— அழகு குணசீலன் —
இலங்கையைப்போன்று 1991 இல் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தவேளை அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் மன்மோகன் சிங்கை அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சாராக அறிவித்தார். இந்திய தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியமைப்பதிலும், சீர்திருத்தங்களை செய்வதிலும் மன்மோகன் சிங்கின் பங்கு அளப்பரியது. இந்த காலகட்டத்தில் இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்றும், மூளை என்றும், சிற்பி என்றும் அழைக்கப்பட்ட மன்மோகன் சிங் 2024 டிசம்பர் 26ம் திகதி டெல்லியில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92.
இலங்கையின் இன்றைய நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மன்மோகன் சிங்கின் அரசியல் பாதையை, அணுகுமுறையை வாசிக்கவேண்டும். இந்தியாவில் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்திலும், இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி காலத்திலும் ஜே.வி.பி. முதலாவது 1971 ,ஏப்ரல் கிளர்ச்சியை மேற்கொண்டது. இந்திய இராணுவ உதவியுடன் சிறிமாவோ அதை தோற்கடித்தார்.
1983 இல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலை இனக்கலவரத்திற்கு பின்னணியில் ஜே.வி.பி. இருந்தது என்ற குற்றச்சாட்டு இன்றும், இன்னும் இருக்கிறது. ஜே.வி.பி. தென்னிலங்கையில் ஒரு அரசியல் நிறுவனமாக தமிழர்களை கலவர காலத்தில் பாதுகாத்தது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையை ஜே.வி.பி.மூர்க்கத்தனமாக எதிர்த்தது. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாதம் மைசூர் பருப்பு, பம்பாய் வெங்காயத்தையே விட்டு வைக்காது அடுப்படி வரை வந்தது என்றால் அதன் கொடூரத்தை-காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.
இன்று என்.பி.பி.யின் இரண்டு கைகளும் இந்தியாவை நோக்கி நீட்டப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாதம் என்ற போர்வையிலான தமிழர் எதிர்ப்பு வாதமும், அதனூடான உள்நாட்டு போரும், அதற்கு ஜே.வி.பி. வழங்கிய ஆதரவும் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இல்லையா? வெறுமனே ஊழல்களும், சட்டம் ஒழுங்கு பேணப்படாதது மட்டும் தான் காரணமா? இந்த இடத்தில் தான் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு சில விஷயங்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
1.1983 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைக்கு சமமானது 1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் இடம்பெற்ற வன்முறை. இரண்டுக்கும் பின்னால் அரசாங்கம் இருந்திருக்கிறது. பெரும்பான்மை இன,மதவாதிகள் இருந்திருக்கின்றனர்.
2. பஞ்சாப் – காலிஸ்தான் தனிநாடு கோரும் விடுதலைப்படைக்கு எதிராக இந்திராகாந்தி அரசாங்கம் மேற்கொண்ட யுத்தபிரகடனத்தில் இருந்து தமிழர் விடுதலை அமைப்புக்களின் தனி நாட்டிற்கான போராட்டத்திற்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன / ராஜபக்சாக்கள் மேற்கொண்ட யுத்த பிரகடனத்தை பிரித்து பார்க்க முடியாது.
3. இத்தனைக்கும் இடையில் சீக்கிய சிறுபான்மை பிரதிநிதியாக மன்மோகன் சிங் பிரதமராக நியமிக்கப்பட்டு சீக்கிய சிறுபான்மை தேசிய இனத்திற்கு ஒரு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதை யார் செய்தார்கள்? என்பது அரசியல் ஆர்வம் மிக்கது.
சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக போர்தொடுத்து, பொற்கோயிலை அழித்த காங்கிரஸ் அரசாங்கத்தின், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி செய்தார். எந்த சீக்கிய மெய்ப்பாதுகாவலர் சோனியாவின் மாமி இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றாரோ அந்தச் சமூகத்தை சேர்ந்த மன்மோகன் சிங்கை அவர் பிரதமராக்கி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சாதனை படைத்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஜின்னாவை பிரதமராக்க காந்தியால் கூட முடியவில்லை. அப்போது காலனித்துவ இந்தியாவில் – இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபில் 1932 இல் செப்டம்பர் 26 இல் ஒரு வியாபார குடும்பத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங். இந்தியா பிளவுபட்டபோது இந்திய பஞ்சாப் பக்கத்திற்கு மன்மோகன் சிங் குடும்பம் இடம்பெயர்ந்தது.
இப்போது இலங்கையின் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான கசப்பை என்.பி.பி.அநுரகுமார அரசாங்கம் எப்படி போக்கப் போகிறது. காங்கிரஸ் பாணியிலா? அல்லது ஒரு நாடு ஒரு தேசம், ஒரு சட்டம் மோடியின் அல்லது கோத்தபாயாவின் பாணியிலா?
இந்த வினாக்களுக்கான விடை தேடலில் ஜனாதிபதி மீது எழுந்துள்ள சந்தேகமே அவரை பொருளாதார விவகாரத்தில் அநுர விக்கிரமசிங்க என்றும், இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் அவரை அநுர கோத்தபாய என்றும் அழைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இவை வெறும் வார்த்தைகள் அல்ல இவற்றிற்கு பின்னால் ஒரு பரந்த இனவாத, மதவாத மேலாதிக்க அரசியல் இருக்கிறது.
மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ஏற்றது குறித்து தீவிரவாத, மிதவாத சீக்கியர்களிடையே இருவேறு கருத்துக்கள் உண்டு. இவை இலங்கை கொழும்பு அரசாங்கத்தில் அமைச்சர்களாக, இணக்க அரசியலுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் குறிப்பாக லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் போன்ற அரசாங்கத்தோடு தீர்வுக்காக ஒத்துழைத்தவர்களுக்கும் இருந்த “துரோகி” பட்டத்தில் இருந்து வேறுபட்டதல்ல.
இதில் வெளிநாடுகளில் வாழும் சீக்கிய டயஸ்போராவில் இருந்து வேறுபட்டதாக தமிழ் டயஸ்போராவை பெரிதாக வித்தியாசப்படுத்தியும் பார்க்க முடியவில்லை. என்றாலும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு அரசியல் இலக்குடன் செயற்பட்டவர்கள். ஆனால் மன்மோகன் சிங் போன்று ஒரு கணிசமான இன உறவுப்பாலத்தை அவர்களால் கட்டமுடியாமல் போனது துரதிஸ்டம்.
1982 முதல் 1985 வரை இந்திய ரிசேர்வ் வங்கியான -இந்திய மத்திய வங்கியின் தலைவராக இருந்த அனுபவமும், தாராள பொருளாதார கொள்கையிலும், லிபரல் அரசியலில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் சமூக, பொருளாதார, அரசியல் அறிஞரான மன்மோகன் சிங் இந்தியாவை ஒரு பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் நோக்கி நகர்த்த பெரிதும் உதவியது. இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தல்ல. தாராளபொருளாதாரக் கொள்கைமீதும், லிபரல் அரசியல்மீதும் வைக்கப்படுகின்ற கொள்கை சார், மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் இலாப விமர்சனங்களுக்கு சிங் முகம்கொடுக்கவேண்டியே இருந்தது என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி சமனாக சமூகங்களுக்கு இடையேயும், தனிநபர்களுக்கு இடையேயும் பங்கிடப்படவில்லை. இதில் இருந்து அநுரகுமார அரசாங்கமும் விடுபட முடியாது.
2004 இல் சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்ற நிலையில் சோனியா காந்தி பிரதமர்பதவியை ஏற்பதற்கு எதிராக ‘வெளிநாட்டவர், இத்தாலியர், கிறிஸ்த்தவர் ‘ போன்ற பல பிரச்சாரங்கள் எதிர்தரப்பால் முன்வைக்கப்பட்டன. அப்போது ஆச்சரியப்படத்தக்கவகையில் இந்தியப்பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி மன்மோகன் சிங்கை நியமித்தார். இதனால் அவர் “தற்செயல் பிரதமர்” என்று அழைக்கப்பட்டார்.” இந்திய வரலாற்றில் 13 வது பிரதமராக சிறுபான்மை சீக்கிய தேசிய இனத்தை சேர்ந்த, இந்துமதமற்ற சிங் பிரதமரானார். ஒரு தடவை அல்ல இரு தடவைகள் 2004-2014 வரை முழுமையாக ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்த பிரதமராக இந்தியாவை கட்டியெழுப்பினார். “இந்த நாட்டை நாங்கள் ஒரு போதும் ஒரு தற்செயல் பிரதமரிடம் ஒப்படைக்க மாட்டோம்” என்று எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தனர்.
2004 முதல் 2008 வரை பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்தவர் SANJAYA BARU. பின்னர் பிரதமருடனான தனது அனுபவங்களையும், அங்கு கட்சி தலைமைக்காரியாலயத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே இடம்பெற்ற இரு அதிகார மையங்களுக்கு இடையிலான போட்டியையும் தான் எழுதிய
“THE ACCIDENTAL PRIME MINISTER” என்ற நூலில் விலாவாரியாக எழுதியுள்ளார். இது பற்றி மன்மோகன் சிங் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடும் போது …..
“கட்சி தலைமைதான் அதிகார மையம், ஆனால் அரசாங்கமே கட்சியின் செயற்பாடுகளுக்கான சட்டரீதியான பொறுப்புக்கூறலை ஏற்கவேண்டும்” என்று குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இது அன்று பொதுஜன பெரமுனவின் கட்சி அதிகார மையத்திற்கும் ரணிலுக்கும், இன்று ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வாவின் அதிகாமையத்திற்கும் அநுரவின் அமைச்சரவைக்கும் நிலவும் உட்பூசலில் இருந்து வேறுபட்டதல்ல.
இலங்கையில் கோத்தபாய ஆட்சி ஸ்த்தம்பிதம் அடைந்த போது எப்படி ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் விபத்தினால் பிரதமராகி, ஜனாதிபதியானாரோ அப்படியான ஒரு அரசியல் விபத்தே சிங்கை பிரதமராக்கியது. இது ஒரு முற்று முழுதாக ஒப்பிட முடியாத ஒன்று எனினும் இலங்கை தொடர்பான இனிவரும் கருத்துக்களை விளங்கிக்கொள்ள அவசியமாகிறது. பாராளுமன்றம் பொதுஜன பெரமுன கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்தன. ரணில் விக்கிரமசிங்க சூழ்நிலையின் கைதியாக இருந்தார். பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ அதிகார பீடமும், பிரதமர், ஏன் ஜனாதிபதி அலுவலகமும் அதிகார மையத்தை வைத்து மோதிக்கொண்டன.
வீழ்ந்து கிடந்த இலங்கை பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துவதில் ரணில் விக்கிரமசிங்க மன்மோகன் சிங்கின் பொருளாதார மாதிரியையே பின்பற்றினார் என்று கூறமுடியும். தாராள பொருளாதார கொள்கையும், லிபரல் அரசியலும் பிராந்திய, சர்வதேச நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் உதவிகளை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக ஆனால் இயலுமானவரை விரைவாக கட்டி எழுப்ப அவர் முயற்சிகளை மேற்கொண்டார் .
கோத்தபாய அரசை விடவும் சர்வதேச நம்பிக்கையை பெறுவதற்கான அணுகுமுறையாகவும் இது அமைந்தது. இதனால்தான் என்.பி.பி. தேர்தல் மேடைகளில் எவற்றையெல்லாம் வெட்டி வீழ்த்துவோம் என்று சொன்னாலும் அவற்றில் எந்த முக்கிய மாற்றங்களையும் செய்யமுடியாத “மாற்றத்திற்கான” ஆட்சியாக உள்ளது. ஒரு வகையில் சொன்னால் இந்திய பொருளாதார மந்தத்தை நீக்க மன்மோகன் சிங் கடைப்பிடித்த அணுகுமுறையை ரணில் விக்கிரமசிங்க கையில் எடுத்தார் அந்த பாதையிலேயே அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கிறார். ஊழல், குற்றச்செயல்கள் போன்ற விவகாரங்கள் இதற்கு விலக்காகனவை.
சீக்கியர்களுக்கு எதிரான இனக்கலவரம், தீவிரவாதிகளுக்கு எதிரான பொற்கோயில் தாக்குதல் என்பனவற்றை ஒரு பக்கத்தில் வைத்து விட்டால் ,மன்மோகன் சிங் பிரதமராக நியமிக்கப்பட்டது இந்திய சமூகத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கையின் அநுரகுமார ஆட்சி “இலங்கையர்” தத்துவம் பேசுகின்ற இன்றைய சூழலில் ஐடென்ரிற்ரி – அடையாளம் குறித்து மன்மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கள் ஜனாதிபதி அநுரகுமார படிக்கவேண்டியவை.
JASDEEP SINGH RAJPAL என்ற பத்திரிகையாளர் ஒரு தடவை மன்மோகன் சிங்கை பார்த்து இப்படிக்கேட்டார்……..!
“உங்கள் பிரதமர் பதவி குறித்து சீக்கியர்கள் பெருமைப்படுகிறார்களா? அல்லது வெட்கப்படுகிறார்களா? எனது சீக்கிய நண்பர்கள் பலர் நீங்கள் ஒரு சீக்கியராக-அவர்களுள் ஒருவராக இருப்பதையிட்டு வெட்கப்படுகிறார்கள், வெறுப்பு கொண்டுள்ளார்கள்”.
” நான் ஒரு சீக்கியன் அத்துடன் இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கான போதுமான சுய அதிகாரத்தை கொண்டுள்ளேன் என நினைக்கிறேன்.”
“இது நான் சீக்கியராக இருப்பதில் பெருமைப்படுகிறேனா? இல்லையா? என்பதல்ல. எனது பாரம்பரியம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அந்த பாரம்பரியம் இந்தியாவின் பலமான பக்கம். இந்தியாவை பலப்படுத்தும் ஒன்று. ஆனால் 1984 இல் நடந்தது போன்ற ஒன்று மீண்டும் நடக்கக்கூடாது.” என்று பதிலளித்தார் மன்மோகன் சிங்.
மன்மோகன்சிங்கின் இந்த கருத்துக்குள் அநுரவின் என்.பி.பி. அரசாங்கத்தின் “இலங்கையர்” கோட்பாட்டிற்கு பதில் இருக்கிறது. இலங்கையர் என்ற அடையாளத்தை பலப்படுத்த முதலில் சமூகங்களின் பன்மைத்துவ அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இல்யேல் ஜனாதிபதி அவலை நினைத்து உரலில் இடிக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மாற்றங்கள் பற்றிய மன்மோகன் சிங்கின் கருத்தையும் என்.பி.பி. அறிந்திருப்பது நல்லது.
“இந்தியா போன்ற பல மொழி, பல்கலாச்சார சமூகக் கட்டமைப்பிலான ஒரு நாட்டில் மாற்றங்கள் என்பவை வசதியானவை அல்ல. ஒவ்வொரு கவனக்குறைவும், முன் யோசனையற்ற நடவடிக்கைகளும் அரசியல் அத்தியாயத்தில் உலகத்திலும், உள்நாட்டிலும் இமேஜை பாதிக்கக்கூடியவை. அதுமட்டுமின்றி சர்வதேச அரசியல் சுழற்சியில் இருந்து இந்தியாவை தூக்கி வெளியே வீசி விடக்கூடியவை”
இந்த ஒரேமாதிரியான பன்மைத்துவ சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பில், எதிர்பார்ப்புக்களுக்கும் அவற்றை பூர்த்தி செய்வதற்கான வசதிவாய்ப்புக்களுக்கும் இடையே இந்தியா குறித்து மன்மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கள் இன்றைய அநுர அரசின் இலங்கையர் கோட்பாட்டிற்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றன. கவனக்குறைவும், முன்யோசனையற்ற எந்த நகர்வும், குறிப்பாக சிறுபான்மை தேசிய இனங்கள் குறித்த நகர்வுகள் சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் சுற்றுப்பாதையில் இருந்து நாட்டை தூக்கி வீசிவிடக்கூடியவை.