சாத்தியமானவையே வெற்றியின் படிகள்

சாத்தியமானவையே வெற்றியின் படிகள்

 — கருணாகரன் —

 உலகத் தமிழர் பேரவையும் (Global Tamil Forum – GTF) சிறந்த இலங்கைக்கான சங்கம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக முன்னெடுத்து வரும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான   (இமாலயப் பிரகடனத்தின் அடிப்படையிலான) தொடக்க முயற்சி, இரண்டாம் கட்டத்துக்கு நகரத் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பமாகியிருக்கின்றன. இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் முக்கியமாக, ‘இமாலயப் பிரகடன‘த்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, அதனை   அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களை மக்களுடன் நேரில் நடத்தும் நிழ்ச்சிகள் அமைகின்றன. இந்த நடவடிக்கைகளின் பரீட்சார்த்தக் கூட்டங்கள் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இந்தச் சந்திப்புகள் நடந்துள்ளன. பெருமளவு மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.  இனி இது பிரதேச ரீதியாக, கிராமங்களை நோக்கியதாக அமையும் என்று இந்தப் பணிகளை முன்னெடுத்து வரும் உலகத் தமிழ்ப் பேரவையின் முக்கியஸ்தரான வேலுப்பிள்ளை குகனேந்திரன் (குகன்) தெரிவித்துள்ளார்.

இதனுடைய முதற்கட்ட நடவடிக்கை, 2023 ஏப்ரலில் நேபாளத்திலுள்ள நாகர்கோட்டில் உலகத் தமிழர் பேரவையினரும்  சிறந்த இலங்கைக்கான சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து ‘இமாலயப் பிரகடனம்‘ என்ற உத்தேச வரைபை உருவாக்குவதோடு ஆரம்பமாகியது. அதனுடைய தொடர்ச்சியாக அந்த வரைபை தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கட்சிகள், அரசாங்கம், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் போன்ற பொறுப்புடைய பல்வேறு தரப்புகளைப் பரவலாகச் சந்தித்துக் கையளிப்பதாக இருந்தது. குறிப்பாக உரையாடலுடன் கூடிய சந்திப்புகளாக அமைந்ததால், அதற்கு முதற்கட்ட வெற்றியும் கிட்டியது. இந்த வெற்றியே பலருக்கும் அச்சத்தை உண்டாக்கியது. ஏனென்றால், இதற்கான வரவேற்பென்பது, இனப்பிரச்சினையைப் பற்றிய அரசியல் அரங்கிலிருந்து தம்மைப் படியிறக்கி விடும் என்று பாரம்பரிய அரசியல்வாதிகள் (Traditional politicians) அல்லது ஆதிக்க அரசியலாளர்கள் (Dominant politicians) கருதினர். இதையே நடைமுறைப்படுத்தும் நிலை வளர்ச்சியடைந்தால், தமக்கான இடத்தை இமலயத் தரப்புப் பெற்றுவிடும் என்று அச்சமடைந்தனர்.  

அதனால் இமாலயப் பிரகடனத்தின் உருவாக்கம், அதனோடு இணைந்திருக்கும் தரப்புகள், அவற்றின் கூட்டு முயற்சி அல்லது இணைந்த நடவடிக்கைகள் பற்றிப் பலவிதமான சந்தேகங்களைப் பல தரப்பினரும் எழுப்பத் தொடங்கினர். சிங்கள, முஸ்லிம், மலையகத் தரப்பினரையும் விட தமிழ்த்தரப்பில்தான் எதிர்ப்பும் விமர்சனங்களும் அதிகமாக இருந்தன. புலம்பெயர் சூழலிலும் ஒரு வகையான உட்குமுறலை அல்லது பொருமலை அவதானிக்க முடிந்தது.  தமது கையை விட்டு விவகாரம் செல்கிறது என்ற பதட்டம். 

இந்த எதிர்ப்பு ஐந்து வகையில் அமைந்திருந்தது.

1.    தமிழ் மக்களுடைய அரசியலுரிமைப் போராட்டத்தையும் கோரிக்கையையும் நீர்த்துப் போகச் செய்வதற்கு இந்தப் பிரகடனமும் இந்தத் தரப்புகளும் முயற்சிக்கின்றன என்பது. குறிப்பாகத் திம்புக் கோரிக்கையை விடவும் தாழ்ந்த கோரிக்கையை இந்தப் பிரகடனம் தூக்கிச் சுமப்பதாக. 

2.   இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான பின்கதவு நடவடிக்கை இது என்பதாக. அதாவது, இந்தப் பிரகடனம் உருவாக்கப்பட்டபோது, கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி இருந்தது. என்பதால் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான மேற்குலகின் தேவைகளோடு இணைந்ததாகவே  இது உள்ளதென நோக்கப்பட்டது. இந்த ஊகத்துக்கு அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, இந்த முயற்சிக்கு அனுசரணை வழங்கிய சுவிற்சர்லாந்து அரசை. ஏனென்றால், மேற்குலகின் விருப்பங்களை நிறைவேற்றும்  இடைநிலை ஏற்பாட்டுத் தரப்பு (தரகர்) என்ற வகையில் சித்திரிக்கப்பட்டது – ஊகிக்கப்பட்டது. அதோடு, இமாலயப் பிரகடனத்தை இன முரண்பாட்டுத் தீர்வுக்கான உரையாடலுக்குச் சிறந்ததொரு தொடக்கமாகக் கருதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர்  யூலி சுங், மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல் போன்றோர் பாராட்டியிருந்ததையும் இந்த நோக்கிலேயே பார்க்கப்பட்டது. 

3.   இமாலயப் பிரகடனத்தில் வழமைக்கு மாறான முறையில் சிங்கள எதிர்ப்பின்மையும், பௌத்த பீடங்களின் ஆசீர்வாதமும் பௌத்த பிக்குகளின் பங்கேற்பும் இருந்தது என்பது. இது இன்னொரு சந்தேகத்தைக் கிளப்பியது. அதாவது சிங்களத் தரப்பின் கடந்த காலத் தவறுகளிலிருந்து அதைக் காப்பாற்றி விடுவதற்கான வாய்ப்புகளை இந்த முயற்சியும் இமாலயப் பிரகடனமும் உள்ளதாற்தான் அவை எதிர்ப்பின்றி, ஆதரவளிக்கின்றன எனக் கருதப்பட்டது – ஊகிக்கப்பட்டது. 

4.   வழமையான (ஊகநிலைச் சிந்தனையின்) அடிப்படையில் இதெல்லாம் ஏதோ பின்னணிச் சக்தியின் நிகழ்ச்சி நிரலில், அவற்றின் தேவைக்கேற்ப இயக்கப்படுகின்றன. கையூட்டுப் பெற்றுக் கொண்டு, தமிழர்களுடைய விடுதலைக்கும் உரிமைக்கோரிக்கைக்கும் அதற்கான போராட்டத்துக்கும் எதிராகச் செயற்படும் சக்திகளின் வேலை என்பதாக.

5.இது முன்னர் புலிகளை ஆதரித்த தரப்பின் புதியதொரு வேலை. ஆகவே இதற்கு நாம் எதற்கு ஆதரவளிக்க வேண்டுமென சிலர் ஒதுங்கியிருக்கவும் எதிர்ப்புக் காட்டவும் முற்பட்டமை என்பது.

இவ்வாறு பலவகையான ஊகங்களும் அச்சமும் இந்த முயற்சியின்மீது கொள்ளப்பட்டது. குறிப்பாக நடைமுறைச் சாத்தியங்களுக்கு வெளியேயான, தீவிரத் தேசியவாதத்தை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்பினர், இமாலயப் பிரகடனத்தையும் அதை முன்னெடுத்தோரையும் உச்சமாக எதிர்த்தனர். இமாலயப் பிரகடனம் அரசைப் பாதுகாப்பதோடு, தமிழர்கள் இதுவரையும் பெற்றவற்றையும் இனிமேல் பெறுவதற்கு வாய்ப்பானவற்றையும் இல்லாதொழிக்கிறது எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். அதேவேளை சிங்களச் சமூகத்தையும் ஆட்சியாளரையும் போர்க்குற்றம், இனவன்முறை உள்ளிட்ட வரலாற்றுத் தவறுகளிலிருந்து விடுவிப்பதாகவும் கூக்குரலிட்டனர். 

வெளிப்படையாகச் சொன்னால், சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சூழல் கனிந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அதைப் பாழாக்கி விடும். அதோடு இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலையும் போர்க்குற்றங்களுக்கான தண்டனை அளித்தலையும் இது இல்லாமலாக்கக் கூடியது எனவும் பேசப்பட்டது. இப்போதும் இவ்வாறே கருதிக் கொண்டிருக்கிறார்கள். (இந்தக் கற்பனைக் குதிரைகள் இன்னும் களைக்கவில்லை!).

ஆனால், இதையிட்டெல்லாம் இமாலயப் பிரகடனத்தினர் கவலைப்படவேயில்லை. ஒரு மாற்று முயற்சியை – புதிய வேலைத்திட்டமொன்றை – முன்னெடுக்கும்போது இனவாதம் முற்றியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த மாதிரியெல்லாம் நடக்கும்  என முன்பே அறிந்திருந்தனர். ஆகவே எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மிக வெளிப்படையாக, திறந்த உளத்தோடு தங்களுடைய செயற்பாடுகளை உற்சாகமாக  முன்னெடுத்தனர். மட்டுமல்ல, இனமுரணையும் இனப்பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால், முதலில் பரந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அது சகல தளங்களிலும் நிகழ வேண்டும். ஆகவே அதற்கு அரசாங்கத்தோடும் அரசியற் கட்சிகளோடும் மட்டும் பேசுவதால் பயனில்லை. அப்படி மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் வரலாற்று ரீதியில் தோற்றுப் போயின. 

எனவே அரசியற் தரப்புகளுக்குள் மட்டுப் பட்டும் கட்டுப்பட்டும் நிற்காமல், அதற்கப்பால்  மக்களுடனும் மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள், மதபீடங்கள், ஊடகத் தரப்புகள்  எனச்சகலதரப்போடும் இதைப் பற்றிப் பேச வேண்டும். உரையாடலுக்கான களங்களைத் திறக்க வேண்டும். பரஸ்பர நெருக்கத்தையும் நம்பிக்கையையும் கூட்ட வேண்டும். அப்போதுதான் மக்களின் பேரால் நடத்தப்படும் இனவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற புரிதலோடு முதற்கட்ட உரையாடல்கள் நடத்தப்பட்டன. 

இனவாத அடிப்படையில் சிந்திக்கும் – செயல்படும் அரசியற் தரப்புகளை இலகுவாகத் தோற்கடிக்க முடியாது. அவற்றைத் தனிமைப்படுத்தலாம். பலவீனப்படுத்தலாம். அப்படித்தான் நீண்ட கால அடிப்படையில் அவற்றைப் பின்னடையச் செய்ய முடியும். ஆகவேதான் நடைமுறைச் சாத்தியமான ஒரு இடையூடாட்ட அரசியல் செயல்முறையை உருவாக்கலாம் என யோசித்தது இந்தத் தரப்பு. அதைச்  செயலுருவிலும் மேற்கொண்டது.  இதில் முக்கிய பங்காற்றியது – பங்காற்றிக் கொண்டிருப்பது GTF தான். கதவுகளைத் தட்டத் திறக்க வேண்டும். செவிகளைக் கூர்மையாக்குவதற்குச் சேதிகளைச் சொல்ல வேண்டும். அந்தச் சேதிகள் மனக் கதவுகளைத் திறப்பதாக இருக்க வேண்டும் என GTF சிந்தித்தது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே முக்கியமாகப் பதற்றமில்லாமல் கவனிக்க வேண்டியது, இமாலயப் பிரகடனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை. 

இமாலயப் பிரகடனத் தரப்பொன்றும் தீர்வுக்கான முழுப் பொறுப்பையோ, முழு வடிவத்தையோ எடுக்கவுமில்லை, முன்வைக்கவுமில்லை.  இதைப் படிக்கும்போது அது தெளிவாகும். 

1. எந்தவொரு சமூகமும் தனது அடையாளத்தையும் வாழிடப் பெருமையையும் இழந்துவிடலாமென்ற அச்சமில்லாது வாழக்கூடிய பன்முக அடையாளத்தைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல்;

2.   பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்தல், உள்ளூர் உற்பத்தி, புலம் பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டாரின் முதலீடுகளுக்கு வசதிசெய்து கொடுத்தல், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிசெய்தல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் இலங்கையை ஒரு உறுதியான மத்திம வருமான நாடாக மாற்றுதல்.

3.   தனியார் மற்றும் கூட்டுரிமைகள், சகல மக்களின் சமத்துவம், சமக்குடியுரிமை, பொறுப்புள்ள நிறுவனங்கள், மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உறுதிசெய்யவல்ல புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கல்; அது நிறைவேற்றுப்படும்வரை ஏற்கெனவே இருக்கும் அரசியலமைப்பின் பிரிவுகளை விசுவாசத்துடன் செயற்படுத்தல்.

4.   ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டில் மக்களின் மத, கலாச்சார மற்றும் இதர அடையாளங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான மதிப்பை வழங்குதல், இன, மத சிறுபான்மைக் குழுக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுதல்.

5.   கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்டு பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்ற துன்பங்கள் இனிமேல் நிகழாது என்பதை உறுதிசெய்யக்கூடிய நல்லிணக்கம் கண்ட இலங்கையொன்றை உருவாக்குதல்.

6.   இரு-தரப்பு, பல்-தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுதல், சுயாதீனமானதும், மாறியல்பு கொண்டதுமான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்ற நடவடிக்கைகளை எடுத்தல், உலகின் அமைதியான, வளமான, ஜனநாயக நாடுகளின் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ஒரு நாடாக இலங்கையை உருவாக்குதல் என.

இமாலயத் தரப்பின் இந்த முயற்சியை ஓரளவுக்குத் தமிழ்ப் பரப்பில்  வரவேற்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சமத்துவக் கட்சியுமே. சம்பந்தன் இந்தத் தரப்பினரை வரவேற்றுப் பேசி ஊக்கமூட்டினார். சம்பந்தனின் பகிரங்க ஆதரவு தமிழ்த்தரப்பில்  மேலும் எதிர்ப்பைக் கூட்டியது. சம்பந்தனுக்கும் கொழும்புக்குமிருந்த நெருக்கத்தைக் காட்டி,  இந்த முடிச்சுப் போடப்பட்டது. ஆனால், தாம் செய்ய வேண்டியிருந்ததை, செய்ய வேண்டியதை, செய்யத் தவறியதை, இமாலயப் பிரகடனத்தினர் செய்கின்றனர். அதாவது, தமக்கான வழிகளை – இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல்,  அது உண்டாக்கிய பாதிப்பு அல்லது தாக்கம், அதற்கான தீர்வு போன்றவற்றை சமூகமட்டத்தில், மக்களிடத்தில் – பேசி இலகுவாக்கும் வேலை என சம்பந்தன் புரிந்திருந்தார். ஏனைய தரப்புகள் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்துமே வந்தன. 

ஆனால், இமாலயப் பிரகடனத்தினர் தமது நோக்கத்தையும் அதற்கான முயற்சிகளையும்  வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்;  மேற்கொண்டு  வந்தனர். 

“இவர்கள் யார்? மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளா? இந்த மண்ணிலே வாழ்கின்றவர்களா? இவர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு? இவர்களுக்கு என்ன தக்குதி உண்டு..?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இந்த அணியோடு இதே தமிழ்த்தேசியத் தரப்புகள் 2011 இல்  தென்னாபிரிக்காவில் இனமுரணைத் தீர்ப்பதற்கான சந்திப்புகளில் இணைந்து பங்கேற்றவை. அப்போது அங்கே ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் African National Congress – ANC )ஆலோசனையையும் வழிகாட்டலையும் இணைந்து நின்று வரவேற்றவை. ஆனால், நாட்டுக்குத் திரும்பியபின் மீண்டும் தத்தமது இனவாதப் பெட்டிகளுக்குள் தம்மை அடைத்துச் சிறைப்படுத்திக் கொண்டனர். 

மட்டுமல்ல, போர் முடிந்த பிறகான கடந்த 15ஆண்டுகளிலும் தீர்வுக்கான எந்த முயற்சிகளையும் இவை முன்னெடுக்கவேயிலை. மட்டுமல்ல,  இந்த நாட்டிலுள்ள எந்த அரசியற் தரப்பும் தீர்வுக்கான பணிகளை முழு உறுதிப்பாட்டோடும் அர்ப்பணிப்போடும் முன்னெடுக்கவுமில்லை. ஏன் இப்போது கூட அதற்கான எந்த முயற்சிகளையும் காணவில்லை. 

அரசியற் தரப்புளுக்கப்பால் புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், ஊடகத்தினர், மதத்தலைவர்கள் என எவருமே முயற்சிக்கவில்லை. ‘வானத்திலிருந்து என்றாவது ஒரு நாள் அதிசயம் நடக்கும்‘ என்றே எதிர்பார்த்திருக்கின்றனர். மாற்றங்களை விரும்புவோர் எவரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

இப்படிச் செயற்படாதிருந்து கொண்டேதான்,  “ஏதோ தங்களால் முடிந்தளவுக்கு முயற்சிப்போம்” என்று முன்வந்திருக்கும் இமாலயப் பிரகடனத்தினரை எதிர்ப்பதென்பது, தமது முரண்பாட்டு ஊக்குவிப்பு அரசியலுக்கு, அதன்வழியான லாபமீட்டலுக்கு பாதிப்புண்டாகிவிடும் என்ற அச்சத்தினாலேயாகும். அதாவது இலங்கையில் எதன் பொருட்டும் அமைதியோ தீர்வோ வந்துவிடக் கூடாது என்பதே இவர்களுடைய சிந்தையாகும். 

இல்லையென்றால் அமைதியையும் தீர்வையும் எட்டுவதற்குச் சாத்தியமான தளங்களில் உரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும். எந்தத் தரப்புகள் தடையாக, இடைஞ்சலாக உள்ளன என்றாய்ந்து அதற்கேற்ற வகையில் பொருத்தமான பொறிமுறைகள் ஏதேனும் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்? அல்லது, இமாலயப் பிரகடனத்தை வரவேற்று, உரையாடி, அதை அடுத்த கட்டத்துக்கு விரிவாக்கி வலுவூட்டியிருக்க வேண்டும். அப்படியெல்லாம் நடந்ததா? இல்லையே? 

 தாமும் எதையும் செய்யாமல், பிறரால் செய்யக் கூடியதையும் செய்ய விடாமல் தடுப்பதென்பது 2009 க்கு முந்திய ஏக நிலைப்பாட்டு உளநிலையின் வெளிப்பாடேயாகும். அதையே தொடர்ந்தும் பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால், அந்த யுகம் மாறிவிட்டது. இது போருக்குப் பிந்திய சூழல். தீர்வுக்கான காலம்.

முன்பே கூறப்பட்டுள்ளதைப்போல, இமாலயப் பிரகடனத் தரப்பொன்றும் தீர்வுக்கான முழுப் பொறுப்பையோ, முழு வடிவத்தையோ எடுக்கவுமில்லை, முன்வைக்கவுமில்லை. ஆனால், சுமுக நிலைக்கான ஒரு தொடக்கத்தை உருவாக்க முன்வந்துள்ளது. அதை முழு இலங்கை தழுவிய ரீதியில் முன்னெடுத்தாற்தான் சிங்கள மக்களும் கவனம் கொள்வார்கள். அதைச் செய்யாமல், தனியே வடக்கு – கிழக்கு எனவும் தமிழ் மக்களுடைய பிரச்சினை என்றும் பேசிக் கொண்டிருப்தால்தான் ஏனையோர் இனப்பிரச்சினை விடயத்தில் விலகி நிற்பதும் தீர்வில் கரிசனையற்றிருப்பதும் தொடர்கிறது. இதில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும் விதமாகவே இலங்கையின் இன்றைய நெருக்கடிகளும் (பொருளாதாரப் பிரச்சினை உட்பட) இமாலயப் பிரகடனத்தில் பேசப்பட்டுள்ளது. இதற்குச் செழிப்பான உதாரணம், வடக்குக் கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க விரும்பிய இந்தியா, மாகாணசபை முறைமையை தனியே வடக்குக் கிழக்குக்கு மட்டுமாகச் செய்யாமல், முழு இலங்கைக்குமாக கொண்டு வந்தது. நடைமுறைச் சாத்தியமான விடயங்களை அப்படித்தான் பரந்து பட்ட அளவில், பிற சமூகங்களுடைய மனதில் சந்தேகங்களையும் பதட்டத்தையும் உண்டாக்காமற் செயற்படுத்த வேண்டும்.

இப்போது கூட “வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குங்கள்”என்றே கேட்கப்படுகிறது. மாறாக “மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குங்கள்”என்றே கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால், சிங்கள மக்கள் சந்தேகப்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு. அதுவே சாத்தியமானது. 

அந்த அடிப்படையில்தான் இமாலய் பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வியாக்கியானங்களையும் பார்க்க வேண்டும். அணுக வேண்டும். அப்படிப் பரந்த அடிப்படையில் சிந்தித்தபடியால்தான் இமாலயப் பிரகடனத்தை வெளியுலகம் வரவேற்கிறது. இதேவேளை இன்னொன்றையும் ஆழமாகக் கவனிக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவையோ, முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனோ, பிற தரப்பினரோ உருவாக்கிய அரசியற்  கோரிக்கைகள் எதையும் வெளியுலகம் கண்டுகொள்ளவில்லை. இந்தியா கூட அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லவில்லை என்பதை. வெளித்தரப்பின் ஆதரவைக் கோரும்போது, அவர்கள் எதை விரும்புவர், எதை ஆதரிப்பர்? எப்படிச் சிந்திப்பர் என்பதையும் நாம் சற்று யோசிக்க வேண்டும். 

தவிர,  மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் தரப்புகள்  உரிய காலத்தில் உரியனவற்றைச் செய்யவில்லை என்றால், இந்த இடைவெளியில் பிற சக்திகளே இயங்கும். இது தவிர்க்க முடியாத பொதுவிதியாகும் என்பதையும்.

இப்போது இரண்டாம் கட்டமாக மக்கள் சந்திப்புகளை நடத்திவரும் இமாலயப் பிரகடனத்தினரின் யாழ்ப்பாணக் கூட்டத்தில், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் மாற்றத்துக்கான அசைவியக்கத்தைச் சேர்ந்தவருமான அழகிரி என்ற  இராயப்பு அந்தோனிப்பிள்ளை என்பவர் தெரிவிக்கும்போது,  ” நாட்டு மக்கள் என்ற வகையில் இன்று வரை எமக்கிடையில்  முரண்பாடுகள் இதுவரையும் இல்லை, எனினும் கடந்த 76 வருடங்களாக அரசியல்வாதிகளால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, எங்கள் மத்தியில் தவறான தகவல்கள் விதைக்கப்பட்டுள்ளது. இமாலயப்பிரகடனம் என்பது திடீரென உருவான ஒன்றல்ல. பல வருட காலமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இது ஆராயப்பட்டது. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒன்றல்ல.  இன்றைய சூழலில் இமாலய பிரகடன செயற்பாட்டாளர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. எங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் நாம் ஒருவருக்கொருவர் மனந்திறந்து உரையாட வேண்டும். நாங்கள் எமக்கிடையில் இருக்கும் வெறுப்பை ஒதுக்கி விட்டு, வருங்கால சந்ததியினருக்கு நல்லதொரு வாய்ப்பை பெற்றுக்கொள்ள விரும்பினால், கடந்த தேர்தலில் வைக்கப்பட்ட ஒரு சொற்றொடர் வளமான வாழ்வு, அழகான நாடு நாங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் அதை அடைய முடியும்‘‘  என்றார். இந்தச் சேதி முக்கியமானது.

இவற்றிலிருந்தெல்லாம் நாம் எதையும் படிக்க முடியவில்லை என்றால், நம்மைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று எஸ்,ஜே.வி  செல்வநாயகம் சொன்ன வாய்பாட்டைப் பாடமாக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *