரு  கூட்டணியை அமைத்து பிரசாரங்களை முன்னெடுத்திருக்கிறார். இலங்கை தமிழரசு கட்சி தனியாகவே போட்டியிடுகின்றது. ஆனால், தற்போதைய தேர்தல் முறை காரணமாக உள்ளூராட்சி சபைகளில் நிருவாகத்தை அமைப்பதற்கு மற்றைய தமிழ்க்கட்சிகளின் ஆதரவு அவசியம்  என்பதால் அவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்வதை  அது இயன்றவரை தவிர்க்கிறது.

தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவையே வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் நிற்கும் பிரதான அணிகள். இவை சகலதுமே ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டிய முறை குறித்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் அவற்றுக்கு இடையிலான கட்சி அரசியல் போட்டியை அம்பலப்படுத்துகின்றன. 

ஒவ்வொரு அணியின்  அரசியல்வாதிகளும்  தங்களுக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் மீதான பற்றுறுதியை மீண்டும் வெளிக்காட்டுவதற்கான ஒரு தீர்க்கமான சந்தர்ப்பமாக உள்ளூராட்சி தேர்தல்களை பயன்படுத்துமாறு அவர்கள் தமிழ் மக்களிடம் கெஞ்சுகிறார்கள்.

புத்தாண்டில் தமிழ் மக்கள் புதியதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல், கலாசார தேசியவாத உறைவிடமாக கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுவது தவறு என்று வாதிடுகிறார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாடொன்றில் உரையாற்றிய சுமந்திரன் தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 சதவீதமான வாக்குகளே கிடைத்தன என்றும் மற்றைய அனைத்து தரப்புகளுக்கும் கிடைத்திருக்கின்ற வாக்குகளை ஒவ்வொன்றாக நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன என்றும் கூறினார்.

மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில்  தேசிய மக்கள் சக்திக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்த காரணத்தால் தமிழ் மக்களின் ஆணை தங்களுக்கே கிடைத்தது என்று  ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க உட்பட  அதன் தலைவர்கள் உரிமை கோருவது உண்மையா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமைகின்றன என்று குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கு தெளிவான ஆணையை தருமாறு தமிழ் மக்களிடம் வேணடுகோள் விடுத்திருக்கிறார்.

“தேசிய மக்கள் சக்திக்கு அல்லது தென்னிலங்கை கட்சிகளுக்கு எமது மக்கள் ஆணையை வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில்  வாக்களித்ததை போலன்றி உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ்க் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். அவ்வாறு நாம் விடுக்கும் வேண்டுகோளை எந்த தமிழ்க்கட்சிக்கும் வாக்களிக்கலாம் என்று மக்கள் அர்த்தப்படுத்தக் கூடாது. பல தமிழ் கட்சிகளுக்கு வாக்குகளை பிரித்து வழங்கினால் பாராளுமன்ற தேர்தலில் கிடைத்ததைப் போன்ற முடிவுகளே உள்ளூராட்சி தேர்தலிலும் கிடக்கும்.  

“பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசு கட்சிக்கு மாத்திரமே வாக்களிப்பதன் மூலமாக தமிழ் மக்கள் தங்களின் ஆணை ஒரு தமிழ்க் கட்சிக்கே இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும். தமிழ் மக்களின் ஆணை குறித்து செய்யப்படுகின்ற பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

சுமந்திரனை போன்றே மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளின்  தலைவர்களும் தங்களது கூட்டணிகளுக்கு மாத்திரமே  வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்கிறார்கள். அவ்வாறு வேண்டுகோள் விடுக்கும்போது அவர்கள்  தமிழ்தேசியவாதத்தை பாதுகாப்பதில் தங்களுக்கு மாத்திரமே அசைக்கமுடியாத  பற்றுறுதி இருப்பதாக பிரத்தியேகமாக உரிமை கோருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த கட்சிகளுக்கு உள்ளூராட்சி தேர்தலில் பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகின்ற போதிலும், அவற்றினால் ஒரு குறைந்தபட்ச அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முடியாத அளவுக்கு கட்சி அரசியல் போட்டியும் ஆளுமை மோதல்களும் தடையாக இருக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தைக் காண்கிறோம்.

தேசிய மக்கள் சக்திக்கும் தென்னிலங்கையின் மற்றைய பிரதான பழைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில்  தமிழர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை எந்தவிதமான  வேறுபாடும் கிடையாது என்று தமிழ்க்கட்சிகள் மக்களுக்கு கூறுகின்றன. அதேவேளை, வடக்கு, கிழக்கில் தங்களுக்கு கூடுதலான பாராளுமன்ற ஆசனங்களை தந்த மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்தும் தக்கவைக்கக்கூடியதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த ஆறுமாத காலச் செயற்பாடுகள் அமையவில்லை என்பது திட்டவட்டமான உண்மை. 

தமிழ்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பார்களா அல்லது அந்த கட்சிகளின் இதுவரையான அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் மீது அவர்களுக்கு இருந்துவரும் வெறுப்பு தணியவில்லையா என்பதை மாத்திரமல்ல, தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளினால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்களா என்பதையும் உள்ளூராட்சி தேர்தல்கள் வெளிக்காட்டும் என்று நம்பலாம்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகட்டுவதற்கு விரும்பினார்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் அவற்றின் தலைவர்கள் எந்தப் பயனையும் தராத தங்களது இதுவரையான அரசியல் பாதையை மாற்றுவதில் அக்கறை காட்டாமல் வெறுமனே கற்பனாவாத தேசியவாத சுலோகங்களையே ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் மக்களின் நியாயபூர்வமான தேசிய வாத அரசியல் அபிலாசைகளை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு தேசிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதில் இருந்து தமிழ் மக்களை திசைதிருப்புவதற்கு மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியிருப்பதும் உள்ளூராட்சி தேர்தல்கள் தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானவை என்று கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதும் உண்மையில் தமிழ் தேசியவாத கட்சிகளின் மிகப்பெரிய ஒரு தோல்வியாகும். அவை தங்களது எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களில் பணயம் வைத்திருக்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *