(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)
-தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு விடயமாக இந்தியப் பிரதமர் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வண்ணம் இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற தனது நம்பிக்கையை-எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா இராஜதந்திர ரீதியாக இதனைவிட இப்போதைக்கு இதற்குமேல் எதனையும் செய்யாது; செய்யவும் முடியாது.
இலங்கையின் அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறும்படி அமுல்படுத்தப்படவேண்டும் என்ற கூற்றில் 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையின் அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிறைவேற்றப்பெற்ற 13 ஆவது மற்றும் 16 ஆவது திருத்தங்களும் உள்ளடங்கியுள்ளன என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தமது எதிர்கால அரசியலைத் திட்டமிடவேண்டுமே தவிர, சும்மா வெறுமனே நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் உச்சாடனம் பண்ணுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வில் இந்தியாவின் தலையீட்டை ஒரு காலகட்டத்தில் ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என வர்ணித்து, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்து, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மூர்க்கமாக எதிர்த்த ஜே.வி.பி யைப் பிரதான-தலைமைக் கட்சியாகக்கொண்ட தேசிய மக்கள் சக்தி (என் பி பி) அரசாங்கத்தின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்-தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அரசியல் ரீதியாக உணர்ந்துகொண்டு இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் இராஜதந்திரரீதியாக நடந்துகொள்கிறாரென்றால், இலங்கைத் தமிழர்கள் அதனைவிடவும் அதிகமாக இந்தியாவை அனுசரித்துப் போவதே அரசியல் மதியூகம் நிறைந்தது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
அதனடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் அரசியற்பிரதிநிதிகள் பின்வரும் நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளவேண்டும்.
*தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்ததையும், இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராகப் போர் தொடுத்ததையும் தவறு என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
*இந்தியா மீது விரல் நீட்டிக் கதைப்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
*தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அவர்களது அரசியல் சித்தாந்தத்தையும் இந்திய அரசாங்கங்கள் எதுவாயினும் அவற்றின் கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையினரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் தமது ‘புலி சார்’ உளவியலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும்.
*13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அதன் முழுமையான அர்த்தத்தில் அமுல் செய்யப்படுவதை ஒற்றைக் கோரிக்கையாக முன்வைத்து அதனை இனியும் காலம் தாழ்த்தாது முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யத் தூண்டும் அரசியல் அழுத்தங்களை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் மீது சமகாலத்தில் பிரயோகிக்கக்கூடிய வினைத்திறன் மிக்க அரசியற் செயற்பாடுகளில் இறங்க வேண்டும்.
கடந்த 14.11.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்கு தமிழர்களால் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சிகளாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (எட்டு உறுப்பினர்கள்) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-01 உறுப்பினர்) ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (01 உறுப்பினர்-ரெலோ) உள்ளன. சுயேச்சையாக வட மாகாணத்தில் இருந்து தெரிவான மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளார். இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்ந்த கட்சிகளின் மீதும் வைக்கப்படக்கூடிய விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குமப்பால் இவர்களே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அங்கீகாரம் பெற்றவர்கள் என்ற அரசியல் பிரதிநிதித்துவ அடையாளத்தைச் சுமந்து நிற்கிறார்கள்.
இதிலே சுயேச்சைக் குழு உறுப்பினரைத் தவிர்த்துப் பார்த்தால், கட்சிகள் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும்-அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுமே (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தனிக்கட்சிகளாக உள்ளன. ‘ரெலோ’ வும் பங்காளி கட்சிகளிலொன்றாகவுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஒரு கூட்டமைப்பாக (Aliance) உள்ளது. இந்த மூன்று கட்சிகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாத கட்சி. மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா பேசாமல் இருந்தால் அதனால் மகிழ்ச்சி அடையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைவராகக் கொண்ட கட்சி. எனவே அப்படிப்பட்ட கட்சியைச் சேர்த்துப் பிடித்து 13 ஆவது திருத்தம் பற்றிப் பிரஸ்தாபிப்பது சாத்தியமில்லை. அது பலனளிக்கவும் மாட்டாது. அதனைச் சேர்த்துப் பிடிப்பது வேலியால் போன ஓணானை வேட்டிக்குள் பிடித்துக் கட்டியதற்குச் சமமாகும்.
பாராளுமன்றத்தில் மீதியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே அவற்றின் மீது வைக்கக்கூடிய பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குமப்பால் 13 ஆவது திருத்தத்தை ஒற்றைக் கோரிக்கையாக முன்வைத்து ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுவதற்கு ஓரளவு உடன்பாடான கட்சிகளாகும். ஆனால் அதனை அவர்கள் வினைத்திறனுடனும் உண்மையான ஈடுபாட்டு மற்றும் அர்ப்பணிப்புடனும் செயற்பட முன் வருகிறார்களில்லையென்பதே இப்போதைய களநிலையில் தமிழ் மக்களுக்குரிய மிக பாரிய பின்னடைவாகும்.
எனவே, இவ்விரு கட்சித் தலைமைகளிடமும் இப்பத்தி வினயமாக வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் தன்னலம்-தன்முனைப்பு-தற்பெருமை எல்லாவற்றையும் களைந்து தமிழ் மக்களின் எதிர்கால நலனை முன் வைத்து இப்போதாவது மேலே முன்மொழியப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கக் களமிறங்குங்கள் என்பதே. இல்லையேல் வரலாறு உங்களைச் சபிக்கும்.