இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கல்: ‘பந்து’ நெடுநாளாக இலங்கைத் தமிழர் கைகளில்தான்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-30)

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த அமுலாக்கல்: ‘பந்து’ நெடுநாளாக இலங்கைத் தமிழர் கைகளில்தான்.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-30)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் (16.12.2024) இந்திய விஜயம் மேற்கொண்ட நேரம் பார்த்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசை வற்புறுத்துமாறு கோரிக்கையொன்றை வைத்துக் கடிதம் எழுதினார்.

 இலங்கை ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 75 வருடங்களாக எத்தகைய சலனமும் இன்றி சமஷ்டித் தீர்வையே கோருகிறார்கள். எனவே அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது கூறிய ‘புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ‘புதிய அரசியல் சாசனம் ஒன்றில் நாங்கள் கேட்கின்ற சமஷ்டி கோரிக்கை உள்வாங்கப்படும்வரையில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதை அனைத்துத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

 இந்த மூன்று அறிவிப்புகளுமே இலங்கைத் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அல்லது அவர்களுக்குப் பூச்சுற்றுகின்ற ஏட்டுச் சுரக்காய் அரசியல் ஆகும். தம்முடைய – தமது கட்சியின் இருப்பை விலாசப்படுத்துகின்ற – விளம்பரப்படுத்துகின்ற வழமையான அரசியல் சித்து விளையாட்டுக்கள்தான் இவை. நாங்கள் சும்மா இருக்கவில்லை, இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எப்பொழுதும் விழிப்பாகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோமென்று காட்டுவதற்கான போலி எத்தனம்.

 இலங்கை அரச தலைவர்கள் இந்தியாவுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் இந்திய ராஜதந்திரிகள் – உயர்மட்டத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான அரசியல் அறிவிப்புக்களைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைக் குறி சுட்டுக் கொண்டுள்ள இக்கட்சிகள் அள்ளி இறைத்துவிடுவது வழமையான ஒரு சம்பிரதாயமாகவே நடைபெற்று வருகின்றன.

 இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட 1987 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான கடந்த 37 வருடங்களாகத் தமிழ் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தோழர் பத்மநாபா தலைமையிலான முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தவிர தனிநபராக நோக்கும்போது முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தைத் தவிர வேறு எந்த தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது தனிநபர் அரசியல் தலைவர்களோ இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கவேயில்லை.

 மாறாகத் தத்தம் சுயநலத் தேர்தல் அரசியல் தேவைகளுக்காக, 13 ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை அப்போதைய இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து குழப்பிய – இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவரும் பிரேமதாசவுக்கு முந்திய இலங்கை ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஒப்புதலுடன் பிரசன்னமாயிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர்மீது போர் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பக்கப்பாட்டு பாடிய இவர்கள்தான் இன்று 13 ஆவது திருத்தம் பற்றி உதட்டளவில் பிரஸ்தாபிக்கின்றனர். இது கடைந்தெடுத்த அரசியல் ஆசாட பூதித்தனம் ஆகும்.

 மேலும், சமஸ்டி பற்றி வெறுமனே உச்சரிப்பது தற்போதைய தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் நீரோட்டத்தின் தட்பவெட்ப நிலைகளைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கின்ற அரசியல் மதியீனம் ஆகும்.

 தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே நிலவும் இந்த நிலைமை அரசியல் யதார்த்தபூர்வமற்றதுமாகும். இது கோவணம் உரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது பட்டுவேட்டி பற்றிக் கதைப்பதுபோலாகும்.

 இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் இன்று ஏதோ ஒரு வழியில்-வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கொள்கை மற்றும் கருத்து முரண்பாடுகளையும் கடந்த காலப் பகைமையுணர்வுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படுவதை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக முன்வைத்து ஒரே புள்ளியில் இணைவது ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே நடைமுறை மார்க்கமாகும்.

 இதனையே இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் இன்னொரு கைச்சாத்தியான இந்தியாவும் நெடுங்காலமாக எதிர்பார்க்கிறது. பந்து நெடுங்காலமாக இலங்கைத் தமிழர்களின் கைகளிலேயே விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *