— வீரகத்தி தனபாலசிங்கம் —
நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளக் கூடிய வலுவுடன் இல்லை என்ற போதிலும், போட்டியிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் அவற்றுக்கு இருக்கிறது. தெற்கில் உள்ள பழைய கட்சிகளையும் வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளையும் பொறுத்தவரை, இரு தேசிய தேர்தல்களுக்கு பின்னரான புதிய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அதனால் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் அவை இறங்கியிருக்கின்றன.
நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) க்கு இருந்த மக்கள் ஆதரவைக்கூட தற்போது கொண்டிருக்கவில்லை. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வேகத்தில் மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே வேகத்தில் அதிகாரத்தையும் ஆதரவையும் இழந்து நிற்கிறது. குறைந்தளவு மக்கள் ஆதரவுடன் என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு இணக்கப்பாடுக்கு வந்து உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்றே முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுவதற்கு விரும்புகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தன்னகம்பாவப் போட்டி இதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதனால், இரு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது.
அதேவேளை, ஆளும் கட்சியான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை, அதன் கடந்த ஐந்து மாதகால ஆட்சி மீதான ஒரு வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமையப்போகின்றன. பழைய அரசியல் கட்சிகளை நிராகரித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்த போதிலும், பொருளாதார இடர்பாடுகளில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க தணிவையும் காணமுடியாமல் இருப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல், இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. ஆனால், அதற்காக எதிர்க்கட்சிகளை உள்ளூராட்சி தேர்தல்களில் பெருமளவில் ஆதரிக்கக்கூடிய அளவுக்கு மக்களின் மனங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்று கூறிவிட முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகையை விடவும் பாராளுன்ற தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகை மிகவும் அதிகமானதாகும். ஒரு ஏழு மாதகால இடைவெளியில் மூன்று தேர்தல்களைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப்படுவதாலும் தாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த அரசாங்கம் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாததாக இருப்பதாலும் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.
இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் பின்னடைவைக் கண்ட தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மீண்டும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெருமளவில் பெற்று இரு மாகாணங்களிலும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய தனியான கட்சியாக விளங்குவதற்கு காரணம் தங்களது கடந்த கால செயற்பாடுகளே என்பதை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுவரையில் முழுமையாகப் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.
தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியை, எதிர்காலத் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு அல்லாமல், வேறு காரணத்துக்காக முன்னெடுப்பதாக முதலில் கூறியவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொனானம்பலம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதை நோக்கமாகக்கொண்டதே தனது முயற்சி என்று அவர் அறிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பொன்னம்பலம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பொன்னம்பலம் ஒத்துழைப்பைக் கோரி கடிதம் ஒன்றையும் கையளித்தார். ஆனால், தமிழரசு கட்சி அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை அவருக்கு அறிவித்ததை அடுத்து அவரது முயற்சி தடங்கலுக்கு உள்ளானது. அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு பின்னரே புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்திருப்பதால், அந்த விவகாரத்தில் தற்போது அவசரப்பட வேண்டியதில்லை என்ற தொனியில் தமிழரசு கட்சியின் பதில் அமைந்திருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவிதமான அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனையும் முன்வைக்கப்படாத நிலையில் தமிழ்க் கட்சிகள் அது தொடர்பில் ஆராய்வதற்கு எதுவுமில்லை என்பதே தமிழரசு கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.
முதலில் பொன்னம்பலத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டிய சிறீதரன் தனது கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த ஒத்துழைப்பை தொடர்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலான சகல தீர்மானங்களையும் மேற்கொள்ளும் மத்திய செயற்குழுவில் சிறீதரன் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒரு நிலை தற்போது காணப்படுகிறது. அவரை எதிர்த்து கடந்த வருடம் ஜனவரியில் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனே இன்று அந்த கட்சியை வழிநடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அவர் இப்போது கட்சியின் பதில் பொதுச் செயலாளராவும் இருக்கிறார்.
அதனால் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடு சுமந்திரனின் அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டுவந்த சிறீதரன் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் பொன்னம்பலத்துடன் சேர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை தொடருவதில் ஏன் நாட்டம் காட்டவில்லை என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து யோசனைகளைச் சமர்ப்பிப்பதை நோக்கிய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல் இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழமைக்கு மாறாக, பொன்னம்பலம் தமிழரசு கட்சியுடன் (குறிப்பாக சிறீதரனை தலைவராகக் கொண்ட அதன் பாராளுமன்றக் குழுவுடன் ) ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தமிழரசு கட்சி இன்றியமையாதது என்றும் அது பாராளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயக விரோதமானது என்றும் பொன்னம்பலம் வெளிப்படையாக கருத்து வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருநதது.
புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையின்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பில் மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏழுபேரைக் கொண்ட குழுவொன்றை ஜனவரியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு நியமித்தது. அந்த குழுவில் சிறீதரனும் ஒரு உறுப்பினர் என்ற போதிலும், தமிழரசு கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவர் பொன்னம்பலத்தின் முயற்சிகளில் தன்னிச்சையாக பங்கேற்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருந்திருக்காது.
இத்தகையதொரு பின்புலத்தில், தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சிவஞானம் செயலிழந்துபோன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு முயற்சியில் அண்மையில் இறங்கினார். இந்த நோக்கத்துக்காக அவர் கூட்டமைப்பின் முன்னைய பங்காளிக் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆகியவற்றின் தலைவர்களை அணுகினார். அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பினார்.
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதில் நாட்டம் இருப்பது போன்று கருத்துக்களைக் கூறி சிவஞானத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த முன்று கட்சிகளின் தலைவர்களும் மறுநாள் ஒன்றுகூடி தங்களது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் வேறு ஆறு தமிழ்க் குழுக்களையும் சேர்த்துக் கொண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான ஒரு கூட்டை அமைத்துக் கொண்டனர். இதனால் அதிருப்தியுற்ற தமிழரசு கட்சியின் தலைவர் அதை ஆட்சேபித்து கடிதம் எழுதினார். அதற்கு புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு பதிலையும் அனுப்பினார்.
மீண்டும் கூட்டமைப்பை அமைக்கவேண்டிய தேவையில்லை என்பதும் ஏற்கெனவே தாங்கள் அமைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து செயற்படதமிழரசு கட்சி முன்வருவதே பொருத்தமானது என்பதுமே அந்த கூட்டணியின் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த வருட முற்பகுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு சீறீதரனும் சகல தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார். புதிதாக கூட்டமைப்பு எதுவும் தேவையில்லை என்று கூறிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒன்றிணைந்து செயற்படுவதில் அக்கறை இருந்தால் தமிழரசு கட்சி தங்களது கூட்டணியில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த கூட்டணியில் இணைவதற்கு தமிழரசு கட்சி ஒன்றும் சிறிய கட்சி அல்ல, அது இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் இயக்கம் என்று சிவஞானம் கடந்த வாரம் பதிலளித்திருந்தார். தமிழரசு கட்சி பெரும்பாலும் உள்ளூராட்சி தேர்தல்களை தனியாகவே சந்திக்கப் போகிறது. பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியும் கூட தனித்தனியாகவே போட்டியிடப்போகின்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்தனியாக தமிழ்க்கட்சிகள் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றிய பிறகு சபைகளின் நிருவாகத்தை அமைப்பதற்கு கூட்டுச்சேருவதே சிறந்த தந்திரோபாயம் என்ற தனது பழைய நிலைப்பாட்டையே சுமந்திரன் இந்த தடவையும் வலியுறுத்துகிறார். கடந்த வருட முற்பகுதியில் அந்த நிலைப்பாட்டை தமிழரசு கட்சி எடுத்ததையடுத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் எஞ்சியிருந்த புளொட்டும் ரெலோவும் வெளியேறி (ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தங்களது தேர்தல் இயக்கமாக அறிவித்தன.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்டைவைச் சந்தித்ததைப் போன்ற சூழ்நிலையே உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டும் உருவாகிறது. அது மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானதாக அமையக்கூடிய சாத்தியமே இருக்கிறது. கடந்த ஐந்து மாதகால ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பழைய சிந்தனையில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை என்பதை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்து பாராளுமன்ற தேர்தலில் வழங்கியதைப் போன்ற ஆதரவை உள்ளூராட்சி தேர்தல்களில் வழங்காமல் விடுவார்களா? இந்த கேள்விக்கு உருப்படியான பதிலை அளிப்பதற்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்றுவழி என்ன?
கடந்த வாரம் வடமராட்சியில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய சுமந்திரன் ‘ நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு ‘ என்ற ஒரு சுலோகத்தை முன்வைத்தார். ” அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியதிகாரத்தில் இருக்கப்போகிறது. அதற்காக சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளூராட்சி விவகாரங்களை கையாளுவதையும் அவர்களிடமே விட்டுவிடக்கூடாது ” என்று அவர் கூறினார். அவரது சுலோகம் எந்தளவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை பார்ப்பதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்கத் நேவையில்லை.
பாராளுமன்ற தேர்தலில் பெரும் பி்ன்னடைவைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிட்டால் கூட தமிழ் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாகவே இருக்கிறது. கடந்த வருடம் வடக்கில் தமிழ் மக்கள் தங்களை நிராகரித்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் சுயபரிசோதனையை நடத்தியிருப்பதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியையும் காணமுடியவில்லை.
ஒன்றிணைந்து போட்டியிடாத காரணத்தினால் மாத்திரம் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு மக்கள் தங்களை நிராகரித்ததாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நினைப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தவறு செய்வதாகவே அமையும். தற்போதைய நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாமல் தேசியவாத அரசியலை சுலோகங்களை தேவாரம் போன்று பாடிக்கொண்டிருந்தால் தமிழ் மக்களிடமிருந்து தமிழ்க்கட்சிகள் மேலும் தனிமைப்படவேண்டியிருக்கும்.
தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக நீண்டகால அரசியல் அபிலாசைகளை பற்றி ஓயாது பேசுவதில் நாட்டம் காட்டி வந்திருக்கிறார்கள். மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நீண்டகால அபிலாசையைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கலாம்.ஆனால், உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் விரைவாகவே பயனுறுதியுடைய விளைவுகளை காண்பிக்க வேண்டியிருக்கும். இது தமிழ் அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் காணப்படும் பெரியதொரு குறைபாடு. அர்ச்சுனாவின் குறும்புகளுக்கு ஒரு கூட்டம் ஆரவாரம் செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கும் இந்த குறைபாடும் ஒரு முக்கிய காரணம்.