பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுக்கு மத்தியில்,  தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தனக்கென்று தனித்துவத்தைக் கொண்ட எஸ்.பி.சாமி ஐயா 

பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுக்கு மத்தியில்,  தமிழ்ப் பத்திரிகை உலகிலும் தனக்கென்று தனித்துவத்தைக் கொண்ட எஸ்.பி.சாமி ஐயா 

 — வீரகத்தி தனபாலசிங்கம் — 

தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தில் நான் நெருக்கமாக பணியாற்றிய இருவருக்கு ஒரு பத்துநாள் இடைவெளியில் அஞ்சலிக் குறிப்புக்களை எழுதவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை எனக்கு. 

பெப்ரவரி 9 ஆம் திகதி  யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்  காலமான முன்னாள் ஞாயிறு தினக்குரல் ஆசிரியரும் நெருங்கிய நண்பனுமான  பாரதி இராஜநாயகத்தின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பி இரு நாட்கள் கடந்து போவதற்கு இடையில்  கடந்த புதன்கிழமை ( பெப்ரவரி 19)  தினக்குரல் தாபகர் எஸ்.பி. சாமி அவர்கள் அதே  திருநெல்வேலியில்  காலமான துயரமிகு செய்தி வந்து சேர்ந்தது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தவும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு வழியனுப்பவும்  மீண்டும் யாழ்ப்பாணம் பயணமாகிறோம். 

செல்லையா பொன்னுச்சாமி என்பது அவரது முழுப்பெயர். ஆனால், எஸ்.பி. சாமி என்றுதான் நாடும் சமூகமும் அவரை அறிந்து வைத்திருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையிலான ஊடாட்டத்துக்கும் தினக்குரலுக்கும் ஒரே வயது. வடக்கிலும் தலைநகர் கொழும்பிலும் பிரபலமான ஒரு வர்த்தகப் பிரமுகர் என்ற வகையில் சாமி அவர்களை நான் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த போதிலும், தினக்குரலை அவர் ஆரம்பித்திருக்காவிட்டால் அவருக்கும் எனக்கும் இடையில்  உறவுமுறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது. 

வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய காலஞ்சென்ற பொன். இராஜகோபால் மூலமாகத்தான் எனக்கும் சாமி அவர்களுக்கும்  அறிமுகம் ஏற்பட்டது. தலைநகரில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் சாமி அவர்களுக்கு ஏற்கெனவே இருந்திருந்தாலும்,  இராஜகோபாலுடனான சந்திப்பையடுத்தே அந்த எண்ணம் விரைவாக நடைமுறைச் சாத்தியமாவதற்கான வழிபிறந்தது எனலாம். தினக்குரலில் என்னைப் போன்றவர்களின் இணைவு இராஜகோபாலின் முயற்சியின் விளைவானது. 

பத்திரிகையாளன் என்ற வகையில் எனது தொழில் வாழ்க்கைப் பயணத்தின் இடைநடுவில் சாமி அவர்களை சந்தித்த நாள் தொடக்கம் அவர் எனக்கு இன்னொரு தந்தை. எனக்கு மாத்திரமல்ல, என்னைப் போன்று தினக்குரலில் பணியாற்ற வந்த  இளையவர்களுக்கு  எல்லாம் அவர்  தந்தை என்று கூறுவதே பொருத்தம். நெருக்கடிகள் ஏற்பட்ட வேளைகளில் எல்லாம்   அவர் நிலைகுலையாமல் உறுதியுடன் நின்று,  நாம் துவண்டுபோகாமல் வழிகாட்டிய பாங்கை இந்த சந்தர்ப்பத்தில் கண்கள் பனிக்க  நினைத்துப் பார்க்கிறேன்.  

ஏற்கெனவே பல வருடங்கள் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர்களைக் கொண்ட, ஒப்பீட்டளவில் இளவயதிரான பலரை உள்ளடக்கிய குழாம் ஒன்று அதன் எதிர்காலத்தை சாமி அவர்களிடம் ஒப்படைத்த வண்ணமே தினக்குரலில் பணியாற்றத் தொடங்கியது. அவர்களில் சிலர் தங்களது  எதிர்காலம் கேள்விக் குறியாகி விடுமோ என்று கவலை கொள்ள ஆரம்பித்த வேளைகளில்  எல்லாம் அவர்களுக்கு தைரிய மூட்டுவதற்கு எமக்கு  தெம்பைத் தந்தது சாமி அவர்களின் மனஉறுதிதான். 

வர்த்தகத் துறையில் சாமி அவர்கள் கைவைக்காத கிளையே இல்லை என்று கூறலாம்.  அச்சுத் துறையிலும் அவர் பெயரெடுத்தவராக விளங்கிய போதிலும், ஏற்கெனவே பல தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இன்னொரு  பத்திரிகையை  ஆரம்பிப்பது என்பது அதுவும் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த கடந்த நூற்றாண்டின் 90 களின் நடுப்பகுதியில் பாரிய சவால்மிக்க பணியாக இருந்தது. அந்தச் சவாலை  துணிச்சலுடன் எதிர்கொண்டு கால்நூற்றாண்டைக் கடந்து தினக்குரல் பயணிக்கிறது என்றால் அதற்கு சாமி அவர்கள் எமக்கு தந்த ஊக்கமும் தைரியமும் அவற்றின் விளைவாக ஊழியர்களுக்கு ஏற்பட்ட உத்வேகமுமே அடிப்படைக் காரணங்கள். 

நான் முதலில் தினக்குரலில் செய்தி ஆசிரியராக பணியாற்றினேன். இராஜகோபால் எமது வழிகாட்டி. ஆறுமுகம் சிவனேசச்செல்வன் பிரதம ஆசிரியர். தினக்குரலின் முதலாவது இதழ் ஞாயிறு பத்திரிகையாக 1997 ஏப்ரில் 6 ஆம் திகதி வெளியானது.  அதை வெளிக்கொணருவதற்கு எமது குழாம் சில  வாரங்களாக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பத்திரிகை வெற்றிகரமாக  வெளிவந்ததால் மகிழ்ச்சியடைந்த போதிலும்,  ஆசிரியபீட உறுப்பினர்கள் சற்று களைத்துப் போயிருந்தார்கள். 

மறுநாள் திங்கட்கிழமை தினசரிப் பத்திரிகையை வெளியிடுவதை தாமதித்து சில வாரங்களுக்கு பிறகு தினசரியை வெளியிடுவோம் என்று ஆசிரியபீட உறுப்பினர்களில் சிலர் யோசனை கூறினார்கள். ஆனால், சாமி அவர்கள் அதற்கு இணங்கவில்லை. திட்டமிட்டபடி திங்கட்கிழமை தினசரி தினக்குரல் வெளிவந்தேயாக வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதிப்பாடு சோர்வடைந்திருந்தவர்களை தட்டியெழுப்பியது. அச்சியந்திரப் பிரிவில் இருந்து தினசரிப் பத்திரிகையின் முதல் பிரதிகளை அவரே  மகிழ்ச்சியுடன்  எடுத்துவந்து ஆசிரிய பீடத்துக்கு தந்தார். 

தினக்குரலின் உய்வின் சாத்தியம்  குறித்து ஆரம்ப நாட்களில் ‘பல்லி ‘ சொன்ன பலருக்கு  நாளைடைவில் ஏமாற்றமே மிஞ்சியது. தலைநகரில் இருந்து வெளிவரும் இன்னொரு தமிழ்ப்பத்திரிகையாக தினக்குரல் தன்னை குறுகிய காலத்திற்குள்ளேயே நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. அதன் வளர்ச்சிக்காக தாபகர் சாமி அவர்கள் தொடக்கம் கடைநிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததை  கண்ட சாட்சிகளில் ஒருவன் நான். பத்திரிகை அச்சுக்குப் போகும்வரை நடுநிசியிலும் சாமி அவர்கள் அலுவலகத்துக்கும் அச்சியந்திரப் பகுதிக்கும் இடையே இளைஞர்களே வியக்கும் வண்ணம் ஓடிக்கொண்டிருப்பார். ஆரம்பக்கட்டத்தில்  பத்திரிகையை நாடுபூராவும் விநியோகிப்பதற்கான பணிகளில் அவரும் புதல்வர்களும் கூட முழுமூச்சாக ஈடுபட்டதை கண்டவன் நான். அவரின்  குடும்பமே பத்திரிகையுடன் மாய்ந்தது.

ஒரு கட்டத்துக்கு பிறகு தலைநகரில் இருந்து மாத்திரமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தும்  தினக்குரலின் பிராந்தியப் பதிப்பு வெளியானது. குடாநாட்டை நாட்டின் ஏறைய பாகங்களுக்கும் வெளியுலகிற்கும் காட்டுவதற்கும் நாட்டின் ஏனைய பாகங்களையும் வெளியுலகையும் குடாநாட்டுக்கு காட்டுவதற்குமான ஒரு  முயற்சியாக  அமைந்த  அந்த பிராந்தியப் பதிப்பு  சாமி அவர்களின் விடாமுயற்சியினால் வெற்றி கண்டது.

குடாநாட்டில் இருந்து பத்திரிகைகள் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால்,   தலைநகரில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று அதன் குடாநாட்டுப் பதிப்பை முதன்முதலாக வெளியிட்ட சாதனையை நிகழ்த்தியது தினக்குரலேயாகும். 

அந்த வெற்றியின் பின்னால் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளினதும் ஊழியர்களின் அர்ப்பணிப்புச் சிந்தையுடனான உழைப்பு இருந்தது என்ற போதிலும்,  இடர்பாடுகள் மிகுந்த குடாநாட்டுச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் சாமி அவர்கள் தந்த ஊக்கமே ஊழியர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அவர் நிலைகுலையாமல் வெளிக்காட்டிய உறுதிப்பாடு எமக்கு நம்பிக்கையை தந்தது. 

ஏழு வருடங்களாக செய்தி ஆசிரியராக பணியாற்றிய நான் சிவனேசச்செல்வன் இலங்கை பத்திரிகை தாபனத்தின் இதழியல் கல்லூரி விரிவுரையாளராக பதவியேற்றுச் சென்ற பின்னர் தினக்குரலின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். நான் தினக்குரலில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றினேன்.  அந்தக் காலப்பகுதியில் பத்திரிகைகக்கு விடயதானங்களை பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை தேடிப்பிடிக்கும் பணியையும் செய்ய வேண்டியிருந்தது. புதிய பத்திரிகைக்கு எழுதுவதால் என்ன பயன் என்று அலுத்துக் கொண்டவர்களும் உண்டு. கல்விமான்கள், எழுத்தாளர்களின் வீடுகளுக்கு என்னைக் கூட்டிச் சென்று அவர்களுடன் சாமி அவர்கள் பேச வைத்த நாட்களை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

சாமி அவர்களின் கல்விப்பின்புலம் வலுவானதாக இல்லாவிட்டாலும் கூட கற்றறிந்தவர்களுடனான  அவரது சுலபமான ஊடாட்டம் எம்மை பிரமிக்கவைத்தது. சமூகத்தின்  எந்த மட்டத்தவர்களுடனும் இலகுவாக பரிச்சயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு  வியக்கத்தக்க ஆளுமை அவரிடம் இருந்தது.  இதை  காலஞ்சென்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னிடம் நேரடியாகவே பல தடவைகள் கூறியிருக்கிறார். சமூகத்தில் பல தரப்பினரதும் மதிப்புக்குரியவராக சாமி அவர்கள் விளங்கினார்.

ஆசிரிய பீடத்தின் சுயாதீனமான  செயற்பாடுகளுக்கு அவர் ஒருபோதும் இடையூறாக இருந்ததில்லை என்பதை ஒரு நீண்டகாலப் பத்திரிகையாளன் என்ற வகையில் வெளிப்படையாகக் கூறவேண்டியது எனது கடமையாகும். எமது சுயாதீனமான செயற்பாட்டுக்கு அவர் மேலும் உறுதுணையாக இருந்தார் என்றே கூறவேண்டும். வெளியார் சிலர் செய்த முறைப்பாடுகள் காரணமாக சாமி அவர்களுக்கும் நான் உட்பட ஆசிரிய பீடத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டாலும்,  அதை தனது தொழிற்துறை அனுபவத்துடனும் முதிர்ச்சியுடனும்  மிகவும் இலாவகமாகக் கையாளுவதிலும் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதிலும் அவர் சமர்த்தர். அவர் ஈடுபட்ட சகல வர்த்தக முயற்சிகளினதும் வெற்றிக்கு அதுவே நிச்சயமான காரணம்  எனலாம்.

வெவ்வேறு துறைகளில் குறிப்பாக,  தனியார் மருத்துவத்துறையில் முதலீடுகளைச் செய்வதில் நாட்டம் கொண்டிருந்த காரணத்தால் பிற்காலத்தில் சாமி அவர்கள் தினக்குரலின் முகாமைத்துவத்தில் செய்த மாற்றம் எம்மில் பலரை எமது பத்திரிகைத் துறைத் தொட்டிலான வீரகேசரி வளாகத்துக்குள்ளேயே மீண்டும் கொண்டு போய்விட்டது. தன்னை நம்பிவந்தவர்களின் எதிர்கால நலன்களை உறுதிசெய்யவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருக்கின்ற போதிலும்,  தினக்குரலின் தொடர்ச்சியை புதிய நிருவாகம் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை அதன் ஊழியர்களுக்கு வலுவாக இருக்கிறது. 

சாமி அவர்கள் வர்த்தகத்துறையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டவர் அல்ல. வடக்கிலும் தலைநகரிலும்  சமூக, சமய அமைப்புக்கள்  பலவற்றின் தலைவராகவும் அவர் நீண்டகாலம் பயனுறுதியுடைய பணியைச் செய்துவந்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலருடனும் கூட நெருக்கமான பழக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அரசியலில் ஒருபோதும் அவர் ஈடுபாடு காட்டியதில்லை. தினக்குரல் காரணமாக அரசியல்வாதிகளுக்கு அவர் வேண்டியவரானார். 

அவருடன் இருபது வருடங்களுக்கும் மேலாக  பணியாற்றிய அனுபவம் எனக்கு பல படிப்பினைகளை தந்திருக்கிறது. வர்த்தகத்துறையின் பல்வேறு கிளைகளிலும் அவர் கால்பதித்த போதிலும், பிற்காலத்தில் கைவைத்த பத்திரிகைத்துறையே தொழிற்துறை அடையாளங்களில்  அவருக்கு  முக்கியமானதாக  விளங்குகிறது என்பது அதில் அவருடன் பணியாற்றிய எமக்கு ஒருவித மனத்திருப்தியைத் தருகிறது. 

இந்த உலகில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான  போகிறோம். மரணம் எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை. ஆனால்,  வாழும் காலத்தில் நாம் செய்கின்ற பணிகளின் மூலமாக,  வாழும் முறையின் மூலமாக எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியமானது. அந்த வகையில் நோக்கும்போது சாமி அவர்கள் வர்த்தகத்துறையிலும் சமூக சேவையிலும் வளமான மரபை விட்டுச் செல்கிறார். அது குறித்து அவரின் குடும்பத்தவர்கள் என்றென்றைக்கும் பெருமைப்படமுடியும். 

நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன், சாமி அவர்களை யாழ்ப்பாணம் நல்லூரில் செட்டித்தெருவில்  உள்ள அவரது வீட்டில் சென்று சந்தித்துப் பேசினேன். அதற்கு பிறகு அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.  ஆனால் மீண்டும் அவரது வீட்டுக்கு அவருக்கு இறுதிமரியாதை செலுத்துவதற்கே செல்லப்போகிறேன் என்பதை கனத்த மனதுடன் நினைத்துக் கொள்கிறேன். அவர் முழுமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர் .அவரை இழந்து வாடும் மனைவி வீரலட்சுமி அம்மையாருக்கும் அவர்களது புதல்வர்கள், புதல்விகள் உட்பட குடும்பத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நான் எழுதுவதற்கு ஒரு பத்திரிகையை வெளியிட்ட சாமி ஐயாவுக்கு இறுதியில் பத்திரிகைகளில் அஞ்சலிக்குறிப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். மரணமடைவதை பெரும்பான்மையானவர்களுடன் இணைவதாக (Joining the majority) கூறும் முதுமொழி ஒன்று இருக்கிறது. உலகில் வாழ்பவர்கள் அல்ல, காலமானவர்களே பெரும்பான்மையினர். சாமி ஐயா பெரும்பான்மையுடன் இணைந்துவிட்டார். நாங்கள் தான்  சிறுபான்மையினர். 

 சமூகத்தில் எனக்கு ஏதாவது அடையாளம் இருக்குமானால் அதற்கு காரணமானவர்களில் சாமி அவர்களும் ஒருவர். சென்றுவாருங்கள் சாமி ஐயா! உங்களை நினைத்துக் கொண்டிருப்பதை தவிர எங்களால் என்ன செய்யமுடியும்!