— அழகு குணசீலன் —
திருகோணமலை மாவட்ட என்.பி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா ஜே.வி.பி.யின் முக்கிய புள்ளியும், மத்திய குழு உறுப்பினராகவும் இருப்பவர். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் அபிவிருத்தி குழுத் தலைவருமான அருண் அண்மையில் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
“தமிழ்த் தரப்பு யார்……?” என்பது அருணின் கேள்வி.
இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும், செய்த கட்சிகளின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை. முண்டியடித்து செய்திகளுக்கு “அதிரடி” அடைமொழியை தேவையற்றவகையில் செருகிக்கொள்ளும் ஊடகங்களும் வசதிகருதி மறந்துவிட்டன போலும்.
இந்த கேள்வியின் பின்னணி என்ன?
இதன் மூலம் பிரதி அமைச்சர் தமிழ்த்தேசிய இனத்திற்கு சொல்ல வருகின்ற செய்தி என்ன….?
தமிழ்மக்கள் என்.பி.பி. கட்சியை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமாக ஆதரித்திருக்கிறார்கள், நாங்கள் தான்/ நாங்களும் தான் தமிழ்த் தரப்பு என்று சொல்ல வருகின்றாரா அருண்…..?
இல்லை! இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய தரப்பை விடவும் அதிக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை என்.பி.பி. கொண்டுள்ளது, அதுவும் ஜனாதிபதியின் வார்த்தைப் பாணியில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளை பிரதிநிதித்துவம் செய்கிறோம், நாங்களே ஏகபோக தமிழ்த் தரப்பு என்று சொல்ல வருகின்றாரா….?
துரதிர்ஷ்டவசமாக அருண் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. கேள்வியை மட்டும் கேட்டு தொக்கி விட்டுள்ளார். இங்கு “இலங்கையர்” கோட்பாட்டை எல்லா இடங்களிலும் மனனம் செய்து பேசுபவர் “தமிழ்த் தரப்புக்கு” உரிமை கோருகின்றாரா….? அப்படியானால் இலங்கையர் கோட்பாட்டில் இல்லாத – உள்ளடக்கப்படாத அடையாள அரசியலின் “தமிழ்த் தரப்புக்கு” அருண் உரிமைகோருவது ஒரு பெரும் அரசியல் முரண்நகையாக இல்லையா?
“……. தூய சிறிலங்கா என்ற வேலைத்திட்டம் அனைத்து இலங்கையர்களுக்குமானது. எனவே இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் மதம் அல்லது இனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை…..” .
இது……,
தூய சிறிலங்கா வேலைத்திட்ட 18 நிபுணர்களை கொண்ட ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லீம் சமூகங்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது குறித்த ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்ந ஜெயதிஸ்ஸ அளித்த பதில்.
இது பற்றி என்.பி.பி. யின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான புதிய தோழர்களிடம் உள்ள பதில் மௌனமே. தென்னிலங்கை அநுர அரசியல் அலையில் அடிபட்டு வடக்கு கிழக்கில் தற்செயலாக கரை ஒதுங்கியவர்கள் இந்த எம்.பிக்கள். கடந்த காலங்களில் அரசாங்க ஆதரவு தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் சிறுபான்மையினர் விரோத 1972, 1978 , அரசியல் அமைப்புக்கள் மற்றும் இருபதாவது திருத்தத்திற்கு விசுவாசத்துடன் வாக்களித்தது போன்று தான் புதிய அரசியலமைப்பு வந்தாலும் இவர்களும் வாக்களிக்கப் போகிறார்கள்.
159 பேரைக் கொண்ட அரசாங்க தரப்பில் 9 பேர் மட்டுமே ஓரளவு அரசியல் அனுபவம் கொண்டவர்கள். அதிலும் இதுவரை ரில்வின் சில்வாவும், மூன்று, நான்கு அமைச்சர்களுமே பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் வாய்திறந்து இருக்கிறார்கள். மற்றைய 150 பேரும் கைகளை உயர்த்துவதற்கு தயாராக இரண்டு கைகளுடன் பின்வரிசையில் காத்திருக்கிறார்கள்.
என்.பி.பி. அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களின் பழைய திட்டங்களுக்கு புதிய லேபல் ஒட்டி பிரபல்யம் செய்யும் இந்த கிளீன் சிறிலங்கா திட்ட நிபுணர்கள் குழுவில் சிறுபான்மை தேசிய இனங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை “இலங்கையர்” என்ற பேரினவாத மேலாதிக்க கோட்பாட்டின் மூலம் வழக்கமான பாணியில் அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.
இலங்கையின் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பை நிராகரித்து சிறுபான்மை இன, மத, கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை சுத்தம் செய்யும் திட்டமா? “கிளீன் சிறிலங்கா” என்ற கேள்வி எழுகிறது. கடந்த நூறு நாட்களில் இலங்கையின் பன்மைத்துவ சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு சர்வரோக நிவாரணியாக என்.பி.பி.அரசிடம் இருக்கும் புட்டி மருந்து “இலங்கையர்” என்பதாகவே இருக்கிறது. இது கடந்த கால பேரினவாத மேலாதிக்க அரசாங்கங்கள் பயன்படுத்திய மாற்று அடையாளங்களையும், சிந்தனைகளையும் அழிக்கின்ற “சமூகக்கொல்லி” மருந்துகளை விடவும் மிகவும் மோசமான நச்சுத்தன்மை செறிவு கொண்டது.
இந்த நஞ்சை “இலங்கையர்” என்ற கோதாவில் எல்லோரும் விழுங்கிக் கொள்ளுங்கள் என்று என்.பி.பி.அரசாங்கம் கோருகிறது. பாராளுமன்றத்தில் இடம் பிடித்துள்ள தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் ஜே.வி.பி. ரில்வின் சில்வாவினதும், ஜனாதிபதி, மற்றும் முக்கிய சில அமைச்சர்களினதும் கருத்துக்களை அதன் தாற்பரியம் புரியாது, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்கள் எதுவும் இன்றி அரைத்தமாவை கொழும்பில் இருந்து பிராந்தியங்களுக்கு கொண்டு சென்று மீள அரைக்கிறார்கள். உண்மையில் இவர்கள் தமிழ், முஸ்லீம் தரப்பாக, அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல். அடையாள அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யாத நிலையில், இவர்கள் தமிழ் தரப்பாகவோ, முஸ்லீம் தரப்பாகவோ அல்லது மலையக மக்கள் தரப்பாகவோ தேர்தல் வெற்றியைக் கொண்டு உரிமை கோர முடியுமா?
ஆகக் குறைந்தது, கடந்த 75 ஆண்டுகளை நாம் திரும்பி பார்த்தாலும் அரசாங்க ஆதரவு பாராளுமன்ற அரசியல் வாதிகளை தமிழ் தரப்பாக மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு பொதுப்போக்கு தமிழர் அரசியலில் இருந்துள்ளது. இதற்கு அன்று ஜீ.ஜீ.பொன்னம்பலம் முதல் கே.டபிள்யூ. தேவநாயகம் வரையான தமிழ் அரசியல் வாதிகளையும், இன்று டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன் மற்றும் சந்திரகாந்தன், வியாழேந்திரன் வரையும் உதாரணம் காட்டமுடியும்.
இது வெறுமனே தேர்தல் வாக்களிப்பு பிரதிநித்துவ முறைக்கு மாறாக மக்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான மதிப்பீடு. வாக்களித்த – பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக பெரும்பான்மை பாராளுமன்றம் தீர்மானிக்கும் போது அதற்கு ஆதரவாக செயற்படுவதை அடிப்படையாகக்கொண்ட நிலைப்பாடு சார்ந்தது. அல்லது தட்டிக்கேட்க முடியாத பலவீனமான தங்கியிருத்தல் கொழும்பு அரசியல் சார்ந்தது.
அதே வேளை தமிழ்த்தேசிய அரசாங்க எதிர்ப்பு அரசியலிலும் மக்கள் எப்போதும் உடன்பாட்டுடன் இருந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாகவும் தமிழ்த்தேசிய அரசியலும் செயற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த கடந்த கால அரசியல் அங்கீகாரமானது அடையாள அரசியல் அபிலாஷைகளை முதன்மை படுத்துவதாகவே இருந்துள்ளது. இதனால் என்.பி.பி. யின் தேசிய இனங்களின் அடையாள நிராகரிப்பு அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் என்.பி.பி. “தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்தரப்பாக” இருக்க முடியுமா? அருண் எழுப்புகின்ற கேள்வியின் பின்னால் தொக்கி நிற்கின்ற உரிமை கோரல் காலத்திற்கு ஏற்றதா?
கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களின் போதும் பாராளுமன்றத்திற்கு வெளியிலான எண்ணற்ற தேசிய, பிராந்திய, சர்வதேச நகர்வுகளிலும் பேச்சுக்களிலும் தமிழ்த் தரப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தமிழர் பிரதிநிதித்துவங்களே “தமிழ்தரப்பு” என்ற அங்கீகாரத்தை பெற்றுவந்துள்ளன. ஒரு ஜனநாயக தேர்தல் முறையிலான அரசியல் பிரதிநிதித்துவ முறையில் இது சரியா? தவறா? என்பது விவாதத்திற்குரியது. இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ்த்தேசியத்திற்கு அப்பாற்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும், மலையக கட்சிகளும் தொடர்ந்தும் தங்கள் எதிர்வினையை காட்டி வந்துள்ளன. ஆனாலும் சர்வகட்சி மாநாடுகள் போன்றவற்றை தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த முக்கிய பேச்சுக்களில் இவர்களின் பங்கு பற்றுதல் இருக்கவில்லை.
வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களை பெற்றுள்ளன. தமிழரசு:08, தமிழ் காங்கிரஸ்:01, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு:01. இதற்கு வெளியில் ஒரு சுயேட்சை பிரதிநிதியும், சிறிலங்கா தொழிற்கட்சியைச்சார்ந்த ஒரு பிரதிநிதியும் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்தால் 12.
ஆளும்தரப்பான என்.பி.பி.யில் வடக்கு கிழக்கில் 7 உறுப்பினர்களும், ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரும் தமிழர்களாக இருக்கிறார்கள். யாழ்ப்பாணம்:03, வன்னி:02, திருகோணமலை:01, மட்டக்களப்பு:01. தேசியப்பட்டியல்:01. மொத்தம்:08. இது தனியாக தமிழரசுக்கட்சிக்கு சமனான தொகை. குறைந்தபட்சம் புள்ளிவிபரத்தில் 50:50.
ஆனால் என்.பி.பி.யின் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான பிரதிநிதிகளையும் கவனத்தில் கொண்டால் மலையகம், தென்னிலங்கையில் மேலும் ஐந்து பேர் உள்ளனர். நுவரேலியா கிருஷ்ணன் கலைச்செல்வி, மாத்தறை அமைச்சர் சரோஜா போல்ராஜ், பதுளை கிட்ணன் செல்வராஜ், மற்றும் அம்பிகா சாமுவேல். இரத்தினபுரி சுந்தரலிங்கம் பிரதீப். ஆக, வடக்கு கிழக்கிற்கு வெளியே என்.பி.பி. 05 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதன்படி என்.பி.பி. கொண்டுள்ள மொத்த தமிழ் பிரதிநிதிகள் 13.
தமிழ்த்தேசிய தரப்பு, அரசாங்க தரப்பு என்பனவற்றிற்கு வெளியே இன்னொரு தமிழ் தரப்பு – மலையக தமிழ் தரப்பு இருக்கிறது. சஜீத் அணியில் பழனி திகாம்பரம், வேலுச்சாமி ராதா கிருஷ்ணன், யு.என்.பியில் ஜீவன் தொண்டமான், மேலும் சஜீத் அணி தேசிய பட்டியலில் மனோகணேசன். ஏனவே மலையக தரப்பு எதிர்கட்சியில் 04 பேர் உள்ளனர்.
இந்த விபரங்களின்படி வடக்கு கிழக்கு தமிழ் தரப்பு: 12.
முழு இலங்கையிலும் ஆளும் தமிழ் தரப்பு : 13.
எதிர்க்கட்சிகளில் உள்ள மலையக தமிழ் தரப்பு: 04.
தனி ஒரு கட்சியாக “தமிழ் தரப்பு “தாங்கள் தான் என்பதை அருண் ஹேமச்சந்திரா சொல்லாமல் சொல்லியுள்ளார். இது தமிழரசுக்கட்சி தேர்தலின் பின்னர் கூறிவருகின்ற வடக்கு கிழக்கு மாவட்டங்களில் எல்லா மாவட்டங்களிலும் பிரதிகளை கொண்டுள்ளோம், தனித்து தமிழ் தரப்பாக எட்டு பேரைக் கொண்டுள்ளோம் என்ற எம் .ஏ. சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசாரின் சுய புலம்பலுக்கு ஒரு பதிலடியாக அருண் இந்த தமிழ் தரப்பு கேள்வியை எழுப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது.
என்.பி.பி. தமிழ் தரப்பில் 13 பேர் இருக்கிறோம் தமிழர்பிரச்சினைகளில் -இனப்பிரச்சினைக்கான தீர்வில் எங்களை தள்ளி வைக்க முடியாது என்பதையும் இதன் மூலம் தமிழ்த்தேசிய தலைமைகளுக்கு அருண் புரியவைத்திருக்கிறார் என்று கொள்ளலாமா? மறு பக்கத்தில் தமிழர்களுக்கு இருப்பது பொருளாதாரப்பிரச்சினை, தமிழர்கள் என்பது இனவாதம் இலங்கையர் என்பதே இலங்கைத்தேசியம் என்று கூறும் அவரது கட்சி அல்லது அவர் எப்படி தமிழ் தரப்புக்கு உரிமைகோரமுடியும்?.
“இலங்கையர்” அரசியலுக்கும் தமிழர் அடையாள ” சமஷ்டி” அரசியலுக்கும் இடையே இன்னொரு தரப்பாக மலையக தமிழ் தரப்பு உள்ளது. இவர்கள் இலங்கையர் இன, மத அடையாள அழிப்பு அரசியலை நிராகரிப்பவர்கள். அதேபோல் சமஷ்டியை மறுதலிக்காவிட்டாலும் ஒற்றையாட்சிக்குள் சமவுரிமைகளை – அதிகார பகிர்வை கோரிநிற்பவர்கள். ஆக, இன்றைய தமிழ் தரப்பு பாராளுமன்ற அரசியலானது ஒரு பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த தமிழ் தரப்பு மூன்று உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இந்த ஜதார்த்தத்தை புரியாமல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் “இலங்கையர்” பற்றி பேசுவது நடைமுறைச்சாத்தியமற்ற ஒரு வெற்று கோட்பாடு.
மறுபக்கத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிராகரித்து -கொழும்பில் அடவு வைத்து – அடையாளங்களை கரைக்கும் ஒரு தரப்புக்கு “தமிழ்த் தரப்பு” அரசியல் அந்தஸ்தை -உரிமை கோரும் அருண் ஹேமச்சந்திராவின் அரசியலையும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்கள் நிராகரித்து எதிர்கொள்ள வேண்டும்.
தேசிய இனங்களை அங்கீகரிப்பதும், அவற்றின் அடையாளங்களை பேணுவதற்கான வசதி, வாய்ப்புக்களையும், உரிமைகளையும் வழங்குவது ஒரு இடதுசாரி (?) அரசாங்கத்தின் ஆகக்குறைந்த பட்ச கொள்கையாகவாவது அமையாவிட்டால் “இலங்கையர்” என்பது இல்லாத ஒன்றுக்கான கற்பிதம். அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட என்.பி.பி. எம்.பிக்கள் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக மனித உரிமைகளுக்காக போராடவேண்டும். இல்லையென்றால் இவர்கள் இலங்கையர்களாக இருந்து விட்டு போகட்டும் அது அவர்களின் உரிமை. ஆனால் இவர்கள் தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ, தமிழ் தரப்போ இல்லை.