— சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
(அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.)
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும் உரைவடிவில் எழுதியும், உரைச்சித்திரமாக வெளியிட்டும், சிலப்பதிகாரம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், பட்டி மன்றங்களை, வழக்காடு மன்றங்களையும் நடத்தியும் உள்ளவன் என்பதால், அந்த ஒப்பற்ற காப்பியத்தில் எனக்குள்ள ஒரளவு பரிச்சியத்தின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடனும், அங்கலாய்ப்புடனும் இரண்டாம் நாள் அரங்கேற்றத்தின்போது, மண்டபத்தின் மத்தியில் வசதியான பார்வைக் கோணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
குறிப்பிட்டபடி, சரியாக பி.ப. 5.30 மணிக்கு, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவித்தல் கம்பீரக் குரலில் ஒலித்தது. மங்கல விளக்கேற்றும் சம்பிரதாயமான நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறைவு பெற்றதும்,
“திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
அம்கண் உலகு அளித்த லான்”
என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப்பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்!
மேடையில் அடுத்ததாக என்ன நடைபெறவிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் காட்சிகளுக்கு இடையே கதைசொல்லியாக பேச்சுக் கலையில் திறமைமிக்க இரண்டு இளம்பெண்கள், ஒருவர்மாறி ஒருவர் தோன்றி, தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம்கொடுத்துக்கொண்டிருந்தனர்.இடையிடையே, கூத்தில் கட்டியங்காரன் வருவது போல, நடனமணிகளின் நடனம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே, பின்னணிப் பாடல்களுடன் அழகிய காட்சிப்படுத்தலாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
சிலப்பதிகாரம் உண்மையில் ஒரு நாடகக் காப்பியமே. அதன் முதலாவது அங்கம் கோவலன் கண்ணகி திருமணமே!அவ்வாறே,
இந்த நாடகமும், இனிய பாடல்களின் பின்னணியோடு அழகாக நடனம் ஆடியவாறு நடனமணிகள் அந்தத் திருமண அறிவித்தலைப் பூம்புகார் நகர மக்களுக்கு அறிவிப்பதில் இருந்து தொடங்குகிறது. திருமண அறிவிப்பு சிறப்பாக நடந்தது.
“கோவலன் வந்தான் அவைக்குக் கோவலன் வந்தான் என்றும், கண்ணகி வந்தாளே அவைமுன்னே கண்ணகி வந்தாளே”என்றும் கோவலனும் கண்ணகியும் முதன்முதலில் மேடையில் தோன்றும்போது, கூத்து மரபின் அடிப்படையில், பாடிக்கொண்டே தம்மை அறிமுகம் செய்து ஆடிவருகின்ற காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.
திருமணத்தின் பின்னர் கோவலனும் கண்ணகியும் மங்கல மன்றலில் மகிழ்ந்திருக்கும் வேளையில், கோவலன் கண்ணகியைப் புகழ் மொழிகளால் பாராட்டுவது சிலப்பதிகாரத்தில் மிகவும் சிறப்பான பகுதி. அப்போது கோவலன் சொல்வதாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாடல், “மாசறு பொன்னே வலம்புரி முத்தே…”என்று தொடங்குகின்றது.
இந்தப்பாடல் காதல் உணர்வோடு பாடப்படவேண்டியது. காதல்பாடல்களுக்குரிய மெல்லிசையில் பாடல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணமாக “தர்பாரி கானடா” இராகத்தில் பாடியிருக்கலாம். அதற்கேற்றவாறு, மிகவும் இயல்பான முகபாவமும், மிகைப்படாத அபிநயமும் இருந்திருந்தால் காட்சிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். கூத்துப்பாடல் போலத் துள்ளல் இசையில் பாடலும், அதற்குரிய அபிநயமும் இடம்பெற்றிருப்பது முதலிரவன்று கோவலனும் – கண்ணகியும் கதைபேசி மகிழ்ந்து குலாவியிருக்கும் காட்சியோடு ஒன்றிணையவில்லை என்பதுடன், பாடலின் பொருளுக்கும் பொருந்துவதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இற்றைக்கு 1800 வருடங்களுக்கு முன்னர், காவிரிப்பூம் பட்டினம் என்று சொல்லப்படும் பூம்புகார் என்ற துறைமுக நகரத்தில், இந்திரவிழா எப்படி நடைபெற்றது என்பதை, சிலப்பதிகாரத்தை நன்கு படித்தறிந்தவர்களும்கூடக் கற்பனை செய்திருக்க முடியாத அளவுக்கு, மேடையிலே அழகாக, கச்சிதமாக, என்றுமே மனதை விட்டு அகலாத வகையில் நம்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்திர விழாக்காட்சியைப் பார்க்கிறோமா அல்லது அதில் கலந்துகொண்டிருக்கிறோமா என்ற மயக்க உணர்வில் சிலநிமிடங்கள் நம்மை நாமே மறந்திருந்தோம்.
இந்திரவிழா, மாதவி தாளம்பூவின் மடலில் கோவலனுக்குக் கடிதம் எழுதி வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்பும் காட்சி,
கோவலன் – கண்ணகி மதுரைப் பயணம், காளி கோவில் காட்சி, கோவலனை அடையாளம் காண்பதற்காகக் கௌசிகன் மாதவிக் கொடியிடம் பேசுவதும், அடையாளம் காணலும், குரவைக்கூத்து, கண்ணகி அரண்மனை செல்லல், பாண்டிய மன்னனின் அரண்மனைக் காட்சிகள், எல்லாம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தன.
கோவலனுக்குச் சோறு படைக்கும்போது, “பனை ஓலையிலே செய்யப்பட்ட பாயிலே கோவலனை அமரவைத்து, நிலத்தின் வெப்பத்தைப் போக்க நீர் தெளித்து, அதில் வாழை இலைபோட்டு, அந்த வாழை இலையிலே சோறு படைத்தாள்”என்று சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதை அப்படியே காட்சியாகக் காட்டியிருப்பது அற்புதம். ஆம்! பாயிலே கோவலன் அமர்ந்திருக்கிறான், அந்தப் பாயிலே இலை போடப்படவில்லை. இலை தரையிலே போடப்பட்டிருந்தது!
இவ்வளவு நுணுக்கமாக சிலப்பதிகாரத்தின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்தியிருப்பதை எண்ணும்போது எப்படிப் பாராட்டுவது என்று வார்த்தைகளைத் தேடவேண்டியிருக்கிறது.
கொலைக்களக் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்தது. கோவலன் கொல்லப்பட்டபோது பார்வையாளர்களைப் பரிதவிக்க வைத்துவிட்டது. கோவலனும், பொற்கொல்லனும், காவலர்கள் அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருந்தார்கள். யாராவது ஒருவரின் செயற்பாடு கண் இமைக்கும் பொழுதாயினும் முந்திப் பிந்தி ஆகிவிட்டிருந்தால் முழுக் காட்சியுமே நகைப்புக்கு இடமாகிவிடக்கூடிய, சவாலான விடயங்களை, மிகவும் வெற்றிகரமாக நிறவேற்றியிருந்தார்கள். கோவலனை வெட்டிய காவலனை மறக்க முடியவில்லை. (கண்டால் யாரும் வரச்சொல்லுங்கள்!)
கோவலன், கண்ணகி பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். அதிலும், இந்த நாடகத்தின் கோவலனைப் பார்த்த பின்னர், இது வரையில் கற்பனையாக நம் உள்ளத்தில் நீண்டகாலமாக இருந்த கோவலனின் உருவமும், பூம்புகார் திரைப்படத்தில் கோவலனாக நாம் பார்த்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களது தோற்றமும் நம் மனதை விட்டு மறைந்து விட்டதுடன் இந்தக் கோவலனின் உருவமே அழுத்தமாகப் பதிந்துவிட்டது. சற்றுக் குனிந்தவாறான நடையும், பக்கவாட்டில் தலைசாய்ந்து நோக்கும் சுபாவமும் கொண்ட இந்த நடிகரின் தோற்றமும், அவரது இயல்பான அழுத்தமான நடிப்பும், அந்தக் கோவலனும்இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற உணர்வை நாடகத்தைப் பார்க்கும்போது தந்தது மட்டுமன்றி இப்போது நிலையாகவும் நம் நெஞ்சத்தில் பதிந்து விட்டது.
கண்ணகி பாத்திரத்தை ஏற்றிருந்தவரை, கண்ணகியைத் தவிர்த்துத் தனியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. மாதவியிடம் இருந்து மீண்டு திரும்பிவரும் கோவலனை விரும்பி உபசரிக்கும் போதும், ஏதும் அறியாதவளாகக் கோவலன் பின்னால் மதுரைக்குச் செல்லும்போதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து, வெம்பி வெடித்து, வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த போதும், சின்னச் சின்ன உடல் மொழிகளைக்கூட அற்புதமாக அவர் வெளிப்படுத்தியிருந்தமை, இந்தச் சிறிய வயதில் இப்படியோர் அசாத்தியத் திறமையா என்று வியந்து பாராட்டவைத்தது. மதுரையை எரித்த காட்சியின்போது, கண்ணகியோடு கையிலே எரிதழல் கொண்டு நாமும் உடன் செல்வதுபோன்ற உணர்வில் காட்சியிலும் கானத்திலும் கலந்துவிட்டிருந்தோம்.
இந்த இடத்தில் ஒரு தகவலைச் தரவேண்டியது சொல்லவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன். அதாவது, கோவலன் பிரிந்து சென்ற பின்னர், “மங்கல நாண் மட்டுமே” இருக்க மற்றெல்லா நகைகளையும் கண்ணகி துறந்தாள்” என்று நாடகத்தில் பாடலில் சொல்லப்படுவதை “மங்கல அணி மட்டுமே” என்று மாற்றுவது நல்லது. “மங்கல அணியின், பிறிது அணி மகிழாள்……….” என்றுதான் சிலப்பதிகாரம் சொல்கிறது. மங்கல நாண் என்றால் அது தாலி என்று பொருள் படுகிறது. திருமணத்தில் கண்ணகிக்குத் தாலி கட்டப்பட்டதாகவோ, வேறெந்த ஒரு சமயத்திலாவது அவள் தாலி அணிந்திருந்ததாகவோ செய்திகள் இல்லை.
மாதவி சிலப்பதிகாரத்தில் பெரிதும் பேசப்படவேண்டிய தனித்துவம் மிக்கதொரு பாத்திரப் படைப்பு. இந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்த மாதவிக்கான பகுதிகளை, அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் சிறப்பாகப் பூரணப்படுத்தியிருந்தார். அதிலும், கோவலனின் பாடலைக் கேட்டு, மாதவி சந்தேகப்படும் போது அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நாடகத்தில், மாதவியின் நாட்டியப் பகுதி போதுமானதா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது. இந்திர விழாவில் மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற ஆடற்கலைச் சிறப்பின் உச்சம். எனவே, பார்வையாளர்கள், மண்டபத்தை விட்டு வெளியேறும்போது கண்ணகியின் சீற்றத்தை மட்டுமல்லாமல், மாதவியின் ஆட்டத்தையும் நெஞ்சில் சுமந்து செல்லக்கூடியதாக
விறுவிறுப்பான ஒரு நடனத்தைக் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது அதில் இடம் பெறவைத்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு நமக்கு வருகிறது.
பாண்டிய மன்னனும், பாண்டிமாதேவியும் அரண்மனையில் நடன நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியிலும், கண்ணகி வழக்குரைக்கும் போதும், பாண்டியன் உயிர் துறக்கும் போதும், பாண்டிய மன்னனின் நடிப்பு அருமையாக இருந்தது. பாண்டிமாதேவியின் கண் அசைவும், முகபாவமும், நடையழகும் மிகச் சிறப்பாக இருந்தன. இரண்டு பாத்திரங்களையும் ஏற்றிருந்தவர்கள் அந்தப் பாத்திரங்களின் கனதியை நன்கு உணர்ந்து, உள்வாங்கி, வெளிப்படுத்தியிருந்தார்கள்.
சிலப்பதிகாரத்தில் வில்லன் பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அரண்மனைப் பொற்கொல்லனே அந்த ஒரேயொரு வில்லன். அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பொருத்தமானவராகவே இருந்தார். தனக்குள்ள சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, ஒரு விடயத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சற்று நகைச்சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஊட்டக் கூடியவிதமாக அவரின் உடல் மொழிகள் சில இடங்களில் வெளிப்பட்டமை பொருத்தமாக இருக்கவில்லை. “கோவலன் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவனை மரண தண்டனைக்கு ஆளாக்கிவிடவேண்டும், அதன்மூலம், தான் களவு செய்த சிலம்பைத் தனக்கே சொந்தமாக்குவதுடன், தனக்கு வரக்கூடிய உயிராபத்திலிருந்து தப்பிக்கொள்ளவும் வேண்டும்” என்று நன்கு திட்டமிட்டுத் தன் பேச்சாலும், செயலாலும் இயங்கிக்கொண்டிருக்கும் பொற்கொல்லனது மகா வில்லத்தனத்தைப் பார்த்து, பார்வையாளர்களின் உள்ளங்களில் அவன்மீது கடுமையான கோப உணர்ச்சி மட்டுமே எழவேண்டும். அவரைப் பார்க்கும்போது யாருக்கும் ஒரு சிறு புன்னகை வருவதற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதுதான் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம்.
நாடகத்தின் காட்சிகள் நகரும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தன. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைக் களங்கள் நமது மனக்கண்களில் தோன்றுவதைப்போலவே அப்படியே மேடையில் காட்சியமைப்புகள் அமைந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பாக என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மேடையில் பின்னணிக் காட்சிகள் அழகான வண்ணங்களில் மிகவும் நேர்த்தியாக இருந்தன. இசையமைப்பு இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னுமளவுக்கு அருமையாக இருந்தது. காட்சியமைப்பும், இசையமைப்பும் பெரும்பாலும் எல்லாக் காட்சிகளிலுமே, உயிரோட்டத்துடன், மிகவும் அருமையாக இருந்தமை பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது.
இன்றைய சமூகத்திற்கு, சிலப்பதிகாரத்தை, அதன் உண்மைத் தன்மைகளை அப்படியே உணர்த்தும் வகையில், உயிரோட்டமுள்ள காட்சிகளாக வெளிக்கொணர்ந்தமை ஒரு சாதனையே!
சிலப்பதிகாரம் என்ற அந்தச் சிறப்பான காப்பியத்தில் உள்ள முக்கியமான எந்த காட்சியும் நழுவி விடக்கூடாது என்றும், மூலக் காப்பியத்தின் செய்திகளுக்கு எந்த வழுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் மிகவும் கவனமாகவும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், இயன்றவரையில், அக்கறையெடுத்து இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் அடங்கியதாக இந்தப் படைப்பை ஆக்கியளித்திருக்கிறார்கள். அத்துடன், எண்பதுக்கு மேற்பட்ட கூத்து மெட்டுப் பாடல்களின் ஊடாக, இந் நாடகம் நகர்த்திச் செல்லப்பட்டிருகிறது என்பதும் ஒரு வியத்தகு செயற்பாடாகும்.
நாற்பதிற்கும் மேற்பட்ட நடிகர்களும், இருபதிற்கும் அதிகமான இசை, வாத்திய மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களும் இந்த நாடகத்தில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பின் உச்சத்தில் முக்கில் விரல் வைத்து நிற்கின்றோம். இத்தனை பேரையும், அதுவும் இந்தநாட்டில்…..எப்படி? இதுவும் ஒரு சாதனையே…..உண்மையில் இதுதான் பெரிய சாதனை!
இந்த நாடகத்தில், பங்குபற்றி, தமது பாத்திரங்களை உணர்ந்து, அதற்கான பயிற்சிகளிலும், ஒத்திகைகளிலும்,
ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இறுதியில் எல்லோரும் பெருமைப்படும்படியாக நடித்த நடிகர்கள், பண்பட்ட பின்னணிப் பாடகர்கள், திறமையான இசைக் கலைஞர்கள், மிகச் சிறந்த காட்சியமைப்பு விற்பன்னர்கள், கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர்கள், அனுபவம் மிக்க ஓலி, ஓளிக் கலைஞர்கள் என்போருடன், அக்கறை யோடு செயற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய எல்லோரும் விருப்புடன் உவந்தளித்த பங்களிப்பின் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பியத்தை, மேடையிலே வெற்றிகரமாக உலவவிட்டுச் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை இதன் வெற்றி நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது.
இதனை எழுதித் தயாரித்தவரான பாரதி பள்ளி நிறுவனரும், பிரபல நாடகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன் அவர்களையும், இதனை நெறியாள்கை செய்திருந்த பகீரதி பார்த்திபன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இத்தகைய சிறப்பான படைப்புக்காக அவுஸ்திரேலியத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லோரதும் நன்றி கலந்த பாராட்டுக்கு இவர்கள் எல்லோரும் உரித்துடையவர்கள்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” ஆகிய மூன்று பெரும் அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.
இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு கலைப் படைப்பைப் பார்க்கக் கிடைத்த பாக்கியசாலிகள். பார்க்காதவர்கள், பார்க்கக்கூடிய இடத்தில் மீண்டும் இந்த நாடகம் மேடையேற்றப்படுமானால், தவறாமல் சென்று பார்த்து மகிழுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
வாழ்க தமிழ், வாழ்க சிலம்பின் புகழ்!