— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —
மனுஷன்/மனுசி,அழகன்/ அழகி, துரோகன்/துரோகி……… துரோகி என்பது பெண்பாலா? அப்போ துரோகிக்கு ஆண்பால் துரோகனா? தலைப்பே குழப்பத்துடன் நந்தியாக துருத்திக்கொண்டிருக்கிறது. அது அகரனுக்கே உரிய அழகியல் நுட்பம்.
‘அகரன்’ புகலிட இலக்கியப் பாரம்பரியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏலவே ‘ஓய்வு பெற்ற ஒற்றன்’ என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ‘அதர் இருள்’ என்னும் குறுநாவல் ஒன்றையும் வெளியிட்டுள்ள அகரனின் மூன்றாவது நூல் இது. பதின்நான்கு சிறுகதைகளுடன் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் இடப்பெற்றுள்ள கதைகளில் பல முழுக்க முழுக்க ஈழத்து கதைகளாகவும் சில ஐரோப்பிய அகதி வாழ்வின் பக்கங்களை தரிசிக்கும் வாய்ப்புகளைத் தாங்கிய கதைகளாகவும் உள்ளன. அவையும் கூட யுத்தத்தின் நினைவுகளை தாண்டிச் செல்லமுடியாத நனவிலி மனங்களின் உரையாடல்களுடன் இணைத்துப் பின்னப்பட்டுள்ளன.
பாரிஸ் பெருநகரம் அறிவாளிகளும் தொழிலாளிகளும் குவிந்து கிடக்கும் குப்பை மேடு என்பார் மூதறிஞர் மு.வரதராசனார். அத்தோடிணைந்து இந்நகரத்தின் வாழ்வென்பது உலகிலுள்ள பல்வேறுபட்ட இன, மத,கலாசார பின்னணிகளைக் கொண்ட மக்கள் கூட்டத்தை காணும்,கண்டறியும், கலந்து வாழும் வாய்ப்புகளையும் தரவல்லதாகும். அத்தகைய பாரிஸ் பெருநகரத்தில் வந்து வீழ்ந்த ஒரு இலங்கைத் தேசாந்திரி ஒருவன் எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்களைச் சித்தரிப்பதாக பூமா,அஞ்சனம்,வல்லான்வில் வேட்டைக்காரி,சிரிப்பு,8.6, போன்ற கதைகள் காணப்படுகின்றன.
இவற்றில் குறிப்பிடக்கூடிய கதையாக 8.6 (போதை கூடிய பியர்) என்னும் சிறுகதை ஒரு தெருவோர மனிதனின் வாழ்வைப் பேசுகின்றது.
இரந்துவாழ்வோர், பாலியல் தொழிலாளர்கள் போன்ற சமூகத்தால் புறமொதுக்கப்பட்ட விளிம்புநிலை மாந்தர்களின் உலகை தமிழிலக்கியத்தில் பேசுபொருளாக்கியத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தன. அதேபோன்று புகலிட இலக்கியத்தில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் உலகினை பல்வேறு கோணங்களில் கவனங்கொள்ளச் செய்ததில் க.கலாமோகனின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. அத்தகைய கதைகளில் ஒன்றாக அகரனின் 8.6 சிறுகதையை அடையாளம் காண முடிகின்றது. ‘டே டே’ என்னும் முன்னாள் போலீஸ் வீரர் ஒருவர், அவரது குடும்பம் சிதைவுற்று வீதிக்கு வந்தவர், தெருவோரத்தில் பியரும் கையுமாக குளிரென்றோ வெயிலென்றோ அலட்டிக்கொள்ளாமல் ஏகாந்த வாழ்வு வாழ்பவர். அவருடனான ஒரு இலங்கை அகதியின் அறிமுகம், நெருக்கம், நட்பு என்று தொடரும் கதையின் முடிவில் ஒருநாள் அந்த தெருவோரச் சந்தையின் அருகே உள்ள மரத்தின்கீழ் ‘டே டே’ இறந்து கிடப்பதோடு அக்கதை முடிகின்றது. ஆம் நவீன நாகரீகங்களின் சிற்பமாக நிற்கும் பரிஸ் போன்ற நகரங்களிலும் அவற்றின் புறநகர் பகுதிகளிலும் உள்ள புகையிரத நிலையங்களிலும் மெட்ரோ பாதையோரங்களிலும் இன்னும் ‘டே டே’ போன்ற நூற்றுக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும் தாய், துரோகன், போராளியின் இறுதிவெடி, விசாரணை, பொம்மை, மாமாவின் மகன் போன்ற கதைகள் ஈழ யுத்தத்தின் வடுக்களை மையமாகக் கொண்டுள்ளன.
போரின் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போரின் இடிபாடுகளுக்குள்ளே பிறந்து போரின் அவலங்களோடே வளர்ந்து தப்பிப்பிழைத்தவர்களில் அகரனும் ஒருவர். அதனால்தான் அந்த கொடிய போரின் எச்சங்களாக அவர் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் நினைவுகளே அவரது எழுத்துக்களின் சாரங்களாக இருக்கின்றன. யுத்தத்தினால் ஆயிரக்கணக்கில் மாண்டுபோன மக்களும் அவர்களில் எஞ்சிக்கிடக்கும் மனிதர்களுமே அவரது கதையுலகின் மாந்தர்களாய் உலா வருகின்றனர்.
இது ‘அகரன்’ என்னும் எழுத்தாளருக்கு மட்டுமல்ல இவரைப்போன்ற போரின் குழந்தைகளான பல ஈழத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொன்னால் இத்தகைய கதைக் களத்தையும் கதை மாந்தர்களையுமே இன்றைய பல எழுத்தாளர்கள் தமது இலக்கிய முதலீடாகவும் கொண்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர்சூழ் வாழ்வின் அவலங்களை சித்தரிக்கும் அதே வேளை உள்ளக வன்முறைகளை ஆதரிக்கும் பாசிஸ மனநிலையில் ஊறித்திளைத்த தேசிய பித்தர்களாகவும் காணப்படுவது பல ஈழ எழுத்தாளர்களிடையே காணப்படும் பெரும் முரண் நகையாகும்.
போர் என்பதே அவலங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்ற தொழிற்சாலைதான். வன்முறைகளையும் கொலைகளையும் கொடூரங்களையும் நிகழ்த்துவதிலேயே போரின் போதான அறம் நிலைநாட்டப்படுகின்றது. போரில் ஈடுபடும் இருதரப்பினராலும் அவைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதானிருக்கும். ஆனால் இந்த வன்முறைகளை எதிர்த்து ஆக்கிரமிப்பு, அட்டுழியம் என்று ஒரு புறம் பேசிக் கொண்டு மறுபுறம் புரட்சிகளின் பெயராலும் விடுதலைகளின் பெயராலும் தத்துவங்களின் பெயராலும் ஒருபக்க வன்முறைகளுக்கு நியாயம் கற்பிப்பது புறநாநூற்றுக் காலம் தொடங்கி ஈழத்தமிழ் இலக்கியம் வரை தொடர்கின்றது. இவற்றுக்கு மொழியுணர்வுகளும் இன,மத,தேச உணர்வுகளும் துணைக்கழைக்கப்படுகின்றன. தற்கொடையென்றும் தரணி புகழ் மாவீரமென்றும் கொலைகளும் மரணங்களும் கொண்டாடப்படுகின்றன.
ஆனால் புகலிட தமிழ் இலக்கியத்துக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. யுத்தத்தைத் தின்போம் யுத்தத்தைத் தின்போம் என்று யுத்த எதிர்ப்புக்கு கவிதைகளிலும் கதைகளிலும் ஆர்ப்பரித்து எழுந்து நின்றதுதான் புகலிட இலக்கியம். ‘எந்தத் தாயும் தன் புதல்வனின் மரணத்தை மாவீரன் என்று கொண்டாடுவதில்லை’ என்று பாடுவான் புகலிடக்கவி ‘சக்கரவர்த்தி’. இப்படியாக யுத்த பேரிகைகளுக்குள் நசிவுண்டு கிடந்த மானிடத்தின் ஈனக் குரல்களின் பிரதிபலிப்பாய் தன்னை பிரகடனம் செய்த வரலாறு புகலிட இலக்கியத்துக்கு உண்டு. அதனாலேயே ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புகளால் துரோகங்களாக பிரகடனம் செய்யப்பட்டு அடாவடித்தனங்களாலும் மிரட்டல்களாலும் கொலைகளாலும் ஒரு காலத்தில் அச்சுறுத்தப்பட்டது இந்த புகலிட இலக்கியப்போக்கு என்பது வரலாறு.
அகரனின் கதைகளைப் பொறுத்தவரையில் வெற்றிவேல் வீரவேல் என்று ‘புலிகளையும் அவர்களின் வீரம் செறிந்த வாழ்வையும்’ புகழ்ந்துரைக்கும் அதேவேளை யுத்தத்தின் போதான அனைத்து வன்முறைகள் மீதும் கேள்வியெழுப்பத் துடிக்கும் அறச்சீற்றம் துளிர்விடுவதை சில கதைகளில் ஆங்காங்கே காணமுடிகின்றது. இதனுடாக புலிகளின் உள்ளக வன்முறைகள் பற்றிய பல பதிவுகளை நாசூக்காக ‘துரோகன்’ சிறுகதைகள் பேசுகின்றன. அந்த வகையில் இச்சிறுகதைத் தொகுப்பானது ஈழ வியாபார எழுத்துக்களின் போக்குகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிடுபட்டு புகலிட இலக்கியத்தின் கருத்துக் சுதந்திர வெளி பாரம்பரியத்துடன் தன்னை அடையாளம் காட்ட எத்தனிப்பது தெரிகின்றது.
புலிகள் இயக்கம் மாத்தையா என்னும் தளபதியை துரோகி எனப் பிரகடனம் செய்து கொன்றொழித்ததோடு (1993) மட்டுமன்றி அவரின் விசுவாசிகள் என்று குற்றம் சாட்டி பலநூறு போராளிகளை சித்திரவதை செய்து கொன்றதென்பது வரலாறு. அவ்வேளையில் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்குள்ளானவர் தளபதி ஜெயம் ஆகும். பின்னர் அவர் விடுதலையாகி படையணிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.
ஒரு சுய பரிசோதனையாக நம் சமூகம் பேசியாகவேண்டிய இத்தகைய வரலாறுகளை நாசூக்காக சொல்ல முயலும் ‘அகரன்’ ‘இயக்கத்துள் நடந்த சூறாவளிக் காலத்தில் என்மனம் உடல் வதங்கிய காலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன்’ என்று தன் சொந்த இயக்கத்தினாலேயே தனக்கு இழைக்கப்பட்ட கொடிய சித்தரவதைகளை இறுதி யுத்தக் களமுனையின் சாவின் விளிம்பில் நின்ற தருணங்களின் போது தளபதி ஜெயம் என்னும் போராளி நனவிடை கொள்வதாக பதிவு செய்கின்றார். இறுதியாக தளபதி ஜெயம் தன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதோடு யுத்தம் முடிவடைகின்றது. குறித்த இறுதியுத்தம் முடிந்தபோது ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று கூற அந்நிலத்தில் யாரும் இருக்கவில்லை.’ என்கின்ற வரிகளோடு ‘போராளியின் இறுதி வெடி’ என்னும் அக்கதை முடிகின்றது.
கதைதான் முடிகின்றதே தவிர அந்த வரிகள் எழுப்பும் கேள்விகள் ஒரு யுகம் யுகமாய் தொடரும் வல்லமை வாய்ந்தனவாகவுள்ளன. பல்லாயிரம் போராளிகளுடன் எழுந்து நின்ற அந்தப்போர் ஏன் தொடரவில்லை? குறித்த அமைப்பும் குறித்த தலைமையும் அழிந்து விடுவதானால் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விடமுடியுமா? அப்படியென்றால் யாசிர் அராபாத்தின் மரணத்தின் பின்னர் பலஸ்தீன விடுதலைப்போராட்டமும் ஒச்சலானின் கைதுக்கு பின்னர் குர்தீஸ் விடுதலைப் போராட்டமும் பல தசாப்தங்களாகத் தொடருவது எப்படி? டாக்டர் சான் யாட் சென்னின் போன்றவர்களின் பல்வேறு தோல்விகளுக்குப் பின்னரும் எப்படி மாவோ என்னும் மனிதன் மாபெரும் மக்கள் சீனத்தைப் படைக்கமுடிந்தது? ஆனால்
ஏன் மே 18 ஆம் திகதிக்கு பின்னர் ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி ஒரு கைக்குண்டை வீசக்கூட ஈழத்தில் ஒரு தேசபக்தன் இல்லாது போனான்? உண்மையான தேசபக்தர்களையெல்லாம் துரோகிகள் என்று கொன்றழித்துவிட்டு கூலிக்கு வேலைசெய்யும் முகவர்களை பண முதலைகளையும் சர்வதேச மாபியாக்களையும் மட்டுமே வளர்த்தெடுத்ததன் பலன் தான் இந்நிலையா?
இத்தொகுப்பின் சிறந்ததை கதையாக ‘விசாரணை’ என்னும் கதை அமைகின்றது. துரோகம் என்னும் கதையின் தலைப்பை இக்கதைக்கு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில் உண்மையில் துரோகம் என்பது என்ன? ‘துரோகி’ ‘துரோகி’ என்று எடுத்ததற்கெல்லாம் கொலையே தீர்வு என்று இயங்கிய புலிகள் இயக்கம் இறுதியிலே அந்தத் துரோகத்தின் அடையாளமாக, தமிழர்களின் ஒரு அவமானச் சின்னமாகச் சீரழிந்து அழிந்து போனது.
அந்த துரோக வரலாற்றை சொல்லாமல் சொல்லும் பாங்கில் இந்த விசாரணை என்னும் கதை அமைந்துள்ளது. புலிகளின் புலனாய்வுத் துறைக்காக மாதாந்தம் 8000 ரூபாய் கூலிக்கு பணிபுரியும் மயூரன் என்னும் ஒரு இளைஞன் பற்றியது இக்கதை. மிக விசுவாசமாக போராளிகளோடு போராளிகளாக வாழ்ந்து புலனாய்வு துறைக்கு பணிபுரிகின்றான் மயூரன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு இரட்டை முகவர் என்பதை இயக்கம் அறிந்து கொள்கின்றது. இயக்கத்தின் மறைவிடங்கள் பற்றி மலர்விழி என்னும் தன் காதலியூடாக இராணுவத்தினருக்கு அவன் அனுப்பிய இரகசிய தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக அவன் இலங்கை இராணுவத்தினருக்கு கொடுத்த இரகசியத் தகவலால்தான் புலிகளின் முகாமொன்றின் மீது விமானத் தாக்குதல் இடம்பெற்றது என்கின்ற குற்றச்சாட்டில் புலிகளால் மரண தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றான்.
கண்கள் கட்டப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு பகிரங்கமாக சுட்டுக்கொல்லப் படுகின்றான்.
கூலிக்கு வேலை செய்பவன்தானே அதிக கூலி கொடுப்பவர்களுக்கு அதிக விசுவாசமாய் இருப்பான் என்பது இயல்புதானே?
இந்தக்கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. அந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இருபத்திஐந்து வருடங்களுக்குப் பின்னர் இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைக்குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திடம் தங்களை ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் இயக்க இரகசியங்களை இராணுவத்தினரிடம் கையளித்தான் என்னும் குற்றச்சாட்டில் துரோகி என்று மரண தண்டனைக்கு ஈ ள்ளாக்கப்பட்ட மயூரன் இணைந்து இயங்கிய புலிகளின் புலனாய்வுத்துறை அணியினரும் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையும் காலம் வருகின்றது.
அனைவரும் தங்கள் அடையாளங்களையும் இயக்க இரகசியங்களையும் இலங்கை இராணுவத்திடம் தாங்களாகவே ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் குறித்த கிராமத்துக்குரிய அரச கிராம சேவகராக மயூரனின் காதலி மலர்விழி இருக்கின்றாள்.
ஆக கூலிக்கு வேலைசெய்ய வந்து அதிக கூலி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இயக்க இரகசியங்களை இராணுவத்திடம் கொடுத்த மயூரன் துரோகியென்றால் அந்த மயூரனைப் போல் பலநூறுபேருக்கு மரணதண்டனை வழங்கிவிட்டு இன்று அதே இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் ஒப்படைத்த புலித்தளபதிகள் யார்? எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவிக் குழந்தைகளின் கழுத்திலே சயனைட் குப்பிகளை கட்டி களமுனைக்கு இவர்கள் அனுப்பினார்கள்! உயிர்க்கொடை, உன்னதம், மாவீரம் என்று எத்தனை கரும்புலிகளுக்கு இவர்கள் பயிற்சியளித்து பாடையில் அனுப்பினார்கள்!
ஆனால் தங்களுக்கான நேரம் வந்தபோதுதான் உயிர்களின் பெறுமதியும் வாழ்வின் மீதான ஆசையும் இவர்களுக்கு புரிந்தது. இருபது முப்பது வருடங்களாக கோடிக்கணக்கான சொத்துக்களையும் லட்ஷக்கணக்கான பொதுமக்களையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பலிகொடுத்துவிட்டு ஏனைய சக இயக்கப் போராளிகளையும் மிதவாத தமிழ் தலைமைகளையெல்லாம் துரோகிகள் என்று கொன்று வீசி விட்டு எஞ்சியிருந்த தேசபக்தர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடித்துவிட்டு இப்போது தாங்களும் கேவலமாக சரணடைந்து அழிந்து போவதில் என்ன மாவீரம் இருக்கின்றது? அனைத்துக்கும் மேலான துரோகம் இதுவல்லவா? மயூரன் துரோகியென்றால் நீங்களெல்லாம் யாரென்று கேட்காமல் கேட்பதற்காவா இந்த சிறுகதைத் தொகுப்புக்கு ‘துரோகன்’ என்று பெயரிட்டார் அகரன்?