(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
கனகரட்ணத்தின் மரணத்தால் மட்டக்களப்பு வாவிமகள் தனது ஆட்டத்தை நிறுத்தியது போலவும் மீன்மகள் தன் பாட்டை நிறுத்தியது போலவும், சோகம் அப்பியிருந்த அம்பாறை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் உள்ளடக்கிய ‘மட்டக்களப்பு மாநிலம்’ மெல்லமெல்ல வழமைக்கு மீளத் தொடங்கிற்று.
கனகரட்ணத்தின் மரணத்தினால் ஏற்பட்டுள்ள பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்படப்போவது யார்? என்பதே எங்கும் பேசுபொருளாயிற்று. முன்பெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானால் புதிய உறுப்பினரைத் தேரந்தெடுப்பதற்காக வெற்றிடமேற்பட்ட தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்.
ஆனால், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் 1978 இல் நிறைவேற்றிய புதிய அரசியலமைப்பின்படி, நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் ஒரு தேர்தல் செல்லுபடியற்றது என ஆக்கப்பட்டால் மாத்திரமே காலியான இடத்திற்குப் புதிய உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான இடைத்தேர்தல் நடைபெறும்.
மற்றப்படி ஒரு உறுப்பினரின் மரணத்தால் அல்லது இராஜினாமாவினால் வெற்றிடமொன்று ஏற்படுமாயின், அவ்வெற்றிடம் மரணமான அல்லது இராஜினாமா செய்த உறுப்பினர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாரோ அக்கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் புதிய உறுப்பினரை நியமிப்பதற்கான ஏற்பாட்டையே 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு கொண்டிருந்தது.
இதன் அடிப்படையில் அரசியல் பொதுவெளியில் பிரச்சினையொன்று பேசு பொருளாயிற்று.
அமரர் கனரட்ணம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நின்றுதான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மரணிக்கும்போது தான் ஆளும் கட்சியான ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவராயிருந்தார். எனவே அவரது மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் கடப்பாடு 1978 அரசியலமைப்புச் சட்டத் தேர்தல் விதிகளின்படி அவர் வேட்பாளராக நின்று போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உரித்தானதா? அல்லது பின்னர் தாவிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரியதா? என்பதே அப்பிரச்சனை.
ஐக்கிய தேசியக் கட்சி அந்த உரிமை தமக்குரியதே என்று எடுத்துக்கொண்டு அந்த வெற்றிடத்திற்கு அமரர் கனரட்ணத்தின் தங்கை திருமதி. ரங்கநாயகி பத்மநாதனை நியமித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அந்த வெற்றிடத்தை நிரப்பும் உரிமம் தமக்குரியதே என்று வாதாடியது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நிலைமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே சார்பானதாக அமைந்ததால் திருமதி.ரங்கநாயகி பத்மநாதனின் நியமனம் சாத்தியமாயிற்று.
திருமதி. ரங்கநாயகி பத்மநாதனின் நியமனம் நடைபெற்றுச் சில வாரங்கள் கழிந்திருக்கும் அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் துரைராசரட்ணம் ஒருநாள் கல்முனை நீர்ப்பாசனப் பொறியிலாளர் மேர்சா மூலம் தன்னை வந்து அம்பாறை அலுவலகத்தில் சந்திக்குமாறு கோகுலனுக்குச் செய்தி அனுப்பியிருந்தார்.
செய்தியைக் கேட்டவுடனேயே கோகுலன் நினைத்துக் கொண்டான், இருவரும் சேர்ந்து ஏதோ தனக்கு ‘வேட்டு’ வைக்கப் போகின்றார்கள் என்று.
கனகரட்ணம் எனும் கவசத்தை இழந்து தான் நிராயுதபாணியாக நிற்பது போலக் கோகுலன் உணர்ந்தான். கனகரட்ணத்தின் மறைவு தன்மீது இலக்கு வைப்பதை அவர்களுக்கு எளிதாக்கியுள்ளது என எண்ணினான். எது எப்படியிருப்பினும் மேலதிகாரியின் உத்தரவைத் தான் மீறக்கூடாது என்றும் தீர்மானித்து அம்பாறைக்குச் சென்றான்.
துரைராசரட்ணத்தின் அறைக்குள் நுழைந்து முகமன் கூறிய கோகுலனை முன்னால் கதிரையில் அமரும்படி சைகை காட்டினார் அவர்.
கோகுலன் பேசாமல் அமர்ந்தான். என்ன பாறாங்கல்லைத் தூக்கித் தன்மீது போடப்போகிறாரோ என்று எண்ணிக் கொண்டு இருந்தான்.
“மிஸ்ரர் கோகுலன்! உம்மைப் பற்றி முறைப்பாடு கிடைத்திருக்கிறது” என்று தொடங்கினார் அவர்.
“யாரிடமிருந்து சேர்! என்ன முறைப்பாடு” என்றான் கோகுலன்.
“கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைகளின் ஒப்பந்தக்காரர் உம்மைப்பற்றி முறைப்பாடு செய்திருக்கிறார்” என்றார்.
“என்ன முறைப்பாடு சேர்! எழுத்திலா? வாய்மூலமா? என்றான்.
“வாய்மூலம்தான்” என்றார் அவர்.
“என்ன முறைப்பாடு சேர்” எந்தச் சலனமுமில்லாமல் கேட்டான் கோகுலன். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும்.
“நீர் வேலைத் தலத்தில் வேலையைக் குழப்புகிறீராம். வேலையாட்களுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறீராம். அதனால் தனக்கு வேலை செய்வது கஸ்டமாக உள்ளதாம். உமக்குத் தெரியும்தானே, அந்த ஒப்பந்தக்காரர் அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவர் நினைத்தால் அமைச்சரிடம் சொல்லி உம்மை வேறிடத்துக்கு மாற்றவும் கூடும். அப்படியான செல்வாக்கு அவருக்குண்டு. அப்படி நடந்தால் நானும் ஒன்று செய்ய முடியாது. நானும் உமக்கு உதவ முடியாமல்தான் போகும்” என்றார்.
கோகுலனுக்கு நன்றாக விளங்கியது. இது வெறும் சோடிப்பு என்று.
கோகுலன் எந்தப் பதட்டமும் இல்லாமல் பதில் சொன்னான்.
“வேலைகள் தரமானதாகவும் சரியாகவும் இருக்க வேண்டுமென்பதால் வேலைத் தலத்தில் நான் சற்றுக் கறாராக இருக்கிறேன் என்பது உண்மை. ஆனால் வேலையாட்களோடு நான் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறேன் என்பது முழுப் பொய். என்னால் வேலை சுமுகமாக நடைபெறுவதற்கு எந்தத் தடங்கலும் இல்லை”.
“சரி. நீர் போய்வாரும். பிரச்சினைகள் ஏதும் பெரிதாக வந்தால் பார்ப்போம்” என்று கூறிக் கோகுலனை அனுப்பி வைத்தார்.
பனங்காட்டு நரி இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது என்று தன்னைப்பற்றித் தானே தனக்குள்ளேயே தைரியமாக எண்ணிக் கொண்டு அவரது அறையைவிட்டு அகன்றான் கோகுலன்.
ஒருநாள் கொழும்பிலிருந்து ஒப்பந்தக்காரர் அறங்கலகே கோகுலனைத் தேடி அவன் வசித்து வந்த திருக்கோவில் வீட்டிற்கு வந்திருந்தார்.
வந்தவர், “மேகாய் சேர்! பொடி தேக்கக்” (இந்தாங்க சேர்! சிறு அன்பளிப்பு) என்று கூறி ஒரு விலையுயர்ந்த வெளிநாட்டுவகை மதுப் போத்தலொன்றை கோகுலனிடம் நீட்டினார்.
ஒப்பந்தக்காரர் எவ்வளவு வற்புறுத்தியும் கோகுலன் அதை வாங்குவதற்கு இங்கிதமாக மறுத்துவிட்டான்.
கோகுலன் கதையை ஆரம்பித்தான்.
“ஒவ டி.டி துரைராசரட்ணத்திட மாகென மொனவத் பமிணிலி கலேத?” (நீங்கள் ‘டி.டி’ துரைராசரட்ணத்திடம் என்னைப்பற்றி ஏதும் முறைப்பாடு செய்தீர்களா?) என்று நேரடியாகவே கேட்டான். அதற்கு அவர்.
“நே சேர்! எய் அகன்னே? (இல்ல சேர்! ஏன் கேட்கிறீங்க?) என்று ஆச்சரியக் குறியுடன் கேட்டார். நடந்ததை ஒன்றும் விடாமல் சொன்னான் கோகுலன்.
“சேர்! அத்தக் கிவ்வ ஓணே. அமெதிதுமா மட முலின் கிவ்வா. மெம கார்யய கனகரெட்ணம்கே பொத்துவில் கொட்டாசிய வெடகி. எய கொந்தின் அவசன் விய யுதூய. ஒபத் அப சமக சம்பூர்ண யென்ம சகாயோகன் கடயுது கறன்ன. மட தேரன்னே நெகே, அய் மெகம கதாகறன்னே கியலா. மட பேன்ன. ஓயாட்ட விரோதவ மொகக்கறி குமன்திறனயக் கறனவா வகே. அவதானயன் இன்ன சேர்.!” (சேர்! ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும். அமைச்சர் என்னிடம் ஆரம்பத்திலேயே சொன்னார். இந்த வேலை கனகரட்ணத்தின் பொத்துவில் தொகுதி வேலை. அதனை நன்றாக முடித்துக் கொடுக்க வேண்டுமென்று. நீங்களும் எங்களோடு முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள். அவர் ஏன் இப்படிக் கதைக்கிறார் என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி நடப்பது போலத்தான் எனக்குப்படுகிறது. நீங்கள் கொஞ்சம் அவதானமாக நடந்து கொள்ளுங்கள் சேர்!) என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் ஒப்பந்தக்காரர் அறங்கலகே.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலையை ஒழுங்காகத் தான் முடித்துக் கொடுத்தால்தான் கனகரட்ணத்தின் ஆத்மா சாந்தியடையும் என எண்ணிய கோகுலன் தன் கடமைகளைச் சரியாக ஆற்றுவதில் இன்னும் தீவிரமானான்.
கோகுலன் தன்கடமையிலே கண்ணாயிருந்து வேலைகளைச் சரியாகவும் காலம் தவறாமலும் செய்து கொண்டிருந்தான். நாள்கள் வாரமாகி வாரங்கள் மாதங்களாகி 1980ம் ஆண்டின் டிசம்பர் மாதமும் வந்து சேர்ந்தது. கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைகள் யாவும் முடியும் தறுவாயில் இருந்தன. அந்தவருடம் யூன்மாதம் மனைவிக்கு மட்டக்களப்பு பொதுவைத்தியசாலையில் பிரசவம் நிகழ்ந்து ஆண் குழந்தைக்குத் தந்தையாகியிருந்தான் கோகுலன்.
‘கனகர் கிராமம்’ வீட்டுத்திட்டத்தைப் பொறுத்தவரை கனரட்ணத்தின் மரணமும் அதனால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்ப எடுத்த காலதாமதமும் அதனைக் காலம் தாழ்த்தின. அழுத்தம் கொடுக்க ஆளில்லை என்பதே அதற்கான காரணம்.
டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒருநாள்.
கோகுலன் கல்முனை நீர்ப்பாசனப் பொறியிலாளர் அலுவலகம் அடைந்தபோது ஒரு கடிதம் அவனுக்காகவே காத்திருந்தபோல் அலுவலகப் ‘பியோன்’ கொண்டு வந்து கோகுலனிடம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதாகப் பதிவேட்டில் கோகுலனின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு போனான்.
கோகுலன் கடிதத்தைப் படித்தான்.
அடுத்த வருடம் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்படி கோகுலன் கல்முனை நீர்ப்பாசனப் பொறியிலாளர் அலுவலகத்திலிருந்து அப்பாந்தோட்டை மாவட்டம் ‘கிரிந்திஓயா’ என்ற இடத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தான்.
கோகுலனுக்கு உடனே நடந்தது என்னவென்று புரிந்தது. இது துரைராசரட்ணத்தின் வேலை. கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அன்றே ஆறுமாதக் கைக்குழந்தையுடன் மனைவியும் தானும் திருக்கோவிலில் வதிவதைக் காரணமாகக் காட்டித் தற்போதைய நிலையில் தான் குடும்பத்தைவிட்டுத் தூர இடத்திற்கு மாற்றலாகிச் செல்வது உசிதமில்லையென்பதால் தனது மாற்றத்தை ரத்துச் செய்யும்படி, அல்லது முடியாத பட்சத்தில் ஒரு வருட காலம் ஒத்திப்போடும்படி கொழும்பிலுள்ள நீர்ப்பாசனப் பணிப்பாளரைக் கேட்டுக் கொள்ளும் கடிதமொன்றைத் தயாரித்துப் பதிவுத் தபாலில் அக்கடிதத்தின் முற்கூட்டிய பிரதியை அனுப்பி வைத்தான்.
கடிதத்தைக் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கூடாகவும் அம்பாறைப் பிராந்தியப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஊடாகவும் கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
துரைராசரட்ணம் அக்கடிதத்தைத் திணைக்களத்துக்கு அனுப்பாமல் அல்லது சிபார்சு பண்ணாமல் விடக்கூடும் என்பதனாலேயே அதன் முற்கூட்டிய பிரதியைக் கொழும்பு நீர்ப்பாசனப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தான் கோகுலன்.
(தொடரும் அங்கம் – 61)