— கருணாகரன் —
இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள்.
இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால், அப்படித் தேர்தலுக்குப் பின்னரும் வரக்கூடியவர்கள் யார்? வெற்றியீட்டிய தரப்புகளிலிருந்து சிலவேளை யாரும் வரலாம். தோல்வியைச் சந்தித்த தரப்புகள் தமக்கு என்ன வேலை என்ற கணக்கில் ஒதுங்கிக் கொள்ளும். அதுவே வழமை. அவர்களெல்லாம் பிறகு, இன்னொரு தேர்தலின் போதுதான் மீண்டும் மக்களிடம் வருவார்கள். இதுதான் நமது சூழலிலுள்ள அரசியலின் நிலைமை.
தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அப்பால் சென்றே பெரும்பாலான பரப்புரைகளும் நடக்கின்றன. ஒரு வேட்பாளர் செலவழிக்க வேண்டிய நிதியின் வரையெல்லை குறிக்கப்பட்டாலும் அதற்குள் நின்று யாரும் தமது பரப்புரையை முன்னெடுப்பதைக் காண முடியவில்லை. நிதி மட்டுமல்ல, தேர்தற் பரப்புரைக்கென வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் கடந்துதான் பலரும் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். ஆட்களை வளைத்துப் போடுவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய முயற்சிக்கின்றன சில தரப்புகள். அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லை வரையில் செல்கிறார்கள். இப்போதே பலருக்கு உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றன. தேர்தலில் வெற்றியீட்டினால் ஒப்பந்த வேலைகளை வழங்குவது தொடக்கம் அபிவிருத்திப் பணிகளுக்கான கொள்வனவில் சலுகை, முன்னுரிமை, வாய்ப்பளித்தல் என இந்த உத்தரவாதங்களின் பட்டியல் நீள்கிறது.
இதொரு புறமென்றால், பரப்புரைகளின்போது ஒவ்வொரு தரப்பும் (கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும்) ஒவ்வொரு வேட்பாளரும் வழங்குகின்ற வாக்குறுதிகளும் முன்வைக்கின்ற திட்டங்களும் திகைப்பை உண்டாக்கும் விதமாகவே உள்ளன. அத்தனையும் பெருந்திட்டங்கள். மகத்தான திட்டங்கள். ஊர்களைச் சொர்க்கபுரியாக்கும் மாபெரும் ஐடியாக்கள்…
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்ற நாட்டில், இப்படியான பெருந்திட்டங்களுக்கு (இவர்களுடைய பார்வையில் இதெல்லாம் மகத்தான திட்டங்கள்) எப்படி நிதியைத் திரட்டுவது? எங்கேயிருந்து அதைப் பெறுவது? ஒன்றில், அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். அதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பாலான சபைகளில் வெற்றியீட்டி, அவற்றைக் கைப்பற்றினாலும் கூட அதனால் சபைகளுக்குத் தேவையான நிதியை முழுமையான அளவில் ஒதுக்க முடியாது. அதிகம் ஏன், கிராமங்களிலுள்ள வீதிகளை முழுமையாகப் புனரமைப்புச் செய்வதற்கே அரசாங்கத்திடம் போதிய நிதிவளம் இல்லை. இதுதான் உண்மை. ‘வைத்துக் கொண்டு வஞ்சம் செய்வதாக’ யாரும் கருதத் தேவையில்லை. நாட்டில் (கஜானாவில்) பணமில்லை. வருவாய் குறைவு. அதுதான் உண்மை நிலவரம்.
அப்படியென்றால், சபைகள்தான் நிதியைத் திரட்ட வேண்டும். அதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். தவிர, எல்லாச் சபைகளும் நிதியைப் பெருக்க்க் கூடிய – பெறக்கூடிய நிலையில் இல்லை. நகர்சார்ந்த சபைகளுக்கும் சுற்றுலாப் பிரதேசத்தையொட்டிய சபைகளுக்கும் நிதியைச் சேகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவும் எவ்வளவு நிதியைத் திரட்ட முடியும் என்பது கேள்விக்குரியது. ஏனைய பல சபைகளுக்கு வரி அறவீட்டிற் கிடைக்கின்ற நிதியே குறைவு. குறிப்பாக கிராமங்களை மையப்படுத்திய பிரதேச சபைகளால் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு நிதியைப் பெருக்கவோ பெறவோ முடியாது.
ஆகவே அங்கெல்லாம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியே ஆதாரமாகும். அதை வைத்துக் கொண்டுதான் எதையும் செய்ய முடியும். முன்பு வெளிநாட்டு உதவிகள் அல்லது வெளிநாட்டு கொடை நிறுவனங்கள் –தொண்டு நிறுவனங்கள் – நிதி நிறுவனங்கள் அளிக்கின்ற நிதியைக் கொண்டே சில, பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை எந்தளவுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதைச் செய்ய வேண்டியது (அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது) அரசாங்கத்தின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.
இதுதான் உண்மையும் யதார்த்தமுமாகும். இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் இதை உய்த்துணர முடியவில்லை என்றால், அதைச் செய்ய வேண்டியது (மக்களுக்கு இந்த நிலைமையை விளக்க வேண்டிய பொறுப்பு) ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இளைய தலைமுறையினருமாகும். அவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், தாம் வெற்றியீட்டுவதற்கான வாக்குகளைச் சேகரிப்பதற்காக அரசியற் தரப்புகள் மக்களுக்கு அளிக்கின்ற பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றுத்திட்டங்களும் என்ற மோசடிக்கு இவர்களும் உடந்தை என்றே அர்த்தமாகும்.
ஆகவே தேர்தற் பரப்புகளை உன்னிப்பாக, ஊன்றிக் கவனித்து, அங்கே முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும். அவை தொடர்பான விவாதங்களை முன்வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இவ்வாறான பணிகளைச் செய்யத் தவறியதன் அல்லது அதில் போதிய அளவுக்குச் செயற்படாததன் விளைவுகளே, பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் பிழையான (தவறான) தரப்புகளை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வீணடிக்கப்பட்டன – பாழாக்கப்பட்டன. மக்கள் எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக தவறான அரசியல் விளைவுகள் உருவாகின. நாடு மோசமான நிலையை (அழிவை) எட்டியது.
இந்தப் படிப்பினைகளிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம். அந்தக் கற்றுக் கொள்ளல் என்பது மீளவும் தவறுகள் நிகழாமல், தவறான தரப்புகளை தேர்வு செய்தல் நிகழாமல் தடுப்பதாக அமைய வேண்டும். அது நாட்டுக்கு, எதிர்காலத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய நன்மையாகும்.
நாட்டுக்கு நாம் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய முடியாது போகலாம். குறைந்த பட்சம் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவாவது வேண்டும். இந்த நாடு தவறுகளால், பிழைகளால், குற்றங்களால், மோசடிகளால், சூறையாடல்களால் பின்தள்ளப்பட்டது. இதைச் செய்த தரப்புகளை ஆதரித்ததன் விளைவே இதுவாகும். ஆகவே, இனியாவது இதை – இந்தத் தவறுகளைச் செய்யாமல் தடுத்துக் கொள்வோம்.
என்பதால், தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் தகுதி நிலை தொடக்கம், அவர்களும் அவர்களுடைய தரப்புகளும் முன்வைக்கும் வாக்குறுதிகள் வரையில் அனைத்தையும் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. பல வேட்பாளர்களும் தகுதி குறைந்தவர்களாக – பொருத்தப்பாடற்றவர்களாகவே – உள்ளனர்.
1. உள்ளுராட்சி மன்று என்றால் என்ன, அதனுடைய அதிகாரம் என்ன என்று தெரியாதவர்களாக இருப்போர்.
2. உள்ளுராட்சி சபைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த விடயத்தையும் வேலைத்திட்டங்களையும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் குறைந்தவர்கள்.
3. கடந்த காலத்தில் சபைகளில் இருந்து ஊழல் செய்தவர்கள், முறைகேடான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள், தவறான தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள், சபையின் நிதியைப் பாழாக்கியவர்கள், பிழையான திட்டங்களை உருவாக்கியவர்கள்.
4. சமூக அக்கறை, பிரதேசம் மீதான பற்று, அரசியல் உணர்வு, பொதுப்பணி ஆற்றிய அனுபவம் எதுவுமே இல்லாமல், கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேவைக்காக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்போர்.
5. தெரிந்தவர், உறவினர், குறித்த சாதி, சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வேட்பாளர்களாக்கப்பட்டோர்.
இப்படியானவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு உள்ளுராட்சிகளை வளப்படுத்த முடியும்? ஆனால், இவ்வாறானவர்களால்தான் வேட்பாளர் பட்டியலே நிரம்பிப்போயுள்ளது.
ஆகவே மக்களும் மக்களை வழிப்படுத்தக் கூடிய பொறுப்புகளில் உள்ளோரும் கட்சி அபிமானம், தலைமைத்துவ விசுவாசம் என்பதற்கு அப்பால் அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும். எதன்பொருட்டும் தவறுகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இனம், மதம், சாதி, கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையான நியாயத்தை முன்னிறுத்த முயற்சிக்கும். அதற்கெல்லாம் இடமளித்து ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை விளைவிக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை இல்லாதொழிக்க முற்பட வேண்டும். அப்பொழுதுதான் தவறான தரப்புகளை நீக்கம் செய்யலாம்.
அளிக்கப்படும் நம்பிக்கையும் முன்வைக்கப்படும் திட்டங்களும் உண்மையானவையாக – யதார்த்தமானவையாக – நடைமுறைக்குச் சாத்தியமானவையாக இருக்க வேண்டும்.
அரசியலிலும் சரி, தனி வாழ்க்கையிலும் சரி நம்பிக்கை அளித்தலுக்கு (Giving hope) நிகரானது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும் (Fulfilling hope). அரசியலில் இது இன்னும் கூடுதல் அழுத்தத்துக்குரியது. ஏனென்றால், அரசியலில் அளிக்கப்படும் நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அளிக்கப்படுவது. அவர்களுடைய நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அளிக்கப்படுவது.
அதை நிறைவேற்றவில்லை – காப்பாற்றவில்லை என்றால், அது அந்த நம்பிக்கையை ஏற்றுச் செயற்பட்ட – ஆதரவளித்த மக்களுக்கு அளிக்கப்படும் துரோகமாகும்; குற்றமாகும்.
அந்தக் குற்றத்துக்குரிய தண்டனையை நீதிமன்றங்கள் வழங்காது விடலாம். மக்கள் வழங்குவார்கள். வரலாறு வழங்கும். அதுதான் அரசியல் விதியாகும். வரலாறு முழுவதும் இப்படித்தான் நடந்துள்ளது. வரலாற்றிற்கு வெளியே எதுவுமே இல்லை. அப்படி ஒன்று புதிதாக அமையுமானால், அதுவும் வரலாற்றுடன் இணைந்து கொள்ளும்.