(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
சென்ற முறைய அரசியல் பத்தியைப் படித்த தமிழ் அன்பரொருவர் தனது ‘வாட்ஸ்அப்’பில் ‘இன, மத, பிரதேச பிரிவினைகளை முன்வையாத புதிய அரசியலமைப்பு கொண்டுவரும்போது 13 தேவையற்றது’ என எனக்குப் பதிவிட்டிருந்தார். இப்பதிவையிட்டவர் படித்தவர். வங்கி ஒன்றின் முகாமையாளராக-உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரே இப்படிச் சிந்திக்கிறாரென்றால் சாதாரண தமிழ் மகனொருவன் எப்படிச் சிந்திப்பான் என்று எண்ணியபோது தமிழ் மக்கள் அரசியல் சிந்தனைகளில் எவ்வளவு பலவீனமாக உள்ளார்களென்பது பட்டவர்த்தனமாயிற்று.
இத்தகைய மேலோட்டமான சிந்தனை அபத்தமானது. ஆபத்தானதும்கூட. ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கா மீது கொண்டுள்ள அதீத நம்பிக்கையும் அவர் கூறும் உத்தேச புதிய அரசியலமைப்பே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை உட்பட எல்லா பிரச்சனைகளுக்கும் சகல ரோக நிவாரணி என்ற எதிர்பார்ப்பும் அந்த அன்பரை அவ்வாறு எண்ணவும் அதனைப் பதிவிடவும் உந்தியிருக்கலாம். ஆனால் இத்தகைய எதிர்பார்ப்பும் சிந்தனையும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆபத்தானது என்பதை உணர்த்துவதே இம்முறையப் பத்தியின் நோக்கமாகும்.
அனுரகுமார திசாநாயக்கா காட்டும் எளிமை, தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் ஊழலற்ற-அதிகார துஷ்பிரயோகங்களற்ற-வீண் ஆடம்பரச் செலவுகளற்ற-சட்டம் ஒழுங்கை ஒழுங்காகப் பேணிக் கடைபிடிக்கின்ற-எல்லோரும் இலங்கையர் என்ற தாரக மந்திரத்தோடு கூடிய அரச நிர்வாகம் அல்லது ஆட்சி மட்டும் தமிழ் மக்களுடைய சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்திவிடாது.
அதுக்கும் மேலால், ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது எதிர்கால இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாத்து அதனை அடுத்த சந்ததிக்கு மடைமாற்றம் செய்யும்வகையிலான அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையொன்றினையே கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் பொதுவெளியில் தமிழ் மக்கள் அவாவி நிற்கிறார்கள். அதற்காகவே யார் சரி? யார் பிழை? எது சரி? எது பிழை என்பதற்குமப்பால் கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிரழிவுகளையும் பல கோடிச் சொத்தழிவுகளையும் கலாசாரச் சீரழிவுகளையும் தாம் செறிந்து வாழும் தாயகத்தில் சூழல் அழிவுகளையும் பலவிதமான உளவியல் தாக்கங்களையும் தாங்கிக் கடந்து வந்துள்ளனர். இதனை அறிவார்ந்த எவரும் மறுதலிக்க முடியாது.
தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்பிலும்கூட கொள்கைரீதியாக வார்த்தைப் பிரயோகங்களில் இன மத பிரதேச பிரிவினைகள் இல்லைத்தான். ஆனாலும் தமிழ்த் தேசிய இனம் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உள்ளாகி வந்துள்ளதே? அது ஏன்?
உண்மையில் இங்கு வேண்டப்படுவது எப்போதுமே அது எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி (தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இது மாற்றம் அடையலாம்) ஆட்சியில் அமரக்கூடிய பெரும்பான்மைச் சிங்கள பௌத்த சமூகத்தின் மனமாற்றம் ஆகும். அந்த மன மாற்றத்தைப் புதிய அரசியலமைப்பினால் மட்டும் ஏற்படுத்திவிட முடியாது. இருதரப்புப் புரிந்துணர்வின் மூலமும் இருதரப்பு நம்பிக்கைகள் மூலமுமே அது சாத்தியம்.
அதற்கான ஒரு வாய்ப்பை இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வரலாறு வழங்கியுள்ளது. வாய்ப்பை – சந்தர்ப்பத்தைத் தவறாது பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுவும் தோற்றுப் போகுமானால் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் எதிர்காலம் நிரந்தர கேள்விக் குறியாகிவிடும்.
13 ஆவது திருத்தம் தமிழ் மக்கள் போராடிப்பெற்ற ஒன்று என ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்காவே ஒப்புக்கொண்டுள்ளதொரு விடயத்தை முழுமையாகவும் முறையாகவும் அர்த்தமுள்ளவிதத்திலும் மேலும் தாமதியாது-இழுத்தடிக்காது அமுல் செய்வதுதானே அடுத்தகட்ட நகர்வாக அமையவேண்டும். அதற்கான மக்கள் ஆணையும் அதற்குத் தேவையான சட்டங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடிய பாராளுமன்றப் பெரும்பான்மையும் அரசியலமைப்பின் ஒரு அங்கமாக 1987 இலிருந்து இன்றுவரை கடந்த 38 வருடங்களாக இருக்கின்ற 13ஆவது திருத்தத்தை அமுல்செய்யும் நிறைவேற்று அதிகாரமும் கடப்பாடும் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு உண்டல்லவா?
முறைமை மாற்றம் என்பது 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தையும் உள்ளடக்கியதுதானே. இதற்காகத்தானே பாரம்பரியத் தமிழ்த் தேசியக் கட்சிகளையெல்லாம் புறந்தள்ளி வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வழக்கத்திற்கும்மாறாகப் பெருவாரியாகத் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.
எனவே, இப்பத்தியின் முதற்பந்தியிலே பதிவிட்டதாகக் கூறப்பட்டுள்ள அன்பரைப் போன்று எடுகோள்களின் அடிப்படையில் மட்டும் நம்பிக்கைகொள்ளாது அவரைப் போன்றவர்கள் தாம் நம்பிக்கை கொண்டுள்ள அரசாங்கத்திற்கும் இது விடயத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்க அணிதிரளவேண்டும்.