மாவையும் அம்பாறை மாவட்டமும்

மாவையும் அம்பாறை மாவட்டமும்

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர். சொல்-35)

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — 

 ‘மாவையும் மட்டக்களப்பும்’ எனும் மகுடத்தின் கீழ் அழகுகுணசீலன் அண்மையில் (02.02.2025) அரங்கம் மின்னிதழில் தொடர்பத்தியான ‘வெளிச்சம்-40’ இல் சில விடயங்களைப் பதிவிட்டிருந்தார். அதனைப் படித்ததன் விளைவே ‘மாவையும் அம்பாறை மாவட்டமும்’ என்ற தலைப்பிலான எனது இக்கட்டுரையாகும். 

 அழகுகுணசீலன் தனது கட்டுரையில் மாவை சேனாதிராஜாவுக்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுடன் வடக்கின் ஏனைய அரசியல் தலைவர்களைவிடவும் உறவும் ஊடாட்டமும் இருந்தன என்கின்ற விடயத்தைப் பதிவு செய்து அம்பாறை மாவட்டத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்த அரசியல் உறவில் அம்பாறை மாவட்டத்தமிழர் மகாசங்கத்தின் பெயரையும் ஏனையோரின் பெயர்களுடன் எனது பெயரையும் (செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன்) சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையை நான் எழுதுவதற்கு இதுவும் இரட்டிப்புக் காரணமாகும். 

 மாவை சேனாதிராஜாவுக்கும் எனக்குமிடையிலான அரசியல் உறவும் ஊடாட்டமும் சுமார் அரைநூற்றாண்டு காலத்தை உடையதாகும். 

 1972 ஆம் ஆண்டு பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கான குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து அந்த அரசியலமைப்பைத் தமிழர்களின் மரணசாசனம் என வர்ணித்த தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தை இராஜினமாச் செய்து இடைத்தேர்தலில் தான் மீண்டும் வெற்றிப்பெற்றால் 1972 குடியரசு அரசியலமைப்பைத் தமிழர்கள் ஏற்கவில்லையென்றும் அரசாங்கக்கட்சி வெற்றிபெற்றால் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் எடுத்துக்காட்டும் எனச் சவால்விட்டு ஓர் அரசியல் நெருக்கடியை அரசாங்கத்திற்கு உருவாக்கினார். 

 அவ்வாறு தனது பாராளுமன்ற ஆசனத்தைத் தாமாகவே துறந்த தந்தை செல்வா வடக்குகிழக்கு மாகாணம் முழுவதும் வலம் வந்தார். 

 மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அவரை வரவேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லக் கல்முனையிலிருந்து எனது வயதையொத்த பல நண்பர்களுடன் இணைந்து சைக்கிளில் ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடிவரை வந்தோம். 

 அப்போது நான் கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களத்தின்கீழ் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். எனது சொந்த மாவட்டமான அம்பாறையில் அமைந்த காரைதீவில் பிறந்து, பொத்துவிலில் வளர்ந்த நான் அரசாங்க ஊழியனாகக் கல்முனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 

 நானும் நண்பர்களும் களுவாஞ்சிக்குடியை அடைந்தபோது தந்தைசெல்வா வந்த ஊர்வலம் இராசமாணிக்கம் அவர்களின் வீட்டடியில் தரித்திருந்தது. சனக்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மக்கள் உற்சாகத்திலும் உணர்ச்சிமேலீட்டினாலும் தந்தை செல்வாவை நெருங்குவதற்காகத் துடித்துக்கொண்டிருந்தனர். அவ்வாறு முண்டியடிக்கும் கூட்டம் முதியவரான தந்தை செல்வாமீது தவறி விழுந்து மோதிவிடக்கூடாதென்பதற்காக ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து கைகளைச் சங்கிலிபோல் கோர்த்துக் கொண்டு தந்தைசெல்வாவை வட்டவடிவமாகச் சுற்றிநின்று பாதுகாப்பு வளையமொன்றை ஏற்படுத்தினோம். அவ்வாறு அப்போது எம்முடன் இணைந்து கொண்டவர்களுள் செட்டிபாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிசுந்தரமும் ஒருவர். இவர் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் எனது வகுப்பறை நண்பன். (பின்னாளில் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் அதிபராக விளங்கியவர்).

 இலட்சுமிசுந்தரம்தான் என்னை அந்த இடத்தில் வைத்து மாவை சேனாதிராஜாவுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எனக்கு வயது இருபத்தியிரண்டு. தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவும் தீவிர தொண்டனாகவும் நான் இயங்கிக் கொண்டிருந்த காலம்  (பதினெட்டு வயதிலேயே நான் தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகி விட்டிருந்தேன்). அந்த அறிமுகத்திற்குப் பின் மாவைசேனாதிராஜாவுடனான எனது அரசியல் உறவும் ஊடாட்டமும் அதிகரிக்கத் தொடங்கின. 

 அதன்பின் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் அவர் தனியாகவோ அல்லது அமிர்தலிங்கம் ஆட்களுடனோ அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதருகிறபோது நாம் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை. பாண்டிருப்பில் வேல்முருகு மாஸ்டர்ஸ் வீட்டில் – கல்முனை நகரில் நொத்தாரிஸ் கந்தையா அல்லது இராசதுரை வீட்டில் – காரைதீவில் (பெரிய) கணபதிப்பிள்ளை ஆசிரியர் வீட்டில் – அக்கரைப்பற்றில் சிவஞானச் செல்வக்குருக்கள் அல்லது வைத்தியர் மயில்வாகனம் (வாழையர்) அல்லது மூர்த்தி மாஸ்ரர் வீட்டில் தம்பிலுவில், திருக்கோவிலில் அறப்போர் அரியநாயகம் அல்லது சிந்தாந்துரை அல்லது கண்ணன் முதலாளி அல்லது அரசரெட்ணம் (கதிரமலை) வீட்டில் சந்திப்புகள் குறிப்பாக இளைஞர்களுடனான சந்திப்புகள் நிகழும். மாவை சேனாதிராஜா அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும்போது அவரை அழைத்துச் சென்று தங்கவைத்து விரும்தோம்பி கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்து அவரை மீண்டும் பாதுகாப்பாக யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதில் மட்டக்களப்பில் வேணுதாஸ், நடேசானந்தம் போன்றோருடனும் நானும் அவ்வப்போது இணைந்து செயற்பட்ட காலங்கள் கனதியானவை. காலத்தால் மறக்கப்படமுடியாதவை. அவர் மட்டுமல்ல வண்ணை ஆனந்தன் போன்றோரும் சில தடவை யாழ்ப்பாணத்திலிருந்து இவ்வாறு இப்பகுதிக்கு-கிழக்கிலங்கைக்கு வந்துபோயுள்ளனர். ஆனாலும் கிழக்கிலங்கை மண்ணில் கூடுதலாகக் கால்பட்ட வடபகுதி அரசியல் தலைவர்களாக அமிர்தலிங்கம், தர்மலிங்கம் (சித்தார்த்தனின் தந்தை), மாவைசேனாதிராஜா ஆகியோரையே அடையாளப்படுத்த முடியும். 

 கவிஞர் காசிஆனந்தனுடைய திருமணம் 06.07.1979 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் ஒருவருட காலத்தின் பின் மாவைசேனாதிராஜாவின் திருமணமும் நடந்தேறியது. 

 திருமணம் முடித்து அம்பாறை மாவட்டத்திற்குக் காசி ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா இருவரும் தமது துணைவியர்கள் சகிதம் வருகைதந்தபோது அவர்களை அழைத்துக் கோமாரியிலுள்ள சந்திரநேருவின் வீட்டில் மதியவிருந்து அளித்துச் சங்கை செய்து வாழ்த்தினோம். தம்பிலுவில் சிந்தாத்துரை, தர்மரெட்ணம், அரசரெட்ணம் ஆகிய மூத்த தமிழரசுவாதிகளும் அந்த நிகழ்வில்க் கலந்துகொண்டிருந்தனர். 

 பின்னர் ஒருநாள் நானும் என் மனைவி சகிதம் வேறொரு அலுவலாக யாழ்ப்பாணம் மயிலிட்டியிலுள்ள உறவினர் வீடொன்றிற்குச் சென்றிருந்தபோது எம்மை மாவைசேனாதிராஜா தனது மாவிட்டபுர வீட்டிற்கு அழைத்து இராப்போசனமளித்து விருந்தோம்பினார். உணவருந்தியபின் அவரது வீட்டு முற்றத்தில் அவரும் அவரது துணைவியாரும் நானும் என் மனைவியும் அவர்கள் அளித்த இனிப்பான திராட்சைப்பழங்களைச் சுவைத்தவண்ணம் நீண்ட நேரம் கதைத்திருந்துவிட்டு அவரது வீட்டைவிட்டு அகல நடுநிசியாகிவிட்டது. அந்த அளவுக்கு நாம் அன்னியோன்யமாக இருந்தோம். 

 காலங்கள் ஓடி 1994 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) என்ன நடந்தது என்பதை இங்கு பதிவு செய்வது பொருத்தம் என எண்ணுகின்றேன். 

 1994 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, 1989 தேர்தலில் முதன் முறையாக அறிமுகமான விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தமிழ்க்கட்சிகள் ஒரு குடையின் கீழ் போட்டியிட்டால்தான் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அப்போது நான் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் செயற்பாட்டாளராக (மாவட்ட இணைப்பாளராக) இருந்தேன். தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தி ஒரு குடையின் கீழ் அவர்களைப் போட்டியிட வைக்க நாங்கள் முயற்சித்தோம். அதற்காகக் கொழும்பிற்குத் தமிழர் மகா சங்கத்தின் தூதுக்குழுவொன்று வந்து அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தமிழர் விடுதலை கூட்டணி மட்டும் அக்கோரிக்கையை ஏற்காமல் தனித்துப் போட்டியிடக் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது. அப்போது அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நான் தலைமை தாங்கினேன். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அமரர். மு. சிவசிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். காரசாரமான விவாதங்கள் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. எங்களது கோரிக்கையை ஏனைய தமிழ்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு ஒரே சின்னத்தின் கீழ் (உதயசூரியன்) போட்டியிட முன்வந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் மறுத்துத் தனித்துப் போட்டியிட நின்றது. அப்போது எங்களுடைய அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தின் குழு கூட்டணியிடம் ஒரு நியாயமான கோரிக்கையை விடுத்தது. அது என்னவென்றால், அப்படித் தனித்துக் கூட்டணி போட்டியிட்டால் தமிழர் மகா சங்கம் கூட்டணியை ஆதரிக்கும் என்றும் தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளும் போட்டியிடும். அந்தச் சந்தர்ப்பத்தில் தற்செயலாக வாக்குகள் பிரிந்து அம்பாறை மாவட்டத் தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சத்தில் கூட்டணிக்குக் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தபோது அதற்கும் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். அப்படியானால் அங்கு யாரைத் தலைமை வேட்பாளராக நிறுத்துவீர்கள் என்று நாங்கள் கேட்டபோது மாவைசேனாதிராஜாவை நிறுத்தத் தீர்மானித்திருக்கின்றோம் என்று சொன்னார்கள். அதற்கு நாங்கள் ஏன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த ஒருவர் கிடைக்கவில்லையா என்று கேட்டு அதைத் தவிர்க்குமாறு கேட்டோம். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இவ்வாறுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு நியாயமற்ற செயற்பாட்டில் ஈடுபட்டது. எனவே அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து என்னுடைய தலைமையில் சுயேச்சைக்குழு அமைத்துப் போட்டியிட்டது. இதன் விளைவு 1994 இல் அம்பாறை மாவட்டத்தில் தமிழருக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் போனது. இதற்குக் காரணம் தமிழர் விடுதலைக்கூட்டணியே. அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் மாவைசேனாதிராஜாவின் தனிநபர் நலன் முதன்மைப் படுத்தப்பட்டதே இதற்குக் காரணம். 

 அடுத்ததாக 2000 ஆம் ஆண்டுத்தேர்தலின்போதும் முன்னைய அனுபவத்தை வைத்துக்கொண்டு அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் ஈடுபட்டது. அப்போதுகூட ஏனைய கட்சிகள் ஒரு குடையின் கீழ் அணிதிரள ஒன்றிணைந்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒன்றிணைய முன்வரவில்லை. எனது தலைமையின் கீழ் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக இணைந்து செயற்பட முன்வந்த கட்சிகள் தனித்தனியே போட்டியிட முயற்சித்தன. எங்களுடைய முயற்சி பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடியும் என்ற காரணத்தால் பல கட்சிகள் ஆத்திரமுற்று தனித்தனியே போட்டியிடுவதைத் தவிர்த்து ஒன்றாக ஒரு குடையின் கீழ் போட்டியிடுவதற்காகத் தமிழர் மகா சங்கம் ஏனைய கட்சிகளை இணைத்து சுயேச்சைக் குழுவை உருவாக்கியது. அதற்கும் நான்தான் தலைமை தாங்கினேன். கூட்டணியின் தேர்தல் வேட்புமனுவில் ஒரு பிழை இருந்ததால் அந்த மனுவை எதிர்த்து நாங்கள் வழக்குத் தாக்கல் செய்தபடியால் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் சார்பில் தமிழர் மகா சங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேச்சைக் குழுவே போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. அதில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்ட மா. குணசேகரம் (சங்கர்) அவர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவானார். அந்தத் தேர்தலில் கூட்டணியானது, அம்பாறை மாவட்ட தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முன்னைய 1994 பொதுத் தேர்தலில் நடந்ததுபோலப் பறிபோய் விடாமல் காப்பாற்றுவதற்காகப் பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருந்த அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கச் சுயேச்சைக் குழுவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும்படி அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் திரை மறைவில் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கு ஆதாரமாக அமரர். ந.ரவிராஜ் தன்னுடைய பெயரில் யு.என்.பி சார்பில் போட்டியிட்ட நிந்தவூரைச் சேர்ந்த அப்பாஸ் என்கின்ற சட்டத்தரணிக்கு ஆதரவு அளிக்கும்படி வீரகேசரியில் விளம்பரம் கொடுத்திருந்தார். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் விடுதலைக்கூட்டணிக்காரர்களிடம் மாவைசேனாதிராஜா அத்தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்கும்படி அறிவுறுத்தியிருந்தார். இப்படியாகத்தான் தமிழர் தாயகம் என்றும் தமிழ்த் தேசியம் என்றும் பேசிக்கொண்டு அதற்கு முரணாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி நடந்துகொண்டது. 

 இதே போன்றுதான் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 1994 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வன்னியைப் பிறந்தமண்ணாகக் கொண்ட முன்பு வவுனியா நகரசபைத் தலைவராக இருந்த திரு.கேதீஸ்வரன் அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்காது மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோருக்கு நியமனம் வழங்கி நியாயமற்ற முறையில் தமிழர் விடுதலைக்கூட்டணி நடந்து கொண்டது. வன்னிமக்களின் நலன்களைவிட தனிநபர்களான மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோரின் நலன்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. மக்கள் நல நாட்டமில்லாத யாழ்மேலாதிக்க மனப்பான்மை கொண்ட இவர்களுடன் எனக்கு அன்றிலிருந்து உடன்பாடு இல்லாமல் போய்விட்டது. அதற்கு முன்னரே 1987 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை (தனிப்பட்டரீதியில் அமிர்தலிங்கத்தைத்தவிர) என்ற அதிருப்தியும், தமிழர் விடுதலைக்கூட்டணி மீது எனக்கு ஏற்பட்டிருந்தது. 

 1994 இல் யாழ்மாவட்டத்தில் சூழ்நிலை நன்றாக இல்லையென்று காரணம்கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்மாவட்டத்திலே போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தது. அதனால் மாவைசேனாதிராசா, மு. சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி ஆகியோர் இடம்தேடி வெளி மாவட்டங்களுக்குப் படையெடுத்திருந்தார்கள். 

 காலங்கள் ஓடி, பின்னர் 2001 இல் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாகி அதற்குள் நடந்த பிரச்சினைகளால் தமிழர் விடுதலைக்கூட்டணியையும் அதன் உதயசூரியன் ‘சின்னத்தையும் ஆனந்தசங்கரி தட்டிக்கொண்டு போனபின் 2004 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதற்காக, 1972 இல் தமிழர் கூட்டணியாக உருவாகி 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழ்விடுதலைக்கூட்டணியாகப் பெயர்மாற்றம் பெற்ற காலத்திலிருந்தே சுமார் முப்பது தசாப்தங்களுக்கும் மேலாகப் பெயரளவிலேயே உறங்கு நிலையிலிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி தூசிதட்டி எடுக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக இரா. சம்பந்தனும் செயலாளராக மாவை சேனாதிராசாவும் ஆனார்கள். 

  இரா. சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் ‘பல்கனி’ அரசியல்தான் செய்தவர். அவருக்குத் தமிழரசுக்கட்சியின் மாவட்டப் பிரதிநிதிகளுடனோ அல்லது தமிழரசுக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடனோ உறவோ ஊடாட்டமோ பரிச்சயமோ குறைந்தபட்சம் அறிமுகமோ இருக்கவில்லை. ஆனால், மாவை சேனாதிராஜாவுக்கு இவை இருந்தன. இதுதான் மாவை சேனாதிராசாவின் ‘பிளஸ் பொயின்ட்’. அரசியல் தேவைகளுக்காகத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது பொதுச்சபையோ கூடவேண்டுமென்றால் மாவை சேனாதிராஜா தனக்குத்தெரிந்த தனக்குவிருப்பமான யார்யாரையெல்லாம் அழைக்கிறாரோ அவர்கள்தான் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் பொதுச்சபை உறுப்பினர்களாகவும் கருதப்பட்டனர். 2014 வரைக்கும் சுமார் பத்து வருடங்கள் தமிழரசுக்கட்சி இப்படித்தான் ஓடியது. 1972 க்குப் பின்னர் உறங்கு நிலைக்குச்சென்ற தமிழரசுக்கட்சி நீண்டகாலத்திற்குப் பின்னர் அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவானதன் பின்பு மட்டக்களப்பில் கூட்டிய பொதுச்சபைக் கூட்டத்திற்கு மூத்த தமிழரசுவாதிகள் பலர் அழைக்கப்படவில்லை. கேள்விப்பட்டுப் பொதுச்சபைக் கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்த அவ்வாறானவர்கள் ‘அழைப்பில்லை’ என்று கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் துரைராசசிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தேர்தல் தேவைகளுக்காகத் தமிழரசுக்கட்சிக்குள் நுழைந்தவர்களே தவிர தமிழ்த்தேசியத்தின்பால் விசுவாசமான ஈர்ப்புக்கொண்டவர்களல்ல.  

 தேவையானபோது தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தைக் கூட்டுவதற்கும் பொதுச்சபையைக் கூட்டுவதற்கும் இளைஞர்களைக் கட்சிபோடு வைத்துக் கொள்வதற்கும் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராசாவைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டாரேதவிர மாவை சேனாதிராசாவின் ஆளுமைப் பலவீனங்களைச் சம்பந்தர் சரியாகவே மதிப்பீடு செய்து வைத்திருந்தார். மாவை சேனாதிராஜாவிடம் அரசியல் மூப்பு இருந்ததேதவிர அறிவார்ந்த அரசியல் (ஞானம்) அனுபவமிருக்கவில்லை. போராட்டப் பின்னணி – அர்ப்பணிப்பு – தியாகம் – சிறைவாசம் என்ற பின்னணிகளை மாவை சேனாதிராஜா கொண்டிருந்தபோதிலும், அழகு குணசீலன் தன் ‘அரங்கம்’ கட்டுரையில் (வெளிச்சம் – 40) குறிப்பிட்டுள்ளவாறு ‘மாவை அவரின் உருவத்திற்கும் உயரத்திற்கும் ஏற்ற உறுதியான ஆளுமையோ, தலைமைத்துவப் பண்புகளையோ கொண்ட கட்சியின் கட்டளைத்தளபதி அல்ல’.

 இவரது இந்தப் பலவீனம்தான் சுமந்திரனைப் போன்ற ஒருவரைத் தேடவேண்டிய தேவையை இரா. சம்பந்தனுக்கு ஏற்படுத்தியது. தமிழ்த்தேசிய அரசியலில் அதுவரை பெயரைத்தானும் கேள்விப்பட்டிராத சுமந்திரனை 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குக் (தமிழரசுக்கட்சிக்கு) கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்திற்குத் தன்னிச்சைப்படி நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தைச் சம்பந்தருக்கு வழங்கியது. சம்பந்தர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதைத்தவிர மாவை சேனாதிராஜாவுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. இந்தக் கட்டத்திலேயே 2014 ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் வைத்து சம்பந்தர் தந்திரமாகத் தனது தலைப்பாரத்தை இறக்கி மாவை சேனாதிராஜாவின் தலையில் கட்டி விட்டுத் தனக்குத் தலையாட்டும் இன்னொரு ‘பச்சைத்தண்ணி’ யான மட்டக்களப்பைச் சேர்ந்த துரைராசசிங்கத்தைக் கட்சியின் செயலாளராக்கினார். தமிழரசுக்கட்சியின் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் விளங்கிய மாவை சேனாதிராஜாவின் ஆளுமைப்பலவீனம் காரணமாகத் தமிழ்த்தேசிய அரசியலுக்குச் சரியான தலைமைத்துவத்தை வழங்கமுடியவில்லை. அதேபோன்றே ஆளுமைப் பலவீனத்தைக்கொண்ட துரைராசசிங்கத்தினால் அவர் ஒரு சட்டத்தரணியாகவும் நீண்டகாலத் தமிழரசுக்கட்சி உறுப்பினராகவும் இருந்தபோதிலும் அமிர்தலிங்கம் போன்றதொரு காத்திரமான வகிபாகத்தை வகிக்கமுடியவில்லை. இவர்களின் ஆளுமைப் பலவீனங்களுடன் சேர்ந்து சம்பந்தரின் மூப்பு ஓர் ஊக்கியாக அமைய அந்த இடைவெளிக்குள் புகுந்து சுமந்திரன் தனது ‘தலைப்பாகை’யைச் சிக்காராகக் கட்டிக் கொண்டார். 

 அண்மைக்காலங்களில் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தவறான அரசியல் தீர்மானங்களுக்கும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் குத்துவெட்டுகளுக்கும் இதுவே அடிப்படைக் காரணம். இன்றிருப்பது சுமந்திரனின் கட்டுப்பாட்டிலுள்ள பதில் தலைவராகச் சிவஞானத்தையும் பதில் செயலாளராக வைத்தியகலாநிதி சத்தியலிங்கத்தையும் கொண்ட ‘பதில்’ தமிழரசுக்கட்சியேதவிர அதன் ஸ்தாபத்தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தால் நிறுவப்பெற்று வன்னியசிங்கம் – ஈ.எம்.வி நாகநாதன் – எஸ்.எம். இராசமாணிக்கம் – அமிர்தலிங்கம் – கதிரவேற்பிள்ளை போன்ற அர்ப்பணிப்பும் அறிவார்ந்த சிந்தனையும் அரசியல் ஞானமும் நிரம்பப்பெற்ற ஆளுமைமிக்க அரசியல் தலைவர்களால் வழிநடாத்தப்பெற்ற ‘ஒரிஜனல்’ தமிழரசுக்கட்சி அல்ல. (இறுதியாகக் கிடைத்த தகவலின்படி சத்தியலிங்கம் தனது பதில் செயலாளர் பதவியை இராஜினமாச் செய்து அவ்விடத்திற்குச் சுமந்திரன் நியமனம் பெற்றுள்ளார்.)  

 சரிபிழைகளுக்கப்பால் தமிழரசுக்கட்சிமீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சி மீது இனிமேலும் வைக்கப்படக்கூடிய நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் சகாப்தம் மாவைசேனாதிராஜாவின் மரணத்துடன் முற்றுப்பெற்றுவிட்டது. இனித்தமிழ் மக்களின் தேவை தமிழர் அரசியலிலும் ஒரு முறைமை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு (புதிய) மாற்று அரசியல் அணியேயாகும். அதற்கான இடைவெளியை மாவையின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களிடையேயுள்ள கல்விமான்களும் – புத்திஜீவிகளும் – துறைசார்நிபுணர்களும் – அரசியலாளர்களும் – எழுத்தாளர் கலைஞர் ஊடகவியலாளர்களும் – தொழில்முனைவோர்களும் – தொழிலாளர்களும் என அனைத்து மக்களும் இந்த ‘மாற்று அரசியல் அணி’ குறித்துச் சிந்திக்கத் தலைப்படுவார்களாக. அதற்கான திறந்தவெளி உரையாடல்கள் தாமதமின்றி ஆரம்பமாகட்டும்.