— இரண்டாம் விசுவாமித்திரன் —
(எஸ்.பொன்னுத்துரை தமிழிலக்கிய வெளியில் அடைந்த கீர்த்தியும் பெருமையும் கியாதியும் சொல்லி மாளாதவை. புனைகதை, மொழிபெயர்ப்பு, திறன்நோக்கு, நனவிடை தோயும் கட்டுரைகள் என்று அவர் ஈடுபட்ட துறைகளின் பட்டியல் நீளமானது. நாடகப் பணியும் அவற்றில் அடக்கம்.
அவர் பல நாடகங்களைப் பிரதியாக்கம் செய்தார். அளிக்கை செய்து மேடையேற்றினார். அவற்றில் ‘முதல் முழக்கம்’என்ற நாடகம் பிரசித்தமானது. அதுபற்றியதாகவே இக்கட்டுரை நகர்கிறது.)
பின்னணி : எஸ்.பொன்னுத்துரை மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கு 01.06.1955 இல் ஆசிரியராக நியமனம் பெற்று வந்தார். அந்தக் கல்லூரியில் வருடாந்தம் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இங்கிலீசு நாடகங்கள் மட்டுமே அரங்கேறி வந்தநிலையில் எஸ்பொ வந்து சேர்ந்ததும் தமிழ் நாடகமும் மேடையேறும் நிலை உருவானது.
மறுபுறத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை 1957இல் ‘சங்கிலியன்’ என்ற நாடகத்தை மட்டக்களப்பில் மேடையேற்றினார். இராசதுரை கதாநாயனாக நடிக்க, கதாநாயகியாக ஒரு இளம் பெண் நடித்தார். இந்நாடகத்தின் பெண் பாத்திரங்களில் பெண்களே நடித்தமைபற்றி மக்கள் புதுமை பேசினர்.
‘சங்கிலியன்’ நாடகத்தைச் சென்று பார்த்த எஸ்.பொன்னுத்துரை அந்த நாடகத்தில் பல வரலாற்றுத் தவறுகள் காணப்படுவதாக பகிரங்கமாகச் சுட்டிக் காட்டினார். மேடைகளிலும் அதுபற்றிப் பேசினார்.
அவருடைய எழுத்தில் அதனை வாசிப்பது சுவையானது.
‘அவர் சங்கிலியன் என்ற நாடகத்தை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் அந்தப் பிரதியை எழுதியும் அதை நெறிப்படுத்தியும் சங்கிலியனாக நடித்தும் அதனை மேடையேற்றினார். இச்செயல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அபூர்வம் என்பது உண்மை. அவருடைய சங்கிலியன் நாடகம் வெகுவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு கிழக்கிலங்கையிலேயே ஒரு நாடக மரபின் நுழைவாயிலாக அமையும் என்றும் பரப்புரை செய்யப்பட்டது. அந்த நாடகத்தை நான் சென்று பார்த்தேன். அந்த நாடகத்தின் பிரதியை மிக மிகக் குழந்தைத்தனமாக அவர் அமைத்திருந்தார். வரலாற்றுச் சம்பவங்களை அவராலே சரித்திர காலத்தில் வைத்துச் சிந்திக்க முடியவில்லை. தனக்குச் சரித்திர ஞானமே இல்லை என்பதை அந்நாடகம் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்’.
எஸ்பொவின் அக்குறிப்பினை ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற நூலில் (பக் 39) வாசிக்கலாம்.
அவர் சுட்டிக் காட்டிய வரலாற்றுத் தவறுகளில் பதச் சோறாக இதனைக் குறிப்பிடலாம்.
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கிலியன் எப்படி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் பரம்பரை என்று வசனம் பேச முடியும்? போர்த்துக்கேய மாலுமிகள் 1942-43 இல் இலங்கையில் அறிமுகமான திறிறோசஸ் சிகரெட் பக்கட்டுகளுடன் நாடகத்தில் உலவினார்கள். இது எப்படி 17ம் நூற்றாண்டில் சாத்தியம்?
இத்தவறுகளுக்குப் பதிலளிக்காத செ.இராசதுரை எதிர்வினையாக சங்கிலியன் போன்ற ஒரு சரித்திர நாடகத்தை எஸ்.பொவினால் தர முடியுமா? என்று சவால் விட்டார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலை நிலவிய காலத்தில் மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் அதிபராக வி.ரி.ஞானசூரியம் இருந்தார். கல்லூரியின் கட்டட நிதிக்காக தமிழ் நாடகமொன்றைத் தோதுப்பட்ட வகையில் அடுக்குப் பண்ணுமாறு அவராலும் ஆசிரியர்களாலும் எஸ்பொ கேட்கப்பட்டார். பாடவேளைகளை இல்லாமல் செய்து பெற்ற ஓய்வில் எஸ்பொவின் ‘முதல் முழக்கம்’ என்ற வரலாற்று நாடகம் பகிரங்க மேடையேற்றத்துக்குத் தயாரானது.
கதைச்சுருக்கம் :
எல்லாளனுக்கும் காமினிக்கும் (துட்டகைமுனு) இடையிலான யுத்த முஸ்தீபு நாடகத்தின் மையப்பொருள். தந்தையின் விருப்பத்தை மீறி காமினி எல்லாளனுக்கு எதிராக போர்க்களம் செல்லுகின்றான்.
முதலாவது காட்சி எல்லாள மன்னனின் அநுராதபுர அரண்மனையிலும் இரண்டாவது காட்சி மகாகமையில் அமைந்துள்ள காமினியின் உறுகுணை மண்டபத்திலுமாக நாடகம் தொடர்கிறது.
எஸ்பொ இந்த நாடகத்தை ஒழுங்கு செய்ய மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டார். இருபத்தியிரண்டு பாத்திரங்கள். எல்லாமே கல்லூரியின் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள். எல்லாளனாக காசி ஆணதன், காமினியாக ஆதம்லெப்பை, விகாரமகாதேவியாக காலித், தீத்தம்பனாக இஸ்மாயில் ஆகியோர் நடித்தனர். காக்கை வண்ணதீசனாக சின்னலெப்பையும் பணியாளர்களாக நூகுலெப்பை மற்றும் யூசுப் சாஹிபு போன்றவர்களும் பங்கேற்றனர். பின்வந்த நாட்களில் மட்டக்களப்பில் பிரபலமாகப் பேசப்பட்ட நண்டு நவரத்தினம், செழியன் பேரின்பநாயகம் போன்றவர்களும் நடிகர் குழுவில் இருந்தனர்.
எஸ்.பொன்னுத்துரை தனது மனைவியுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில் சுவிற்ஸ்லாந்திலிருந்து டென்மார்க்வரை பயணித்தபோது காரில் இருந்தவாறே த.தர்மகுலசிங்கம்(டென்மார்க்) எஸ்பொவின் நாடக அநுபவங்களைக் கேட்டதாகவும் அவரின் ஆரம்பகால நாடக வாழ்க்கையிலும் வெற்றியிலும் திருமதி எஸ்பொ மிகவும் நெருக்கமாக உழைத்திருக்கிறார் என்பதாலும் இந்த உரையாடலிலே அக்காவும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றார் என்றும் தர்மகுலசிங்கம் குறிப்பிடுகின்றார்.
திருமதி எஸ்பொவின் வாக்குமூலம் த.தர்மகுலசிங்கம் எழுதிய ‘தேடல். சில உண்மைகள்’ என்ற நூலில் (பக் 70) பின்வருமாறு பதிவாகியுள்ளது.
‘அதனை என்னால் மறக்க முடியாது. காசி ஆனந்தன், நண்டு நவரத்தினம், செழியன் பேரின்பநாயகம், புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை, காலித், இஸ்மாயில், சின்னலெப்பே, ஆதம்லெப்பே போன்றோர்கள் என் வீட்டிற்கும் வருவார்கள். பெரும்பாலானவர்கள் விடுதி மாணவர்களாய் இருந்தமையினால் வீட்டிலேயே சாப்பிட்டார்கள். அந்த நேரத்தில்தான் அவர்களுக்கான உடைகளை அளவெடுத்து வடிவமைப்பேன்.அந்த உடைகளை வடிவமைப்பதற்கு நான் இரண்டு மாத காலம் தைக்க வேண்டியிருந்தது. இன்னொன்று அப்பொழுது நான் பிள்ளைத்தாச்சியாகவும் இருந்தேன். அந்தத் தயாரிப்பின்போது மூன்று மாச காலம் இவருடைய சம்பளத்தில் ஒரு ரூபாயாவது நான் கண்ணால் கண்டதில்லை. இப்பொழுது நினைத்தாலும் இவர் அந்தச் சவாலில் நாட்டிய வெற்றி அனைத்துக் கஷ்டங்களையும் மறக்கச் செய்தது. அந்த நாடகத்தில் நடித்த அனைவரும் பிற்காலத்திலே இலக்கியத் துறையிலும் நாடகத் துறையிலும் கல்வித்துறையிலும் பெரும் பங்களிப்பவராகத் திகழ்ந்தார்கள்’
முதல் முழக்கம் நாடக வெற்றியில் எஸ்பொவின் மனைவிக்கும் பங்கிருந்தது என்பது பேசப்பட வேண்டியதே.
முதல் முழக்கம்பற்றி இங்கு கொஞ்சம் பம்பலாகப் பேசப்படுதலுக்குச் சில காரணங்கள் உள்ளன.
ஒரு காரணம் மட்டக்களப்பிலே இரண்டு தடவைகள் மேடையேறியது என்பதாகும். ரூபா பதினோராயிரம் நிதியாகச் சேர்ந்தது. மட்டக்களப்புக்கு வெளியே கல்முனையில் ஒரு தடவை ஆயிரம் ரூபா தேறியது. மொத்தமாக ரூபா பன்னிரெண்டாயிரம் கல்லூரிக்குக் கட்டட நிதி கிடைத்தது. (இன்று இவை எத்தனை இலட்சங்களுக்குச் சமம்?)
இன்னுமொரு காரணம் மட்டக்களப்புக்கு வெளியே கல்முனையிலும் நாடகம் மேடையேறியது என்பதாகும்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எம்.எம்.முஸ்தபா நாடகக் குழுவினரை கல்முனையில் வரவேற்றார். அவ்வேளை அவர் அரசாங்கத்தின் உதவி நிதி அமைச்சராகவும் இருந்தார். உபசரித்து இரவு விருந்து கொடுத்துக் குழுவினரைக் கௌரவித்தார்.
எம்.எம்.முஸ்தபா 1956இல் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவருக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரங்களில் பொன்னுத்துரை ஈடுபட்டவர். ‘இவற்றைக் கவனத்தில் எடுக்காது மத்திய கல்லூரியிலும் மாவட்டத்திலும் நான் இயற்றிவரும் கலை இலக்கியத் தொண்டினை தனிப்பட்டமுறையில் மட்டுமல்ல மேடையிலும் எம்.எம.;முஸ்தபா பாராட்டினார்’ என்று எஸ்பொ எழுத்தில் குறித்துள்ளார்.( ஏ.பீர் முகம்மது : எஸ்.பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும் பக் 121)
மேலுமொரு காரணம் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப் பிரதி ஆக்கப் போட்டியில் முதல் முழக்கம் நாடகப் பிரதிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. என்பதாகும்.
அதனை முன்னிட்டு இந்நாடகத்தின்மூலம் மட்டக்களப்புக்கு பெருமை தேடித் தந்ததாகக் கருதி கல்முனை எழுத்தாளர் சங்கம் கவிஞர் நீலாவணன் தலைமையில் எஸ்பொவைப் பாராட்டி விழாக் கொண்டாடி மகிழ்ந்தது.
பிறிதொரு காரணமும் உண்டு. இலங்கையில் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகளிடையே 1960களின் மத்திய கந்தாயத்தில் ஒரு கலாசாரத் தூதுவனாக உலா வந்ததுதான் ‘இளம்பிறை’ என்ற சஞ்சிகை ஆகும். அதன் ஆசிரியர் ‘இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்’ என்றே பலராலும் அறியப்பட்டவர். இலங்கையில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
முதல் முழக்கம் நாடகப் பிரதி இளம்பிறையில் 1965பெப்ரவரியில் தொடர் நாடகமாகப் பிரசுரம் கண்டது.
அதுபற்றி இளம்பிறை ரஹ்மான் பின்வருமாறு கூறுகிறார்.
‘எல்லோருக்கும் தெரிந்த எல்லாளன் காமினி வரலாற்றை இவர் அணுகிய புதிய முறையே நாடகத்தின் பெருவெற்றிக்குக் காரணமாக அமைந்தது. பல மேடை நாடகங்கள் வாசிப்பு ரசனைக்கு ஏற்றதாக அமைவதில்லை. ஆனால் முதல் முழக்கம் நாடகத்தை வாசிக்கும்போது நல்லதொரு நாவலை வாசிப்பதான உணர்வே ஏற்படுகின்றது.’ (இளம்பிறை – பெப்ரவரி 1965 மலர்-1 பூ-4 பக் 49)
நம்மில் பலருக்கும் முதல் முழக்கம் நாடகத்தைப் பார்த்த அநுபவம் கிடைத்திருக்காது. ஆனாலும் அதன் பிரதியாக்கத்தை ‘இளம்பிறை’ சஞ்சிகையின் நான்காவது இதழில் இருந்து தொடராக வாசிக்கும் வாய்ப்புண்டு.
புதிய நாடக மரபுக்குள் நுழைய விரும்பும் திருப்பு முனையை மட்டக்களப்பில் ‘முதல் முழக்கம்’ மூலம் எஸ்பொவால் ஏற்படுத்த முடிந்தது மட்டுமல்ல மட்டக்களப்பின் நவீன நாடக வரலாற்றில் பல புதிதுகளைச் செய்து சாதனைகளையும் அது நிறுவியது.
இலங்கையின் தமிழ் நாடக வரலாறுகளை எழுதியோர் எஸ்.பொன்னுத்துரையின் நாடக அக்கறைகளையும் ‘முதல் முழக்கம்’ போன்ற நாடகத்தின் திணிவுகளையும் பேசாமல் இருட்டடிப்புச் செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாடகத்தின்மீதான எஸ்பொவின் ஊழியம் மேற்கிளம்பிவரும் காலம் அண்மித்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.