— சோலையூர் குருபரன் —
ஒரு படைப்பிலக்கியவாதி தனக்குரிய பாணியில் ஆக்கங்களைச் சிருஷ்டிக்கிறான். தான் கண்டு, கேட்டு, ரசித்த தனது வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள், நிகழ்வுகள், பிரச்சினைகளை, அதற்குள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பவற்றை அழகியல் அம்சங்களோடு தனது பார்வையில் படைப்புக்களாக வெளிக்கொணர்கின்றான். அவை காலத்துக்கேற்ற நடை, உத்தி, வடிவம், உள்ளடக்கம், இலகுவான மொழிநடை என்பவற்றைப் பின்பற்றி அமைந்திருத்தல் வேண்டும். அத்தகைய படைப்புக்கள் வாழும் இலக்கியங்களாக நீடித்து நிலைத்திருக்கின்றன.
’காலத்திற் கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை’
என்ற பாரதியின் சமகால இயக்கவியல் சிந்தனைப் போக்கு நவீன தமிழ் இலக்கியத்தினை விசாலப்படுத்த உதவியது. அத்தகைய இயக்கவியல் கருத்தியலை இன்றைய தமிழ் ஆக்க இலக்கியங்கள் பலவற்றில் காண்பது அரிதாக உள்ளது. இன்றும் கூடப் பலர் நான், எனது என்ற வித்துவச் செருக்கோடு தற்போதைய வாசகர்களின் உள்ளக் கிடக்கை, மொழிப் பரிச்சயம் என்பவற்றைப் புரிந்து கொள்ளாது எண்ணிக்கையை அதிகரிக்க, தமது புகழை வெளிக்காட்ட, விளங்காத வித்துவச் செருக்கு நடையில் இலக்கியங்களை ஆக்குகின்றனர். இதையே மஹாகவி உருத்திரமூர்த்தி பின்வரும் கவிதை மூலம் தனது இயக்கவியல் சிந்தனையை, உள்ளக் கிடக்கையாக வெளிப்படுத்துகின்றார்.
’இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத்தி யங்கும் நோக்குகள்
இன்றைய பாலத் தழும்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுகள்’
இதனைப் புரிந்து கொண்டு கட்டுடைப்புச் செய்து சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய நடையில் சமகாலப் பேச்சு மொழியில் கவிதை, புனைகதை இலக்கியங்களைப் படைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன். இத்தகைய விடயங்களைக் கவனத்தில் கொண்டு சமகாலப் பிரக்ஞையோடு, மானிட. பண்பாட்டுக் கோலங்களை உள்வாங்கி 1963 இல் இருந்து இன்றுவரை பாரம்பரியத்தோடு எளிய நடையில் காய்தல், உவத்தலின்றி, துணிந்து அயராமல் எழுதிவரும் ஒரு படைப்பிலக்கிய கர்த்தாவாகச் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்களைப் பார்க்கின்றேன்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத் தளத்தில் 60 வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பை நல்கிவரும் செங்கதிரோன் மும்மொழிப் பரிச்சயம் கொண்ட ஆற்றல்மிக்க பல்துறை சார்ந்த எழுத்தாளராவார். அவருடைய ஆக்கங்களில் ஆழம், கனதி, உள்ளடக்கம், சமகாலப் போக்கு, பக்கச்சார்பின்மை, கருதிய பொருளைத் துணிவுடன் முன்வைக்கும் பண்பு, புரிந்து கொள்ளக்கூடிய எளிய நடை ஆகிய பண்புகள் விரவி வருதலைக் காணலாம்.
இலக்கியப் பாரம்பரியம்மிக்க சுவாமி விபுலாநந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் பிறந்து திருமணத்தின் பின் மட்டக்களப்பில் வசித்துவரும் செங்கதிரோன், அடிப்படையில் தொழினுட்ப உத்தியோகத்தராக இருந்து பதவி உயர்வு பெற்று பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நந்தி, முருகையன், முருகானந்தம், முரளிதரன் போன்ற தொழில் துறைசார்ந்த ஆளுமைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமாகப் பரிணமித்ததுபோல் செங்கதிரோனும் தனது படைப்பாற்றல் மூலம் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்து வருகிறார்.
செங்கதிரோனின் தமிழர் அரசியலில் மாற்று சிந்தனைகள் (அரசியல் கட்டுரைகள்), விளைச்சல் (குறுங்காவியம்), சமம் (உருவகக் கதைகள்), யாவும் கற்பனையல்ல (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘கனகர் கிராமம்’ நாவல் (வரலாற்றுப் பதிவு) உட்பட இன்னும் நான்கு நூல்கள் வெளிவர இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியப் பரப்பில் தமக்கிருக்கும் பரிச்சயத்தையும், முதிர்ச்சியையும் அனுபவ ஆற்றலையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. ‘கற்றனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு…..’ என்பதுபோல் தனது உள்ளத்துணர்வுகளில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் தங்கு தடையின்றி வெளிப்பட்ட சொற்களைக் கோர்த்தெடுத்து உருவம், உள்ளடக்கம் கொடுத்து எழுதுவதனை அவரோடு நன்கு பழகியவர்கள் அவதானித்திருப்பார்கள். மனதில் பட்டவற்றை அச்சமின்றி வெளிப்படுத்துவார். தமிழ் இலக்கியம், சமயம், சமூக, பண்பாட்டுப் பாரம்பரியத்தை நேசித்ததோடு தமிழர் அரசியலுக்கான மாற்றுச் சிந்தனைகளைத் துணிச்சலுடன் முன்வைக்கின்ற ஒருவராகவே நான் அவரைப் பார்க்கின்றேன்.
அவற்றில் ‘யாவும் கற்பனையல்ல…’ சிறுகதைத் தொகுப்பு பேராசிரியர் செ.யோகராசா, தீரன் ஆர்.எம்.நௌஷாத் ஆகியோரின் காத்திரமான முன்னுரையுடனும், ஆசிரியரின் என்னீடு, 13 சிறுகதைகள், இறுதிப் பக்கத்தில் ஆசிரியரின் பிறநூல் விபரங்கள் உட்பட 80 பக்கங்களைத் தாங்கி, மனதில் பல சிந்தனைக் கிளறல்களை ஏற்படுத்தும் வகையிலான அழகான அட்டைப் படத்துடன் 2023 இல் வெளிவந்திருக்கிறது. எனது கையில் கிடைத்த இத்தொகுப்பை எடுத்த எடுப்பில் வாசித்து முடித்ததனால், எனது உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வுப் பதிவினை வெளிக் கொணர வேண்டும் என்ற உந்துதலினால் இப்பதிவினை இட முன் வந்தேன்.
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளும் ஏதோ ஒரு வகையில் ஆசிரியரது வாழ்வியலோடும் அவரது உறவினர்கள் மற்றும் அவர் வாழ்ந்த பிரதேசங்கள், தொழில் செய்த இடங்களோடும் சம்பந்தப்பட்டுள்ளமையினால் ஒரு சிறுகதையின் தலைப்பாகிய ‘யாவும் கற்பனையல்ல’ என்பதனை நூலின் தலைப்பாக்கி இருக்கின்றார் போலும். வாசகர்களுக்கும் அத்தலைப்புத்தான் சரியெனப்படும் என நம்புகிறேன்.
கதைகளின் கருப்பொருள், சம்பவங்கள், நிகழ்வுகள், பிரச்சினைகள், அதன் ஊடாட்டங்கள் யாவும் நிசமாகக் கதைக் களங்களில் நடமாடிய கதை மாந்தர்களை மையப்படுத்தியே கதைகள் நகர்ந்து செல்கின்றன. கதை மாந்தர்களின் வாழ்வியல் அம்சங்கள், அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், மாந்தர்களின் உயிரோட்டமான ஊடாட்டங்கள், விருப்பு, வெறுப்புக்கள், உணர்வு நிலைகள், மன ஓட்டங்கள், துன்ப, துயரங்கள் ஆகியவற்றை பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுத்தி இருக்கின்றார். உயிருடன் நடமாடிய மாந்தர்களின் உள்ளுணர்வுகளை மனக் கண்முன் கொண்டு வந்து, கதை கூறும் பாங்கில் பெரும்பாலும் நனவிடை உத்தியைப் பயன்படுத்தி மிகக் கச்சிதமாகத் தனது பாணியில் (Style) கதை கூறி இருக்கின்றார்.
ஆசிரியர் ஒவ்வொரு கதைகளிலும் பாத்திரச் சேர்க்கையில் கூடிய கவனமெடுத்திருக்கின்றார். கதையின் நாயகன் அல்லது நாயகியை மையப்படுத்தி, அதில் கவனமெடுத்து ஏனைய பாத்திரங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். குடை கவனம் என்ற சிறுகதையில் நாதன் பிரதான பாத்திரமாகவும் அவன் மனைவி நர்மதா, கடை உரிமையாளர் காதர் முகைதீன், குடையால் கண்ணில் குத்திய பெண், குறியீடாகக் குடை ஆகிய துணைப் பாத்திரங்களோடு கதை புனையப்பட்டிருக்கின்றது. இவ்வாறுதான் எல்லாக் கதைகளின் கதை மாந்தர்களும் கதைக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் புனையப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
கள வர்ணனை, கள அறிமுகம், பாத்திர அறிமுக வர்ணனை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தேவை அறிந்து, இடமறிந்து அறிமுகமும், வர்ணனையும் கையாளப்பட்டிருக்கின்றன. ‘ஊர் மானம்’ என்ற கதையில் பூரணத்தின் வீட்டின் அமைவிடம், அதன் தன்மை, சுற்றுச் சூழல் என்பவற்றைப் பவ்வியமாகச் சித்தரித்திருக்கின்றார். அதேபோல் பூரணம், செல்லையா, வேலாப்போடியார் போன்ற பிரதான பாத்திரங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்து வாசகர் மனங்களில் நிலைத்திருக்கச் செய்கின்றார் ஆசிரியர். இதேபோல் ஒவ்வொரு சிறுகதைகளிலும் இந்த உத்தியைக் கையாண்டிருக்கின்றார். ‘கூடுவிட்டு’ என்ற சிறுகதையில் காட்சிப் பதிவை ஏற்படுத்தவதற்காகக் களவர்ணனை சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றது. வீட்டின் அமைவிடம், வீட்டின் உள்ளமைப்பு, அங்கே காணப்பட்ட அமைதி, சுந்தரி, ராகுல் இருவரினதும் தனிமை என்பவற்றை மனக்கண்முன் நிறுத்தி எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டக்கூடிய வகையில் காட்சிகளையும் சம்பவங்களையும் ஒழுங்குபடுத்திக் கதையை நகர்த்திச் செல்வது தனிச் சிறப்பைச் சேர்க்கிறது. இந்த இயல்பினை ‘யாவும் கற்பனையல்ல’ என்ற சிறுகதையிலும் அவதானிக்கலாம்.
ஆசிரியர் ஒவ்வொரு சிறுகதையிலும் மாற்றுச் சிந்தனையாக நடைமுறை வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன விடயங்களை கதைகளின் கருப் பொருளாக்கி இருக்கின்றார். அக்கதைகளின் சம்பவங்கள், உரையாடல்கள் நீண்டு செல்லாமல் வடிவம், உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதைகளை நடத்திச் சென்றிருக்கும் பாங்கு புதுமைப்பித்தன், அகிலன், கு.ப.ரா, இலங்கையர்கோன், எஸ்.பொன்னுத்துரை போன்றோரை ஞாபகமூட்டுகின்றன.
கதைகளில் பாத்திரங்களுக்கு இடையேயான உரையாடல்கள் சுருக்கமாகவும், குறியீடுகளாகவும் கதையின் போக்கிக்கிற்கும் அதன் ஊடாட்டத்துக்கும் ஏற்றவகையில் திசை மாறிச் செல்லாமல் கச்சிதமாக உரையாடல்களைக் கட்டமைத்திருக்கின்றார். கரப்பத்தான் பூச்சி என்ற சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இக்கதையில் கரப்பத்தான் பூச்சியைக் கண்டு கணவன், மனைவி, மகன் ஆகியேரின் மனத் தவிப்பு. குடும்ப வருமானம், நெருக்கீடு, ஒருவகையான அச்சம், பூச்சியைக் கொல்வதற்கு எடுத்த முயற்சிகள், இரு கரப்பத்தான் பூச்சிகள் கலவியில் ஈடுபடும்போது அதனைக் கொல்ல முடியாமல் மனம்பட்ட தவிப்புக்கள், அதற்காக மகாபாரதத்தில் பாண்டுவின் கதையை உதாரணமாக்கி பூச்சிகளைக் கொல்லாது விட்டமை இன்னபல வாசகரிடத்தில் ஆழமான மனப்பதிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறுதான் ஒவ்வொரு கதைகளிலும் குறியீடாகவும், உதாரணங்கள் சம்பவங்களுக்கூடாகவும் நனவுநிலை உத்திக்கூடாகக் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்படாமல் நகர்த்திச் சென்றிருக்கின்றார்.
கதைகளில் உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், உயர்வுநவிற்சி, முரண்நிலை, முரண்நகை என்பவற்றைக் கதைகளின் இடம், பொருன், முக்கியத்துவம் அறிந்து அந்தந்த இடங்களில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றார். அத்தோடு கற்பனை, உவமை, உருவகம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கதையின் போக்கினைத் திசை திருப்பாமல் அவற்றில் விசேட கவனமெடுத்துச் செயற்பட்டிருக்கின்றார். பாத்திரங்களுக்கிடையிலும், தனக்குள்ளும், உரையாடல்களின்போதும் முரண்நிலையை ஏற்படுத்திக் கதைகளைக் சுவைபடக் கவனமாக நடத்திச் சென்றிருப்பது ஆசிரியரின் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது. குடை கவனம், கரப்பத்தான் பூச்சி, ஒரு குழந்தையின் அழுகை, அந்த ஏவறைச் சத்தம், லயன் ஆகிய கதைகளில் பாத்திர உரையாடல்களில் முரண்நகை ஆங்காங்கே இடம்பெறுவதை அவதானிக்கலாம். இதனை அவருக்குப் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியங்களில் கொண்டிருந்த பரிச்சயம், அனுபவம், முதிர்ச்சி ஆகியன கொடுத்திருக்க வேண்டும்.
இத்தொகுப்பில் வரும் 13 சிறுகதைகளையும் குருவி கூடு கட்டுவது போல் மிக நுண்ணியதான வாழ்க்கை அனுபவங்களைக் கதைக் கருவாக்கித் தனது வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துக் கதை கூறுவது செங்கதிரோன் போன்ற ஒரு சிலரால் மாத்திரமே முடியும். இக்கதைகளின் ஊடாக நமது பண்பாடு, பாரம்பரியம், ஒழுக்கலாறுகளும் பேசப்பட்டிருக்கின்றன. இரக்கம், விரகதாபம், மனித நேயம், உபகாரம், பரிவு, கழிவிரக்கம் ஆகியனவும் கதை மாந்தர்களுக்கூடாக வெளிப்படுத்தப்படுவதனை அவதானிக்கலாம்.
கதைகள் ஒவ்வொன்றுக் கூடாகவும் தனது சிந்தனைகள், கருத்துக்களை ஆங்காங்கே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படுத்தி இருக்கின்றார். இதற்கு நனவிடை உத்தியைப் பயன்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நூல் தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய வரவாகப் பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கை அனுபவங்களைப் பேசி, மனித நேயத்தை வலியுறுத்தி, இப்படியும் கதை புனையலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாகக் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. துறவு, துரோகி, ஒரு குழந்தையின் அழுகை, அந்த ஏவறைச் சத்தம் போன்ற கதைகளுக்கூடாகத் தலைப்புக்குப் புதிய அர்த்தம் கொடுத்திருப்பது ஆசிரியரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றது.
என்றாலும்கூட ஓரிரு இடங்களில் களவர்ணனையைக் குறைத்தும், சம்பவக் கோர்வைகளைத் தவிர்த்தும் கதைகளை நகர்த்திச் சென்றிருந்தால் அந்த இடங்களில் இலக்கிய கனதி இன்னும் அதிகரித்திருக்கும் என்பது எனது எண்ணம்.
மொத்தத்தில் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது.