— அழகு குணசீலன் —
இலங்கையின் இன்றைய அரசியல் நிலையும், பொருளாதாரம் சார்ந்த தேர்தல் அரசியல் வாக்குறுதிகளும் கடந்த காலத்தை தவிர்க்க முடியாத வகையில் இரை மீட்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. கூப்பன் அரிசி அரசியல் இலங்கையில் பழைமையும், தொன்மையும் வாய்ந்தது. இன்றைய ஆட்சியிலும் அரிசி அரசியலும், அரிசி பொருளாதாரமும் பேசுபொருளாக உள்ளது.
சந்திர மண்டலத்தில் இருந்து அரிசி கொண்டு வருவோம் என்றார் சிறிமாவோ பண்டாரநாயக்கா.
சுதந்திர வர்த்தக வலயம் மூலம் இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவோம் என்றார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
திருகோணமலையில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வோம் என்றார் அநுரகுமார திசாநாயக்க.
இந்த தேர்தல் அரசியல் வாக்குறுதிகளுக்கும், இலங்கை போன்ற ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி கொள்கைக்கும் உள்ள தொடர்பு, அதன் நம்பகத்தன்மை, உண்மையான நடைமுறை ஜதார்த்தம் என்ன?
இலங்கையின் இந்த அரசியல் தலைவர்கள் எல்லோரும் கிழக்காசியாவில் வெற்றி அடைந்த ஒரு பொருளாதார முன்மாதிரியை முன்னிறுத்தி தங்கள் அரசியல் வெற்றிக்கு பலம் சேர்த்தவர்கள். ஒரு காலத்தில் கட்டுப்பாடான மூடப்பட்ட பொருளாதார மாதிரியாகவும், பின்னர் கட்டற்ற திறந்த பொருளாதார மாதிரியாகவும் அது மாறியது.
ஆனால் இவர்கள் இலங்கையில் அந்த அபிவிருத்தி கொள்கைக்கு உந்து சக்தியாக பொருத்தமான உள்நாட்டு அரசியலை செய்ய தவறியவர்கள். இதனால் இவர்களால் தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியை மட்டும் அன்றி, பொருளாதார வெற்றியையும் அடைய முடியவில்லை. இன்றைய புதிய மீட்பர்களும் அதே தோல்வி பாதையிலேயே -அதே திசையிலேயே வண்டியை திருப்புகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் இருக்கின்ற தொடர்பு மிகவும் பலமானது. இலங்கையை சிங்கப்பூராக்குவதற்கும், ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்குமான முதல் நிபந்தனை-முக்கிய நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை. இது பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை கொண்டிருப்பதால் மாத்திரம் சாத்தியமா? இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை மறுப்புக்கு, பறிப்புக்கு பாராளுமன்ற பெரும்பான்மை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதேயன்றி அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அல்ல.
சிங்கப்பூராக்குவதற்கு அல்லது தென்கிழக்காசிய நாடுகள் பெற்றுள்ள பொருளாதாரவளர்ச்சியை-அபிவிருத்தியை எட்டுவதற்கு அந்த நாடுகளில் நிலவியது போன்ற அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அதை சாத்தியமாக்குவது எப்படி? தென்கிழக்காசிய குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா , இந்தோனேசியா,……. போன்ற அரசியல், சமத்துவ சமூக பன்மைத்துவ அங்கீகார கட்டமைப்பு இல்லாமல் இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவது எப்படி?
அதுவும் முப்பது ஆண்டுகள் போர் தின்று துப்பிய பூமியில், அந்த போர்க்கால பொருளாதார வங்குரோத்து நாட்டில் இந்த கேள்வி மிகமிக முக்கியமானது. வியட்நாமில் யுத்தத்திற்கு பின்னரான வளர்ச்சி இதற்கு முன்னுதாரணமாக அமையலாம். இதனால்தான் சிங்க(ள) பேரினவாத அரசியலை செய்து கொண்டு புலிப்பாய்ச்சல் பொருளாதார முன்னேற்றத்தை எட்டமுடியுமா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது.
தென்கிழக்காசிய பொருளாதார முன்னேற்ற மாதிரிக்கு அபிவிருத்தி பொருளாதார ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் “பறக்கும் வாத்துகள் மாதிரி” (FLYING GEESE MODEL). இதனை ஆரம்பித்து வைத்தது ஜப்பான். மற்றைய நாடுகள் அதைத்தொடர்ந்தன. இன்னும் சொன்னால் வாத்துகள் கூட்டமாக பறக்கும் போது முதலில் ஒன்று பறக்க மற்றையவை அதற்கு பின்னால் சமாந்தரமான வரிசையில் நெடுக்காகவும், குறுக்காகவும் அழகாக அணிவகுத்து பறக்கும்.
இந்த மாதிரியின் மூலம் வளர்ச்சி கண்ட நாடுகளை “புலி நாடுகள்”(TIGER COUNTRIES” என்பது தென்னாசிய நாடுகளுக்கான குழுப்பெயர். இந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மிகவும் பலமானதும், விரைவானதுமான ஒரு பாய்ச்சல். இதனால் அபிவிருத்தி பொருளியலாளர்கள் இதனை வலிமையானதும், மிக வேகம் கொண்டதுமான, பாயும் புலிக்கு ஒப்பிடுகிறார்கள். வேறு வார்த்தைகளில் இலகுபடுத்தினால் பறக்கும் வாத்து மாதிரி மூலம் அடைந்ந பாயும் புலி பொருளாதார அபிவிருத்தி.
ஜப்பானை தொடர்ந்து தென்கொரியா, தைவான், ஹொங்கொங், சிங்கப்பூர் என்பன முதல்வரிசையில் குறிப்பிடக்கூடியவை. அடுத்த வரிசையில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா. மூன்றாவது வரிசையில் வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம். இந்த நாடுகளில் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியான அடைவை அந்த நாடுகள் பெறவில்லை என்பது வெளிப்படை.
இதற்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய முக்கிய காரணங்களுள் ஒன்று உள்நாட்டு அரசியல் ஸ்திரமின்மை. இந்த அனுபவங்களை, உண்மைகளை புறம் தள்ளி, சிங்க(ள) அரசியலை செய்து கொண்டு புலிப்பொருளாதாரப்பாய்ச்சலை எட்டமுடியாது. என்.பி.பி. அரசாங்கம் பேசுகின்ற “இலங்கையர்” அரசியல் சமூகக்கோட்பாடு ஒரு சிங்க(ள) அரசியல் கோட்பாடு. இதனூடாக புலிப்பாய்ச்சல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு சாத்தியமற்ற தடையாக அமைகிறது.
அமெரிக்க ஆதிக்க யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வியட்நாம் பறவை காய்ச்சல், ஆசிய பொருளாதார மந்தம் என்பனவற்றிற்கு மத்தியிலும் 2022 இல் 6வீத உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பை காட்டியது. கடந்த 2024 இல் 7 வீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு என்கிறார்கள். மசகு எண்ணெய், ஆடை , காலணி, கடல் உணவு, மின்னியல் பொருட்களின் உற்பத்தியில் வியட்நாம் முன்னணியில் உள்ளது. ஆசிய பசுபிக் பிராந்திய 39 நாடுகளில் வியட்நாம் 11 வது இடத்தில் இடம்பிடித்திருப்பதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த பிராந்தியத்தின் குறைந்த மூல வளங்கள், குறைந்த நிலப் பயன்பாடு, எழுதவாசிக்கத் தெரியாதோரின் உயர்ந்த வீதம் என்பனவற்றிற்கு மத்தியிலும் இறக்குமதியை கட்டுப்படுத்தி அதற்கு பதிலீடான இலகு மின்னியல் பொருட்கள் உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நாடுகளின் தொழிலாளர்கள் இந்த இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதார முறைக்கு மாறும் காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
குறைந்த சம்பளம், குறைந்த தொழிலாளர் சமூக பாதுகாப்பு, தொழிற்சங்கங்கள் இன்மை போன்ற பாதிப்புக்களை விசேட உற்பத்தி வலையங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்கினர். இன்று இந்த நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு ஏற்றுமதி பொருளாதாரம் அவர்களின் வாழ்வில் வருமானத்தை அதிகரித்ததால் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலை அந்த பிராந்தியத்தின் புலி பாய்ச்சல் பொருளாதார நாடுகள் பலவற்றிற்கும் பொருத்தமானது.
சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தியா போன்ற இந்த நாடுகளில் பன்மைத்துவ மொழி, மத, கலாச்சார பண்பாட்டு இனக்குழுமங்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வையும், இன, மத நல்லிணக்க அங்கீகாரத்தையும் ஏற்படுத்துவதில் அந்த நாடுகளின் அரசாங்கங்கள் முன்நிற்கின்றன. ஏனேனில் இந்த பன்மைத்துவம் பாதுகாக்கப்படவில்லை என்றால் அது அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு தொழிலாளர், முதலீடு, முயற்சியாளர் பாய்ச்சலில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவை மட்டுப்படுத்தப்பட்ட சந்தைப்பொருளாதார மாதிரியில் முக்கிய நிபந்தனையாகிறது. இன்னொருவகையில் சொன்னால் இன்று இடதுசாரி அரசாங்கங்கள் பேசுகின்ற அரச தலையீட்டுடன் கூடிய சமூகமுதலீட்டு மாதிரிக்கும் இவை முன் நிபந்தினையானவை.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்நாட்டு கிளர்ச்சிக்குழுக்கள் உண்டு. அதேபோல் தைவான், ஹொங்கொங், தென்கொரியா போன்ற வற்றிலும் பிராந்திய பூகோள அரசியல், இராணுவ நெருக்கடிகள் உண்டு. தாய்லாந்தில் உள்நாட்டு கட்சி அரசியல் ஸ்த்திரமாக இல்லை. அப்படியிருந்தும் அந்த நாடுகள் இந்த புலிப்பாய்ச்சலை எப்படி எட்டின. முக்கியமான காரணம் சமூகங்களுக்கு இடையிலான உறுதியான பன்மைத்துவ உறவு. ஒன்று மற்றொன்றை அங்கீகரிப்பதன் அதிசயம். அடிப்படை ஜனநாயக அரசியல் பாதுகாப்பு.
பன்மைத்துவ சமூக கட்டமைப்பு ஒரு வளக்கொடை. இலங்கை சிங்க(ள) அரசியல் கருதுவது போன்று பன்மைத்துவம் ஒரு தடையல்ல. அந்த பன்மைத்துவ சமூகவளத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதிலேயே இது தங்கியிருக்கிறது. சிங்கப்பூர் அதை சரியாக இனம்கண்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அதை பயன்படுத்துகிறது. அதற்கான சமுக, பொருளாதார, அரசியல் வெகுமதியை அந்த பன்மைத்துவ சமூகங்களுக்கு இடையே பங்கிட்டுக்கொள்கிறது. சிங்கப்பூரில் 75 வீதமான சீனர்களும், 13 வீதமான மலாயர்களும், 9வீதமான இந்தியர்களும் வாழ்கிறார்கள். இவர்களில் தமிழர்கள் குறிப்பிடக்கூடிய தொகையினர். இதைவிடவும் பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்தவர்களும் அங்குண்டு.
சிங்கப்பூர் சமூக ஒருங்கிணைவு அரசியல் கொள்கையானது அங்கு அந்த வாய்ப்பை வழங்குகிறது. சிறுபான்மையினர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் பதவிகளை வகிக்க முடிகிறது. இது அங்கு வாழ்கின்ற சமூகங்களுக்கு வழங்கப்படுகின்ற மிகப்பெரும் அங்கீகாரம். அவர்கள் பௌத்தர்களாக, முஸ்லீம்களாக, கிறிஸ்தவர்களாக, இந்துக்களாக தங்கள் கலாச்சார சுதந்திரத்துடனும், சட்டரீதியான சீன, மலாய், தமிழ், ஆங்கில மொழி பயன்பாட்டு அடிப்படை ஜனநாயக உரிமையுடனும் வாழமுடிகிறது. இது சிங்கப்பூரின் பொருளாதார பாய்ச்சலுக்கான அத்திவாரத்தை வழங்குகிறது. அவர்கள் தங்களை தாங்களாகவும், சிங்கப்பூர் நாட்டவர்களாகவும் உணர்கிறார்கள். இலங்கையை போன்று இனம், மதம் இல்லை, “இலங்கையர்” என்பதே ஒன்று என்று வலிந்து திணிக்கும் சிங்க(ள) அரசியல் அங்கு இல்லை. இது சிங்கப்பூரின் பொருளாதார பலத்தின் அடிப்படையாக அமைகிறது.
இலங்கையில் இது முற்றிலும் முரணானது. சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பு, பன்மைத்துவ சமூக கட்டமைப்பு பேரினவாத வளர்ச்சிக்கு ஒரு தடையென்று சிங்க(ள) அரசியல் கருதுகிறது. இதனால் பன்மைத்துவத்தை மறுத்து, நிராகரித்து சிறுபான்மை தேசிய இனங்களை விழுங்கிய ஒரு தனி இராட்சத சிங்கமாக தன்னை அடையாளப்படுத்துவதில் அது அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறது.
கிளீன் சிறிலங்கா கூட அந்த திசையை நோக்கியே பயணிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டை கட்டி எழுப்ப துரித பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் அவசியம். இலங்கையில் பொருளாதாரத்தை வீழ்த்தியது இனநெருக்கடியும், அதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரும் என்பதை இரண்டாம், மூன்றாம் நிலைக்கும் அப்பால் தள்ளிவிட்டு கட்சி பிரச்சார அரசியலை முன்னெடுப்பது பொருளாதார மேம்படுத்தலுக்கு உதவாது .
இந்த என்.பி.பி. அரசாங்கம் முதல் பாராளுமன்ற அமர்விலேயே செய்திருக்கவேண்டியது, பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக முன்மொழிந்து புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளையும், அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முடுக்கி விட்டிருக்க வேண்டும். அதை தவிர்த்து – தட்டிக் கழித்து – காலத்தை கடத்தி தற்போதைய சாதகமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தாமல் இழுத்தடிப்பது இந்த ஆட்சியாளர்களின் இறுதி ஆண்டிலும் புதிய அரசியலமைப்பு ஒன்று வருமா? அப்படி வந்தாலும் அது இனப்பிரச்சினைக்கு தீர்வைத்தருமா? என்று சந்தேகிக்க வழிவகுக்கிறது.
ஒரு புதிய அரசியலமைப்பு ஆயத்தப்படுத்தலுக்கு அதிக காலம் தேவை. அது அமைச்சரவை, பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவேண்டும். அது சாத்தியமானால் அரசாங்கத்தின் கூற்றின்படி சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். இந்த நீண்ட புதிய அரசியல் அமைப்பு வழிப்பயணம் அரசாங்கத்திற்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதுவும் இழக்கப்படுகின்ற ஒவ்வொரு பொழுதும் இந்த அரசாங்கத்திற்கு எதிரானதாகவே அமைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்த எதிர்ப்பு பன்மடங்காக இருக்கும். ஜனாதிபதி சந்திரிகா தீர்வு பொதி, ஜனாதிபதி சிறிசேன கால நல்லாட்சி அரசியல் அமைப்பு மாற்றம், ராஜபக்சாக்களின் ஆட்சி காலங்கள் எல்லாம் இந்த சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கின்றன.
என்.பி.பி. ஜே.வி.பி.க்கு இடையே முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. பிரதமர் நியமனம், சபாநாயகர் நியமனத்தில் ஆரம்பித்த இந்த உள்மோதல் தொடர்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மௌனம் சாதிக்கின்ற அளவுக்கு நிலைமை கட்சிக்குள் அமைதியாக இல்லை. உள்ளுக்குள் அதிகார, பதவிப் போட்டி நிலவுகிறது. அதிகாரிகளை வழிக்கு கொண்டு வரமுடியாமல் அமைச்சர்கள் தவிக்கிறார்கள்.ஊடகங்கள் எச்சரிச்கப்படுகின்றன.
யாருக்கு சிறைத்தண்டனை, யாருக்கு விடுதலை என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியதை அமைச்சர்கள் தீர்மானித்து பேசுகின்றனர். ஒருவரின் கருத்து இனவாதமா?இல்லையா? என்பதை நீதி மன்றம் தீர்மானிக்க வேண்டும் . பிரதமரும், சுட்டு விரலைக்காட்டி எச்சரிக்கும் சில அமைச்சர்களும் அல்ல. இது கருத்துச்சுதந்திரம் சார்ந்தது. ஐ.எம்.எப், இந்திய, சீன, அமெரிக்க உறவில் அரசாங்கத்திற்குள் முரண்பாடு உண்டு. இந்த சூழலில் புதிய அரசியலமைப்பு ஒன்றை எதிர்கட்சி மட்டும் அல்ல அரசாங்க தரப்பிலும் ஒரு பகுதியினர் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான சரத்துக்களை அங்கீகரிப்பார்களா? என்ற சந்தேகம் வலுக்கிறது. இழுத்தடிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
இனப்பிரச்சினைக்கு சகல தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இன்றி சிங்க(ள) அரசியல் முனைப்பு ஒரு போதும் இலங்கையை சிங்கப்பூராக்கப் போவதில்லை. தென்கிழக்காசிய புலி பொருளாதார பாய்ச்சல் என்பது வெறும் விருப்பமே அன்றி ஜதார்த்தம் அல்ல. இதை சாத்தியமாக்காமல் வளமான வாழ்க்கை, அழகான நாடு யாருக்கு?
மக்களுக்கா….? அல்லது ரட்ட அநுரட்டத …?