— வீரகத்தி தனபாலசிங்கம் —
2024 ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரா குமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன.
கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. இதுகாலவரை இலங்கையை ஆட்சி செய்த பாரம்பரியமான அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவர் நாட்டின் அதியுயர் பதவிக்கு மக்களால் தெரிவானார். முதற்தடவையாக இடதுசாரிக்கட்சி ஒன்று எமது நாட்டில் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது.
1980 களின் பிற்பகுதியில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கம் ஜனதா விமுக்தி.பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தலைமறைவாகச் செல்லவேண்டியிருந்த ஒருவர் 35 வருடங்களுக்கு பிறகு அதே பிரேமதாசவின் மகனை தோற்கடித்து நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, அரச தலைவராக, அரசாங்கத் தலைவராக, முப்படைகளினதும் பிரதம தளபதியாக வந்திருக்கிறார் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்து கவனத்தை ஈர்த்தது.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத சாதனைகளைப் படைத்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான நான்கரை தசாப்தங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் முதற்தடவையாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க கட்டாயமான ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் ஐம்பது சதவீத வாக்குகளைப் பெறாமல் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற புதிரான பெருமையையும் திசாநாயக்க தனதாக்கிக் கொண்டார்.
ஜனாதிபதியாக கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் பதவியேற்ற பிறகு திசாநாயக்க தனது அரசாங்கத்திடம் நாட்டு மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்தவராக அதிசயங்களை நிகழ்த்துவதற்கு தான் ஒன்றும் மந்திரவாதி இல்லை என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் வேறு முக்கிய தலைவர்களும் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு மக்களிடம் தாங்கள் கேட்கவில்லை என்று கூறினார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தியிடம் அதிசயங்களை எதிர்பார்த்தவர்களாக நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கி அதன் தலைவர்களே பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
வடக்கு,தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எந்த வேறுபாடும் இன்றி சகல மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில் ஒன்றைத் தவிர ஏனையவற்றில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியது. பாரம்பரியமாக தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தில் கூட தேசிய மக்கள் சக்தியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து பல்வேறு வகையான அவதானிப்புகள் இருந்தாலும், தென்னிலங்கையில் என்றாலென்ன, வடக்கு, கிழக்கில் என்றாலென்ன பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்திவந்த அரசியல் கட்சிகள் மீதான மக்களின் கடுமையான வெறுப்பே அதன் வெற்றிக்கு பிரதான காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையில் இன்று பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்து போயிருக்கின்றன. பழைய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது ஆட்சியமைப்பதற்கு அல்ல, வலுவான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கே மக்களிடம் வாக்கு கேட்ட ஒரு பரிதாப நிலையைக் காணக்கூடியதாக இருந்தது.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, அவை மீண்டும் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றனவே தவிர, அரசாங்கத்தின் மீது உருப்படியான விமர்சனங்களை முன்வைக்க அவற்றினால் முடியவில்லை. அரசாங்க உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் தொடர்பிலான சர்ச்சைகள் போன்ற மக்களுக்கு பெருமளவில் அக்கறையில்லாத விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
ஆனால், அரசியல் ரீதியில் எந்த சவாலைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லாத அளவுக்கு மிகவும் பலம்பொருந்தியதாக விளங்கும் அரசாங்கம் ஆரம்பக்கட்டத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதுவும் குறிப்பாக நூறுக்கும் அதிகமான நாட்கள் செயற்பாடுகளின் அடிப்படையில் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்று மதிப்பிடுவது பொருத்தமானதல்ல.
ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்களுடன் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் உடனடியாக அதனிடமிருந்து பயன்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அலசரப்படுவதில் நியாயம் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியின் விளைவாக இன்று நாட்டின் சனத்தொகையில் சுமார் கால்வாசிப்பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய உணவுப் பொருடகளின் விலைகள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. ஆனால், அதை மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று வியாக்கியானம் செய்யமுடியாது. ஆனால், பெரும்பாலும் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத பெருவாரியான வாக்குறுதிகளை ஜனாதிபதி தேர்தல் காலங்களில் வழங்கியதனால், அவற்றை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற தாமதத்தின் விளைவான நெருக்கடிகளுக்கு அவர் முகங்கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
ஆனால், அரசாங்கத்துக்கு குறைந்தபட்சம் ஒரு வருடகால அவகாசத்தையாவது கொடுக்கவேண்டும். முன்னைய அரசாங்கங்களின் தவறான ஆட்சிமுறையின் விளைவாக ஏற்பட்ட பாதகங்களை புதிய அரசாங்கத்தினால் குறுகிய காலத்திற்குள் சீர்செய்துவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை, பழைய அரச இயந்திரத்தை வைத்துக்கொண்டு ஆட்சிசெய்வதில் உள்ள சிக்கல்களை அரசாங்க தலைவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக்கொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் தீர்மானங்களுக்கு இசைவான முறையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் செயற்படத் தயங்குகிறார்கள் என்றும் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமே அவர்கள் இன்னமும் செயற்படுகிறார்கள் என்றும் அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.
முன்னர் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதூகாப்பதற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய தாங்கள் இப்போது அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது என்று அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி கடந்த வாரம் கூறியது கவனிக்கத்தக்கது.
ராஜபக்சாக்களின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக தொடங்கிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ‘ படிப்படியாக அரசியல் அதிகார வர்க்கம் முழுமைக்கும் எதிரான ஒரு அமைதிவழி அரசியல் புரட்சியின் வடிவத்தை எடுத்தது. முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டிநின்ற அந்த கிளர்ச்சியின் சுலோகங்களை முன்னிலைப்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய தேசிய மக்கள் சக்தி இறுதியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஆனால், பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு பல தசாப்தங்களாக சேவை செய்த அரசு இயந்திரத்தை பயன்படுத்தி முறைமை மாற்றத்தையோ அல்லது புதிய அரசியல் கலாசாரத்தையோ கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை இப்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அதன் வெளிப்பாடேயாகும்.
மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைகளில் ஆட்சிக்கு வருபவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் கடுமையான கண்காணிப்பின் கீழ்தான் அரசாங்கத்தை நடத்த வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மெத்தனமாக நடந்து கொண்டாலும் கூட, மக்கள் ஆட்சியாளர்களின் நடத்தைகள் குறித்து விழிப்புடையவர்களாக இருக்கிறார்கள். அதனால் தேசிய மக்கள் சக்தி மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் நீண்ட தாமதத்தை காட்டினால் அதை மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. முன்னைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறாமல் நடந்துகொண்டதன் விளைவுகளை மக்களுக்கு இடையறாது சுட்டிக்காட்டிய வண்ணம் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி பொறுப்புக்கூறுவதில் அதற்கு இருக்கும் கடப்பாடு தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியிருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுத்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையே ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கமும் தொடர்ந்து பின்பற்றுகிறது. அது குறித்து விக்கிரமசிங்க உள்நாட்டில் மாத்திரமல்ல, இந்தியாவிலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மக்களுக்கு பாதகமாக அமைந்த நிபந்தனைகள் குறித்து சர்வேதச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக திசாநாயக்க தேர்தல் காலங்களில் கூறியிருந்தாலும், அது விடயத்தில் அவரால் உருப்படியாக எதையும் செய்யமுடியவில்லை. முன்னைய அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதை தவிர தற்போதைய சூழ்நிலையில் தனக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறானால், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை எப்போது அவர் நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பது முக்கியமான ஒரு கேள்வி.
இது இவ்வாறிருக்க, புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரப் போவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாகவும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதி அளித்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 — 2019) முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கையுடன் இடையில் கைவிடப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவு செய்யப்போவதாக ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஆனால், பதவிக்கு வந்த பிறகு அதைப்பற்றி அவர் பேசியதை பெரும்பாலும் காணவில்லை. ஆனால், முன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான நாளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அரசியலைப் பொறுத்தவரை, மூன்று வருடங்கள் என்பது ஒரு நீண்டகாலமாகும். அந்த காலப்பகுதிக்குள் இடம்பெறக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் அரசியல் நிலைவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடும். பெரும்பாலும் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக்காலத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே புதிய அரசியலமைப்பை கொண்டு வந்திருக்கின்றன.
இலங்கையில் சுதந்திரத்துக்கு பிறகு இரு தடவைகள் புதிய அரசியலமைப்புகள் கொண்டுவரப்பட்டன. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 முற்பகுதியில் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெறாமல் இருந்திருந்தால் அதற்கு முன்கூட்டியே அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடும்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. 47 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் அந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிம்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பயன்தரவில்லை.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த எந்த ஜனாதிபதியும் அதை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் மேலும் ஒரு வருடகாலம் கூடுதலாக அதிகாரத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலையுடன் பதவியில் இருந்து இறங்கினார்.
தனது முதலாவது பதவிக்காலத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக்காலத்தில் தனது அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தார். அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறவில்லை. அவரும் தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரங்களை அதிகரிக்க திருத்தத்தை கொண்டுவந்தார். ஆனால் , இறுதியில் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் அவர் நாட்டைவிட்டு தப்பியோடினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் மாத்திரமே ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஓரளவு குறைப்பைச் செய்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதில் ஒருபோதும் மானசீகமான நாட்டத்தைக் காட்டவில்லை.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கக்கூடிய பாராளுமன்ற பலத்தைக் கொண்டிருந்தவர்கள் அதை ஒழிக்க விரும்பவில்லை. அதை ஒழிக்கவேண்டும் என்று விருப்பியவர்களிடம் அதைச் செய்வதற்கான பாராளுமன்ற பலம் இருக்கவில்லை.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் விடுவதற்கோ அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காமல் விடுவதற்கோ எந்த காரணத்தையும் கூறமுடியாது. வேறு எந்த கட்சியையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான பலம் பாராளுமன்றத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கமும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லையானால் அதற்கு பிறகு எவராலும் அதைச் செய்யமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
மூன்று வருடங்கள் கடந்துபோய்விட்டால் தற்போதைய ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பதவிக்காலங்களின் இறுதிப்பகுதி வந்துவிடும். அப்போது அடுத்த தேர்தல்கள் பற்றிய அக்கறை ஆளும் கட்சிக்கு வந்துவிடும். அதனால் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் நோக்கத்திலும் தொய்வுகள் ஏற்பட்டு விடலாம். அதனால் அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முற்பகுதியில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை துரிதமாக முன்னெடுப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான செயன்முறையாக இருக்கும்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்த நான்காவது ஜனாதிபதியாக திசாநாயக்க விளங்குகிறார். கடந்த செப்டெம்பரில் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபோது ஜே.வி.பி.யின் சில தலைவர்கள் இலங்கை மக்கள் தங்களது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட தானே இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பார் என்று நம்புவதாக கூறினார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு இந்திய செய்தியாளர் அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கேட்டபோது “அவர்கள் அதை ஒழித்த பிறகு என்னை வந்து சந்தியுங்கள்” என்று கூறினார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி பதவிக்கு வந்த பிறகு அதை காப்பாற்றாமல் மட்டுமீறிய அதிகாரங்களை அனுபவித்த ஜனாதிபதிகளின் வரிசையில் அநுரா குமார திசாநாயக்க இணைந்து கொள்ள மாட்டார் என்று நம்புவோமாக.