தமிழ்ப் புத்தாண்டும்,           தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் பண்டிகையும்!

தமிழ்ப் புத்தாண்டும்,  தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் பண்டிகையும்!

  — பாடும்மீன், சு. ஸ்ரீகந்தராசா —

தைப் பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை. அது ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தைப் புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது. 

சைவம், வைணவம் முதலிய வைதீக சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும், சமணம், பௌத்தம் முதலிய அவைதீக சமயங்களைப் பின்பற்றுபவர்களாயினும், இஸ்லாம்,  கிறீத்தவம் ஆகிய மதத்தவர்களாயினும், இன்னும் எந்தச் சமயக் கொள்கைகளை உடையவர்களாயினும், மற்றும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாயினும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாயிருந்தால் அல்லது தமிழ் மொழியைப் பேசுபவர்களாயிருந்தால் அல்லது தமிழ்மொழியை பேசிய பரம்பரையைச் சேர்ந்தவர்களாயிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் உரித்தானது தைப் பொங்கல் பண்டிகை என்பதுதான் காலங்காலமாகக் கைக்கொள்ளப்பட்டுவரும் வழக்கமாகும். 

சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே தைப்பொங்கல் பண்டிகை தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர்.  தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன், தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள்.  

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவே, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்துதான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள், அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே  வழிகாட்டியவர்கள், விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள், வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்,  கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் அறிந்து வைத்திருந்தார்கள்! 

பண்டைய தமிழகத்திலே, கழனி விளைந்து, தானியக் கதிர்களைப் பறிப்பது, தைமாதத்திலேயே நடந்திருக்கிறது. உதாரணமாக நெற்பயிர் விளைந்து அறுவடை செய்வதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் எடுக்கும். இற்றைக்கு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு வரை அதுதான் நிலைமையாக இருந்தது. இப்போதையைப் போலக் குறுகியகால நெற்பயிர்கள் உருவாக்கப்படாத காலம் அது.

எனவே, அறுவடை செய்த நெல்லை, அரிசியாக்கி, அந்த அரிசியிலே பொங்கலிட்டு, கழனி விளைவதற்குக் காரணமாகவிருந்த, அந்தக் கதிரவனுக்குப் படைத்து வணங்கி, நன்றி செலுத்தினார்கள். அந்தப் பொங்கலை உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து உண்டு மகிழ்ந்தார்கள். அந்த நிகழ்ச்சியை ஒரு விழாவாகவே நடத்தினார்கள். இந்த விடயங்களெல்லாம் சங்க இலக்கியங்களிலே ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

பண்டைய இலக்கிய ஆதாரங்கள்:

(1) சங்க இலக்கியங்களில் அடங்கும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வாங்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்

நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி… 

(புறநானூறு 168 –  கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்)

அதாவது  “பன்றி உழுத புழுதியில் விதைத்த தினை விளைந்து கதிர் முற்றியது. நல்ல நாளில் புதிர் உண்பதற்கு எண்ணியவர்கள் மரையான் எனப்படும் காட்டுப் பசுவிலிருந்து புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலை  உலைநீராக்கி புத்தரிசியையிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து மான் இறைச்சி சமைத்த பானையில் ஆக்கிய பொங்கலை கூதளம்மலர் பூத்துக்கிடக்கும் வீட்டு முற்றத்திலே, அகன்ற வாழை இலையிலே விருந்தினர்களுக்கெல்லாம் கொடுத்து, பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வளமுடையவர்கள்.”  என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தை மாதத் தொடக்கத்திலே பொங்கலைக் கதிரவனுக்குப் படைத்து நன்றி சொல்லி வணங்கும் நாளில், விருந்தினர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து அவர்களோடு பகிர்ந்து உண்ணுகின்ற நிகழ்ச்சியை ஒரு விழாவாகவே நடத்தியுள்ளார்கள். அதுவே பொங்கல் விழாவாக, தைப்பொங்கல் பண்டிகையாக, தமிழர் விழாவாகச் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

(2) இதனை உறுதிப்படுத்துவதைப் போல புறநானூறின் 22 ஆவது பாடல் அழகாகச் சொல்கிறது.

“…………………………………………………

அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக்கூரை

சாறுகொண்ட களம்போல

வேறுவேறு பொலிவு தோன்றக் 

குற்றானா உலக்கையால்

கலிச் சும்மை வியல் ஆங்கண்

பொலம் தோட்டுப் பைந்தும்மை

மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரீய்ச்

சினமாந்தர் வெறிக்குரவை ஓத நீரில் பெயர்பு பொங்க…”

வீட்டுக்கூரைகள், நெல் தார்கள் எனப்படும் வைக்கோல்களால் வேயப்படுவது வழக்கம். ஆனால், தைமாதத்தில்  நெற்கதிர்களைக் கரும்புகளோடு சேர்த்துக் கட்டிச் சில வீட்டுக் கூரைகளை வேய்ந்திருப்பார்களாம். கருப்பச் சருகினால் சில வீடுகளை வேய்ந்திருப்பார்களாம். அவ்வாறு வேயப்பட்ட வீடுகள் தனித்தனியாக விழாக்கள் நடைபெறும் களங்களைப் போலக் காட்சி தருவதாகவும், அங்கே அரிசி குற்றுகின்ற உலக்கை ஒலி முழங்கும்  என்றும், வீரர்களின் வெறியாட்டம் நடக்கும் என்றும், அவர்களின் குரவை ஒலி கடல் ஒலிப்பதுபோலக் கேட்கும் என்றும், குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் புறநானூற்றில் பதிவு செய்திருக்கிறார். 

இதிலிருந்து வயலிலே அறுவடை நடந்த பின்னர், புத்தரிசியில் பொங்கல் செய்யும் நாள் ஒரு பண்டிகையாக, ஒரு திருவிழாவாக நடந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

(3)  புறநானூறில் இன்னும் ஓர் இடத்திலும் இதையொத்த குறிப்பு உள்ளது. (பாடல், 70 கோவூர் கிழார்)

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியநகர்”  

தைத்திங்களில் குளிர்ந்திருக்கும் குளத்தில் நிறைந்துள்ள தெளிந்த நீரைப்போல, கொள்ளக் கொள்ளக் குறையாத சோறு உடைய நகர், சோழன் கிள்ளிவளவனின் நகர் என்று சொல்லப்படுகிறது. தை மாதத்தில் தைப் பொங்கல் விழா நடக்கும். அப்போது குளத்தில் நீராடுவார்கள். அதனால் தைமாதத்தில் அந்தக் குளத்தின் தண்ணீர் எப்படியிருக்கும் என்பது வெளிப்படையானது என்பதால் புலவர் இவ்வாறு பாடியிருக்கிறார் என்று கருதலாம்.

(4) தைநீராடல் ஒரு சிறப்பான பண்டிகைபோலக் கொண்டாடப்படுவதைப் பரிபாடலில் உள்ள 11 ஆவது பாடலில் காணலாம்.

அம்பா ஆடலின் ஆய்தொடிக்கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட

பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின்……

……………………………………….

மையாடல் ஆடல் மழபுலவர் மாறெழுந்து

பொய்யாடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்

தீயெறிப்பாலும் செறிதவ முன்பற்றியோ

தாயருகா நின்று தவத் தைந் நீராடுதல்

நீ உரைத்தி வயை நதி.

அழகிய வளையல்களை அணிந்த கன்னிப் பெண்கள் மார்கழி நோன்பிருந்தார்கள். திருமணச் சடங்குகளை நன்கு அறிந்த முதிய பெண்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்கள். கன்னிப் பெண்கள் தங்களுக்குள்  பொய்யாகக் கணவன் மனைவி என்பதுபோலத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஆடுகிறார்கள். வைகை நதியிலே இந்தத் தை நீராடல் ஒரு நாடகம்போல நடக்கிறது.  “இன்று அவர்கள் இங்கே இருப்பதும், களிப்பதும், ஆடுதலும் அவர்கள் முன்செய்த தவப் பயனால் கிடைத்ததா? அவர்கள் தங்கள் தாய்மாரோடு இங்கே தைநீராடுதல் எதற்காக? வைகை நதியே நீதான் சொல்” என்பதாக இந்தப் பாடல் உள்ளது. தைநீராடல் ஒரு திருவிழாவாக நடைபெற்றமையை இது காட்டுகிறது.

(5) நற்றிணையிலே உள்ள 80 ஆவது பாடலில் உள்ள, (பூதன் தேவனார்) “இத்தை இத்திங்கள் தண்கயம் படியும், பெருந்தோட் குறுமகள்” என்பது தைத் திங்கள் முதல் நாளிலே குளிர்ந்த பொய்கையில் நீராடும், பெரிய தோள்களையுடைய, இளம் மகள் என்ற கருத்து, மகளிர் தைநீராடும் சிறப்பான நிகழ்ச்சியைச் சொல்கிறது.

(6)  “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர், தை இத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற வரிகள் குறுந்தொகையில் ஒரு பாடலில்  (196) இடம் பெற்றுள்ளன.

“பாரி வேந்தனின் பறம்பு மலையில் இருக்கும் சுனையில் உள்ள  நீரைத் தைத்திங்களில் தந்தாலும், அது சுடுகிறது என்று சொல்வீர்களோ?” என்று தலைவனிடம் தலைவியின் தோழி கேட்பதாக உள்ள பாடலின் கருத்து, அந்தச் சுனைநீர் எப்போதும் குளிர்மை உடையதாக இருக்கிறது என்பதைச் சொல்வதோடு, அதற்கும் அப்பால், தை மாதம் என்று வெறுமனே சொல்லாமல், “தைத்திங்கள்” என்று குறிப்பிடப்படுவது ஆண்டு தோறும் தை மாதத்தில் அப்படியொரு பண்டிகை கொண்டாடப் படுவதையும், அந்தக்காலம் வெப்பம் குறைந்ததாக அல்லது குளிரானதாக இருக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.  

(7)  தை நின்ற தண்பெயல் கடைநாள்

வண்டற் பாவைஉணர்துறைத் தரீஇத்

திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகநானுறில், பா.எ., 269)

பாவை செய்வதும், பொற்காசுகளைத் தொடுத்து அணிவதும், பாவை நோன்பு என்னும் விரதத்தைக் கடைப்பிடிப்பதுமாகத் தைத்திருநாளைக் கொண்டாடும் விடயத்தை இந்தப்பாடல் சொல்கிறது. 

(8) ” ஐங்குறுநூறில் (84) “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் திங்கள் தண்கயம் போலப்பலர் படிந்து…” என்று வருகின்ற வரி, “நறுமணம் வீசும் பூக்களை அணிந்த பெண்கள் பலர் சேர்ந்து, தைத்திங்களிலே நீராடுகின்ற குளத்தைப்போல, பலர்சேர்ந்து…..” என்று சொல்கிறது. இதிலிருந்து தைத் திங்களில் மங்கையர் நீராடுதல் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டிருப்பது தெரியவருகிறது.

(9) ” வைஎயிற்றவர் நாப்பண் வகையணி பொலிந்து, நீ தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையில், (குறிஞ்சிக்கலி 23)  என்று வருகின்ற வரிகள், “இளம்பெண்கள் புடைசூழ விதம்விதமான அணிகலங்களை அணிந்து, அழகு செய்துகொண்டு நீ தைத்திங்கள் நீராடிச் செய்யும் தவமெல்லாம் உனக்கு என்ன பயங்களைத் தருமோ?”  என்ற கருத்தைத் தருகின்றன. இதன்படி, இளம்பெண்கள் பலர் கூடியாடும் தைநீராடல் அவர்களைப் பொறுத்தவரை ஒரு விரதமாக, உற்றார் உறவினர்களுக்கு ஒரு பண்டிகையாக, ஊர்மக்களுக்கு ஒரு திருவிழாவாக இடம்பெற்றிருப்பதை அறியலாம்.  

(10) சிலப்பதிகாரத்தில், இந்திர விழவு ஊர் எடுத்த காதையில், 

“….புழுக்கலும் நோலையும், விழுக்கு உடை மடையும்

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து…..” என்று ஒரு செய்தி உள்ளது. அதாவது. இந்திர விழாவின் ஆரம்பத்தில், 

காவல் பூதங்களை வழிபடும்போது, அங்கே, கோயிலின் வாயிலில் உள்ள பலிபீடிகையிலே, புழுக்கல், எள்ளுருண்டை, நிணச் சோறு, பூக்கள், பொங்கல் என்பவற்றைப் படைத்து குரவைக்கூத்து ஆடி, ஆரவாரம் செய்து வழிபட்டதாகச் சொல்லப்படும் இந்தத் தகவலில் இருந்தும் சங்ககாலத்தில் பொங்கல் என்பது முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது என்பதையும், வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதையும், அறிய முடிகிறது.

(11) பிற்காலத்தில் தோன்றிய இலக்கியமான,  சீவக சிந்தாமணியில், “மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” – என்று பொங்கல் விழாவைப் பற்றிய குறிப்பு சீவகசிந்தாமணியில் உள்ளது. கி.பி. 9 ஆம் ஆண்டில் தோன்றியதாகச் சொல்லப்படும் சீவகசிந்தாமணியில் அவ்வாறு இருப்பதால், ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. 

எனவே,  சங்ககாலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்ட தைப்பொங்கல் பண்டிகை, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் தொடர்ந்தே வந்திருக்கிறது என்பதையும், அந்தத் தொடர்ச்சியே இன்றுவரை நீண்டு கடைப்பிடிக்கப் பட்டுவருகின்றது என்பதையும் இதிலிருந்து நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். 

வேறெந்த மாதத்திற்கும் இல்லாத தனித்துவம் மிக்க முக்கியத்துவம் தைமாதத்திற்குக் கொடுக்கப்பட்டு  வந்திருப்பதற்கும், மார்கழி நோன்பிருந்த பெண்களும் தைநீராடலுக்கு முன்னாரான செயற்பாடாகவே அதனை முன்னெடுத்து வந்திருக்கின்றமைக்கும், அந்த மார்கழி நோன்பின் இறுதிக்கட்டம் தைநீராடலை நோக்கியும், தைத்திருநாளைக்  கொண்டாடும் நோக்கிலும்தான் நடந்திருக்கிறது என்பதற்கும் ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. 

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள்,  ஒரு தைமாதம் கழிந்துவிட்டால் அடுத்த வருடம் தைமாதம் வரும்வரையில் அந்தத் தை நீராடலையும், தைப்பொங்கல் பண்டிகையையும் ஒவ்வோராண்டும் எதிர்பார்த்துக் காத்திருந்து, மாதம் முழுவதும் மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறார்கள்.  

(12) பண்டைக்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு முன்பிருந்தே, ஆண்டுக் கணக்கீட்டு முறை வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. அவ்வாறு ஆண்டுகளுக்குத் தெய்வங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன என்பதற்கான சான்று, நற்றிணையில் உள்ளது.

“ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப்

பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு

மூத்துவினை போகிய முரிவாய் அம்பி”

(நற்றிணை. பாடல் இல: 315. நெய்தல் திணை. பாடியவர்: அம்மூவனார்)

“ஓன்றோடொன்று தொடர்புடைய பெரிய தெய்வங்களின் பெயர்களைக் கொண்ட வருடங்களும் பல கழிந்துவிட்டன. அவ்வாறு காலம் சென்றதால் நீர்த்துறையின் கரையில் அலையினால் மோதி மோதித் தாக்கப்பட்டுப் பழையதாகி, தொழில் செய்வதற்கு உதவாதபடி தோணியொன்று முன்பகுதி முறிந்து கிடக்கிறது” என்பது இதன் பொருள். இதிலிருந்து கடவுள்களின் பெயர்கள் ஆண்டுகளுக்கு வைக்கப்பட்டிருந்தமை தெரியவருகிறது.

(13)  சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்ற “சித்திரை” என்ற சொல்லைக் கொண்டு அக்காலத்தில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதென்றோ, அல்லது சித்திரை மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது என்றோ சொல்ல முடியாது. அதில், “சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க, எனத் தேவர் கோமான் ஏவலிற் போந்த….” என்று சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வருகின்ற நாளில், எனச் சொல்லப்பட்டிருப்பதை இந்திரன் காவல் பூதங்களை ஏவியநாளாகவும் கருதலாம். காவல் பூதங்களுக்குப் படையல் வைக்கும் நாளாகவும் கருதலாம். அது இந்திர விழாவை நடைபெறும் நாளல்ல. ஆக, இந்திர விழாவில் சித்திரை மாதம் முக்கியத்துவப்படவில்லை. அதற்கும் புத்தாண்டுக்கும் அணுவளவுகூடத் தொடர்பு இல்லை. 

(14) இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் 60 ஆண்டுப் பெயர்களும் தமிழில் இல்லை. இந்த 60 ஆண்டுகளில், எதுவும் சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இப்பொழுது கூறப்படும் பெயர்களிலும் குறிப்பிடப்படவில்லை, இவற்றின் தமிழ்ப் படுத்தப்பட்ட பெயர்களிலும் இல்லை. ஆகவே இந்த 60 ஆண்டுகளோடு தொடர்புடைய சித்திரைப் புத்தாண்டு சங்க காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ இருக்கவில்லை.

(15) சங்ககாலத்திலோ அதற்குமுன்னரோ தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடியதற்கான ஆதாரங்களோ, இலக்கியச் சான்றுகளோ எதுவும் இல்லை.

ஆனால், தைத் திங்களுக்கு அதாவது தைமாதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து,  தை மாதத் தொடக்கத்தில் அறுவடை செய்தது, பொங்கல் வைத்தது, நோன்பு இருந்தது, தைநீராடல் நடத்தியது, பலர் சேர்ந்து விருந்துண்டது, ஊர்கூடி விழா நடத்தியது முதலிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.  

வேறு எந்த மாதங்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மார்கழி நோன்பிருந்த பெண்களும் தைநீராடலுக்கு முன்னாரான செயற்பாடாகவே அதனை முன்னெடுத்துவந்திருக்கின்றமைக்கும், அந்த மார்கழி நோன்பின் இறுதிக்கட்டம் தைநீராடலை நோக்கியும், தைத்திருநாளைக் கொண்டாடும் நோக்கிலும்தான் நடந்திருக்கிறது என்பதற்கும் ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. 

தைப் புத்தாண்டின் தொன்மை!

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள்,  ஒரு தைமாதம் கழிந்துவிட்டால் அடுத்த வருடம் தைமாதம் வரும்வரையில் அந்தத் தை நீராடலையும், தைப்பொங்கல் பண்டிகையையும் ஒவ்வோராண்டும் எதிர்பார்த்துக் காத்திருந்து கொண்டாடியிருக்கிறார்கள்.  

கடந்தகாலத்தில் நல்லவை நடைபெற்றமைக்கு நன்றி சொல்வதற்காகவும், எதிர்காலத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டுவதற்காகவும், புத்தரிசியில் பொங்குதலும், பலரோடு பகிர்ந்து உண்ணலும், மக்களின் ஒன்றுகூடலும், நீராடலும், களியாடலும், விருந்து கொடுத்தலும், கலைகளை அரங்கேற்றுதலும்,  திருவிழாக்களை  நடத்துதலுமாக தமிழரின் திருநாளாக, பண்பாட்டுப் பெருநாளாக, தைத்திங்கள் முதல் நாள் புதிய வருடத்தின் முதல் நாளாகப் பண்டைத் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. அதுவே புத்தாண்டு ஆகியது. இன்றுவரை தொடர்கிறது.  

எனவே, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுவந்த காலத்திற்கு முன்னரே வருடக்கணக்கு முறையையும், ஒருவருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் என்பதையும் கணக்கிட்டு அவற்றை வழக்கப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது துல்லியமாகத் தெரியவருகிறது.  அந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு பெயர்களையும் வைத்திருக்கிறார்கள்.  ஆகவே, வருடத்தின் கடைசி மாதமான மார்கழி முடிந்ததும், மீண்டும் அடுத்த வருடம், மாதங்களில் முதல் மாதமான தைமாதத்தின் முதலாவது நாளில் பிறக்கிறது என்பதும், அதுவே புதிய வருடத்தின் முதலாவது நாள் என்பதும், புத்தாண்டுப் பிறப்பு நாள் என்பதும் உறுதியாகத் தெளிவாகிறது. அந்தப் பாரம்பரியமே இன்றுவரை தொடர்கிறது.

எனவே, தைமாதம் பிறக்கும்போது தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கிறது. தை மாதத்தின் முதல் நாளே தமிழருக்குப் புதுவருடத்தின் முதல்நாள் ஆகிறது.

ஆனால், தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம். 

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வந்ததொன்றல்ல.  பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மிடம் வந்து சேர்ந்து அல்லது திணிக்கப்பட்டு நம்மை இறுகப் பற்றிக்கொண்ட மதம்சார்ந்த எண்ணற்ற நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் போலவே ஏற்பட்டுவிட்ட ஒன்றுதான் இது.

அறிஞர்களின் தீர்மானமும், அரசின் அங்கீகாரமும்!

=============

அதனால்தான், தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும், ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள், செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள்.  தமிழ்க்கடல், நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது. 

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 

அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

அந்தத் தீர்மானத்தின்படி, திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி  என்பனவாகும். புதனும், சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன், காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும், பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும், 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்ட து. 

தை மாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்படும் பஞ்சாங்கங்கள் அப்படியே எழுதப்படட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதம் என்றும்,  தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும், பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.  

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்

பத்தன்று, நூறன்று, பன்னூறன்று

பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நந்நாள் 

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப் பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அம்மொழியே பொன் மொழியாகட்டும், அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும் என்று, தொன்மைமிக்க நமது தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பினை எங்கும் உரத்துச் சொல்வோம். பின்னைய நமது சந்ததிகளையும் பின்பற்றச் செய்வோம். எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக் கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டும், தைப்பொங்கல் பண்டிகையும்!

==============

வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வருகின்ற,

தைப் பொங்கல் பண்டிகையை, ஊரோடும், உறவோடும் கலந்து, மாதம் முழுவதும் மகிழ்ந்து கொண்டாடவேண்டும். பரந்த உலகெங்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தாம் வாழ்கின்ற நாடுகளில் உள்ளபல்லின மக்களும் அறியும் வண்ணம் தோழமையோடு, சேர்ந்து கொண்டாடி மகிழவேண்டும். தமிழர்களின் பாரம்பரிய மாதத்தின் சிறப்பைத் தரணியெங்கும் பறை சாற்வேண்டும்.  

ஒவ்வொரு வருடமும், தைப்பொங்கல் நாளில் காலையில் எழுந்து, கதிரவனை வணங்குவோம். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், இளமஞ்சள் குருத்தோலையிலும் அழகான தோரணங்கட்டி, புத்தாடை அணிந்து, தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம்.  புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும், வெற்றிலையும், பாக்கும், பழங்களும், செங்கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றி தெரிவிப்போம்!  இனிக்கும் பொங்கலை எல்லோருடனும் பகிர்ந்து உண்போம்!

காலையில் பொங்கலிட்டுக் கதிரவனை வணங்குதல், ஆலயம் சென்று இறைவனை வழிபடல், பின்னர் பெரியவர்களின் ஆசிபெறல், பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல், உணவு பரிமாறல், உண்டு களைப்பாறல், மாலையில் களித்து விளையாடல், கலைகள் அரங்கேறல், ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல்! இதுதானே தமிழரின் தைப்பொங்கல் பண்டிகை! அது தமிழ் வருடத்தின் முதல் நாள், தமிழரின் திருநாள். தமிழருக்கு அது பெருநாள்! பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசி நாள். புலரும் பொழுதில், மலரும் பொங்கல் பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள் தோறும் விடிய விடிய மகிழ்ந்திருக்கும் நாள்.

வீட்டிலுள்ள வேண்டத் தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள். அன்றைய நாளிலே மக்கள் தங்கள் வீட்டிலும், வீட்டின் சுற்றுப் புறங்களிலும் உள்ள அழுக்குகளை,  குப்பைகூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக் கொழுத்துவார்கள். இல்லத்தையும், சுற்றுப் புறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவு செய்து, புதுப் பொலிவு ஊட்டுவார்கள். நாள் முழுவதும் வீட்டுச் சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும். அந்த நாளைப் போகிநாள் என்று சொல்கிறார்கள்!

கடந்த வருடத்தைப் போக்குதல், கஷ்டங்களைப் போக்குதல்,  உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல், அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள் – போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகிறது.

திருமணமாகித் தனிக்குடும்பமாக வாழும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோர்களும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வது அன்றைய நாளில்தான். நெல், அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள், முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். 

பொங்கல் பண்டிகையை வளமாகக் கொண்டாடவும், புத்தாண்டினை மகிழ்வாக வரவேற்கவும், தேவையான பொருட்களையும்,  புத்தாடைகளையும் வாங்கிக்கொள்ளவும், போதிய வசதியில்லாத, உற்றார், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, பொருட்களாகவும், புத்தாடைகளாகவும், பணமாகவும் அவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்து, அனைவரையும் மகிழவைக்கும் இனிய நாள். உறவினர்களைத்தேடிப் “போகும்” நாள்! காலப் போக்கில் அது போகிநாள் ஆகிவிட்டது.

தைப்பொங்கல் திருநாளிலே, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளிலே எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பண்டைத்தமிழர்கள் பழக்கத்தில் கொண்டிருந்த பண்பாட்டுச் சிறப்பு மிக்க வழக்கம் அது. 

மறுநாள் விடியும்போது புதுவருடம் பிறக்கும்! மனமெல்லாம் பொங்கலை நினைக்கும்! வாயெல்லாம் இனிக்கும்! கடந்த வருடம் அடைந்த துயரெல்லாம் கனவாக மறக்கவும், நடந்த வாழ்வில் மகிழ்ந்ததை யெல்லாம் நினைவோடு சுமக்கவும், புலர்ந்து வருகின்ற தைமுதல் நாளிலே புத்தூக்கம் கிடைக்கும். அதுவே பொங்கல் பண்டிகையின் சிறப்பு.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புது வகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகத்தில் கால்பதிக்கக் காத்திருப்போருக்கு வழிபிறக்கும். வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புக்கு வழிபிறக்கும், திருமணத்திற்குக் காத்து நிற்கும் இளையோருக்கு வழிபிறக்கும், பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு எவரெவர், எதையெதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்களோ, அவரவர்களுக்கு, அவர்கள் வேண்டியதெல்லாம் கிடைப்பதற்குத் தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கை!  

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வேறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளை, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளை பொங்கலிட்டுக் கொண்டாடிப் பூரித்து மகிழ்வோம். அதுவே பண்டைத் தமிழர் பண்பாடு. அதைக் கடைப்பிடிப்பது நம் கடப்பாடு.

தைத்திருநாள் தமிழரின் திருநாள்

தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை

தைப்பிறப்பே தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு

தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள்!

வாழ்க தமிழ் வணக்கம்.

==============================================

உசாத்துணை நூல்கள்:

1. நற்றிணை – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

2. குறுந்தொகை – தி.செள. அரங்கசாமி உரை

4. ஐங்குறு நூறு – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

5. பரிபாடல் –  புலியூர்க்கேசிகன் தெளிவுரை

8.கலித்தொகை – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

9. அகநானூறு – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

10. புறநானூறு – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

11. சிலப்பதிகாரம் – புலியூர்க்கேசிகன் தெளிவுரை

12. சீவக சிந்தாமணி

13. யாதும் ஊரே மாத இதழ்கள் 45, 57

14. சங்ககாலமும், சங்க இலக்கியங்களும், சு.ஸ்ரீகந்தராசா

15. தமிழின் பெருமையும், தமிழரின் உரிமையும் – சு.ஸ்ரீகந்தராசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *