புதிய தமிழரசு: அப்புக்காத்து அரசியலுக்கு முடிவு கட்டுமா….?(வெளிச்சம்: 046)

புதிய தமிழரசு: அப்புக்காத்து அரசியலுக்கு முடிவு கட்டுமா….?(வெளிச்சம்: 046)

— அழகு குணசீலன்—

 சிகரெட் ஒன்றை புகைப்பதன் மூலம் ஒருவர் தனது ஆயுளை ஐந்து நிமிடங்களால் குறைத்துக்கொள்கிறார். அதேபோல் ஆயுளை ஐந்து நிமிடங்கள் கூட்டுவதற்கு ஒருவர் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆயுள் அரசியலும் பிராயச்சித்தமும்  இப்படித்தான் இருக்கிறது.

மிகப் பிந்திய ஆயுள் இழப்புக்காலம்  தமிழரசில் சம்பந்தர் காலம் என்றால், ஆயுளை நீட்டுவதற்கான முயற்சிகள் மாவை அன் கோ காலம் என்று சொல்லமுடியும். ஒரு வகையில் தமிழரசு கோடேறி இருப்பதும் ஆயுளை நீடிப்பதற்கான முயற்சி தான். ஆனால் தமிழ்த்தேசிய தீவிரபக்தர்கள்  தமிழரசின் சமகால தலைமைகளால்   தமிழரசு தப்பிப்பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்புவதாகத்தெரிகிறது. இந்த நிலையில் வெளிச்சத்திற்கு கிடைத்துள்ள நம்பிக்கையான தகவல்களின் படி  “புதிய தமிழரசு” ஒன்றை தோற்றுவிப்பது பற்றி இலங்கை, இந்திய, புலம்பெயர்ந்த நாடுகளின் தீவிர தமிழ்த்தேசிய பக்தர்கள் இரவுபகலாக ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.  முதற்கட்டமாக 2019 தேர்தலில் சுமந்திரனின் விருப்பு வாக்குகள் அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக அரைவாசியாக குறைக்கப்பட்டன.  அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட தீவிர தமிழ்த்தேசிய பக்தர்களும், மூத்த போராளிகள் சிலரும்  கடந்த ஐந்து ஆண்டுகளாக திரைமறைவில் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளின் விளைவாக 2024 பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டார். 

எம்.ஏ. சுமந்திரனின் தோல்வி தமிழரசுக்கட்சியை சரியான (?) பாதையில் நெறிப்படுத்தும் என்று இந்த தீவிர தமிழ்த்தேசியவாதிகள் எண்ணியிருந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஏமாற்றங்களையே சந்திக்கவேண்டியிருந்தது. எம்.பி. பதவி இல்லாத நிலையிலும் சுமந்திரன் தன்னை தமிழரசின் ஒரு முக்கிய புள்ளியாக, தீர்மானம் எடுக்கும் சக்தியாக நிலைநிறுத்தி வருகின்றார். மறுபக்கத்தில் “மத்திய செயற்குழு” என்ற பெயரில் தனக்கான ஒரு  அரசியல் ரசிகர்கள் மன்றத்தையும் அவர் ஏற்படுத்தி விட்டார். 

இந்த ரசிகர்கள் மன்றத்தின் மூலம் தனக்கு வேண்டியதை, தனது விருப்பிற்கேற்ப செய்யும் நிலையில் சுமந்திரன் இருக்கிறார். வைத்தியர் சத்தியலிங்கத்தின் தேசிய பட்டியல் நியமனம், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில்  சுதந்திரக்கட்சியின் ஆதரவாளராக இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால்  துரோகி என்று சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பாவின் வலதுகரமாகவும், முதுகு எலும்பாகவும் செயற்பட்ட சி.வி.கே சிவஞானம் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை, பதில் செயலாளர் வைத்தியலிங்கத்திற்கு சுகவீனம் என்று கூறி பதில் செயலாளர் பதவியை சுமந்திரன் சுருட்டி இருப்பது  போன்ற காரணங்களால் இனியும் தமிழரசை திருத்த முடியாது என்ற நிலைக்கு தமிழ்த்தேசிய தீவிரசக்திகள் வந்துள்ளன. 

இதுதான் “புதிய தமிரசு கட்சி” ஒன்றின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமையப்போகிறது. இது விடயமாக ‘சிறில்’லங்காவின் முதல் இரு எழுத்துக்களை தம் பெயரில் கொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பு கொண்டு மந்திராலோசனை நடாத்தி இருப்பது குறித்து வெளிச்சத்திற்கு நம்பிக்கையான, மூத்த  தமிழ்த்தேசிய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது என்ற சுமந்திரனின் முனைப்பு  அந்த தமிழ்த்தேசிய தரப்பை மேலும் ஆத்திரமூட்டியிருப்பதாக தெரியவருகிறது.  

எம்.ஏ.சுமந்திரனை கொழும்புக்காரர் என்றும், ஏக்கயராட்சியத்தின் தென்னிலங்கை முகவர் என்றும் விமர்சனம் செய்யும் தமிழ்த்தேசிய தீவிர சக்திகள் கொழும்பு நோக்கிய சுமந்திரனின் அரசியல் குறித்து அதிகம் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர் தமிழர் தாயகத்திற்கு அப்பால் கொழும்பில் ஒதுங்கிக் கொள்வதற்கான முயற்சிகளை திட்டமிட்டு செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. சாடியும், மூடியுமாக சி.வி.கே .சிவஞானமும், எம்.ஏ . சுமந்திரனும் அடுக்கடுக்காக வெளியிடும் ஊடக அறிக்கைகள் எதிர்த்தரப்பின் பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. விமர்சனங்களையும் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழரசுக்கட்சி என்.பி.பி.க்கு எதிராக மட்டுமன்றி தமிழ்த்தேசிய மாற்று அணி, மற்றும்  பிராந்திய சிறிய கட்சிகள், ஏனைய தேசியக்கட்சிகள் என்பனவற்றிற்கு எதிராகவும் களமிறங்கவேண்டிய நிலையில் உள்ளது. இதனால்தான் “தனித்து போட்டியிட்டு, ஆட்சியில் கூட்டு” என்ற மந்திரத்தை சுமந்திரன் போகின்ற இடமெல்லாம் ஜெபிக்கிறார். கொழும்பில் போட்டியிடலின் பின்னணியும் இதுதான். சஜீத் கூட்டணியை விடவும், என்.பி.பி.யுடன் தொற்றிக்கொள்ளலாம் என்று நம்புவதாகத் தெரிகிறது. 

மறுபக்கத்தில் மலையக கட்சிகளின் வாக்கு வங்கியை  யாழ்ப்பாண வாக்காளர்களை கொண்டு சிதறடித்து தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாகவும் சுமந்திரனின் இத் திட்டத்தை அடையாளம் காணவேண்டியுள்ளது. அதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பாராளுமன்ற தேர்தலில்  கொழும்பில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த சுமந்திரன், தவராசா கட்சியில் இல்லாத நிலையில் கொழும்பில் தனக்கான ஒரு அரசியல் அடிப்படை இருப்பை ஏற்படுத்த படிப்படியாக காய்நகர்வுகளை செய்கிறாரா? என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

தமிழரசுக்கட்சியின் இரு ‘சிறிகள் ‘ ஆயுதப்போராட்ட ‘மச்சான்’ அரசியல் அலையிலும், ஆதரவிலும் எம்.பி.யானவர்கள். கடந்த  தேர்தலில் கூட மட்டக்களப்பில்  கிறிஸ்தவ பாதிரியாரின் பதவிப்பெயரைக் கொண்ட அந்த மூத்த  போராளி மச்சானுக்கு  ஆதரவாகச்  செயற்பட்டுள்ளார். மட்டக்களப்பில் ஆரம்பகால புலிப்பொறுப்பாளராக இருந்த  தந்திரமான அந்த பறவையின் பெயரைக்கொண்ட  மூத்தவர்  இம்முறை  மட்டக்களப்பு வந்து தேர்தல் களத்தில் நின்றிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனை தோற்கடிப்பதில் இவர் ஓயாமல் உழைத்தவர். இவர்கள் 2019 இல் இரா.சாணக்கியனுக்கு ஆதரவாக முன்னாள் போராளிகளை களமிறக்கியவர்கள். இம்முறை சுமந்திரன் – சாணக்கியன் போக்கில் முரண்பட்டு  ‘மச்சான்’ அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் சுமந்திரனாக செயற்படும் சாணக்கியனை தோற்கடிப்பது இந்த மூத்த போராளிகளின் திட்டமாக இருந்துள்ளது. ஆனால்  அந்த நகர்வுகள் பிள்ளையானுக்கும், ஜனாவுக்கும் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக மாறிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்துள்ளனர். இதனால் யாழில் சுமந்திரனுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டது போன்று செயற்பட முடியவில்லை. வரையறுக்கப்பட்ட  உள்ளக வெளிப்படைத் தன்மையோடு மட்டுமே செயற்பட்டுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும், வடக்கில் இருவரும் ‘புதிய தமிழரசு’ அமைவதில் உடன்பாடுடையவர்களாக இருக்கின்றனர் என தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த்தேசியவாதியின்  வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது. சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்த திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன. கிழக்கின் தெற்கு எல்லையைச்சேர்ந்த P2P செயற்பாட்டாளரும், தமிழரசுக்கட்சி தந்தையின் பேரனும் இந்த திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர். இவ்வாறு புதிய தமிழரசுக்கு பின்னால் மூத்த புலிகளும், தாயக, தமிழக, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த்தேசியவாதிகளும், பக்தர்களும் இருக்கிறார்கள். தமிழரசு தந்தையின் பெயரை கட்சிப்பெயரில் சேர்த்துக்கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்.

இந்த மூத்தவர்கள் சாணக்கியனின் சுமந்திரன் ஆதரவுப்போக்கை எதிர்ப் பிரச்சாரத்திற்கு எடுத்துக்கொண்டதால் ஆரம்பத்தில் சாணக்கியனுக்கு சங்கடங்கள் இருந்தன. இறுதியில் சாணக்கியன் வாக்காளர் மத்தியில் இரண்டாவது முறையாக பாவமன்னிப்பு கேட்க வேண்டி இருந்துள்ளது. 2019 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்ததற்கு பாவமன்னிப்புக்கோரியது முதல்முறை. இந்த முறை சுமந்திரனோடு சேர்ந்து செயற்பட்டதற்கு இரண்டாவது முறையாக பாவமன்னிப்பு கோரியுள்ளார். ” நான் 2019 இல் வெற்றிபெற்றபின் மட்டக்களப்பின் சகபாராளுமன்ற உறுப்பினரும், தோல்வியடைந்தவர்களும் என்னோடு உறவில் இருக்கவில்லை. இந்த தனிமையில் இருந்து விடுபடவே சுமந்திரனின் உதவியை நாடினேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறாராம். தேர்தல் காலத்தில் சாணக்கியன் சுமந்திரனை தவிர்த்து பிரச்சாரம் செய்ததன் வெளிச்சம் இதுதான்.

மட்டக்களப்பின் மற்றொரு ‘சிறி’ யுடன் தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி, மற்றொரு மட்டக்களப்பின் மூத்த தமிழ்த்தேசியவாதியூடாக தொடர்பை ஏற்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. தமிழ்த்தேசிய தீவிர போக்காளர்களதும், மூத்த போராளிகளதும் இந்த நகர்வுகள் புதிய தமிழரசை உருவாக்குவதில் சுமந்திரனுக்கும், அவரது ரசிகர் மன்றத்தினருக்கும் எதிராக எவ்வாறான தமிழ்த்தேசிய அரசியல் சூழலை ஏற்படுத்தும் என்பதற்கு  காலமே பதில்.

மட்டக்களப்பின் மூத்த தமிழ்த்தேசியவாதியும், தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளருமான கி. துரைராசசிங்கம்  இந்த  வலையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்ட கிறிஸ்தவபாதிரியாரின் பதவிப் பெயரைக் கொண்ட அந்த மூத்த போராளியுடன் இணைந்து 2019 இல் சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்க வழிவகுத்தவர் துரைராசசிங்கம். இம்முறையும் இவர்கள் இருவரும் இணைந்தே அந்த  ‘சிறி மச்சானுக்கு வேட்பாளர் நியமனத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த இரு சிறிகளையும் சுமந்திரன் -சாணக்கியன் அணி விரும்பாதபோதும் தவிர்த்து ஓட முடியவில்லை.  இப்போது துரைராசசிங்கம் எந்த தமிழரசு என்ற கேள்வி எழுகிறது.?ஆப்பிழுத்த குரங்கின் கதையை தவிர்க்கவேண்டுமானால்  புதிய தமிழரசு தான் பதில். இல்லையேல் புலிவாலைப் பிடித்த கதைதான்.

இந்த நகர்வுகள் மோப்பம் பிடிக்கப்பட்டதன் காரணமாகவே சி.வி.கே.சிவஞானமும், எம்.ஏ.சுமந்திரனும் முன்னுக்கு பின் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புலம்பெயர்ந்த நாட்டு தமிழ்த்தேசிய ஊடகங்கள் வைத்து… வாங்கு…வாங்கு… என்று வாங்குகின்றன.  சாணக்கியன், சத்தியலிங்கத்திற்கும் உதறுகிறதாம்.

இதுதானோ  “ஆனை அடிக்கும் முன் தான அடித்துச் சாவது “…?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *