வாழும் இலக்கியங்கள்!

வாழும் இலக்கியங்கள்!

— நோயல் நடேசன் —  

நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலைசீவி புதுஉடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது, ஆணவம் நொந்துபோய், வாய்வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும். அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்றநினைப்பு ‘ என்பான்.

‘கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என எங்கள் ஆணவத்தை எண்ணெய் போட்டுத் தடவிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருவோம்.

கண்ணகி என்ற வார்த்தைக்கு அர்த்தம், சிலப்பதிகாரத்தைக் கேள்விப்படாத ஒருவனுக்கு மட்டுமல்ல, அரிச்சுவடி எழுதாதவனுக்கும் புரியும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரை கண்ணகி என்றால், கற்பு, நெருப்பு, துணிவு, கோபம் என்றவாறான விம்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு கலை வடிவங்களில் நின்று நிலவிவரும் சிலப்பதிகாரத்தின் கதைமூலம்  தமிழ் மக்களின் மூளையில்  பதிவுசெய்து வந்திருக்கிறது. 

அந்தச் சிலப்பதிகாரத்தை, அழகான நாடகக்கதையாக்கி, மெல்பேனில் மேடையேற்றிய, பாரதி பள்ளி மாணவர்களுக்கு நன்றிகள். மேடை ஏற்றத்திலிருந்து, நிர்வாகம், பாடல்கள் என மாவை நித்தியானந்தனின் உழைப்பையும் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

சிலப்பதிகாரத்தை முறையாக நாம் வாசிக்காத போதிலும் நானும் நீங்களும்  அறிந்த கதையது. கண்ணகி-கோவலன் – மாதவி என்ற மூன்று பாத்திரங்கள் நமது இலக்கிய வெளியில் மட்டுமல்ல, சமூக, குடும்ப வெளியிலும் இன்றும் நடமாடுபவர்கள். இதனாலேயே சில இலக்கியங்களை எக்காலத்திற்கும் இசைவாகச் சாகாவரம் பெற்றவை என்கிறோம்.

இதை எப்படி விளக்கலாம்?

நாடகத்தில், கண்ணகியின் கால்களிலிருந்து ஒற்றைச்சிலம்பைக் கழற்றி அதைக் கோவலனுக்கு விற்கக்கொடுத்தபோது, எனது வீட்டை அடைவு வைத்து நான் மிருகவைத்திய நிலையம் வாங்கிய நினைவு மனதில் வந்தது. வாழும் வீடு மட்டுமே எனது தொழிலுக்கு முதலாக இருந்தகாலமது. அதைப்போல் கண்டியில் நான் படிப்பதற்குப் பணம்பெற அம்மாவின் தாலி பயன்பட்டது. யாழ்ப்பாணத்தில் சொந்த வீட்டை அடைவு வைத்து வெளிநாட்டுக்குப்பிள்ளைகளை அனுப்புவார்கள். ஏன் எங்கள் குடும்பத்தின் பரம்பரை வீடும்  இப்படித்தான் எங்களை விட்டுத்தொலைந்தது.

மூலதனம் என்ற சொல், பலருக்கு கார்ள் மாக்ஸ்ஐப் படித்தே தெரிய வந்தது. இங்கே சிலப்பதிகாரத்தில் சாதாரணமாக மனிதர்கள் தொழிலுக்குத் தேவையான முதலை எப்படி உருவாக்குவது என்பது 1800 வருடங்கள் முன்பு சொல்லப்பட்டிருப்பது பெரிய விடயம். மேலும் சமூகப்பரிணாமத்தில் வணிகர்கள் மிகவும்தேவையானவர்கள் என்பது இங்கு மறைபொருளாகிறது. 

இதுகாறும் அரசர்களையும், அவர்களது வீரத்தையும், கொடையையும் புகழ்ந்த இலக்கியங்களுக்கு மத்தியில், சிலப்பதிகாரம்  வித்தியாசமானதென நினைக்கிறேன். ஏற்கனவே பலர் எழுதிய விடயமானாலும் தற்கால அரசியல் நடைமுறையில் ஒவ்வொருவரும் அந்த நாட்டின் அரசியல் அமைப்புக்கு (Constitution) விசுவாசமாக இருக்க வேண்டும், அதாவது அரசுக்கோ இல்லை தலைவருக்கோ அல்ல. ஆனால் கட்சி அரசியலில், பெரும்பாலும் இது நடப்பதில்லை என்றபோதிலும் அரசர்களுக்கு அக்காலத்தில் அரசமைப்பு என ஒன்று எழுதப்படாத போதிலும், மானிடஅறம் என்ற ஒரு விடயத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை நமக்குப் புரிய வைப்பதன் மூலம் அக்கால அறம், இக்கால அரசியல் அமைப்பிற்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்கிறது. அறம்மற்ற அரசனாக ஒருவன் இருக்கக் கூடாது என்பது இங்கு எச்சரிக்கையாகும். பலர் கேள்விக்கு உட்படுத்தும் விடயமான அரச ஒதுக்கீடு, இந்தியச் சுதந்திரத்தின் பின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் கல்வியிலும், அரச தொழில் துறைகளிலும் இடம் ஒதுக்கியமை  ஒரு அறம் சார்ந்த விடயமாகும்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவி தங்கும் பாண்டியநாட்டு ஆயர்பாடி பற்றிய காட்சி இந்த நாடகத்தில் வரும்போது ஆயர்பாடிப் பெண்கள் சமூகத்தின் மற்றுமோர் அங்கமாக டிஜிற்றல் திரையில் தெரிகிறார்கள். அரசர்கள் வணிகர்கள் மட்டுமல்லாது உழைக்கும் மக்களை இங்கே கொண்டுவரும்போது மொத்தமான சமூக இயல் தெரிகிறது. மாதரி என்ற ஆயர் பெண் தனது மகளையே கண்ணகிக்குப் பணிப்பெண்ணாக்குகிறாள்.

இங்கே என்ன தெரிகிறது?

வணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தினரோடு உறவாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சாதிகள் இருந்தாலும் வேறுபாடுகள் தெரியவில்லை என்பது வெளிச்சமாகின்றது. தொழில்பாகுபாடு என்பது ஓர் இனக்குழு சமூகத்திலிருந்து நிலஉடமைச் சமூகமாக  பரிணாமமடைந்தபோது வந்த ஒருவிடயம். அந்தத் தொழிற்பாகுபாடு இக்கால தொழிற்சங்கம் போன்றது. கொல்லர்கள், மற்றவர்களைத் தங்கள் தொழிலில் அனுமதிப்பதில்லை. இது சாதிப் பிரிவினையல்ல. ஒருபொற்கொல்லன் எக்காலத்திலும் காணி வாங்கி விவசாயம் செய்வதில்லை.  இனக்குழுக்களாக இருந்த சமூகம் நிலஉடமைச் சமூகமாக வரும்போது இந்தச்சாதி உருவாக்கம் ஏற்படுகிறது. 1800 வருடங்களுக்கு முன்பு அரசு, என்பது உலகத்தில் எல்லா இடத்திலும்  இருக்கவில்லை. ஐரோப்பாவில் ரோமர்களைத் தவிர வேறு எங்கும் இது இல்லை.

சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் மட்டுமே வில்லனாகிறான். இளங்கோவடிகள் சொல்லிய விடயம் இன்னமும் உள்ளது . இந்த நாடகம் 1984 இல் நான்கேள்விப்பட்ட ஒரு விடயத்தைப் என்மனத்தில் நிழலாடவைத்தது. 1980 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் ஓர் இயக்கத்தினர் நடத்திய வங்கி கொள்ளையில் எடுத்த நகைகளை அந்த இயக்கத்தினர், இரு பொற்கொல்லர்களை வைத்து உருக்கித் தங்கப்பாளம் ஆக்கி இந்தியாவில் ஆயுதங்கள் வாங்க எண்ணினர். அவர்கள் இருபொற்கொல்லர்களை அழைத்து உருக்கும் வேலையை அவரகளுக்கு கொடுத்தபோது அதில் சிறிது பொன்னை அந்த பொற்கொல்லர்கள் திருடிவிட்டார்கள் அதன்பின் அந்த இயக்கத்தால் அந்த பொற்கொல்லர்கள் எமது ஈழவழக்கப்படி சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். இந்தக்கதையை எனக்குச் சொன்னவர் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரே!

சிலப்பதிகாரப் பொற்கொல்லன் 1800 வருடங்களுக்கு முன்செய்த அதே செயல் நமது யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதுபோதாதா, தேசமோ காலமோ முக்கியமில்லாத ஒரு வாழும்இலக்கியம் சிலப்பதிகாரம் எனச் சொல்வதற்கு? 

இளங்கோ அடிகள் அருகர் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் இந்த நாடகத்தில் மாதவி கோவலனுக்குப் பிறந்தமகளைப் புத்த மடாலயத்திற்குத் தத்துக் கொடுத்தது என்றசெய்தியை ஒரு பிராமணர், கோவலனிடம் கொண்டுவருகிறார். ஆனால் நாங்கள் சிறு வயதில் சைவ பாடத்தில்படித்த சமணர்களைச் சாகும்வரை கழுவேற்றியது, புத்தர்களை வாதில் வென்றது என்ற தகவல்களுக்கு அப்பால், 1800 வருடங்கள் முன்பு மதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்ந்தன என்ற செய்தியைச் சிலப்பதிகாரம் தருகிறது.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில், அக்காலத்தில் அதிக சிக்கல்கள் இருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர்களுக்கு அந்தச் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கே நேரம் போதாது. அவர்கள் முதுகில் மதத்தைச் சுமந்து கொள்வது இயற்கையான விடயமல்ல.

அரசியலில் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கமுள்ள சிறிய குழுவினரே பிரிவுகள் பேசி, வெறுப்புகளை மக்கள் மத்தியில் விதைத்து அறுவடைசெய்கிறார்கள். இலங்கையிலும்,இந்தியாவிலும் ஐரோப்பியக் காலனித்துவ சக்திகள் உருவாக்கிய விடயத்தை, உள்நாட்டு அதிகார சக்திகள் தூக்கியபடி திரிகிறார்கள். அதுவே இந்தியாவில் முஸ்லீம் லீக்கை உருவாக்கியது. அதன் விளைவாக இந்து மதவாதிகள் குழுவாக உருவாகிறார்கள். அதேபோல் இலங்கையில் காலனித்துவத்திற்கு எதிராக எழுந்த சிங்கள பவுத்தஎழுச்சி, இலகுவாகச் சிறுபான்மையினருக்கு எதிராகியது. வெறுப்பை, வெறுப்பினால் வெல்லமுடியாது என்பதைத்தெரியாத தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் இன, மதஅழுக்கு மூட்டைகளை முதுகில் கட்டியபடி போரிட்டார்கள். மூவினத்தவர்களுமே இலங்கை நாட்டை அதலபாதாளத்தில் தள்ளினார்கள்.

இப்படியான பல தற்கால விடயங்களைத் தன்னகத்தேகொண்டு அக்காலத்தில் எழுதப்பட்ட இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை மூன்று மணி நேரம் நல்ல விறுவிறுப்பான திரைப்படம் போல் பார்க்க வைத்தது, சிலப்பதிகார நாடகம்.

இவ்வாறு பல விடயங்களை என்னுள் வெளிச்சம் போட்டுபார்க்க வைத்த மாவை நித்தியானந்தனுக்கும் மெல்பேர்ன் பாரதி பள்ளியினருக்கும் எனது நன்றிகள்.

ஒரு சினிமாவில் நாம் காட்சியை பார்த்து, ரசித்து விட்டுவந்தால் அது சினிமாவுக்கு வெற்றியல்ல.  அது வெறும்பொழுது போக்கு விடயமாகிறது . நாம் சினிமாவையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தை படித்துவிட்டோ அதையிட்டு நமது மனம் சிந்தித்து கிளரும்போது அதுவே அந்தச் சினிமாவை, நாடகத்தை, புத்தகத்தை படைத்தவனது வெற்றிக்கு அடையாளமாகிறது.