கவிஞர் இரா.மேரியனின் ‘மூன்றாவது கண்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் பற்றிய நயவுரைக்குள் செல்லுமுன் அவரது தந்தையாரைப் பற்றியும் சில குறிப்புக்களைக் கூறி அப்பால் செல்லலாம் என எண்ணுகின்றேன்.
மைக்கல்கொலின் தனது பதிப்புரையில் குறிப்பிட்டவாறு, ‘ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையும் திருகோணமலை மண்ணின் அடையாளங்களில் ஒருவருமான இலக்கிய கலாநிதி அமரர். வ.அ. இராசரத்தினம் அவர்களின் கனிஸ்ட புத்திரன்தான்’ இந்நூலின் ஆசிரியர் இளங்கவிஞர் மேரியன் என்பதை முதலில் சொல்லியாக வேண்டும்.
ஈழத்து இலக்கியப் பொதுவெளியில் ‘வ.அ’ எனப் பிரபல்யமாக அழைக்கப்பெற்ற வ.அ.இராசரத்தினம் புனைகதைத் துறையில்தான் கொடிகட்டிப் பறந்தவரெனினும் அவரிடம் கவிதைபுனையும் ஆற்றலும் இருந்தது.
1948 இல் அமரர் அ.செ. முருகானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருகோணமலையில் வெளிவந்த ‘எரிமலை’ என்ற பத்திரிகையில் அதன் 1948 ஆனி மாத இதழில் வெளிவந்த கவிதை மூலம்தான் வ.அ. இன் இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்துள்ளது.
வ.அ. அவர்கள் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கவிதையாக்க முயற்சிகளில் ஈடுபட்டார்.
‘தொத்துவச்ச பின்னலிலே
சொக்கிப் போனீங்க
தொந்தரவு வேணாம் தம்பி
வீட்டுக்குப் போங்க’
என்று ஆசிரிய கலாசாலைக் காலத்திலேயே அங்கதச் சுவையுடன் கொத்தமங்கலம் சுப்பு பாணியில் கவிதைகளை ஆக்கியவர் அமரர் வ.அ. அவர்கள்.
‘ஈழநாதன்’ என்ற புனைப்பெயரில் ஈழகேசரிக் காலத்தில் கவிதைகளை யாத்துள்ளார் வ.அ. அவர்கள்.
வ.அ. வின் கவிதைகள் பல ‘வசந்தம்’ சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. கிண்ணியாவைச் சேர்ந்த அண்ணல்- கல்லாற்றைச் சேர்ந்த ராஜபாரதி- கல்முனை நீலாவணையைச் சேர்ந்த கவிஞர் நீலாவணன் ஆகிய கிழக்கிலங்கையின் முன்னணிக் கவிஞர்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தது.
1977 ஆம் ஆண்டு மூதூர் அமுதா அச்சகத்தில் பதிக்கப்பெற்றுத் ‘தங்கம்’ வெளியீடாக வந்த ‘பூவரசம் பூ’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வ.அ. அவர்களின் கவித்துவத்தைப் பறைசாற்றக்கூடியதாகும்.
உருது மொழிக் கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் ‘துர்ஸீனாவின் பயாம் இமஸ்ரிக்’ என்ற கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் மொழிபெயர்த்து ‘பூவரசம் பூ’ எனும் தலைப்பில் வெளிவந்த வ.அ. அவர்களின் கவிதைகளில் கவிஞர் அல்லாமா இக்பாலின் கருத்துக்களை அதன் உணர்ச்சியும் சுவையும் குன்றாமல் தமிழுக்கு அறிமுகம் செய்தார். பொருள் ஊறுபடாமல் உருவம் சிதையாத விருத்தப்பாக்களில் இக்கவிதைகளை வ.அ. அவர்கள் வடித்திருந்தார்.
‘ஆக்காண்டி ஆக்காண்டி எங்கே முட்டையிட்டாய்?’ என்ற கிழக்கிழங்கையின் கிராமியப் பாடலை ஆரம்ப அடியாக வைத்து ‘ஆக்காண்டி’ என்ற தலைப்பில் ‘ஆக்காண்டி ஆக்காண்டி எங்கே நீ முட்டையிட்டாய்’ எனத் தொடங்கும் இவர் எழுதிய கவிதை லண்டனில் இருந்து வெளிவந்த ‘ஈழகேசரி’ யில் 1996 ஆம் அண்டு மே இதழில் வெளி வந்துள்ளது.
கவிஞர் நீலாவணன் எழுதிக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்த முற்றுப்பெறாத காவியமான ‘வேளாண்மை’ நீலாவணனின் மரணத்தின் பின்னர் கல்முனையில் கவிஞர் சடாட்சரன் மூலம் நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்று அதனை 1982 இல் மூதூரில் தங்கம் வெளியீடாகக் கொணர்ந்தார். இவ் ‘வேளாண்மை’ க்காவியத்தின் தொடர்ச்சியையே நான் ‘விளைச்சல்’ எனும் குறுங் காவியமாகக் கொணர்ந்தேன்.
இதுகாறும் நான் கூறியவை, இன்று வெளியிடப்பெறும் ‘மூன்றாவதுகண்’ கவிதைத் தொகுப்பின் நூலாசிரியர் கவிஞர். இரா.மேரியனின் தந்தையாரான அமரர் வ.அ. இராசரத்தினம் அவர்களின் கவிதைத்துறை சார்ந்த பக்கங்களாகும். ‘குலவிழுது கல்லாமல் பாகம்படும்’ என்பதற்கிணங்க அமரர் வ.அ. அவர்களின் கவிதாற்றல் அவரது மகனான இரா.மேரியனுக்குள்ளும் ஊடுபாய்ந்ததன் விளைவே மேரியனின் கவிதை நூல்களாகும் என்றே நான் நோக்குகிறேன். ஏற்கெனவே அவரது கன்னி வெளியீடாக ‘சுருதி தேடும் ராகங்கள்’ வெளிவந்துள்ளது. ‘மூன்றாவதுகண்’ இவரது இரண்டாவது நூலாகும். இந்த அரங்கிலே ‘கரைதொடும் அலைகள்’ எனும் இன்னுமொரு கவிதை நூலும் வெளிவருகிறது. மொத்தம் மூன்று கவிதைத் தொகுப்புக்களை இதுவரை தந்திருக்கிறார். மேரியன் அவர்கள் வணக்கத்திற்குரிய பாதர் நவாஜி அவர்களின் இளவல் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். மேலும், கவிஞர் மூதூர் முகைதீன் அவர்கள் இந்நூலுக்கான தனது அணிந்துரையில் ‘தனது தாயாரின் மறைவுக்குப் பின்னர் தன்னையும் தனது மற்றைய உடன் பிறப்புக்களையும் கண்ணாகக் கருதி பாதுகாத்து சீராட்டி வளர்த்த தனது அன்புச் சகோதரி ஒரு பாசமிகு தாயாகவும் விளங்கிய திருமதி வசந்தவல்லி அன்ரனி அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்திருப்பது மிகப் பொருத்தமானதும், பாராட்டக்கூடியதுமான விடயமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் தலைப்பான ‘மூன்றாவதுகண்’ என்பது இந்நூலின் முதலாவது கவிதையாக வந்துள்ளமையும் அக்கவிதை தனது அன்னையின் மறைவுக்குப் பின் தாய்க்குத்தாயாக நின்று தன்னை ஆளாக்கிய தனது மூத்த சகோதரியைக் குறித்தே எழுதப்பட்டுள்ளமையும் அதன் பொருத்தப்பாடு கருதிச் சிலாகிக்கத்தக்கதாகும். ‘அம்மா என்ற இலக்கணத்தின் ஆணிவேர்’ என்று தனது சகோதரியை மேரியன் அடையாளப்படுத்துகிறார்.
அவரது மூத்த சகோதரி திருமதி. வசந்தவல்லியை நாம் வசந்தி என அழைப்போம். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகக் கட்டிடத் தொகுதியாக விளங்கும் முன்னாள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் எனக்கு நான்கு வருடங்கள் Jumior
ஆகப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றார். கல்லூரிக் காலத்து உறவினால் அவர் எப்போதும் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். அதனால்தான் என்னவோ இந்நூலாசிரியரின் மூத்த சகோதரனும் வசந்திக்கு இளையவருமான நவாஜி அவர்கள் அவர் வணக்கத்துக்குரியராகவிருந்தபோதிலும்கூட என்னையும் அண்ணன் என்றே அழைப்பார் என்ற தகவலையும் இங்கே முன்வைத்து எனக்கு இடப்பட்ட ‘நூல்நயம்’ பணிக்குள் இனி நுழையலாம் என விழைகின்றேன்.
தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் சங்ககாலச் செய்யுள் இலக்கியங்கள்- பக்தி இலக்கியங்கள்- பாரதியுகம் எனும் கால கட்டங்களையடுத்து நாம் இப்போது சஞ்சரித்துக் கொண்டிருப்பது ‘புதுக்கவிதை’ யுகமாகும்.
யாப்பை மீறிய அல்லது கட்டுடைத்த சிலவேளைகளில் யாப்பையே பொருட்படுத்தாத ஒரு வடிவம்தான் புதுக்கவிதை. ‘பா’ இலக்கியத்திற்கு அடிப்படையான ஓசை – சந்தம் புதுக் கவிதையைப் பொறுத்தவரை, ஓசை புதுக்கவிதைக்கு ஒரு பொருட்டல்ல என்பதுதான் பொது விதி. இவ்வாறு ஓசையைப் பொருட்படுத்தாத புதுக்கவிதை வடிவங்களிலே எழுதப்படும் கவிதை ஆக்கங்களை கவிஞர் காசி. ஆனந்தன் ‘பொழிச்சல்’ எனப் பெயரிட்டு வகைப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இம் ‘மூன்றாவதுகண்’ கவிதைத் தொகுப்பு நூலை ஒரு ‘பொழிச்சல்’ இலக்கியமாகவே நான் நோக்குகிறேன்.
தமிழ் இலக்கியப் பொதுவெளியில் புதுக் கவிதைப் போக்கு வந்த பின்னர் புற்றீசல்கள் போலப் புதுக் கவிதைத் தொகுதிகள் வரத் தொடங்கின. அவற்றின் பெரும்பாலான கவிதைகள் இருண்மை கொண்டதாகவும்- பொருள் மயக்கம் தருவனவாகவும் – புரியாத புதிராகவும் – நுகர்வோனாகிய வாசகனுக்கு அறவே புரியாத மொழியிலும்தான் வெளிவந்தன. அதற்கு குறியீடு, படிமம் என வேண்டப்படாத விளக்கங்களும் வேறு தரப்பட்டன.
இந்தப் பின்னணியிலே வைத்துப் பார்க்கும்போது இம் ‘மூன்றாவதுகண்’ கவிதைத் தொகுப்பு நூல் இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு வித்தியாசமான வரவு ஆகும்.
உள்ளடக்கத்தின் நேரடி வெளிப்பாடு- அதனை வெளிப்படுத்தும் எளிமையான நேர்கோட்டு மொழிநடை – பொருத்தமான இருண்மையற்ற சொல்லாட்சி என்பன மேரியனுடைய கவிதைகளின் பண்புகளாக உள்ளன. தனது ‘அக்காச்சி’யை ‘மூன்றாவதுகண்’ ஆக நோக்கும் இந்நூலின் முதல் கவிதையிலேயே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இப் பண்புகள் விரவிக்கிடக்கின்றன.
ஓவ்வொரு கவிதையாக நயம் கூறுவதை நான் தவிர்த்துக் கொள்கின்றேன். நேர முகாமைத்துவம் மட்டுமல்ல அதற்குக் காரணம், நீங்கள் எல்லோரும் அவற்றைப் படித்துப் பசியாறுவதே பொருத்தம் என நான் எண்ணுவதுமாகும்.
எனினும் எனது மனதில்பட்ட ஒரு கவிதையைக் குறிப்பிடலாமென அவாவுகின்றேன்.
‘தெம்மாங்கு படிக்கும் தென்னை மரக்குயிலே’ எனும் கவிதை
‘தெம்மாங்கு படிக்கும் தென்னை மரக்குயிலே ஒன்னநானும் பார்க்கையிலே ஆயிரம்கோடி ஆனந்தமடி.
‘மனசும் மறக்கலயே நெஞ்சாம் கூட்டில் நெசமா நீ தாண்டி பஞ்சவர்ணக் கிளியே பாசமிகு மயிலே தெம்மாங்குபாடடி சிங்காரக்குயிலே
‘மஞ்சப் பொடவையில மாமனத்தான் மயக்கிறியே மஞ்சத்தில் கொஞ்சத்தான் நெஞ்சமும் துடிக்குதடி மனசாரச் சொல்லுறேன் நீதான் என் பெண்டாட்டி
என இக்கவிதை தொடர்கின்றது. இசையமைத்துப் பாடினால் ஒரு திரைப்பாடலாகும் தன்மை இக்கவிதைக்கு இருக்கிறது.
இந்நூலிலுள்ள கவிதைகளில் அனேகமானவை காதல் கவிதைகளாகவும்- தாய்மையைப் போற்றுவனவாகவும் – பெண்களை மதிப்பனவாகுமே உள்ளன. தனது அக்காச்சியை மட்டுமல்ல அனைத்துப் பெண்களையுமே இந்த உலகின் ‘மூன்றாவதுகண்’ என நோக்கும் பார்வை பெண்மையை மதித்துப் போற்றும் அவரது உள்ளத்தை உணர்த்துகின்றது. உலகில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்ற ‘திருநங்கைகளும் சகமனிதரே உணர்ந்து பயணிப்போம்’ எனும் கவிதையின் வரிகளில் கவிஞரின் முற்போக்கான முகம் தெரிகிறது.
இவருடைய கவிதை மொழி சிக்கலில்லாமல் எளிமையாக இருப்பதால் இவர் தனது கவிதை மூலம் சொல்லவரும் செய்தி வாசகனை எளிதில் பற்றிவிடுகிறது.
இந்நூலிலுள்ள கவிதைகளில் ஆங்காங்கே பொங்கலிலே முந்திரிப்பருப்பு கடிபடுவதைப்போல சில சொற்றொடர்கள் நல்ல படிமங்களாகவும்- உருவகங்களாகவும் சுவையூட்டுகின்றன.
உதாரணங்கள் சில:
• தனது ‘மூன்றாவதுகண்’ ஆன அக்காச்சியைக் குறித்து ‘விருந்தோம்பலும் இவளிடமே பாடம் கற்றுக் கொள்ளும்’ என்கிறார்.
• ‘மஞ்சள் வெயில் மாலையில்’ எனும் கவிதையில் செக்கல் பொழுதைச் செவ்வந்தி எனும் பெண்ணாக உருவகித்து அதனைக்கண்டு ‘பாலை என் நெஞ்சமோ சோலையாக உருவகித்தது’ என்கிறார். இதே கவிதையில் வரும் ‘என் நெஞ்சுக்குள்; ராட்டினமாகச் சுழன்று கொண்டிருந்தது’ எனும் வரிகளும் நல்ல உருவகமே.
• ‘பச்சரிசி பல்லழகி’ எனும் கவிதையில் தன்மனதில் பதிந்த மங்கையொருத்தியை ‘செந்தாமரைப் பூவழகி’ என்றும் அம்மங்கை ‘அசைஞ்சால் தேரு’ ‘சிரிச்சால் நந்தவனம்’ என்றும் கூறியிருப்பது சிறந்த அழகியல் படிமங்கள்.
• ‘வரமென்று வந்த தேவதை’ எனும் கவிதையிலே தான் தேர்ந்தெடுத்த தேவதை அமுதாவை ‘நெஞ்சிலே ஆணிகளால் அறையப்பட்ட காவியம்’ என்கிறார். இந்த அமுதா இன்னும் சில கவிதைகளில் வந்து போகின்றாள். யார் இந்த அமுதா என்ற கேள்வியும் எம்முள்ளே கொழுக்கி போடுகிறது.
• ‘முதல் கனவே’ எனும் கவிதையில் ‘வேல் விழியால் வேந்தனை வீழ்த்தினாயே ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் அம்புகள் பாய்ந்ததுவே’ என்ற கவிதை வரிகள் மூலம் காதலை ஒரு ‘சமர்’ ஆகக் காட்டுவது நல்ல கற்பனை. அதாவது காதல் சமர்.
• ‘ஒய்யாரி’ எனும் கவிதையில் ‘சிக்கனமான சிற்றிடையாளே’ என்கிறார்.’மின்னல் இடை’ – ‘கொடி இடை’ – ‘நூல் இடை’ எனும் வழமையான உவமைகளையெல்லாம் உதறி எறிந்துவிட்டு ‘சிக்கனமான சிற்றிடை’ என்கிறார். இவ்வரிகளைப் படித்தபோது கவிச்சக்கரவரத்தி கம்பன் ‘ இல்லாள் எனும் இடையாள்’ எனச் சீதையை இராமாயண காவியத்தில் வர்ணிப்பதும், ‘ஆலயமணி’ திரைப்படத்திலே வரும் பாடலொன்றில் கவியரசு கண்ணதாசன் கையாண்ட ‘இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா’ என்ற வரிகளும், அதேபோன்று ‘இடையா? இது இடையா இல்லாதது போல் இருக்கிது’ என ‘அன்னை இல்லம்’ எனும் திரைப்படத்தின் இன்னுமொரு திரைப்படப்பாடலும் நினைவில் எழுந்தன. கவிஞர் மேரியனோ கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் சவால்விட்டு ‘இடையை’ ‘இல்லை’ யென்று பொய் சொல்லாமல், ‘இடை’ இருக்கிறது; அது ‘சிக்கனமான சிற்றிடை’ என்கிறார். சிக்கனமே சிறுத்ததுதான். சிக்கனமான சிற்றிடை எனும்போது அது இன்னும் சிறுக்கிறது. இது ஒரு சிறந்த சொல்லாட்சி
• ‘நாளைய விடியல் உன் கையில்’ எனும் கவிதையில் வரும் ‘பூசணிக்காய் பூமிக்கு பாரமில்லை’ எனும் வாக்கியம் மண்ணுக்கு மரம் பாரமா?’ – ‘மரத்துக்கு கிளை பாரமா?’ – ‘கொடிக்கு காய் பாரமா?’- ‘பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?’ என்பது போன்ற புதுமையான சொற்றொடர்.
• ‘செவ்வந்தியே………’ எனும் கவிதையில் ‘நீ போகும் பாதையெல்லாம் பூத்துக் குலுங்குதே நீயோ அழகிய நந்தவனமோ?’ எனக் கேட்பதும் சிறந்ததொரு படிமம்
• ‘வஞ்சி’ எனும் கவிதையில் குடமேந்தி இடுப்பிலே வாதைப்படும் வஞ்சி சிசுவைச் சுமந்திட ஒத்திகை பார்ப்பதாக ஊகிப்பது உயர்ந்த கற்பனை.
• ‘உயிரில் கலந்த உறவே’ எனும் கவிதையில் தனது மனம் கவர்ந்த மங்கையொருத்தியை ‘சேலையில் பூத்திட்ட தெவிட்டாத சோலை’ என வர்ணித்திருப்பதும் நல்ல படிமத்திற்கு எடுத்துக்காட்டு.
இவ்வாறான நல்ல படிமங்களை மேரியன் கையாண்டிருக்கின்றார். ஆனாலும், கவிதைகள் யாவும் ஒரு நேர்கோட்டுப் பாதையிலே தொடர்ந்து செல்வதாலும் மல்லிகைப் பூக்களை இடைவெளிவிட்டு ஒற்றையாகக் கோர்த்த சரம்போல அவை விளங்குவதாலும் அதனால் அழகியல் அடர்த்தியினதும் கவித்துவச் செறிவினதும் கவிதா மொழியினதும் போதாமையை இக்கவிதைகளில் என்னால் அவதானிக்க முடிந்தது.
உவமை – உருவகம் – உயர்வுநவிற்சி போன்ற அழகியல் அம்சங்களை இன்னும் அதிகமாகத் தனது கவிதைகளிலோ சேர்த்து உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் அளிப்பாராயின் மல்லிகைப் பூக்களை அடர்த்தியாகக் கோர்த்த மலர் மாலைபோல இன்னும் எடுப்பாக இவரது கவிதைகள் விளங்கும் என்பது எனது அபிப்பிராயம்.
நதியொன்று நேர்கோட்டிலேயே செல்லாமல் வளைந்தும் நெளிந்தும் சிறுத்தும் பெருத்தும் பிரவாகித்து ஓடும்போதுதான் அது அழகாக இருக்கும். கண்ணையும் கருத்தையும் கவரும். கவிதையும் அவ்வாறானதுதான். கவித்துவம் கரைபுரண்டோட வேண்டும்.
அவரது தந்தையான அமரர் வ.அ. அவர்கள் கவிஞர் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்திற்கு அளித்துள்ள முன்னுரையில் கூறியிருப்பதுபோல கவித்துவம் ‘கோதாவரி’ யாகப் பாயவேண்டும். இதனை ஓர் ஆலோசனையாக முன்வைப்பதுடன் இவரது தந்தையாரிடம் குடிகொண்டிருந்த கவிதாற்றல் மரபணு ஊடாக மேரியனிடம் மடை மாற்றம் பெற்றுள்ளது. அதனை அவர் பத்திரமாகவும் பக்குவமாகவும் கொண்டுசெல்வாராயின் மேரியனின் கவிதாற்றல் மென்மேலும் விளைச்சலுறும் என அவரை வாழ்த்தி விடை பெறுகின்றேன்.