— அழகு குணசீலன் —
“இந்தியாவில் வீதியோர பெட்டிக்கடை ஒன்றில் கியூஆர் (QR -CODE) குறியீட்டை பயன்படுத்தி வடை வாங்கமுடியும்”. இது இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து கூறிய ஒரு கூற்று. ஆம்! இன்றைய உலகில் நாளாந்த மனித வாழ்வில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி பிரிக்கமுடியாத ஒன்றாகவும் மாறிவருகிறது என்பதை ஜனாதிபதியின் இந்த கூற்று கோடிட்டுக் காட்டுகிறது.
“ஊரோடு ஓடு” . “தனித்து ஓடினால் கேட்டுக்கேட்டு ஓடு” என்று சொல்லுவது வழக்கம். அப்படித்தான் இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, தொழில்நுட்ப அபிவிருத்தி மாதிரி இருக்கிறது. உலகமயமாக்க பொருளாதார, டிஜிட்டல் தொழில் நுட்ப வலையில் முழு உலகமும் சிக்கி இருக்கின்ற இன்றைய நிலையில், பொருளாதார, தொழில்நுட்ப இலத்திரனியல் நுகர்வு இன்றைய இளைய தலைமுறையினரின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவருகிறது. ஒருவகையில் நாளாந்த வாழ்க்கையை இலகு படுத்துகிறது. மேலும் தங்கியிருத்தலையும் ஏதோ ஒரு வகையில் அதிகரிக்கிறது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து கீழிறங்கி அத்தியாவசியமாகிறது.
இந்த இடியப்ப சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி? அப்படி விடுபட்டு ஊரோடு ஓடாமல் ஒரு நாடு தனித்து ஓடமுடியுமா? அப்படி தனித்து ஓடினாலும் கேட்டுக்கேட்டுத்தான் ஓடவேண்டியதாகிறது. இந்த இடத்திலேயே இலங்கையின் பயோமெற்றிக் புதிய அடையாள அட்டை விவகாரத்தை நாம் சந்திக்கவேண்டும். இன்றைய நிலையில் இலங்கை பெரும்பாலான சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் கேட்டு, கேட்டு ஓடவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
இந்தியாவிடம் கேட்டு அல்லது கேட்காமலே இந்திய ஆலோசனையில் அல்லது சிலர் கூறுவதுபோல் ஒரு கட்டாயப்படுத்தலாக, திணிப்பாக, திட்ட மிட்டு, இலங்கையின் முழு விருப்பம் இன்றி, இந்தியாவின் ஒரு பகுதி நிதி உதவியில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?. என்ற கேள்வி இங்கு முக்கியமானது.
இது குறித்து வருகின்ற ஊடக கலந்துரையாடல்கள், விமர்சனங்கள் இன்றைய உலக தொழில்நுட்ப வளர்ச்சி ஜதார்த்தங்களை புறந்தள்ளி வெறுமனே இந்திய எதிர்ப்பாக வெளிப்படுத்தப்படுவதும், நீண்டகால தாக்கம் என்ற போர்வையில் ஆட்கடத்தல்கள், உடல் உறுப்பு திருட்டுக்கள் குறித்து ஒரு தரப்பினரால் ஆதாரமற்று அச்சம் ஊட்டப்படுவது குறித்த கேள்விகள், அவற்றின் பின்னணியில் உள்ள உள்நோக்க அரசியல் நகர்வுகள் குறித்தும் வாளாவிருக்கமுடியாது. அதற்காக ஒருநபர் பற்றிய முழுமையான தகவல்களை சுமந்து நிற்கின்ற பயோமெற்றிக் அடையாள அட்டை அறிமுகம் மூலம் ஏற்படக்கூடிய தனிநபர், சமூகப் பாதிப்புக்களை கடந்து செல்லவேண்டும் என்பதல்ல.
இந்த விடயமானது இந்திய தொழில்நுட்ப ஆக்கிரமிப்பு, இந்திய தகவல்திருட்டு, இந்திய நலன் சார்ந்த ஆலோசனை, உதவி மூலமான நவகாலனித்துவ பொருளாதார அரசியல் அழுத்தம், இறால் போட்டு சுறா பிடித்தல் …. என்றெல்லாம் வாதிடவும், விவாதிக்கப்படவும் வேண்டிய ஒன்றுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்காக சர்வதேச, பிராந்திய சூழலை புறம் தள்ளி வெறும் பொக்கை வாய்க்கு கிடைத்த அவல் மாதிரி கொதுப்ப முடியாது.
இந்தியா மட்டும் அல்ல உலகின் எந்த ஒரு நாடும் தனது வெளிநாட்டு முதலீட்டை பொருளாதார புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கிறது. அந்த முதலீட்டை பெறும் நாடும் தனது பொருளாதார புலனாய்வு தகவல்களின் படியே அந்த முதலீட்டை மதிப்பீடு செய்து அங்கீகரிக்கிறது அல்லது நிராகரிக்கிறது அல்லது நிபந்தனைகளை விதிக்கிறது/மாற்றம் செய்கிறது.
இந்த பயோமெற்றிக் அடையாள அட்டை திட்டம் தொடர்பாக தவறு இருப்பின் அதற்கு பொறுப்பு யார்? இந்தியாவா? இலங்கையா? .
இந்திய எதிர்ப்பு வாதத்தை தனது 1971, 1987 இரு கிளர்ச்சிகளில் வெளிப்படுத்திய, இன்றைய ஆட்சியின் முக்கிய பங்காளியான ஜே.வி.பி – இடதுசாரி என்.பி.பி. ஆட்சியில் இந்த அடையாள அட்டை திட்டத்தை தவிர்த்து ஓட முடியாமல் இருப்பது ஏன்?
குறிப்பிட்ட திட்டத்தை இலங்கையின் நலன்சார்ந்தும், இறைமை சார்ந்தும் செய்யவேண்டியது இலங்கையா? இந்தியாவா? . இந்தியா தான் தனித்து அல்லது அதிகம் பொறுப்பு என்றால் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பதற்கான கட்டாய அழுத்தத்தில் சிக்கி இருக்கிறதா?
பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான பெரும் சக்தியான சீனாவுடன் ஒப்பீட்டளவில் பலமடங்கு உறவைக்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் இது விடயத்தில் இந்திய அழுத்தத்தை தள்ளிவிட முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
இந்த பிராந்திய ஜதார்த்தம் இங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டு, பேசப்படவேண்டுமேயன்றி வெறும் இந்திய எதிர்ப்பு வாதம் அல்ல. அதுவும் தென்னிலங்கையை விடவும் வடக்கு கிழக்கிற்கு இதனால் அதிக ஆபத்து என்று அழுத்திக்கூறுவதன் பின்னணி என்ன? இத் திட்டத்தில் 70 வீதத்திற்கும் அதிகமான சிங்கள மக்களின் தகவல்கள் பதிவுசெய்யப்படும் நிலையில் 20 வீதமான தமிழர்களின் தகவல்களுக்கு மட்டும் ஆபத்தாக அமையும் என்று ஏன் முதன்மை படுத்தப்பட்டு வாதிடப்படுகிறது?
இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளரும், ஈழப்போராட்டத்தில் ஒரு வகையில் தொடர்புபட்வருமான தயான் ஜெயதிலக அதிகார பகிர்வு தொடர்பாக ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தார். இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் சார்ந்த 13 வது திருத்தம் தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியல் தனக்கு தானே சூனியம் வைத்த, தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்ட அல்லது சுட்டுக்கொண்ட கதையை ” தமிழ்த்தேசிய பத்து பாவங்கள்” என்று குறிப்பிடுகிறார் அவர்.
இலங்கையின் அரசியல் அதிகாரப்பகிர்வு ஜதார்த்தத்திற்கு அப்பால் , பிராந்திய பூகோள ஜதார்த்தத்திற்கு அப்பால், இந்திய எதிர்ப்பாக அது மேலெழுந்ததன் விளைவை ஈழத்தமிழர்கள் இன்னும் அனுபவிக்கிறார்கள். இந்த திசைதிருப்புதலிலேயே சில ஊடகங்கள், புலம்பெயர்ந்து டிஜிட்டல் உலகில் மிதக்கும் சில சக்திகள் இந்த விடயத்திலும் இன்று செயற்படுகின்றனவா? என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.
எனவே பயோமெற்றிக் அடையாள அட்டை விவகாரத்தில் ஆராயப்பட வேண்டிய விடயம் இந்திய பிராந்திய அரசியலுக்கும் அப்பால் அதனால் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சாதகங்களும், பாதகங்களும். இவை இரண்டிற்கும் இடையிலான தேறிய நன்மையுமாகும். இந்த வகையில் இங்கு சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
(*) இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிலையில் இந்த நவீன மயமாக்கல் அவசியமா?
(*) இதனை இப்போது செயற்படுத்தாது காலம் கழித்து நடைமுறைப்படுத்துவதால் எவ்வகையில் அது இலங்கைக்கு பாதகமாக அமையும்? அல்லது சாதகமாக அமையும்?
(*) இந்தியாவை தவிர்த்து வேறு ஒரு நாடு இந்த திட்டத்தை இலங்கையில் செயற்படுத்த, அதற்கான செலவில் குறிப்பிட்ட வீதத்தை பொறுப்பெடுக்க தயாராக உள்ளதா? அப்படியிருந்தால் அது எந்த நாடு? இலங்கைக்கான அதன் நிபந்தனைகள் என்ன?
(*) வேறு ஒரு நாடு அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, மத்திய கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகள்…. இந்த திட்டத்தை பொறுப்பு எடுத்தால் தற்போது இந்தியா மீது வைக்கப்படுகின்ற அதே குற்றச்சாட்டுகள் அந்த நாடுகளுக்கு பொருந்துமா? இல்லையா?
(*) இலங்கையின் இன்றைய நிலையில் இந்த திட்டத்திற்கான மாற்று வழிமுறைகள் எவையாக இருக்க முடியும்?
இவ்வாறான குறிப்பிட்ட திட்டம் குறித்த தொழில்நுட்ப விவரங்களை புறம் தள்ளி, வெறுமனே இந்திய ஆக்கிரமிப்பு – இந்திய எதிர்ப்பு வாதமாக அதுவும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு ‘ஆபத்து ‘ என்ற பாடல், புலனாய்வு என்ற போர்வையில் ஏன்? ஒலிக்கிறது? பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபம், இன்றைய பாராளுமன்றம் என்பன அமைக்கப்பட்டபோதும் சீனாவின் புலனாய்வு கருவிகள் அங்கே மறைத்து வைக்கப்பட்டு புலானாய்வு செய்யப்படும் என்று புரளிகள் கிளப்பப்பட்டன என்பதும் இங்கு நினைவுக்கு வருகிறது.
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் இந்த திட்டம் எடுத்த எடுப்பில் அவசியமற்றது என்று தோன்றக்கூடும். ஆனால் இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்படும் வரையும் சர்வதேச, பிராந்திய அபிவிருத்தி பாதையில் இருந்து விலகி இருப்பது இலங்கைக்கு எதிர்காலத்தில் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும். இதனால் சில அவசியமான பொருளாதார, தொழில்நுட்ப முன்னெடுப்புக்களை தள்ளிப்போடமுடியாத நிலையும் உள்ளது. இலங்கையின் முதலாவது ஆள் அடையாள அட்டை 1972 இல் அறிமுகமானது. இடையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இன்றுவரை முழுமையான தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படவில்லை. அது இன்னும் பயன்படுத்தக்கூடியது, தகவல்களை தரக்கூடியது என்றாலும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அது வேண்டி நிற்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
இலங்கையின் எதிர்கால சந்ததிக்கான முதலீடு என்ற வகையிலும், பிராந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஓரளவுக்காவது ஈடுகொடுக்கக்கூடிய வகையிலும் , அதன் மூலமான பொருளாதார நலன்களுக்கும் புதிய அடையாள அட்டை முக்கியமானதாகிறது. பல நாடுகளின் விமான நிலையங்கள், உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தியில் தன்னியக்க ரீதியான செயற்பாட்டிற்கு இவ்வகை அடையாள அட்டைகள் இலகுவானவை. அனைத்து தகவல்களையும் கொண்டவை. அமெரிக்க, சிங்கப்பூர், துபாய் விமானநிலையங்களில் இந்த மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.
இலங்கையில் 80 வீதமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்ற நிலையிலும், அவர்கள் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுவது குறைவு என்ற அடிப்படையில் அதன் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாகிறது. ஆனால் இளைய தலைமுறையினரின் குடியகல்வு – குடிவரவுக்கும் ஏன் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு பயணங்களுக்கு கூட எதிர்காலத்தில் இந்த அடையாள அட்டை அவசியமானதாக அமைய முடியும். வெளிநாட்டு பிரயாணங்களுக்கு அப்பால் உள்நாட்டில் சகலவகையான தேவைகளுக்கும் இந்தியாவின் Aadhaar அட்டை மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தனிநபரின் சகல தகவல்களையும் அது உள்ளடக்கி இருக்கும்.
PIN, PASSWORT என்பன நினைவில் இல்லை என்றால் அவற்றை புதுப்பிக்க முடியும், மாற்ற முடியும். பயோமெற்றிக் அடையாளத்தில் அப்படி மாற்றங்கள், திருத்தங்கள் செய்யமுடியாது. இதனால் ஆள்மாறாட்டம், சட்டரீதியற்ற குடியகல்வு -குடிவரவு, குற்றச்செயல்கள், பணச்சலவை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
இலங்கை இவ்வாறான இலத்திரனியல் பயோமெற்றிக் அடையாள அட்டையை தனித்து தானாக தயாரிக்கும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி பெறவில்லை. ஏதோ ஒரு நாட்டின் உதவி KNOW – HOW அனுபவத்துடன்தான் இதனை செய்ய முடியும். யார் செய்தாலும் தகவல்கள் அந்த நாட்டிடம் / நிறுவனத்திடம் போவதற்கு வாய்ப்பு உண்டு. தகவல் பாதுகாப்பு முழுமையாக இலங்கை அரசிடம் இருக்கும் என்று அரசாங்கம் சொன்னாலும் அது நம்பிக்கைக்கு உரியதல்ல.
ஆனால் இது இந்தியா செய்வதனால் மட்டும் வரும் பிரச்சினை அல்ல. எந்த நாட்டிடம் பொறுப்பு கொடுத்தாலும் வரக்கூடிய பிரச்சினை. மேற்கு நாடுகளில் கூட அவை தாமாகவே இவ்வாறான தொழில்நுட்பத்தை கொண்டுள்ள போதும் , தகவல்கள் பாதுகாப்பு உள்ள போதும் , சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் பேணப்படும் நிலையிலும் , இதுபோன்ற பயோமெற்றிக் பதிவுக்கு சமூக ஜனநாயக, பசுமை, இடதுசாரி கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு இருக்கிறது. அரசு அளவுக்கதிகமாக தனிநபர் தகவல்களில் தலையீடு செய்கிறது, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு செய்கிறது என்ற அடிப்படையில் அவர்கள் வாதிடுகின்றனர். மொத்த செலவில் 20 வீதத்தை இந்தியா பொறுப்பெடுத்துள்ள இத்திட்டம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு WIN-WIN நலனை இரு தரப்புக்கும் வழங்குகிறது.
இந்திய எதிர்ப்பு வாதத்தை வலிந்து காசுகொடுத்து வாங்குவதை தவிர்த்து தனிநபர்,சமூக தகவல் பாதுகாப்பு உரிமைகள், சட்டரீதியான நடைமுறைகள் போன்றவை பற்றி விவாதிப்பதே பொருத்தமான அணுகுமுறையாகும். ஒரு நாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், அதற்கான அடிப்படை வசதிகள் அத்திவாரமாக இடப்படவேண்டும். அத்திவாரம் இன்றி அடுக்கு மாடிக்கனவுகாணமுடியாது. இந்தியா இந்த பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ளபோதும் அதன் நன்மையை, பயன்பாட்டை ஒரு பகுதி மக்களே அனுபவிக்கின்றனர். இந்த நிலை இலங்கையில் இன்னும் அதிகமான பாதிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இது விடயத்தில் இலங்கையின் மக்கள் போராட்ட முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை கவனத்திற்குரியது. இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் இலங்கையின் ஜனநாயக உரிமைகள், தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, அரச, பொருளாதார பயன்பாடு, நாட்டினதும், மக்களினதும் இறைமை மீறல்கள் ஏற்படும் என அது எச்சரிக்கிறது. இதே மாதிரியான இந்திய Aadhaar கார்ட முறைமையில் பல தகவல் பாதுகாப்பு மீறல்கள் இடம்பெற்றிருப்பதும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயதானம் சார்ந்த விவாதமே முக்கியம் அன்றி இந்திய எதிர்ப்பு பூதாகார பூதம் அல்ல. இந்த தகவல் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழியை காப்பாற்ற வேண்டும். “மாற்றம்” என்ற ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்காக எந்த விலையையும் கொடுக்க மக்கள் தயாரில்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.