— அழகு குணசீலன்—
“BETTER DEAD THAN RED / BETTER RED THAN DEAD….!”
இந்த இரட்டை தலைப்பு இன்றைய உலகமயமாக்க சமூக, பொருளாதார, அரசியலில், அதுவும் அமெரிக்காவின் சுங்கவரிக்கொள்கை முதலாளித்துவ வர்தகமயமாக்கத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், காலநிலை மாற்றம், சுற்றாடல் பாதுகாப்பு விடயங்களில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்திய, சீன வளர்ச்சி அரசியலுக்கு பின்னால் பொல்லை பிடித்துக்கொண்டு தொடரும் வளமான வாழ்வு, அழகான நாடு என்ற நம்ம ஊர் சிவப்பு(?) அரசியலுக்கும் இது பொருத்திப் போகிறது.
“சிவப்பை விடவும் இறப்பது சிறந்தது” என்ற கோசம் கம்யூனிசத்திற்கு எதிராக இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போர்க்காலங்களில் எழுப்பப்பட்ட ஒன்று. அதற்கு முன்னர் முதலாளித்துவத்திற்கு எதிராக “இறப்பை விடவும் சிவப்பு சிறந்தது” என்ற கோசம் ஒலித்தது. அண்மையில் ஜப்பானிய தத்துவியலாளர் பேராசிரியர் KOHEI SAITO உடனான நேர்காணலுக்கு இடப்பட்டிருந்த ஜேர்மன் மொழித்தலைப்பு “LIEBER ROT ALS TOT”. இது வெளிச்சத்தின் இரட்டைத்தலைப்பின் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிரான குரலை உரத்து ஒலிக்கிறது.
KOHEI SAITO: இவர் எழுதியுள்ள மிகவும் பரபரப்பான முதலாளித்துவத்திற்கு எதிரான நூல் ” SYSTEM CRASHES/ SYSTEM STÜRZT/ முறைமை வீழ்ச்சி”. பேராசிரியர் தனது இந்த நூலில் இன்றைய காலநிலை நெருக்கடிக்கு முற்று முழுதாக முதலாளித்துவ முறைமையை குற்றக்கூண்டில் ஏற்றுகிறார். அவருடைய வாதம் கம்யூனிஸ தந்தை கார்ள்மார்க்ஸ் இன் “DAS KAPITAL/ மூலதனத்தை” ஆதாரமாகக் கொண்டது . “கார்ள்மார்க்ஸ் எல்லையற்ற பொருளாதார வளர்ச்சி சாத்தியமற்றது என்பதை அறிந்திருந்தார். இதன்படி இன்று எங்களுக்கு முன்னால் இருக்கின்ற தேர்வு கம்யூனிஸமா? அழிவா? என்பதுதான்” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
ஆடம்பரம் எங்களை அழிக்கிறது என்று வாதிடும் அவர், ஆடம்பரமற்ற ஒரு சிறந்த வாழ்வு எப்படி சாத்தியம் என்பதையும் விளக்குகிறார். அவரது “DEGROWTH” கருத்தியலின் படி எதிர்காலத்தை பாதிக்காத பொருளாதாரம் வளர்ச்சியற்றது அதாவது வளர்ச்சியை மட்டுப்படுத்துவது. நீர், வாழ்விடம், வைத்திய வசதிகள் பொதுப்பொருட்களாகும் என்று வாதிடுகிறார். அவரது நூல் பெரும்பாலானவர்களால் விரும்பப்படாத போதும் முதலாளித்துவ முறைமைமூலம் தொழில்நுட்ப உச்சத்தை தொட்டுள்ள ஜப்பானை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது-பெரும் சாதனையை படைத்திருக்கிறது. மூலமொழியான ஜப்பானிய மொழியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
“சோவியத் யூனியனின் மாதிரியை கொப்பியடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது முற்றிலும் தோல்வியுற்ற ஒரு மாதிரி. ஆனால் அதன் அர்த்தம் நாம் மார்க்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்பதல்ல, நிறையவே இருக்கிறது. நாங்கள் எங்களை விலையாக கொடுக்கின்ற பொருளாதார வளர்ச்சி வடிவங்கள் உண்டு. அவை மனித உணர்வுகளோடு விளையாடும். முதலாளித்துவ விளம்பர மாதிரிகள்”. என்று சாடுகிறார். GEO சஞ்சிகைக்காக KOHEI SAITO வை நேர்கண்டு இருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் DIRK STEFFEN.
* முதலாளித்துவ ஜப்பானில் தனது நூல் எடுபட்டது பற்றிய கேள்வியொன்றுக்கு SAITO பதிலளிக்கையில்:-
‘இது ஆச்சரியம் அல்ல.நான் அதிகம் எங்கள் சமூகம் சார்ந்த சில கருத்தியல்களை விமர்சித்துள்ளேன். முதலாளித்துவம், வளர்ச்சிவீதம், வளமான வாழ்வு இந்த விடயங்கள் எங்களை முடிவற்ற முன்னேற்றம், முடிவற்ற பொருளாதார வளர்ச்சி என்பவற்றுடன் தொடர்பு படுத்துகின்றன. இந்த முடிவற்ற கோட்பாடுகளை நான் விமர்சிக்கிறேன். நாங்கள் மிக நீண்ட காலம் வாழ விரும்புகிறோம். விரைவான கார்கள், அதிவேக இன்டர்நெட், விரைவான AI போன்றவற்றை முதலாளித்துவ உற்பத்தி முக்கியமாக்குகிறது. இந்த முடிவற்ற கருதுகோள்கள் நவீன நாகரிகமயமாக்கம் எனப்படுகிறது. அதை நான் விமர்சிக்கிறேன். எந்த விடயத்திலும் நாங்கள் அங்கீகரிக்கவேண்டிய எல்லை ஒன்று இருக்கிறது. எவையும் எல்லைகள் அற்றவை அல்ல’.
* அப்படியானால் அதை அங்கீகரிப்பது ஏன் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்பது நேர்காண்பவரின் அடுத்த கேள்வி.
‘எல்லையற்ற வளர்ச்சி வீதம் சாத்தியமற்றது என்பதை அறிவதற்கு மனிதன் சுகதேகியாய் இருந்தால் மட்டும் போதுமானது. வரையறையற்ற தேவைகளுக்கு பழக்கப்பட்டதால் சுற்றாடலை அழித்ததற்கு பொறுப்பாகிறோம். எதிர் காலத்தில் உண்மையான நாகரிக மயமாக்கத்தை வீழ்த்தியதற்கும் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். நாங்கள் இந்த வளர்ச்சியை நிறுத்தாது விட்டால் நாம் பழக்கப்பட்ட மாதிரியே தொடர்ந்தும் செயற்படும். எங்களது காபனீரொக்சைட்டு மாசடைதல் அதிகரிக்கிறது. நாங்கள் எண்ணெய் வளப்பயன்பாட்டை துரிதப்படுத்துகிறோம். இங்கு நான் கேட்பது எல்லாம் ஏன், இந்த முட்டாள்தனமான செயலில் ஈடுபடுகிறோம் என்பதுதான். முதலாளித்துவ வளர்ச்சியினால் ஏற்படும் இந்த அடிப்படையான உள்ளார்ந்த முரண்பாட்டை கார்ள்மார்க்ஸ் அடையாளம் கண்டிருந்தார்.’
* அப்படியானால் மூலக் காரணம் முறைமையில் உள்ளதா?
‘ஆம். அதில்தான் உள்ளது. முதலாளித்துவ முறைமை இலாபத்தை அதிகரிக்க எப்போதும் அதிகமாக உற்பத்தி செய்ய எம்மைத் தூண்டுகிறது. இந்த அதிகூடிய இலாபத்தை பெறுவது என்பது மக்களின் விருப்புக்களோடு சம்பந்தப்பட்டதல்ல. இது மக்களின் ஆர்வங்களில் இருந்து விடுபட்டது. முதல் (CAPITAL) உங்களுக்காக முடிவுகளை எடுக்கிறது. எங்களுக்கு கட்டளையிடுகிறது. எங்களை பயன்படுத்துகிறது. எங்களை வரையறுக்கிறது. நாங்கள் சிந்திக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சுற்றாடல் நெருக்கடிக்கான தீர்வு அங்குதான் இருக்கிறது’.
* உங்களை விமர்சிப்பவர்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது தீர்வாகாது என்றும், வேண்டுமானால் அதன் வேகத்தையும், வளப்பயன்பாட்டையும் குறைக்கலாம் என்றும் கூறுகிறார்களே? இது ஒரு பின்பற்றக்கூடிய வழியில்லையா?
‘இல்லை. முதலாளித்துவ நிறுவனங்களை அரசியல் அதிகாரம் எல்லையற்று எல்லாவற்றையும் உற்பத்தி செய்ய கட்டாயப்படுத்துகிறது. இலக்கு முரண்பாடு எல்லையற்ற உற்பத்திக்கும், எல்லையற்ற வளப்பயன்பயன்பாட்டின் மூலமான தீர்வுக்கும் ஊக்கமளிக்கிறது.
சரி, வளங்கள் பற்றாக்குறையானவை. நாங்கள் காபனீரொக்சைட்டு அளவை குறைக்க வேண்டும். அப்படியானால் வளர்ச்சியில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடரப்போகின்றோமா.”?
* வளர்சிக்கோட்பாட்டை வேறு வகையில் வரைவிலக்கணப் படுத்தமுடியாதா? அதன்மூலம் டிஜிட்டல், AI முன்னேற்றம், சிறப்பான வாழ்க்கைத்தரம் என்பனவற்றை உள்நாட்டு மொத்த உற்பத்திமூலம் அளவிடாது அதாவது பணத்தை கொண்டு அளவிடாமல் செய்தால் இது சில சிலவேளைகளில் மேலதிக வளப்பயன்பாடு இன்றி சாத்தியமாகலாம் இல்லையா?
‘கோட்பாட்டளவில் சரி. ஆனால் டிஜிட்டல் பொருளாதாரம் பொருள்முதல்வாதத்தை மட்டுப்படுத்தாது. டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கிளவுட் தொழில்நுட்பம், AI தரவுகள் நிர்வகிப்பு அனைத்தும் மிக அதிகமான சக்தி தேவையையும், எரிபொருள் பயன்பாட்டையும் கொண்டவை. வரையறையற்ற வளர்ச்சி எந்த வழிமுறையைக் பயன்படுத்தினாலும் மோசமான கருத்தியல் என்பதை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். எங்களின் தேவைகளை திருப்தி செய்வதற்கு நாம் மாற்று வழிகளைக் காணவேண்டும். புதுப்பிக்கக்கூடிய சக்தியும், எலக்ட்ரிக் கார்களில் ஏறி அமர்வதும் தீர்வல்ல’.
* அதில் என்ன தவறு இருக்கிறது?
‘நாங்கள் கடந்த 50, 70 ஆண்டுகள் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் வளர்ச்சி வேகத்தை குறைப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. காலம் எங்களை நெருக்குகிறது. நாங்கள் காபனீரொக்சைட்டு குறைப்பை அடுத்த 20,30 ஆண்டுகளில் எட்ட வேண்டும். முதலீடுகளும், பசுமை தொழில்நுட்பங்களும் முக்கியமானவை. நாங்கள் பெரிதாகவும், அதிகமாகவும் கார்களை அதிக இலாபத்திற்கு உற்பத்தி செய்யும் நிலையில் வளப்பயன்பாடு அதிகரிக்குமே தவிர குறையாது. எங்கிருந்தோ ஒரு தொழில்நுட்ப அதிசயம் எங்களை காப்பாற்ற வரும் என்பது மோசடி.’
‘கற்காலத்திற்கு திரும்புமாறு நான் சொல்லவில்லை. தொழில்நுட்ப முன்னேற்றங்களேயும் அமுக்க சொல்லவில்லை. நாங்கள் அளவுக்கு அதிகமான நுகர்வுத்தேவைகள் பற்றி பேசவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து முயற்சிகளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதாகவே அமையும். அளவுக்கு அதிகமான நுகர்வு எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இறுதியில் எங்கள் பிள்ளைகளின் கல்வி, வைத்தியச்செலவு, அதிகவாடகை …. இவற்றை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுகிறது. அதிக நுகர்வு தான் மகிழ்ச்சியை தரும் என்பதல்ல. குறைவாக நுகர்ந்தால் அது கூட மகிழ்ச்சியை தரும்.’
ஜேர்மனியர்கள் கடந்த 60 வருடங்களில் மூன்று மடங்கு வளமாக வாழ்கிறார்கள். ஆனால் வாழ்வில் மகிழ்ச்சி என்பது இல்லை. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு ஆடம்பர வாழ்க்கையை அன்றி மகிழ்ச்சியை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இலாபத்தை உச்சப்படுத்தல் மூலம் இதை அடையமுடியாது. பொருளாதாரவளர்ச்சியும், மக்களின் திருப்தியும் நீண்ட காலமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கவில்லை. காலனித்துவ கால சுரண்டலும், வள அபகரிப்பும், மலிவான உழைப்பும் நேரடியாக இன்றைய காலநிலைப் பிரச்சினைக்கு காரணமானவை. நீர், மின்சாரம், போக்குவரத்துமுறை, வீட்டுத்தேவை, வர்தகமயப்படுத்தல் போன்ற என்னவெல்லாவற்றையும் நவகாலனித்துவத்தில் முதலாளித்துவம் முதன்மைப் படுத்துகின்றதோ அவை அனைத்தும் பெரும்பாலான மக்களை நிராகரிக்கின்றன.
* கம்யூனிசம் இப்பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்?
‘முதலாளித்துவ முறைமை மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் ஒன்றிணைக்கிறது என்று மார்க்ஸ் சொன்னார். இது உண்மையில் மூலதனத்தின் சர்வதிகாரம். சமூகத்தின் அடிப்படை இலக்கு இலாபத்தை உச்சப்படுத்துவதாக இருந்தால் அங்கு உண்மையான ஜனநாயகம் இருக்கமாட்டாது. நாங்கள் சில சுதந்திரங்களை அனுபவிக்கலாம் ஆனால் அவை மூலதனத்திற்கு சேவைசெய்பவையே. ஜனநாயகம் முதலாளித்துவத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையற்ற. வளர்ச்சி முறையால் இயற்கை பற்றி பேசுபவர்கள், இயற்கை மீதான கரிசனை குறைவடைந்துள்ளது. நான் அவர்களின் குரலை எங்கள் ஜனநாயகத்தில் மீள ஒலிக்கச்செய்ய முயற்சிக்கிறேன்.’
* ஆனால் கம்யூனிசம் சுற்றாடல் கேள்விகள், தனிநபர் சுதந்திரம் சார்ந்த கேள்விகளில் சுயமாக முன்மாதிரியாக இல்லையே. மாறாக இது விடயத்தில் அது முதலாளித்துவத்தை விடவும் மோசமாக அல்லவா உள்ளது.
‘நான் எனது புத்தகத்தை பதிப்பிட ஒரு பதிப்பகத்தை நாடினேன். அதன் உரிமையாளர் இந்த தொனியில்தான் பேசினார். கம்யூனிசம் விரும்பப்படாததும் வெறுப்புக்குட்பட்டதும் என்றார். நான் அவருக்கு சொன்னது இதுதான். நாங்கள் சோவியத் யூனியனின் மாதிரியை கொப்பியடிக்கத்தேவையில்லை.அது முற்றாக தோல்வியடைந்துவிட்ட ஒன்று. இதன் அர்த்தம் நாங்கள் மார்க்ஸிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதல்ல. முதலாளித்துவத்தின் எல்லையற்றதும், தொடர்ச்சியானதுமான வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புவதற்கு மார்க்ஸை மீளக்கொண்டுவர முயற்சிக்கிறேன் என்பதுதான்.’
* உங்கள் சோஷலிசம் சோவியத்தில் தோல்வியடைந்ததில் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறது?
‘கம்யூனிசம் குறித்த புதிய வரைவிலக்கணத்தை கூற என்னை அனுமதியுங்கள். முதலாளித்துவத்தில் எல்லாம் வர்த்தக மயப்படுத்தப்படுகிறது. கம்யூனிசத்தில் பொதுமை முதன்மையானது. எவை எல்லாம் எங்களுக்கு பொதுமையானவை என்பது முக்கியம். இது அரசமயப்படுத்தலையும், சர்வதிகாரத்தையும் அர்த்தப்படுத்தாது மாறாக வாழ்க்கைக்கு அவசியமான பொருட்களையும் சேவைகளையும் புதிதாக மதிப்பிடுதலை குறிக்கிறது. உதாரணமாக நீர், மின்சாரம், நிலம், வீதிகள்….போன்றவை “.
* அரசு இவற்றை பொறுப்பெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?
‘நான் இங்கு அரசின் முழு உடைமையாக்கத்தை கூறவில்லை. குறிப்பிட்ட உற்பத்திகளை நாம் சந்தைப்பொருளாதாரத்திற்கு விட்டு விடலாம். ஆனால் பெரும்பாலானவை அரசுடமையாக அமையவேண்டும். அதை மார்க்ஸின் கருத்தில் சொன்னால்….
‘நாங்கள் எவை அத்தியவசிமானவை, எவை இலாபகரமானவை என்பதை வித்தியாசப்படுத்த வேண்டும். எனது விருப்பத்திற்குரிய உதாரணம்: தனிப்பட்ட ஜெட் விமானம். இன்றைய காலநிலை சுற்றாடலில் இது சிறந்ததா? ஒரு ஜனநாயக சர்வஜன வாக்கெடுப்பில் இது அவசியமற்றது என்பது தெரியவரும். இது காலநிலை சர்வதிகாரம் அல்ல. மக்களின் ஜனநாயக உரிமைக்குரல்.’
பொதுவுடைமையாக்கத்தின் மூலம் செல்வந்தர்களிடம் இருந்து ஒரு பகுதியை பறிக்க விரும்புகிறீர்களா?
‘அவர்கள் மக்களிடம் இருந்து பெருமளவு பறித்தெடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதியை நாம் ஏன் திருப்பிப் பெறமுடியாது.?’
* இது மார்க்ஸை மீளக்கூப்பிடுவதாக அமையுமா..?
‘மார்க்ஸ் காலநிலை நெருக்கடி குறித்து அறிந்திருக்கவில்லை. அவருக்கு இன்டர்நெட் தெரியாது இன்று இவ்வளவுக்கு எல்லாம் வர்த்தகமயமாக்கப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வளமான பொதுவுடைமை இந்தியா, ரஷ்யாவில் சாத்தியமாகும் என்று நம்பினார். ஆனால் அதற்கு எதிர்மாறாக போனது.’
* சீனா மார்க்சிய சிந்தனைகளை மேவியது. அதனூடாக உலகின் அதிகாரசக்தியாக உயர்ந்துள்ளது. அதனுடைய மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இந்த நவீன சீனா உங்கள் கருத்துடன் இணங்கிப்போகுமா?
‘நான் சீன மாதிரியில் அனுதாபம் கொண்டவன் அல்ல. அது பழைய வளர்ச்சி மாதிரியிலும், சோஷலிசத்தை மேலதிக உற்பத்தியுடனும் நவீனப்படுத்தியுள்ளது. அதிக தொழில்நுட்பம், எல்லையற்ற முன்னேற்றம், வளர்ச்சி அதேவேளை சுற்றாடல் சேதப்படுத்தலையும் சீன மாதிரி கொண்டுள்ளது.’
வளர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு வடக்குக்கும், தெற்கிற்கும் இடையே கலந்துரையாடல் தேவை. ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சமூக மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வாழ்க்கை முறைமை இந்த உலகில் எல்லா மக்களுக்கும் சாத்தியப்படவேண்டும். வடக்குக்கு மட்டும் அல்ல. அது எனது கனவு. எனக்கு விருப்பமான ஒரு இலக்கம் இருக்கிறது. 3.5. ஹவார்ட் அரசியல் விஞ்ஞானி ERICA CHENOWETH 3.5 வீதமான மக்கள் சமத்துவமின்மைக்கு எதிராக மாறவேண்டும் என்று கூறியுள்ளார். அதன் மூலம் ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு பெரும்பாலானவை தேவை இல்லை.
நன்றி: GEO – STEFFEN.