மகளிர் தினம்….             (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து  ஒரு நட்சத்திரம்..!)

மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து  ஒரு நட்சத்திரம்..!)

(அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக்.  அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.)

— தமிழில் அழகு குணசீலன் —

அந்தக் கல்லூரியின் அதிபர் ஒரு பெண். அவர் வகுப்பறைக்குள் பிரவேசிக்கவும், ஆசிரியர் உஷ்மானின் வாயில் இருந்து உற்சாகத்துடன் உத்தரவு பிறக்கவும் சரியாக இருந்தது.

“எழுந்து நில்லுங்கள்”

மாணவிகள் அவசர, அவசரமாக எழுந்து நிற்கின்றனர். ஆனால் மாணவர்களோ சலிப்புடன் முணு முணுத்துக்கொண்டு எப்போதும் போன்றே…..தாமதமாக எழுகின்றனர்.

ஆசிரியர் வகுப்பறையை ஒரு தடவை நன்கு அவதானித்தார். எல்லா மாணவிகளும், மாணவர்களும் தனது உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளார்களா? வகுப்பு அமைதியாக இருக்கின்றதா? என்பதைத்தான் அவர் அவதானித்தார்.

 இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இப்படி நிற்கவேண்டுமோ? என்ற பயம் மாணவர்களுக்கு.

“எழுந்து நில்லுங்கள் என்பதன் கருத்து, உஷ்..! உஷ்..! யாரும் மூச்சுவிடக்கூடாது. நான் ஒரு ஊசியை நிலத்தில் போட்டால் அது விழும் சத்தத்தை நான் கேட்கக்கூடியதாக இருக்கவேண்டும். நான் சொல்வது புரிகிறதா…?” 

இந்த வார்த்தைகள் ஆசிரியர் உஷ்மான் அந்த மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.  இன்று அவர் இதைச்சொல்லவில்லை என்றாலும் அவரது குரலில் அந்த வார்த்தைகள் ஒலிப்பது போன்ற ஒரு உணர்வுடன் மாணவர்கள் எழுந்து நின்றனர்.

எல்லோரும் அமைதியாகவும், ஒழுங்காகவும் எழுந்து நிற்கின்றனர் என்பதை தனது அவதானிப்பின் மூலம் அவர் உறுதிப்படுத்தி இருக்கவேண்டும். அமைதியாக ஆனால் உரத்த குரலில் அடுத்த உத்தரவு பிறந்தது.

“அமருங்கள்”

வழக்கம்போல் எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களில் அமருகின்றனர். ஆசிரியர்  உஷ்மான் தனது இருக்கையை அதிபருக்கு கொடுத்து விட்டு வகுப்பின் முன்னால் நின்று கொண்டிருந்தார். ஆசிரியரால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டம், பாடக்குறிப்பு என்பனவற்றை மேற்பார்வை செய்ய அதிபர் ஆரம்பிக்கவும், ஆசிரியர் உஷ்மான் கரும்பலகையை நோக்கி நடக்கவும் சரியாக இருந்தது.

‘பெண்ணும் அவளது வாழ்க்கையும்’ கொட்டை எழுத்துக்களில் கரும்பலகையில் தலைப்பிட்டார் உஷ்மான் ஆசிரியர். என்றாலும் ஒரு அரபு ஆசிரியரின் எழுத்துக்களுக்கு இருக்கவேண்டிய நேர்த்தியும், அழகும் அவரது எழுத்துக்களில் போதுமான அளவுக்கு இருக்கவில்லை.

அதிபர், ஆசிரியரின் பாடக்குறிப்பை வாசித்துக் கொண்டிருந்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூகத்தில் பெண்களின் உண்மை நிலையும், விடுதலைக்கான வாய்ப்புகளும்……என நீண்ட வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. அரபு உலகின் முன்னணிப்பெண்கள் சிலரின் பெயர்கள் எடுத்துக்காட்டாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன. 

அல்ஹன்சா, கின்ட் பின்ட் அல் நுஹ்மான், ஹருண் அல்றஷின் மனைவி சுபைதா என்பன குறிப்பிடப்பட்டிருந்த பெயர்கள். ஆனால் ஷர்ஹா அல் ஜமாமாவின் பெயர் இவற்றில் அடங்கவில்லை. இந்தப்பெயரை ஆசிரியர் மறந்து விட்டாரா? அல்லது அவமானப்படுத்தும் எண்ணத்தில் வேண்டுமென்றே புறக்கணித்து விட்டாரா? என்பதை அதிபரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அதிபர் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஆசிரியர் உஷ்மானின் இருபது ஆண்டுகால கற்பித்தல் அனுபவம், அப்படியே பளிச்சென்று தெரிந்தது. எழுத்தாளர் ஹபிஸ் இப்ராஹிம் பற்றிக் குறிப்பிட்டது மாத்திரமன்றி, அவரது கருத்துக்களையும் எடுத்துக்காட்டியிருந்தார். 

“தாய் ஒரு கல்விநிலையம், நீங்கள் அவளை நெறிப்படுத்தினால்…..”.

இதனைக் கேட்ட அதிபரின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. ஆசிரியர் தொடர்ந்தும் மாணவர்களுக்கு என்ன சொல்லவருகிறார் என்பதைக் கேட்பதற்காக ஆசிரியரின் பக்கம் தனது தலையைத்திருப்பினார். அதிபர் ஆசிரியரைப் பார்த்தபோது அவரின் அடர்த்தியான தலைமுடி தான் அதிபரின் கண்களை கவர்ந்தது. இந்த தனித்துவமான அடையாளம் காரணமாக பாடசாலை வளவின் அடுத்த எல்லையில் அவர் நின்றாலும் உஷ்மானை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

தன்னை அதிபர் கவனிக்கிறார் என்பது தெரிந்ததும் இன்னும் உற்சாகமாக கற்பித்துக்கொண்டிருந்தார் உஷ்மான். ஒசாமா அப்ட் அல் பஹ்தா என்ற மாணவன் ஆசிரியரைத்தொடர்ந்தும் கதைக்கவிடாது குறுக்கிட்டான். அவனது குறுக்கீடு தான் பாடத்தைத் தொடர்ந்து நடாத்துவதற்கு இடையூறாக இருந்ததினால் ஆத்திரத்துடன் வகுப்பறை அதிரும்படி கத்தினார்  அவர்.

“ஆசிரியர் அவர்களே ! மன்னித்துக்கொள்ளுங்கள்.” முகமட் மன்சூருக்கு அவசரமாக இருக்கிறது. அவன் தனது ஆண் உறுப்பை கையால் பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டிருக்கிறான்”. 

இதைக்கேட்ட ஆசிரியரின் காதுகள் சிவந்தன. அதிபரோ இதைக் கேட்காதவர்போல் தன் கவனத்தை ஆசிரியர் பக்கம் இருந்து திருப்பி பாடக்குறிப்பில் குவித்திருந்தார். இதற்கிடையில் இதைக்கேட்ட மாணவர்கள் பலத்த சத்தமாக சிரித்தனர். இந்த சிரிப்பொலி காரணமாக வகுப்பறை ஜன்னலில் வெளிப்பக்கத்தில் இருந்த இரண்டு குருவிகள் சட்டென்று பறந்தன.

ஆசிரியரின் முகத்தில் ஆத்திரம் மேலிட்டதைக்கவனித்த மாணவர்கள் தமது சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டனர். அவரது முகத்தில் ஆத்திரம் அத்துமீறியது. ஆத்திரத்தோடு கத்தினார். “வாயை மூடு!  கழுதை”.  ஆனால் அந்த மாணவனோ நிறுத்தவில்லை. தான் சொன்னது உண்மை என்பதை நிரூபிப்பது போன்று மீண்டும் தொடர்ந்தான்.

“கடவுள் சத்தியமாக! ஆசிரியர் அவர்களே! அவனுக்கு உண்மையாகவே அவசரமாக இருந்தது. தற்போது தனது உடுப்புக்களை ஈரமாக்கிவிட்டான்.

இப்போது ஆசிரியர் உஷ்மானுக்கு அவனது கூற்றை நிராகரிக்க முடியவில்லை. அவர் தனது கோபத்தை அடக்கிக்கொண்டு முகமட் மன்சூரை மலசலகூடத்திற்கு செல்வதற்கு அனுமதித்தார். அதிபரின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

ஆசிரியர், இப்போது விடயத்தை மாற்றுவதற்கு விரும்பினார். “தான் மாணவர்களோடு கண்டிப்பாக இருப்பதாகவும், அதுவும் பாடநேரத்தில் மலசல கூடத்திற்கு. அனுமதிப்பதில் இன்னும் கண்டிப்பு அதிகம்”  என்றும் மெல்லிய குரலில் அதிபருக்கு சொன்னார்.

அதிபர் காரியாலய சுற்றறிக்கைப்படி  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றைய பாடத்தைத் தான் விசேடமாகத் தயார்படுத்திய தாகவும் ஆசிரியர் உஷ்மான் அதிபருக்கு போட்டு வைத்தார்.

பாடத்தை முடிக்கும் படி ஆசிரியருக்கு சைகை செய்த அதிபருக்கு தனது சொந்தப்பிரச்சினைகள் கண்முன் நிழலாடின. தனது சொந்தப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கனவு காணத்தொடங்கினார் அதிபர்.

இந்த நாளில் கல்விக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் பாடசாலைக்கு வருகை தந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது சொந்த பிரச்சினைகளைப் பற்றி நான் அவரோடு கதைக்கமுடியும்….. இப்படி அதிபரின் கனவு தொடர்ந்தது.

ஆசிரியர் உஷ்மானோ தனது தலைப்பில் தொடர்ந்து கொண்டிருந்தார்.

‘ஒரு பெண்பிள்ளை உயர்ந்த நன் நடத்தையும், ஒழுக்கமும் உடையவளாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவள் பெரியவளாக வளரும்போது ஒரு பொறுப்பு மிக்க சிறந்த பெண்ணாக வரமுடியும்’.

இவற்றையெல்லாம் அதிபர் கவனித்திருக்க வாய்ப்பில்லை அவர் கனவுதொடர்கிறது.

 இப்படியான ஒருநாளில் முதல் பெண்மணி பாடசாலைக்கு வருகை தருவதாத இருந்தால்  இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும். அன்பும்,  பண்பும் மிக்க அவர் போன்ற ஒருவரால் தான் எனது பிரச்சினைகளை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். என்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இப்படிக் கஷ்டங்கள் இருக்கக்கூடாது. இந்த வயதிலும், இப்படியான ஒரு பகுதியிலும் இருந்து கொண்டு, வாகனங்கள் நிறைந்த வீதியில் பல கிலோமீட்டர்கள் பயணம்செய்தே வேலைக்கு வரவேண்டியுள்ளது.

எனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு கல்லூரியாக இருந்திருந்தால் எவ்வளவு நல்லது. ஆனால் அது கல்வியமைச்சின் செயலாளர் அப்ட் அல் ஹமீட் பிக்கிரி அவர்களின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் எந்த சரியான காரணமும் இன்றி அவரோ நான் இந்த ‘அல் நூர்’ கல்லூரியில் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நான் எனது கணவனுக்கும் பிள்ளைகளுக்குமுரிய வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யவேண்டியிருக்கிறது என்பதை மற்றவர்கள் கவனத்தில் கொள்கிறார்கள் இல்லை. எனக்கு இவை ஒரு சுமையாக இருப்பதனால் தான் ஒரு நல்ல முடிவைத் தேடி அலைகிறேன்.

ஆசிரியர் உஷ்மானின் தடித்த குரலின் உரத்த சத்தம் அதிபரை சுயநிலைக்கு திருப்பியது. அவரது குரலில் இருந்த கரடுமுரடான தன்மை அவரது தலைமயிரின் கரடுமுரடான சுருள் தன்மைக்கு ஒன்றும் குறைந்ததல்ல. இப்போது ஆசிரியரின் வார்த்தைகள் அதிபருக்கு தொடர்ந்து கேட்கின்றன.

 ‘பெண் சமூகத்தில் சரிபாதி. கடவுள் எங்கள் இதயங்களுக்குள் இருக்கிறார். நாங்கள் அவளை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்பதற்காக….எமது முன்னோர்கள் இப்படிச் …..சொல்வார்கள்.’

மாணவி பற்றிமா முன்னோர்கள் சொன்ன கதைகளைக் கேட்கவில்லை. ஏனெனில் தனக்கு பக்கத்தில் உள்ள தோழி மேரிக்காக வகுப்பறை வாங்கில் ஒரு செய்தியை எழுதிக்கொண்டிருந்தாள். ‘நான் இப்போது முகமட் மன்சூர் போன்று செய்யப் போகின்றேன். நான் பலமாக மூச்சுப்பிடித்து அடக்கிக்கொண்டிருக்கிறேன்.’ பற்றிமா தனது  பெண் உறுப்பை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டிருக்கிறாள் . அவளும் அவசரமாக மலசலகூடத்திற்கு போகவேண்டி இருக்கிறது என்று ஆசிரியருக்கு சொல்லு. அப்போது பிள்ளைகள் எல்லோரும் சிரிப்பார்கள். ஆசிரியரும் என்னை மலசலகூடத்திற்கு அனுப்புவார். எழுதி முடித்தாள் பற்றிமா.

மேரி, எப்போதும் குறும்புத்தனம் கொண்டவள். பெடியன்கள் செய்வது போல் செய்வதில் அவளுக்கு அலாதி பிரியம். சிலவேளை வீட்டில் ஆண் சகோதரர்களுக்கு அவள் ஒரே சகோதரியாக இருப்பதினாலோ என்னவோ தெரியாது. உடற்பயிற்சியின்போதும், விளையாடும் போதும் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து செயற்படுவதில் அவள் ஆர்வம் காட்டுவாள். இதனால் பற்றிமாவின் யோசனைக்கு மேரி உடன்பட்டாள்.

மேரி எழுந்தாள்…!. சொன்னாள்….!

“ஆசிரியர் அவர்களே! பற்றிமாவுக்கும் அவசரமாக இருக்கிறது. அவள் தனது பெண் உறுப்பை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டிருக்கிறாள். அவள் உடனடியாக மலசல கூடத்திற்கு போகவேண்டியிருக்கிறது. ஆனால் அவள் தானாகச் சொல்ல வெட்கப்படுகிறாள்”.

வானத்தில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது போன்று இருந்தது. மேரிக்குப்பக்கத்தில் வந்த ஆசிரியரின் தடித்த கை அவளது கன்னத்தை பதம் பார்த்தது. காதைப்பொத்தி விழுந்த அறையினால் வகுப்பே திகைத்துப்போனது.

அத்தோடு அவர் நிறுத்தவில்லை. தனது வாயில் இருந்து எச்சில் பறக்க அவளைத் திட்டினார். அவளது நடவடிக்கையை அறிவு கெட்டதும், மானம் கெட்டதும் என்று விவரித்தார். அவளை இருக்கையை விட்டு எழுந்து சுவர் அருகில் நிற்குமாறு கட்டளையிட்டார். மகளிர் தினம் ஒரு கரிநாள் போன்று பயங்கரமானதாக மேரிக்கு அமைந்தது..

ஆசிரியர் உஷ்மான் மேரியிடம் மிருகத்தனமாகவும், கொடுமையாகவும் நடந்து கொண்டதால் அதிபர் ஆத்திரமுற்றவராகக் காணப்பட்டார். இந்தளவுக்கு கொடுமையாக அவர் நடந்து கொண்டதற்கு எவ்விதமான பாரதூரமான காரணமும் அதிபருக்கு தெரியவில்லை. அவர் ஏற்கனவே இப்படியான குண இயல்பு கொண்டவராகவே இருந்தார் என்பது அதிபருக்கு தெரியும். தனது மனைவிக்கு எதிராகவும் அவர் இப்படியான செயல்களில் ஈடுபட்டவர். தனது மனைவி தொடர்பாகவும் அவரது கருத்து இப்படியான தாகவே இருந்தது. தனது மனைவியை முழங்கால் எலும்புகள் உடையும் வரை அவர் தாக்கியிருக்கிறார். அவளுடன் படுக்கைக்கு செல்ல அவர் விரும்பவில்லை. அவளுக்கு செலவுக்கு பணம் கொடுக்கவும் அவர் விரும்பவில்லை. அவள் கடவுள் இப்படித்தான் பெண்களுக்குரிய வாழ்க்கை முறையை வகுத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டு, தன் வழிக்கு வரும் மட்டும் அவளுக்கு எதிராக இவற்றை அவர் செய்தார்.

பாடம் முடிந்தது. இது தொடர்பாக ஆசிரியரோடு கதைக்க அதிபர் விரும்பினார். எனினும் வகுப்பில் நிலவிய சூழ்நிலையைச் சரிப்படுத்த அக்கல்லூரியின் அதிபர் என்ற வகையில் சிலவற்றை சொல்ல விரும்பினார்.

“பாடசாலையில் மாணவர்களை அடிப்பது அமைச்சினால் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையினால் சிலவேளை அவளது காது காயமடைந்திருக்க கூடும். அப்படியானால் அது இன்னும் பாரதூரமானது.  நாங்கள் எல்லோரும் சரியான வார்த்தைகளை தெரிவு செய்து பேசுவதற்கு தெரிந்திருக்க வேண்டும். வீட்டு மொழிவேறு. பள்ளிக்கூட மொழிவேறு. மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பள்ளிக்கூடத்திலோ, வீதியிலோ பயன்படுத்தக்கூடாது. ஒரு பெண்பிள்ளையிடம் அமைதியாகவும், மென்மையாகவும் பேசவேண்டும்”.

“ஒரு பெண் ‘அந்த இடத்தை ‘ தனது கைகளால் தொடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அது என்ன காரணமாக இருந்த போதும் தடை தடையே “

அடுத்து பற்றிமாவுக்கு அருகில் சென்ற அதிபர், அவளது காதைப்பிடித்து இழுத்து, ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொண்டார். 

அவசர, அவசரமாக அந்த வகுப்பைவிட்டு புறப்பட்ட அதிபர் அடுத்த வகுப்பிற்கும் சென்றார். அங்கு மகளிர் தினம் சரியாக அனுட்டிக்கப்படுகிறதா? என்பதை பார்ப்பதற்காக. தான் விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும் என்பதையும், மதிய உணவு தயாரிக்க வேண்டும் என்பதையும் அவர் மறக்கவில்லை.

பாடசாலை மணி ஒலித்தது.

ஆசிரியர் உஷ்மான் தனது தொடையைச் சொறிந்து கொண்டு வகுப்பில் இருந்து வெளியேறினார். மாணவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

மகளிர் தினம்…பாடமும் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *