எக்னாலிகொட- எருமைத்தீவு –           காளியும் கண்ணகியும்….!(வெளிச்சம்:038)

எக்னாலிகொட- எருமைத்தீவு – காளியும் கண்ணகியும்….!(வெளிச்சம்:038)

— அழகு குணசீலன் —

 முள்ளிவாய்க்கால் முடிந்து முதல்பொங்கல், பத்து நாட்களை கடந்து இருந்தது. வழமைபோல் தமிழ்த்தேசிய தலைமை சம்பந்தர் பொங்கல் பிரகடனம் செய்திருந்தார். தை பிறந்தால் வழிபிறக்கும் என்று , ஜனாதிபதி தேர்தலில் போர்த்தளபதி சரத் பொன்சேகாவை  தமிழ் மக்களை  ஆதரிக்க கோரும் தமிழ்த்தேசிய வரலாற்றுக்கு  தார் பூசிய முட்டாள் தனமான  முடிவை தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் எடுத்திருந்தது.

இந்தச் சூழலில் இலங்கையின் பிரபல  அரசியல் பத்தி எழுத்தாளரும், கேலிச்சித்திர வரைஞருமான பிரகீத் எக்னாலிக்கொட காணாமல் போனார். இது நடந்தது 24.01.2010 இல். அன்று காலை வேலைக்கு போனவர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.  இரு நாட்கள் கழித்து 26.01.2010 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கையில் இது நடந்தது. இது  நடந்து இன்று  சரியாக பதினைந்து ஆண்டுகள் பறந்துவிட்டது. காணாமல் ஆக்கப்பட்ட போது பிரகீர்த்க்கு வயது 50.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் கடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து அலசும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தேர்தலில் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு சாதகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுவே அவரின் கடத்தலுக்கும் காரணமாக சந்தேகிக்கப்படுகிறது. அப்போது  இறுதிப்போரில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்தார். ஜனாதிபதியும், இராணுவத்தளபதியும் போர் வெற்றிக்கு  யார் காரணம் என்று உரிமை கோரி  மக்களிடம் அங்கீகாரம் கோரிய தேர்தல் இது. இறுதிப்போரை இன அழிப்பு என்று கூறிய தமிழ்த்தேசியம், அதன் முக்கிய பங்காளிகளுள் ஒருவரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது.

பிரகீத் – சந்தியா தம்பதிகளின் இரு மகன்கள் அரசியல் அகதிகளாக சுவிஸில் வாழ்கிறார்கள். இளையவன் ஹரீத். மூத்தவன் சஞ்ஜயா. ஊடகம் ஒன்றுக்கு தகப்பன் பிரகீர்த் குறித்த  நினைவுகளை அவர்கள் வழங்கியிருந்தார்கள் . அவற்றில் சில வரிகள்…….!

ஹரீத்: “அவர் காணாமல் போன நாள் என் நினைவில் நிலைத்து நிற்கிறது. நான் நித்திரையில் இருந்து விழித்த போது வீடு நிறைய ஊடகவியலாளர்கள். என்ன நடந்தது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அம்மா சொன்னார் “அப்பாவை காணவில்லை” என்று. 

அப்போது எனக்கு வயது 12. இதன் தாக்கங்களை முழுமையாக என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு ஒரு ஸ்காட் போட்- ‘SKATE BORD’  வேண்டும் என்ற விருப்பத்தை அவருக்கு சொல்லியிருந்தேன்.  அதற்கான பணத்தை சேமிப்பதற்காக வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தும் சென்றிருக்கிறார். இத்தனைக்கும் அவரின் காலில் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது…..”.

சஞ்ஜயா: “எனக்கு அப்போது 15 வயது. அதுதான் அப்பாவையும், அம்மாவையும் நான் ஒன்றாக பார்த்த கடைசிக் காட்சி. அன்று அவர் வீட்டை விட்டு போகும் போது எனது ரீ சேர்ட்டை அணிந்திருந்தார். அவர் இரவு வீட்டுக்கு வராததால், அம்மா முழு இரவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். தொடர்பு கிடைக்கவில்லை. நண்பர்கள், உறவினர்களை விசாரித்தார் பலன் இல்லை.  அவருடைய கட்டுரைகளை எனக்கும் வாசித்து காட்டுவார்.வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களுடன் அவர் விவாதிக்கும் போது நானும் உடன் இருந்திருக்கிறேன்…..”.

பிரகீத் காணாமல் போனது தொடர்பாக அவரது மனைவி பொலிஸில் முறையிட்டபோது  : “இன்றைய நிலையில் இது சர்வசாதாரணம்” இப்படி கூறியது பொலிஸ்.  அவர் கடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் “தன்னை சிலர் பின்தொடர்வதாக உணர்வதாகவும், கண்காணிக்கப்படுவதாகவும்” தனது நண்பர்களுக்கு பிரகீத் சொல்லியிருக்கிறார். 

2012 இல் இந்த வழக்கு பல்பக்க அழுத்தங்களால் முடுக்கி விடப்பட்ட போதும் “தரவுகளின் போதாமை” என்று கூறி தொடரப்படவில்லை. 

2019 இல் நல்லாட்சியில் விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்பட்ட போதும், சந்தேக நபர்களான இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டும், அவர்கள் அனைவரும் விரைவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் தகவல்களின்படி இதுவரை உலகில் சுமார் 100 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் அரைவாசிப்பேரின் கடத்தலுக்கும், காணாமல் போதலுக்கும் அரசாங்கங்களே பொறுப்பு என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தொகை இத்தொகையை நெருங்குகிறது.

அண்மையில் கடற்படையை சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்ட  பிரகீத் எக்னாலிகொட கடத்தப்பட்ட  பின்னர் கொலைசெய்யப்பட்டு மட்டக்களப்பு எருமைத்தீவில் அவரது சடலம் வீசப்பட்டதாக கூறியிருந்தார். மட்டக்களப்பிலும் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் . இவர்களின் உடல்களும் எருமைத்தீவில் புதைக்கப்பட்டு அல்லது வீசப்பட்டு இருக்க கூடும் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட கடற்படைவீரரின் கருத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வது மட்டுமன்றி எருமைத்தீவிலும்  புதைகுழிகளும், வேறு மனித எலும்புக்கூடுகளும் உண்டா? என்பதை ஆராய்ந்து பொறுப்புக் கூறவேண்டிய பொறுப்பை- கட்டாயத்தை அரசாங்கம் தட்டிக்கழிக்க கூடாது.  எருமைத்தீவும் ‘கிளீன் ‘ செய்யப்பட வேண்டாமா…..?

பிரகீத்தின் மனைவி,  சந்தியா பிரகீத் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக செயற்படுகிறார். அவருக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஹரீத், சஞ்சயா இருவரையும்  கண்காணித்ததையும்,  அரசாங்கம்  கடத்த திட்டமிட்டதையும் அறிந்தே இருவரும்  தப்பித்து சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். இது தனது தாயின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஆட்சியாளர்களிடம் இருந்து தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்விக்கு  அவர்கள் இன்றைய ஆட்சியிலும்  நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை. அன்றைய சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் ஐ.நா. சித்திரவதைகளுக்கு எதிரான குழுவில் தோன்றி சாட்சியமளித்தார். அதில் “பிரகீத் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று வாழ்கிறார்” என்று கூறியிருந்தார்.  பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பிரகீத் பிரான்ஸில் இருக்கிறார் என்றும் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவருடன் அவர் காணப்பட்டார்” என்றும் கூறியிருந்தார்.

இந்த அரச தரப்புக் கருத்துக்கள் பற்றியும் குறிப்பிட்ட புத்திரிகை அவர்களிடம் கேள்வி எழுப்பியது. “இவை அரசாங்கத்தின் பொய்யான கண்டுபிடிப்புகள். இலங்கை ஊடகங்களினதும், அரசாங்கத்தினதும் பொய்களுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம்” என்கிறார்கள் அவர்கள்.

உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?  

இல்லை, கடத்தப்பட்டு மறுநாளே அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார். அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் போனது உங்களுக்கு பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? சடலத்தை கண்டு பிடிப்பது இனியும் எங்களுக்கு முக்கியம் இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்படவேண்டும் அதுவே எங்களுக்கு முக்கியம் என்கிறார்கள் பிரகீத்தின் பிள்ளைகள்.

தங்கள் தாய் தென்னிலங்கையில் மட்டும் அன்றி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் இணைந்தும் இந்த அநீதிக்கு எதிராக போராடுகிறார் என்று கூறும் அவர்கள் காளி, கண்ணகி தெய்வங்கள் மீதான நம்பிக்கையால் நேர்த்தி வைத்து நீதி கேட்கிறார் என்றும் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்கள்.

அவர்களின் நேர்காணலை படித்தபோது கண்ணகி -கோவலன் கதை மனதில் தோன்றியது.  பாண்டிய மன்னன் தவறான முடிவை எடுத்து கோவலனை கொன்றபோது கண்ணகி அதற்கு நீதிகேட்டு போராடினாள். மன்னனும், மனைவி கோப்பெருந்தேவியும் மாண்டு போனார்கள் என்கிறது சிலப்பதிகாரம். 

இலங்கையில் அரசியல் பிழைத்தமைக்காக ஆகக்குறைந்தது மக்களிடம் மன்னிப்பு கேட்ட “அரசர்கள் / அரசிகள்” உண்டா ? எத்தனை பேர்? 

 இன்றைய அநுர ஆட்சி கண்ணகிகளுக்கு வழங்கப்போகின்ற நீதி என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *