கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-37)

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்குகள் (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-37)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)

  — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — 

 எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் பொதுவெளியில் தொழிற்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படாத தமிழ் அரசியல் கட்சிகளும் தமக்குள்ளே கூட்டுக்களை ஏற்படுத்தியுள்ளன. இக்கூட்டுக்களின் பிரதான நோக்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிப்பதைத் தவிர மக்கள் நலன் சார்ந்த எதுவுமில்லை என்பது எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய ‘இலகு எண்கணிதம்’ ஆகும்.

 வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அதாவது அக்கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கட்சியும் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவின் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியும் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை எனும் பெயரிலான கூட்டொன்றும்.

 ஏற்கெனவே இணைந்துகொண்டிருந்த ரெலோ, ஈ பி ஆர் எல் எப், புளொட் ஆகியவற்றுடன் புதிதாக இணைந்துள்ள சமத்துவக் கட்சியையும் பங்காளிக்கட்சிகளாகக் கொண்டதும் ஏற்கெனவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்னும் பெயரில் இயங்கிக் கொண்டிருப்பதுமான கூட்டும் களத்தில் நிற்கின்றன.

 கிழக்கு மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் (ரி எம் வி பி) வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகம் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் இணைந்து ‘இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்’ எனும்படியாக 2019 இருந்தே அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அனுமதியுடன் செயல்பட்டு வந்துள்ள தம்பியப்பா கோபாலகிருஷ்ணனின் தலைமையிலான ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கட்சியின் பெயரைத்தார்மீக மற்றும் சட்ட விழுமியங்களுக்கு முரணாகப் பலாத்காரமாகத் தமது கூட்டிற்குச் சூட்டி ஒரு சர்ச்சைக்குரிய கூட்டணியாகத் தம்மை அரசியல் பொது வெளியில் முகம் காட்டியுள்ளன.

 தமிழரசுக் கட்சியானது வழமைபோல ‘தனித்தவில்’ அடிக்க, தனித்து விடப்பட்டுள்ள ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் யாருக்குச் ‘சல்லாரி’ போடலாம் எனக் குழம்பிப்போய் உள்ளன.

 மொத்தத்தில் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிய குட்டையாகக் காட்சியளிக்கக் கூட்டுச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளும் தனித்துவிடப்பட்ட கட்சிகளும் ‘வாக்கு’ மீன்பிடிப்பிற்காக வலையுடனும் அத்தாங்குகளுடனும் காத்து நிற்கின்றன.

 ஆட்சி அதிகாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை அதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒப்பீட்டளவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் இருந்த ஆதரவு தற்போதும் முழுமையாக இருப்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் கூட ‘அனுரகுமார திசாநாயக்க அலை’ இன்னும் முற்றாக ஓய்ந்து விடவில்லை.

 அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்திலும் இனப்பிரச்சனைக்கான தீர்வையோ குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தின் முழுமையானதும் முறையானதுமான அமுலாக்கலையோ எதிர்பார்க்க முடியாது என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே மெல்லத் தலைநீட்டத்தொடங்கிவிட்டது.

 நாடளாவியரீதியில் சிந்திக்கும் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பல முற்போக்கான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அவதானிக்கமுடிகிறது.

 அதே வேளை அரச நிர்வாகக் கட்டமைப்புகளைச் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள் (உதாரணமாகக் கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவைக்கு -University Council-வெளிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளமை) தமிழ் மக்களுக்கு அதிருப்தியை அளித்திருக்கின்றன.

 இக்கட்டத்தில் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

 நியாயமாகச் சிந்திக்கின்ற எவரும் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கும் கிழக்கின் தனித்துவ அரசியல் அணுகுமுறைக்கும் எதிராக இருக்க மாட்டார்கள்.

 ஆனால் நடைமுறையிலுள்ள களநிலைமை என்னவென்றால் வடக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் தேசியம் பேசுவது தத்தம் கட்சி நலன்களுக்காகவும் தலைமைத்துவ நலன்களுக்காகவுமே தவிர மக்கள் நலன்களுக்காக அல்ல.

 அதுபோல் கிழக்கைத் தளமாகக் கொண்டு இப்போது இரவல் பெயரில் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள் கிழக்கின் தனித்துவம் பேசுவது தத்தம் கட்சி நலன்களுக்காகவும் தலைமைத்துவத்துவ நலன்களுக்காகவே தவிர மக்கள் நலன்களுக்காக அல்ல.

 இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஓர் உணர்வுபூர்வமான விடயமாகவிருந்தாலும் முழு நாட்டிலும் ஊழல் மோசடிகளற்ற- சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி பேணுகின்ற ஆட்சி அமையுமாயின் அதனால் விளையக்கூடிய அனுகூலங்களைத் தமிழர்களும்தான் அனுபவிக்கப் போகிறார்கள் என்பது யதார்த்தம். அதற்காகத் ‘தேசிய இனம்’எனும் அடிப்படையில் தமிழர்கள் தமது உரிமை சார்ந்த இருப்பு சார்ந்த விடயங்களையிட்டு அலட்சியமாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அந்த விடயம் கடந்த காலங்களில் தேர்தல் தேவைகளுக்காகச் சுலோகங்களாலும்-கற்பனாவாதக் கோரிக்கைகளாலும்-கோஷங்களாலும்-ஆர்ப்பாட்டங்களாலும்-பேரணிகளாலும்-கட்சிகளின் மாநாட்டுத் தீர்மானங்களாலும் – பாராளுமன்ற உரைகளினாலும் – பத்திரிகை அறிக்கைகளாலும் – ஊடகச் சந்திப்புக்களால் மட்டுமே அணுகப்பட்டதுபோல் அல்லாமல் அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியமான உபாயங்களுடனும் அணுகப்படவேண்டியதொன்றாகும்.

 எனவே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு இன்று தேவை கடந்த 75 வருட கால அரசியல் மனப்போக்கிலிருந்தும் அணுகு முறைகளிலிருந்தும் முற்றாக விடுபட்டதொரு ‘மாற்று அரசியல்’ ஆகும்.

 அந்த மாற்று அரசியல் உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உடையதாய் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டமைதல் அவசியம். 

 அந்த மாற்று அரசியல் உள்ளூர் அதிகார சபை மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலைப் பரீட்சார்த்தக்களமாகப் பயன்படுத்த வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தயாராகவேண்டும்.

 மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கையாண்ட அளவுகோலை உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் உபயோகிப்பது உசிதமில்லையென்பதும் உணரப்படவேண்டும்.

 இவற்றின் அடிப்படையில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் அவாவிநிற்கும் மாற்று அரசியலுக்குத் தயாராவதற்கான மார்க்கம் என்னவெனில் எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உடைய முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வேட்பாளர்களை அடையாளம் கண்டு (அத்தகைய வேட்பாளர்கள் சுயேச்சைக்குழுவில் இடம்பெற்றிருந்தாலும் கூட) அத்தகையோர் எந்தக், கட்சியை அல்லது சுயேச்சைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கணக்கிலெடுக்காமல் அத்தகைய மக்கள் சேவகர்கள் உள்ளூராட்சி அதிகார சபை உறுப்பினர்களாகத் தெரிவாகும் வகையில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பதுதான் இந்த மாற்று அரசியலை ஏற்படுத்துவதற்கான ‘பிள்ளையார்சுழி’ ஆகும்.

 அதாவது, வடக்குகிழக்கில் உள்ளூராட்சி அதிகார சபைகளின் நிர்வாகத்தை ஒரு தனிப்பட்ட கட்சியிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வாக்களிக்காமல் அதனை உண்மையான மக்கள் சேவகர்களிடம் (அத்தகையோர் பலகட்சிகளின் சார்பிலும் தெரிவாகியிருப்பர்)ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வட்டார உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

 அது போலவே உண்மையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தலைமைத்துவ ஆளுமையும் இல்லாதவர்களையும் எதிர்காலத்தில் அதிகாரத்தில் இருந்தால் அதிகாரதுஸ்பிரயோகம் செய்வார்கள் எனக் கருதப்படுபவர்களையும் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவ்வாறானவர்களைத் தயவுதாட்சண்யமின்றித் தோற்கடிக்கவேண்டியதும் மக்களின் கடமையாகும்.