‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’

 ‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’

மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’ என்று கருதப்படக்கூடியவரும் சில்லையூர் செல்வராஜன் அவர்களினால் ‘கலைத்தேனீ’ என வர்ணிக்கப்பெற்றவரும் கலை இலக்கியச் செயற்பாட்டாளரும் படைப்பாளியுமான அந்தனிஜீவா 10.01.2025 அன்று கொழும்பில் காலமான செய்தி ஈழத்துக் கலை இலக்கியப் பொதுவெளியில் குறிப்பாக மலையகக் கலை இலக்கியப் பொதுவெளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அந்தனிஜீவாவின் வாழ்வும் பணிகளும் மலையகக் கலை இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்தவையாகும். 26.05.1994 அன்று அந்தனிஜீவாவின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராஜன் அவர்கள் அந்தனிஜீவாவை,

 “நறவத் தேனி

நலிந்து நலிந்து

சிறுச்சிறு துளித்துளி

சேர்த்துச் சேர்த்தெடுத்த

தேனி முழுவதும்

பிறர்க்களிப்பது போல்

கலைத்தேனீயாய்த்

தமிழ்ச் சுவையமுதம்

நல்லுலகுக்கு

நல்கும் அந்தனி

ஜீவா ஜம்பது

செவ் வருடங்கள்

நிறை வாழ்வு

பெறும் இத்தினத்தில்

பேறுகள் பற்பல

பெற்று மேன்மையாய்

நூறு வருடங்கள்

நுண்ணிதின் வாழ்க என

ஆசிகள் தருவதில்

அகமகிழ்கின்றேன்!” என வாழ்த்தியிருந்தார்.

 இவ்வாறு சில்லையூர் செல்வராஜன் அவர்களினால் ‘கலைத் தேனீ’ எனச் சுட்டப்பட்ட அந்தனிஜீவா இலங்கையின் மேல் மாகாணத்தில் 26.05.1944 அன்று செபஸ்தியன்-லட்சுமி அம்மாள் தம்பதியினரின் புத்திரனாகக் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் கொழும்பு-06 சுவர்ணா வீதியில் அவரது இல்லத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலமைந்த தமிழ்ப் பாடசாலையில் பெற்று, பின்பு எஸ்எஸ்சி வரை பம்பலப்பிட்டி சென்.மேரிஸ் பாடசாலையிலும் கற்றார். கொழும்பு நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் துறையில் ‘டிப்ளோமா’ பட்டம் பெற்றார்.

 தென்னிந்தியாவைச் சேர்ந்த இவரது தந்தையார் செபஸ்தியன் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பர்மா சென்று பின் கொழும்பு திரும்பி இலங்கையிலே நிரந்தரமாகத் தங்கி விட்டார். தாய் லட்சுமி இந்திய வம்சாவளி இலங்கையர். தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் இந்து. எழுத்தறியா இவரது தாயார் தமது தம்பி தங்கைகளுக்காகப் பாடிய ஏடறியாத் தாலாட்டுப்பாடல்கள் தனது பிஞ்சுமனதில் ஒட்டிக்கொண்டதாக அந்தனிஜீவா தனது ‘ஒரு வானம்பாடியின் கதை’ நூலில் குறிப்பிட்டுள்ளார். 

 அந்தனிஜீவாவின் எழுத்துத்துறை நுழைவாயில் பத்திரிகைத்துறையே. பாடசாலைக் காலத்தில் ‘கரும்பு’ எனும் சிறுவர் சஞ்சிகையின் சில இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் பின்னர் ‘வெண்ணிலா’ வெனும் கையெழுத்துச் சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

 ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் அ.ந.கந்தசாமி அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பும் தொடர்பும்தான் பத்திரிகைத்துறையில் இவரை ஈர்ப்புக்கொள்ள வைத்தது. இவருக்குப் பத்திரிகைத்துறையில் வழிகாட்டியாகவிருந்தவர் அ.ந.கந்தசாமி எனலாம். 

 பாடசாலைக் காலத்தில் நீர் கொழும்பிலிருந்து வெளிவந்த ‘மாணவர் குரல்’ என்ற பத்திரிகையில் பிரசுரமான ‘பாட்டுக்கொருபுலவன்’ என்ற தலைப்பிலான கட்டுரையே அந்தனிஜீவாவின் அச்சேறிய கன்னி ஆக்கமாகும்.

 அரசியல்சிந்தாந்த ரீதியாக இளவயதிலேயே இடதுசாரிக் கொள்கைகளின்மீது ஈர்ப்புக் கொண்டிருந்த அந்தனிஜீவா பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறியபின் ’லங்கா சமஜமாஜக் கட்சியின் முழுநேர ஊழியனாகப் பணியாற்றிய காலத்தில் அக்கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த தொழிற்சங்கமான ‘லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன்’ வெளியிட்ட ‘ஜனசக்தி’ மாதமிருமுறை இதழுக்கு ஆசிரியராகவும் நியமிக்கப்பெற்றார். ஜனதா விமுக்திபெரமுன (ஜே.வி.பி) மேற்கொண்ட 1971 ஏப்ரல் கிளர்ச்சியின்போது பொலிசாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தனிஜீவாவை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பேர்னாட் சொய்சா பொலிஸ் நிலையம் சென்று விடுவித்த சங்கதி பலரும் அறியாததொன்று.

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ’தேச பக்தன்’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றியமை- மலையகத்தின் சிறு சஞ்சிகையான ‘குன்றின் குரல்’ இன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தமை- தொழிற்சங்கச் செயற்பாடுகளிலிருந்து வெளியேறிய பின்னர் பத்திரிகை உலகில் ஜாம்பவான் எனக் கருதப்பட்ட எஸ.டி.சிவநாயகம் ஆசிரிராகவிருந்த ‘தினபதி’ மற்றும் ‘சிந்தாமணி’ப் பத்திரிகைகளில் பணியாற்றியமை- ஈழநாடு மற்றும் ‘செய்தி’ (வார இதழ்) பத்திரிகைகளின் கொழும்பு நிருபராகப் பணியாற்றியமை இவரைப் பத்திரிகைத் துறையில் புடம்போட்டன.

 தேசியப் பத்திரிகைகளில் இவர் எழுதிய வாராந்தப் பத்தி எழுத்துக்கள் இவரைப் பிரபல்யம் அடையச் செய்தன. குறிப்பாகத் தினகரன் பத்திரிகையில் எழுதிய ‘நினைத்துப் பார்க்கிறேன்’ – ‘படித்ததும் பார்த்ததும் கேட்டதும்’ மற்றும் ‘ஜெயகாந்தன் ஒரு பார்வை’ ஞாயிறு தினக்குரலில் எழுதிய ‘பார்வையின் பதிவுகள்’ என்பன சிலாகிக்கத்தக்கன. ஞாயிறு தினக்குரலின் ஆசிரியராகக் பாரதி இராஜநாயகம் இருந்த காலத்தில் இவை பதிவாகின. ஆர்.சிவகுருநாதன் தினகரன் ஆசிரியராகவிருந்த காலத்தில் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ எனும் தலைப்பில் அ.ந.கந்தசாமி பற்றி வாராவாரம் எழுதி வந்தார். பின்னர் இதனைத் தொகுத்து ‘அ.ந.க. ஒரு சகாப்தம்’ எனும் நூலாக 2009 இல் மலையக வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். அது போலவே ‘ பார்வையின் பதிவு’ உம் பின்னர் 2010 இல் எஸ் கொடகே சகோதரர்களால் நூலாக வெளிவந்தது.

 ‘சிறகு’ எனும் இணைய சஞ்சிகையின் இணையாசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

 தனது சொந்த முயற்சியில் ‘கொழுந்து’ சஞ்சிகையையும் (முத்திங்கள் இதழ்) மலையகத்திலிருந்து கொணர்ந்தார். இதன் முதலாவது இதழ் 1988 ஜனவரியில் (இதழ்-1, ஜனவரி, பெப்ரவரி, மார்ச் 1988) வெளி வந்தது. விட்டுவிட்டு ‘கொழுந்து’ சஞ்சிகையின் மொத்தம் 38 இதழ்கள் வெளிவந்தன. 

 2011 இல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட ‘கேசரி தகவல் களஞ்சியம்’ நூலைத் தொகுத்தளித்தார்.

 அந்தனிஜீவா அவர்கள் பத்திரிகைத்துறையில் கால்பதித்துத் தனது கலை இலக்கியப் பயணத்தை ஆரம்பித்திருந்தபோதிலும் நாடகத்துறையில் அவருக்கிருந்த நாட்டம் பாரியது. நாடகத்துறையில் நடிகராகவும்- நாடக ஆசிரியராகவும்- நாடக இயக்குநராகவும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அ.ந. கந்தசாமியின் தூண்டுதலும் நாடகத்துறையில் ஈடுபட இவரை ஊக்கிற்று. 

 பாடசாலைப் பருவத்திலேயே கலை, இலக்கிய ஆர்வமுடையவராகத் திகழ்ந்த அந்தனி ஜீவா தனது ஆசிரியர் சந்தானம் என்பவர் எழுதித் தயாரித்த பாடசாலைக் கட்டிட நிதிக்காக நடாத்தப் பெற்ற கலை நிகழ்ச்சியில் இடம் பெற்ற ‘அந்தோ நாகரிகம்’ எனும் சீர் திருத்தக் கருத்துக்களைக் கொண்ட நகைச்சுவை நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். நாடகத்துறையில் இவர் எடுத்துவைத்த முதல் காலடி இதுவே.

 லங்கா சமஜமாஜக் கட்சியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. இவரது நாடகத்துறை சார்ந்த ஆசானாகவும் காரணகர்த்தாகவும் விளங்கியவர் புகழ் பூத்த சிங்கள நாடகக் கலைஞரான தயானந்த குணவர்த்தன ஆவார். 

 மாலை வேளைகளிலும் ஓய்வு நாட்களிலும் ‘சிலோன் தியேட்டர்’ என்ற அரங்கிற்குச் செல்வது இவரது வாடிக்கையாகவிருந்தது. அங்கு பணியாற்றிய தமிழ் சிங்கள நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தயானந்த குணவர்த்தன நடாத்திய நாடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றி மேடை நாடகம் சம்பந்தமான சகல நுட்பங்களையும் கற்றுக் கொண்டார்.

 இத்தகையதொரு பின்புலத்தில் அந்தனி ஜீவா வசனம் எழுதி நெறியாள்கை செய்த இவரது முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 23.08.1970 அன்று கொழும்பு லும்பினி மண்டபத்தில் மேடையேற்றம் கண்டது. 

 எம்.பி பாலன் இயக்கிய ‘மஞ்சள் குங்குமம்’ என்ற திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை பணியாற்றியதுடன் அதில் வரும் சில காட்சிகளுக்கு வசனமும் எழுதியுள்ளார் என்பது இவர் குறித்த மேலதிக சங்கதியாகும்;.

 1980 களில் மலையகத்தில் வீதி நாடகங்களை முதன் முதலில் நிகழ்த்தியவர் அந்தனி ஜீவாவே.

 இலங்கையின் வீதிநாடகத்தந்தை என அழைக்கப் பெற்ற காமினி ஹத்தெட்டுவகம நடத்திய வீதி நாடகப் பயிற்சிப் பட்டறையில் அந்தனி ஜீவாவும் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவில் வங்க நாடக மேதை பாதல்சர்கார் தமிழ் நாட்டில் 1980 இல் நடாத்திய வீதி நாடகப் பயிற்சிப் பட்டறையில் இவர் பெற்ற பயிற்சியும் தொழில்நுட்ப அறிவும் இவரை இத்துறையில் மேலும் ஆற்றுப்படுத்தின. பாதல்சர்கார் இந்தியாவின் தலைநகரான டில்லி நாடகக் கல்லூரி அதிபராக விளங்கிப் பல மேடை நாடகங்களையும் வழங்கியவராவார்.

 அந்தனி ஜீவாவின் ‘வெளிச்சம்’ மற்றும் ‘சாத்தான்வேதம் ஓதுகிறது’ஆகிய வீதி நாடகங்கள் வியந்து போற்றுதற்குரியன. சிங்கள நாடகக் கலைஞர்களான தயானந்த குணவர்த்தன மற்றும் ஹென்றி ஜயசேன போன்றோருடன் மட்டுமல்லாது தமிழ் நாடகக் கலைஞர்களான லடிஸ் வீரமணி, சுஹைர் ஹமீட், கலைச்செல்வன் போன்றோருடனான உறவும் ஊட்டாட்டமும் இத்துறையில் இவரை ஊக்கப்படுத்தின. நான்கே நான்கு பாத்திரங்களைக் கொண்டு இவரால் மேடையேற்றப்பட்ட ‘பறவைகள்’ எனும் நாடகமும் (1971) மூன்றே மூன்று பாத்திரங்களைக் கொண்ட ‘கவிதா’ எனும்’ நாடகமும் (1972) இத்துறையில் அந்தனி ஜீவா மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளாகும். 

 இவரது நாடகங்களில் அதிகம் பேசப்பட்டது ‘அக்கினிப் பூக்கள்’ ஆகும். 

 1973 இல் இவரது எழுத்தில் உருவான ‘அக்கினிப் பூக்கள்’ எனும் நாடகம் தொழிலாளர் போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும்’ கருவாகக் கொண்டது. இதனை ஓர் அரசியல் நாடகம் என அடையாளப்படுத்தலாம். 

 இந்நாடகம் முதலில் பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் மேடையேற்றம் கண்டது. பல இடங்களிலும் பதினாறு தடவைகள் மேடையேறியது. பதுளையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டின்போது இந்நாடகம் மேடையேற்றம் பெற்றபோது அங்கு கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணர்ச்சி மேலீட்டால் முழக்கமிட்ட சம்பவம் இந்நாடகத்தின் உயிரோட்டத்தை உணர்த்துவதாகும். இம் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழகத் திரைப்பட நடிகர் ஜெமினிகணேசன், நாகேஸ் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் இந்நாடகத்தை ரசித்துப் பாராட்டினர். அரசியல் தலைவர்களான என்.எம்.பெரேரா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரும் இந்நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர். இந்நாடகம் பின்னர் 1999 இல் ‘ஞானம்’ பதிப்பகம் நூலாக வெளியிடப் பெற்றதுடன் , அவ்வருடத்திற்குரிய சிறந்த நாடக நூலுக்கான சாகித்திய விருதையும் பெற்றது.

 1974 இல் இவரது ‘வீணை அழுகிறது’ எனும் சமூக நாடகம் சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுச் சர்ச்சையை ஏற்படுத்திய ஒன்றாகும்.

 மீனவர்களின் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட ‘அலைகள்’ எனும் நாடகம் இலங்கை கலாசாரப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் தேசிய நாடக விழாவில் இரண்டாவது பரிசை வென்றது.

 நாடகம்’ பயிலும் மாணவர்களுக்கும் நாடகக் குழுவினருக்கும் வீதி நாடகம் மற்றும் மேடை நாடகம் குறித்த பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளமை இவரது மேலதிக தகைமையாகும்.

 இலங்கை அரசின் கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய கலைக்கழக நாடகக் குழுவில் அங்கம் வகித்து மேடை நாடக வளர்ச்சிக்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டவராவார்.

 இவரது ஏனைய நாடகங்களான ‘தீர்ப்பு’ – ‘பறக்காத கழுகுகள்” – ‘மஹாகவி பாரதி’- ‘தங்கப்பதக்கம்’ – ‘ஆராரோ ஆரிவரோ’;- ‘ஒன்று எங்கள் ஜாதியே’ உட்பட அந்தனி ஜீவா சுமார் பதினாறு நாடகங்களை மேடையேற்றியுள்ளதாக அறியக்கிடக்கிறது.

 பத்திரிகைத்துறை மற்றும் நாடகத்துறை தவிர்ந்த படைப்பிலக்கியத்துறையை நோக்கும்போது, அந்நாட்களில் ‘வீரகேசரி’ தினசரி செவ்வாய்க் கிழமைகளில் முழுப்பக்கமாக வெளியிட்ட ‘மாணவர் கேசரி’ எனும் பகுதிக்கு ஆக்கங்கள் எழுதத் தொடங்கினார். இப்பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த அன்னலட்சுமி இராசதுரை (யாழ் நங்கை) அந்தனி ஜீவாவின் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கமளித்தார். ‘சுதந்திரன்’ வார இதழில் மாணவர் பகுதியில் கவிதையொன்றை எழுதியதே இவரது ஆக்க இலக்கியப் பிரவேசம் எனலாம். பாடசாலைக் காலத்தில் ஓய்வுநாட்களில் கொழும்பு நூலகம் அந்தனி ஜீவாவின் இல்லம் போன்றானது. நிறைய வாசித்தார்.

 ‘மாணவன்’ – ‘தமிழருவி’ – ‘திருமகன்’ – ‘கலைமகள்’ – ‘மாணவமலர்’ – ‘மாலைமுரசு’ போன்ற சிறுவர் சஞ்சிகைகளில் இவரது ஆரம்பகால ஆக்கங்கள் களம்கண்டதுடன், ‘மாணவன்’- ‘தமிழருவி’ – ‘கலைமகள்’ ஆகிய சஞ்சிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார். இவரது பதின்மவயது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

 சுமார் பதினைந்து சிறுகதைகள் எழுதியிருப்பினும் அவை எதுவும் தொகுப்பு நூலாக வெளிவரவில்லை. இருப்பினும் ஈழநாடு பத்திரிகையில் எழுதிய ‘மலடு’- சிந்தாமணியில் எழுதிய ‘விதி’- சிரித்திரன் இதழில் வெளிவந்த ‘புருட்சலட்’- அமுதம் சஞ்சிகையில் வெளியான‘நினைவுகள்’ ஆகிய சிறுகதைகள் இவரது புனைவாற்றலுக்குச் சாட்சியங்களாகும்.

 தமிழக எழுத்தாளர் சா.கந்தசாமி என்பவர் இந்திய சாகித்திய அக்கடமிக்காக ‘அயலகத் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாட்டுச் சிறுகதைகளைத் தொகுத்தார். பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் அந்தனி ஜீவாவின் ‘புருட்சலட்’ எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.

 கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இவர் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, 13 இரு தினங்களில் திருப்பூரில் நடத்திய இலக்கிய மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இம்மன்றத்தின் தலைவராகப் பேராசிரியர் நா.வானமாலை விளங்கினார். இம்மாநாட்டில் இலங்கையின் இலக்கியப் போக்குகளை அந்தனிஜீவா எடுத்துக்காட்டி உரையாற்றியதுடன் ‘ஈழத்தில் தமிழ் நாடகம்’ எனும் ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்தார். இம் மாநாட்டின்போது கர்நாடகக் கவிஞர் கே.வி.ராஜகோபால், மலையாள எழுத்தாளர் உன்னிகிருஷ்ணன், எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் கே.வி.எஸ். அருணாசலம், ஆய்வாளர் சிதம்பரரகுநாதன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர் தா.பாண்டியன், கவிஞர் மீரா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்கள் அனைவருடனும் ஊடாடும் வாய்ப்பு அந்தனி ஜீவாவுக்குச் சித்தித்தது.

 மலையக எழுத்தாளர் சாரல்நாடன் (நல்லையா) அவர்களைத் தலைவராகக் கொண்டு 1980 இல் உருவான ‘மலையக கலை இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பின் செயளாளராகக் கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். 1986 இல் ‘மலையக வெளியீட்டகம்’ எனும் நிறுவகத்தை உருவாக்கிப் பல நூல்களை வெளியிட்டார்.

 சாரல்நாடன் எழுதிய ‘சி.வி.சில சிந்தனைகள்’ என்ற நூலே மலையக வெளியீட்டகத்தின் முதல்நூலாகும். மலையக வெளியீட்டகம் வெளியிட்ட சாரல்நாடனின் ‘தேசபக்தன் நடேசய்யர்’ – முரளிதரனின் ‘தியாகயந்திரங்கள்’ (புதுக்கவிதை) மற்றும் ‘கூடைக்குள்தேசம்’ (ஹைக்கூ) – ‘குறிஞ்சி தென்னவன் கவிதைகள்’ ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன.

 அந்தனிஜீவா அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அக்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பெற்றவையைத் தொகுத்தும் தானாகப் பின்னர் புதிதாக எழுதியும் பல நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

* ஈழத்தில் தமிழ் நாடகங்கள்(1981) – ‘அகரம்’ வெளியீடு, சிவகங்கை தமிழ்நாடு.

* அன்னை இந்திரா(1985)- கல்ஹின்ன தமிழ்மன்றத்தின் 25 ஆவது வெளியீடு. (தினகரன் வார மஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு)

 * காந்தி நடேசய்யர் (1990)-மலையக வெளியீட்டகம், கண்டி.

* சுவாமி விபுலானந்தர் (1992)

 * The Hill Country in Sri Lanka Tamil Literature (1995)

 * மலையகமும் இலக்கியமும் (1995)- மலையக வெளியீட்டகம், கண்டி (1996 ஆம் ஆண்டு அரசகரும திணைக்களத்தால் நடைபெற்ற தமிழ்த்தின விழாவில் அரச இலக்கிய விருது பெற்றது)

 * முகமும் முகவரியும் (1997)- 1997 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை நுவரெலியாவில் நடத்திய சாகித்திய விழாவில் வெளியிடப்பட்டது.

* மலையக மாணிக்கங்கள் (1998) – துரைவி வெளியீடு, கொழும்பு. (மலைய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த முன்னோர் பன்னிருவரின் தகவல்கள்)

* அக்கினிப்பூக்கள் (1999) – நாடகநூல், ‘ஞானம்’ வெளியீடு, கொழும்பு (1999 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நாடகநூலுக்கான சாகித்திய விருது பெற்றது)  

 * இவர்கள் வித்தியாசமானவர்கள் (1999) – பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு (தினகரன் வாரமஞ்சரியில் ‘நினைத்துப்பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்ற முப்பது பேர்கள் பற்றிய தகவல்கள்) 

 * குறிஞ்சிப் பூக்கள் (2000) – மலையகப் பெண் எழுத்தாளர்கள் பன்னிருவரின் சிறுகதைகள். (சர்வதேச பெண்கள் தினத்தன்று கண்டியில் வெளியிடப்பட்டது)

 * சாந்தராஜின் சிறுகதைகள் ( 2001) (ஹட்டனைச் சேர்ந்த சாந்தராஜின் சிறுகதைகளின் தொகுப்பு) 

 * சி.வி.சில நினைவுகள் (2002) – மலையக வெளியீட்டகம், கண்டி. (மலையகக் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களைப்பற்றி ‘நவமணி’ வார இதழில் ‘மலையக மக்கள் கவிமணி சி.வி. சில நினைவுகள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைத் தொடர்)

* மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு(2002). (இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் இஸ்லாமிய ஆய்வகம் 2002 இல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில். ஒக்ரோபர் மாதம் 22, 23, 24 இல் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரை)

 * மலையகம் வளர்த்த கவிதை (2002) – மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்.

 * கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002). (மத்திய மாகாண சபையின் சாகித்திய விழாவில் வெளியிடப்பெற்றது)

 * குறிஞ்சிக் குயில்கள் (2002) – மலையக கவிதாமணிகளின் கவிதைகளின் தொகுப்பு)

 * திருந்திய அசோகன் – சிறுவர் நாவல் (2003). (அந்தனி ஜீவா தனது இளவயதில் தினகரனில் எழுதியது. அந்தினிஜீவாவின் மணி விழாவையொட்டி வெளியிடப்பெற்றது)

 * நெஞ்சில் பதிந்த ஜரோப்பிய பயணம் (2004) – சென்னை மணிமேகலைப் பிரசுரம் ( 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்தனி ஜீவா மேற்கொண்ட லண்டன், பாரிஸ் பயணக் கட்டுரை. தினகரனில் தொடராக வெளிவந்தது)

 * அம்மா (2004) – சென்னை கலைஞன் பதிப்பகம். (அந்தனி ஜீவாவின் தாயாரின் மறைவின் 3 ஆம் ஆண்டு நினைவாக அந்தனி ஜீவாவினால் தொகுக்கப்பெற்ற இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)

* மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005) – மலையக வெளியீட்டகம், கண்டி (வீரகேசரி வாரமலரில் வெளிவந்த கட்டுரையின் விரிவு)

 * சிறகு விரிந்த காலம் (2007) – ஐக்கிய இராச்சியத்தின் அயோத்தி நூலக சேவையும் கண்டி சிந்தனை வட்டமும் இணைந்த வெளியீடு) (அந்தனிஜீவாவினால் எழுதப்பெற்ற அவரின் வாழ்க்கைக் குறிப்புக்கள்) – சிந்தனை வட்டத்தின் 254 ஆவது வெளியீடு.

அ.ந.க.ஒரு சகாப்தம் (2009) –                                        

 * (சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் எனும் தலைப்பில் தினகரன் வாரமலரில் எழுதிய கட்டுரை.’பதிவுகள்’ இணையத்தளத்திலும் வெளிவந்தது)

 * பார்வையின் பதிவுகள் (2010) –‘கொடகே’ வெளியீடு

(தினக்குரல் வாரமலர் கட்டுரைகளின்(பத்தி) தொகுப்பு) 

 * ஒரு வானம்பாடியின் கதை (2014) – ‘ஜீவநதி’ வெளியீடு (‘ஜீவநதி’ சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகள்)

 அத்துடன் யோகா பாலச்சந்திரனின் சிறுகதைகளைத் தொகுத்த ‘கனவுக்குழந்தை’- ஜெயபாரதி பதிப்பகம் மற்றும் பதுளை லுணுகலையைச் சேர்ந்த ரஸீனா புஹாரி எனும் இஸ்லாமியப் பெண்மணியின் கவிதைகள் தொகுக்கப்பெற்ற ‘மண்ணிழந்த வேர்கள்’ ஆகிய நூல்கள் அந்தனிஜீவாவிடமிருந்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த அறுவடைகளாகும். ‘கொழுந்து’ பிரசுரமாக ‘பெண்போராளிகள்’ ( வீ. சின்னத்தம்பி எழுதியது) நூல் வெளிவந்தது.

 டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ தனது 298 ஆவது இதழில் (பெப்ரவரி 2004) அட்டைப் படத்தில் அந்தனி ஜீவாவை அறிமுகம் செய்து அவரைச் சங்கை செய்தது. அது பற்றிய கட்டுரையை ‘கலை இலக்கியப் பன்முகச் செயற்பாட்டாளர் அந்தனிஜீவா’ எனும் தலைப்பில் எழுத்தாளர் நா.சோமகாந்தன் எழுதியிருந்தார்.

 அந்தனிஜீவாவின் அரைநூற்றாண்டுகால அனுபவங்களை ‘ஒரு வானம்பாடியின் கதை’ எனும் தலைப்பில் அந்தனிஜீவாவின் எழுபதாவது அகவையை முன்னிட்டு ‘ஜீவநதி’ யின் 35 ஆவது நூல் வெளியீடாக 2014 இல் ‘ஜீவநதி’ ஆசிரியர் பரணீதரன் வெளியிட்டார். ‘ஜீவநதி சஞ்சிகையில் இருபது மாதங்கள் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

 இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் சபா.ஜெயராசா கலை இலக்கியச் செய்திகளை அறிவிப்பு செய்து எழுத்தாளரையும், கலைஞர்களையும் செய்தி நிலையில் சமகாலப்படுத்துவது அவர் மேற்கொள்ளும் வினைத்திறன்மிக்க பணி. கலை இலக்கியத்துறைகளில் நிகழும் இருட்டடிப்புக்களைத் தகர்த்தல் அவருக்குரிய சுவையான விளையாட்டு என அந்தனி ஜீவாவைக் குறிப்பிட்டுள்ளார்.

 திரு. ஞானசேகரின் ‘ஞானம்’ சஞ்சிகை அந்தனிஜீவாவின் பவள விழா ஆண்டின்போது தனது 228 ஆவது இதழில் (மே 2019) அட்டையில் பவளவிழா நாயகன் அந்தனி ஜீவா எனக் குறிப்பிட்டு அவரின் படத்தைப் பிரசுரித்து அந்த இதழில் நேர்காணல் ஒன்றையும் பதிவு செய்திருந்தது. 

 ‘இனிய நந்தவனம்’ இதழும் (பெப்ரவரி 2006, கொடி: 3 மலர்: 5) அந்தனி ஜீவாவை அட்டைப்பட அதிதியாக்கி நேர்காணல் கண்டு சங்கை செய்துள்ளது. இந்நேர்காணலில் ‘எழுத்து என் வாழ்வாகவும் தொழிலாகவும் அமைந்தது..’ என அந்தனி ஜீவா கூறியுள்ளார்.

 இவற்றுடன் ‘பிரியநிலா’ எனும் இதழும் அந்தனி ஜீவாவை அட்டைப்பட அதிதியாக்கி அவரைச் சங்கை செய்ததாக அறியமுடிகிறது. இவ்வாறு கலை இலக்கிய உலகின் சங்கைக்குரியவராகிச் சாதனைகள் படைத்தவர் அந்தனி ஜீவா. 

 எழுத்துலகில் ஆரம்பத்தில் எஸ்ஏ.ஜீவா-கண்டியூர் கண்ணன்- மாத்தளை கௌதமன்- கவிதா ஆகிய புனைப் பெயர்களில் ஆக்கங்களைப் படைத்தபோதிலும் – ‘அந்தனி ஜீவா’ தான் அவருடன் ஒட்டிக்கொண்டது.

 எழுத்துலகில் அந்தனி ஜீவா எனும் பெயரை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தபோதிலும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நான் குடும்பத்துடன் கொழும்புக்கு இடம்பெயர்ந்த 1990 இலிருந்துதான் அவருடனான எனது உறவும் ஊடாட்டமும் ஆரம்பித்தன. கொழும்புத் தமிழ்ச் சங்கம் எம்மை இணைத்து வைத்தது. இடதுசாரிச் சிந்தனைகள் எம்மை இன்னும் இறுக்கி வைத்தன.

 அந்தனி ஜீவாவும் கலைச்செல்வனும் நானும் கொழும்பு வாழ்காலத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். சாயங்கால வேளைகளில் நிகழும் அச்சந்திப்புக்கள் சந்தோசமானவை.

 மட்டக்களப்பில் 2008 ஜனவரியிலிருந்து ஆரம்பித்து என்னால் வெளியிடப்பெற்ற ‘செங்கதிர்’ கலை-இலக்கிய-பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ் தனது 17வது இதழை (வீச்சு 17-மே 2009) மலையகச் சிறப்பிதழாக வெளியிட்டபோது அவ்விதழின் அட்டைப்படத்தை செங்கதிர் இதழின் அம்மாத அதிதியாக அந்தனி ஜீவாவும் நடேசய்யர் மீனாட்சி அம்மாளும் அலங்கரித்திருந்தனர். அந்தனி ஜீவா குறித்த கட்டுரையொன்றினை நான் எழுதியிருந்தேன். நடேசய்யரின் படத்துடன் தனது படத்தையும்; ‘செங்கதிர்’ முன்னட்டையில் போட்டதைப் பெருமையாக எடுத்துக் கொண்டு எனக்கு நன்றி கூறியதை இன்று அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டவுடன் நினைத்துப் பார்க்கிறேன். அந்நினைவில் நெஞ்சம் கனத்துக் கண்கள் பனிக்கின்றன.

 ‘செங்கதிர்’ வெளியிட்ட மலையகச் சிறப்பிதழின் அறிமுக நிகழ்வொன்றினை மலையக கலை இலக்கிய பேரவையின் எற்பாட்டில் அதன் தலைவர் சாரல்நாடனின் தலைமையில் ஹட்டன் நகரில் நடத்தினார். அந்நிகழ்விற்கு கொழும்பிலிருந்து எழுத்தாளர் சட்டத்தரணி பதுளை சேனாதிராஜாவின் காரில் நாம் மூவரும் மலையகத்திற்கு மேற்கொண்ட பயணம் நெஞ்சகலா நினைவுகளாகும்.

 உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவராகப் பத்மா சோமகாந்தனும் செயலாளராக அந்தனி ஜீவாவும் செயற்பட்ட வேளையில் அதன் பொருளாளராக நான் இருந்தேன்.

 21.02.2010 அன்று தமிழ்நாடு குற்றாலத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 05 வது மாநாட்டில் இலங்கையிலிருந்து நாமிருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டோம். அந்த மாநாட்டிலேயே ‘செங்கதிர்’ இதழுக்கு ‘அய்யன் திருவள்ளுவர் விருது’ கிடைக்கப்பெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளர் தி.க.சி க்கும் தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதனுக்கும் அந்தனி ஜீவா என்னை அறிமுகம் செய்து வைத்து அளவளாவிய காட்சி கண்முன் விரிகின்றது. 

 மாநாடு முடிந்து ஒன்றாகவே தமிழ்நாட்டில் திருச்சியில் இனியநந்தவனம் சந்திரசேகரனையும் சிற்றிதழ்கள் சேகரிப்பாளர் பொறியியலாளர் பட்டாபிராமனையும் நாமக்கல் சென்று நாவலாசிரியர் சின்னப்பபாரதியையும் சந்தித்துவிட்டுச் சென்னை வந்தடைந்த பயணங்கள் பார்வையில் பதிகின்றன.

 அதன்பின்னர் உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் -06 வது மாநாட்டை 2011 ஜனவரி 05 இல் கொழும்பு இராமகிருஷ்ணன் கருத்தரங்க மண்டபத்தில் இருவரும் இணைந்து நடத்தியமையும் அவருடனான எனது ஊடாட்டத்தின் உன்னதமான நிகழ்வுகள்- நினைவுகளும்கூட.

 2010 இல் நான் கொழும்பிலிருந்து மீண்டும் ஊர்திரும்பி மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கியதும் எப்போதாவது கொழும்பு செல்லும்போது சந்தித்துக் கொள்வதைத்தவிர அவ்வப்போது தொலைபேசியிலேயே தொடர்பிலிருந்தோம். ஆனாலும் அவர் நோய்வாய்ப்பட்ட பின்பு அத்தொடர்பு சாத்தியப்படவில்லை.

96அ அவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்த ஆரம்ப காலத்தில் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தபோது அவரது மனைவிதான் எடுத்தார். அந்தனி ஜீவாவுடன் கதைக்கும் எனது அவாவை வெளிப்படுத்தியபோது மனைவி மாறிக்கொடுத்த தொலைபேசியினூடாக “ஆர் …. கோபாலா” என்று முனகலுடன் கேட்டார். அவரைச் சங்கடப்படுத்தவிரும்பாமல் ‘பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லித் தொடர்பை நானே துண்டித்தேன். அவருடன் நான் பேசிய கடைசி வார்த்தைகள் இவைதான். நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது.

 முதலாவது கண்ணகி கலை இலக்கிய விழா 2011 ஜூன் 18,19 ஆகிய இருதினங்கள் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றபோது பேராளராகக் கலந்து கொண்டது மட்டுமல்ல, விழாவின் நிறைவு நாளன்று உரையும் ஆற்றியிருந்தார்.

 தனது எட்டு சகாப்தகால ( 26.05.1944 – 10.01.2025) இவ்வுலக வாழ்க்கையில் கொழும்பிலும்- கண்டியிலும்- மீண்டும் கொழும்பிலும் தனது வசிப்பிடங்களை வைத்துக் கொண்ட அந்தனி ஜீவாவை மலைய கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’ எனக் கருதுவது மிகைப்பட்ட கூற்றல்ல. 

 தலைநகர் கொழும்பில் பிறந்து வளர்ந்து கல்விகற்று மலையகத்தில் சிறகடித்த ஒரு வானம் பாடியே அந்தனி ஜீவா. மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் தொடர்பே அந்தனி ஜீவா மலையக இலக்கியத்தின்பால் பற்றுக்கொள்ளக் காரணம். மலையக மண்ணின் மீது அந்தனி ஜீவாவுக்கு வாஞ்சையை ஏற்படுத்தியதில் சி.வி. வேலுப்பிள்ளை மட்டுமல்ல இலங்கை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஏ.இளஞ்செழியனும் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.  

 தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.

  அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.

 கலை இலக்கிய மேம்பாட்டுக்காய் அது மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று எறும்புபோல் ஓடியோடி உற்சாகத்துடன் உழைத்த அந்தனி ஜீவாவின் மரணம்- மறைவு மலையக விருட்சமொன்று மண்ணில் சாய்ந்து விட்டதாகவே மனதில் தோன்றுகிறது. அன்னாருக்கு என் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.

— செங்கதிரோன்.