(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்கண்ட வயலில் விவசாயிகள் மனம் விரும்பி அன்போடு அழைத்து அளித்த விருந்தோம்பலைச் சுகித்து உண்டு அனுபவித்த கிறக்கத்துடன் கோகுலனும் அவனது மனைவியும் அன்று மாலை தம்பிலுவில் வீட்டுக்குத் திரும்பினர்.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் நீர்நிரம்பி வான் வழிந்தது போல கோகுலனின் உள்ளமும் உவகையால் நிரம்பி வழிந்தது. சேனைப்பயிர்ச்செய்கைக் காட்டிலும் வயல்வெளியிலும் வைத்துச் சமைத்துச் சாப்பிடும் அனுபவம் அரிதாகக் கிடைப்பதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். அந்த அனுபவம் ஒரு தனிரகம், அந்த உணவு ஒரு தனிருசி எனக் கோகுலன் தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தான்.
மறுநாள் திங்கட்கிழமை கோகுலன் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் சென்றிருந்தபோது அவனை மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரவேற்றது.
ஆம்! கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்திட்டம் சம்பந்தமாக அனுப்பப்பட்டிருந்த வரைபடங்கள், மதிப்பீடுகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் நிகழ்ந்துள்ளன என்பதுதான் அம்மகிழ்ச்சியான செய்தி.
நீர்ப்பாசனத் திணைக்கள தலைமைப் பணிமனையினால் நிர்மாணம் குறித்த கேள்விப் பத்திரங்களும் ஒப்பந்தக்காரரிடமிருந்து கோரப்பட்டிருந்தன.
அன்று அலுவலகம் முடிந்து தம்பிலுவில் திரும்பிய கோகுலன் வந்ததும் வராததுமாக வட்டவிதானைமார் மூவருக்கும் ஆள்வியளம் அனுப்பிக் கூப்பிட்டு இச் செய்தியைக் கூறினான்.
வட்டவிதானைமார் மூவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் என்னசெய்வதென்று தெரியாமல் கோகுலனைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
கோகுலனுக்கு மனச் சங்கடமாயிருந்தது. வயதுக்கு மூத்த ஆட்கள் தன்னைக் கையெடுத்துக் கும்பிடுவதா?
“சே! என்னை நீங்கள் கையெடுத்துக் கும்பிடுவதா? கைகளைக் கீழே விடுங்க. இந்த நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்லத்தான் கூப்பிட்டேன். எனக்கொன்றும் பெரிதாக நீங்கள் நன்றி சொல்ல வேணாம்” என்றான் கோகுலன்.
“இல்ல ஜயா! உங்களாலதான் இந்தக்குளம் உயர்த்தப்படப் போவுது” என்றார் கணேசமூர்த்தி.
“இல்ல, இது எனது உத்தியோகபூர்வக் கடமை. அவ்வளவுதான். நீங்க உண்மையில கனகரட்ணம் எம்.பிக்குத்தான் நன்றி சொல்ல வேணும்! எனக்கு இல்ல” என்று அமைதியாகவும் ஆதரவாகவும் கூறி அவர்கள் மூவரையும் அன்போடு வழியனுப்பி வைத்தான் கோகுலன்.
அந்த வருடம் மார்ச் மாத நடுப்பகுதியில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தை மேலும் ஆறடி உயர்த்தி அதன் கொள்ளவை அதிகரிக்கும் நிர்மாண வேலைகள் ஆரம்பமாகின.
கொழும்பு மினுவாங்கொடையைச் சேர்ந்த ‘அறங்கலகே’ என்னும் பெயருடைய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவருக்கு ஒப்பந்த வேலைகள் கையளிக்கப்பட்டிருந்தன.
மண் தள்ளும் – மண் அள்ளிக்கொட்டும் – மடுத்தோண்டும் என்று பல கனகரக வாகனங்கள் குளத்து வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டன. ‘கொங்கிரீட்’ வேலைகளும் உரிய உபகரணங்களுடன் ஆரம்பிக்கப்பட்டன. வேலையாட்களும் குளத்தடியில் போடப்பட்டிருந்த தற்காலிகக் கொட்டைகளில் தங்கியிருந்து தமக்குரிய வேலைகளில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேலைகள் மேற்பார்வையாளர்களினால் ஈடுபடுத்தப்பட்டனர். கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தடி பாரிய வேலைத்தலமாயிற்று. கோகுலனும் இந் நிர்மாண வேலைகளுக்குப் பொறுப்பான பொறியியல் உதவியாளராகவிருந்து தன் கடமைகளை இரவு பகல் பாராது செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்தான். கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் மேர்சாவும் அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் துரைராசரட்ணமும் அவ்வப்போது நிர்மாண வேலைகளை வந்து பார்வையிட்டுத் தேவையான அறிவுறுத்தல்கள் வழிகாட்டுதல்களை வழங்கிச் சென்றனர். நிர்மாண வேலைகள் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருந்தன.
ஒருநாள் துரைராசரட்ணம் உத்தியோகரீதியாகப் பொத்துவிலுக்குச் செல்லும் வழியில் மின்னாமல் முழங்காமல் வரும் மழைபோல திடீரென்று கோகுலனின் கோமாரிக் ‘குவாட்டஸ்’ முன் ‘ஜீப்’ பை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்தார்.
கோகுலன் களவேலைகளுக்காக வெளியே செல்வதற்கு மோட்டார் சைக்கிளை ‘ஸ்ராட்’ செய்தவன் அதனை நிறுத்திவிட்டு இறங்கிவந்து துரைராசரட்ணத்தைக் “குட் மோனிங் சேர்” என்று கூறி வரவேற்றான். அவர் அதற்கு எந்தப் பிரதிபலிப்பையும் காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ‘குவாட்டஸ்’ இன் உள்ளே வந்து வரவேற்பு மண்டபத்தில் அமர்ந்தார். என்ன ‘மூட்’டில் வந்திருக்கிறாரோ என்று கோகுலன் யோசித்தான்.
‘வேண்டாப் பெண்டாட்டிக்குக் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்’ என்பார்களே, தானாக வாயைத் திறந்து வலியப்போய்ச் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதால் அவருக்கு அருகே போய்த் தனது மேலதிகாரியான அவருக்கு மரியாதை கொடுக்கும் உடல் மொழியை வெளிப்படுத்தியவாறு, அமைதியாக நின்றிருந்தான். சிறிய இடைவேளைக்குப் பின் கோகுலனை ஏறிட்டுப் பார்த்து “நீர்தானே கனகரட்ணத்திடம் என்னைப் பற்றி மூட்டி விட்டது?” என்று முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று எனக்கு விளங்கவேயில்லை!. அப்படியொன்றும் நான் செய்யவில்லை. செய்யும் ஆளுமில்லை நான்” என்றான் கோகுலன்.
“ராஜூ வீட்டில் வைத்து எனது பெயரைச் சொல்லி எனக்குக் கனகரட்ணம் ஏசியது நீர் சொல்லித்தானே? என்றார். அவரது குரலிலும் முகத்திலும் கோபத்தின் அளவு அதிகரித்திருந்தது.
“இல்ல சேர்”என்று ஒற்றைப் பதிலைத் தந்தான் கோகுலன்.
“ராஜூ வீட்டில் வைத்துக் கனகரட்ணம் என்னுடைய பெயரைச் சொல்லி ஏசும்போது அங்க நீர் நின்றதானே?” என்றார் துரைராசரட்ணம்;.
துரைராசரட்ணம் எதனைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று தெரியாமல் சற்று அமைதிகாத்த கோகுலன், சில வாரங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம் நினைவில் எழ,
“நான் அப்போது அங்கே நின்றது உண்மதான் சேர்! ஆனால், உங்களப்பத்தி அவர் ராஜூவிட்ட உங்கட பெயரைச் சொல்லி ஏதோ குறையாகச் சொல்லத் தொடங்க எனக்கு அங்க நிற்கச் சங்கடமாயிருந்ததால, உடன ராஜூ வீட்டிலிருந்து வெளியேறி வந்திட்டன்” என்று தனது குற்றமற்ற தன்மையை எடுத்துச் சொன்னான்.
உண்மையில் ராஜூவின் வீட்டிலிருந்து கோகுலன் வெளியேறி வந்ததன் பின்னர் இதுவரை என்ன நடந்தது என்று கோகுலனுக்குத் தெரியாது. கனகரட்ணமும் அதுபற்றிக் கோகுலனிடம் பிரஸ்தாபித்துமிருக்கவில்லை.
“சரி! எனக்கு என்ன நடக்குதென்று எல்லாம் தெரியும். நான் உம்மப் பார்த்துக்கொள்ளுறன்” என்று கோபமாக எச்சரிக்கைத் தொனியில் கூறிவிட்டு எழுந்து போய்விட்டார் துரைராசரட்ணம்.
அவர் போனபின்பு, ராஜூ போஸ்ற்மாஸ்ரரின் வீடுசென்று ராஜூவிடம் என்ன நடந்தது என்று கேட்டுவரலாமென்று எண்ணிய கோகுலன், துரைராசரட்ணம் பொத்துவில் செல்லும் வழியில் சிலவேளை ராஜூ வீட்டிலும் தரித்துச் செல்லக்கூடும் பொத்துவில் செல்லும் அவர் பொத்துவில் ‘சேர்குயிட் பங்களா’ வில் தங்காமல் கோமாரிக்குத் திரும்பி ராஜூ வீட்டிலும் இராத்தங்கல் போட்டு நாளை காலையில்தான் அம்பாறைக்குத் திரும்பக் கூடும் என்றெண்ணி, இரண்டு நாள்கள் கழித்து ராஜூவைச் சந்தித்து என்ன நடந்தது எனக் கேட்டறியலாமெனத் தீர்மானித்தான்.
தன்னளவில் ஒரு பிழையும் செய்யவில்லை. அதனால் நடப்பது நடக்கட்டும் என்று அந்த விடயத்தை அலட்சியப்படுத்திவிட்டுத் தனது களவேலைகளைக் கவனிக்கவென்று வெளியே புறப்பட்டான்.
துரைராசரட்ணம் ராஜூ வீட்டில் இல்லாத நேரத்தில்தான் ராஜூவைச் சந்திக்க வேண்டுமென்பதனாலேயே அன்றைய தினமே ராஜூவைச் சென்று சந்திப்பதைக் கோகுலன் தவிர்த்துக் கொண்டான்.
சில வாரங்களுக்கு முன்னர்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
ஒரு நாள் கோகுலன் கோமாரியில் நின்றிருந்தபோது கனகரட்ணம் ராஜூ வீட்டில் நிற்பதாகத் தகவல் கிடைத்தது.
கோகுலன் தகவலறிந்து அங்கு சென்றபோது கனகரட்ணத்தைச் சந்திக்க வந்திருந்த பொதுமக்கள் பலரும் அவரைச் சந்தித்துவிட்டுப் போய்விட்டிருந்தனர். ராஜூவின் வேலையாட்கள் மட்டும்தான் வளவுக்குள் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
கோகுலனைக் கண்ட ராஜூ “வாங்க கோகுலன்” என்று கூறி வரவேற்கக் கோகுலனும் வீட்டின் உள்ளே சென்று மண்டபத்தில் அமர்ந்து கொண்டான்.
அப்போது திருக்கோவில் பக்கமிருந்து வந்த ‘வான்’ ஒன்றில் பத்து பன்னிரண்டு பேர் வந்து ராஜூவின் வீட்டின் முன் இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் அப்பிரதேசத்து விவசாயிகள். சற்று வசதியான ஓரிரு போடிமார்களும் அவர்களிடையே தென்பட்டனர். அவர்கள் அனைவரையும் கோகுலனுக்குத் தெரியும். அவர்களுக்கும் கோகுலனை நன்கு தெரியும்.
வந்த போடிமார்களில் ஒருவர் கோகுலனிடம் “எம்.பி ஜயா நிற்கிறாரா? ஏன்று கேட்டார்.
‘ஓம்’ நிற்கிறார். மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கிறார். உள்ளே வந்து இரிங்க” என்ற கோகுலன் அவர்களை ராஜூவின் அனுமதியோடு வெளி விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமரச் செய்துவிட்டு உள்ளே சென்று கனகரட்ணத்திடம் தகவல் சொன்னான்.
கனகரட்ணம் வெளியே வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். வந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதையாக வணக்கம் கொன்னார்கள். பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு, “வந்த விசயம் என்ன?” என்றார் கனகரட்ணம்.
வந்திருந்தவர்களில் வயதான போடியார் ஒருவர் பேச ஆரம்பித்தார். “ஜயா! றூபஸ் குளத்துக்குகீழ பாவாட்டாக்குளம் எண்டு ஒரு குளமிரிக்கு. அது உடைப்பெடுத்துக் கனகாலமாகக் கட்டுப்படல்ல. புறகு அப்பப்ப விவசாயிகள் சேர்ந்து வருசாவருசம் தங்கட செலவில முறிவுக்கு மண்போட்டுக் கட்டினாலும் அது வருசாவருசம் உடைப்பெடுக்கிது. அத வடிவா உடைப்பெடுக்காமக் கட்டினா தண்ணிப் பிரச்சனை இல்லாம அதற்குக் கீழ இரிக்கிற காணியெல்லாம் ‘மாரிப்போகம்’ செய்யலாம். நாங்க அதக் கட்டித் தரச் சொல்லி துரைராசரட்ணம் எஞ்சினியர்- அவர் எங்கட ஊர்தான். அவர் ஒருநாள் அவரிட தாய் வீட்டிற்கு தம்பிலுவிலுக்கு வந்திரிக்கக் கொள்ள போய்க் கேட்டதுக்கு,
“கோகுலன் ரி.ஏ. யிட்டப் போய்ச் சொல்லுங்க. அவர் கனகரட்ணம் எம்.பி.யிட்ட சொல்லிக் கட்டித் தருவார். என்னிட்ட வந்து கேட்காதீங்க. அதக் கட்டித் தாறதுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்திட்டக் காசு இல்ல” எண்டு வேண்டா வெறுப்பாக ஒரு மாதிரியாக் கதைச்சி எங்கள வெறுங்கையோட அனுப்பிப் போட்டார். அதுதான் உங்களிட்ட வந்த நாங்க” என்றார் அந்த வயதான விவசாயி.
அந்த விவசாயி சொன்னதைக் கவனமாகக் காதில் போட்டுக் கொண்ட கனகரட்ணம் கோகுலனைப் பார்த்து,
“இதற்கு என்ன செய்யலாம் தம்பி” என்றார்.
“அந்தக் குளத்து முறிவு வருசாவருசம் கட்டக்கட்ட முறிவது எனக்குத் தெரியும். அந்தக் குளத்திற்கு முறையான ‘வான்’ இல்ல எண்டுதான் நான் நினைக்கிறன். அந்தக் குளம் பற்றிய முழு ஆய்வொன்று அவசியம். அந்த ஆய்வ நான் உடன ஆரம்பிச்சு அந்தக் குளத்த முறையாகக் கட்டுவதற்கான மதிப்பீட்டையும் இந்த மாதத்துக்குள்ள தயாரிச்சு முடிக்கிறன். இந்த வருஷம் உங்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் செய்து முடிக்கலாம். அது பாரிய வேலை இல்லை. சின்னக்குளம்தானே. பாரிய நிதியும் தேவைப்படாது” என்றான் கோகுலன்.
கனகரட்ணம் வந்த விவசாயிகளைப் பார்த்து “ரி.ஏ. சொன்ன மாதிரி இந்த வருஷம் ஒவ்வொரு எம்.பிக்கும் அரசாங்கத்தால ஒதுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து அதக் கட்டித்தாரன்” என்றார்.
விவசாயிகளும் நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றுச் சென்றார்கள். அவர்கள் சென்றபின் வீட்டின் உள்ளே ஏதோ அலுவலாய் நின்ற ராஜூவைக் கூப்பிட்டார் கனரட்ணம்.
ராஜூவும் உடனே “என்ன கூப்பிட்டீங்க?” என்று தான் செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் விட்டுவிட்டு வந்தார்.
“ராஜூ, உன்ர கூட்டாளி துரைராசரட்ணம் என்ஜினியரிட்ட நான் சொன்னதாகச் சொல்லு. என்ஜினியர் என்ஜினியர் வேலயப் பார்க்க வேணும் எண்டு” என்றார் கனகரட்ணம்.
கனகரட்ணம் சொன்னது தனக்கு முழுதாக விளங்கவில்லை என்பது ராஜூவின் முகக் குறிப்பிலிருந்து தெரிந்தது.
புரிந்து கொண்ட கனகரட்ணம் தொடர்ந்தார்.
“ராஜூ! மாத்தளையில இருந்த துரைராசரட்ணத்தை நான்தான் மினிஸ்ரறிற்றக் கதைச்சு அம்பாறைக்கு எடுப்பித்த. நம்மட ஊர் ஆள், நம்மட பகுதிக்கும் மக்களுக்கும் சேவை செய்யவார் எண்டு. ஆனா அவர் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத்தான் வேலை செய்கிறார். காரைதீவு-நிந்தவூர் எல்லையில் இருக்கிற வெட்டு வாய்க்கால வெட்டித் திறந்து கடற்கரைத் தொங்கலில் இருக்கும் தோணாவில் கொண்டு இறக்க வேணும். அப்பத்தான் வடிச்சல் முழுசா இறங்கும். அது மிக முக்கியமான வேலை எண்டு காரைதீவு ஆட்கள் வந்து என்னிட்டக் கேட்டு அவசரமாய்ச் செய்ய வேணுமெண்டு இந்த வருஷப் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் காசும் ஒதுக்கிக் கொடுத்த நான். அந்த வாய்க்காலத் தொங்கல்வரையும் தோணாவில கொண்டு விடுறது நிந்தவூர் முஸ்லிம்களுக்கு விருப்பமில்ல. என்று நிறுத்தியவர், கோகுலன் பக்கம் திரும்பி
“அது ஏனெண்டு ஒருக்கா ராஜூவுக்கு விளங்கப்படுத்து தம்பி” என்றார்;.
கோகுலனின் நிலைமை தர்மசங்கடமாயிற்று. ஏன் வந்தோம் என்றிருந்தது அவனுக்கு. என்றாலும் சமாளித்துக் கொண்டு,
“உங்களுக்குத் தெரியும் தானே ராஜூ காரைதீவிர வடக்கு எல்லை சாய்ந்தமருது பக்கம் இருக்கிற மாளிகைக்காடு. ஆனா காரைதீவு-மாளிகைக்காடு எல்லையைத் தாண்டி காரைதீவு ஊருக்குள்ள முஸ்லிம்கள் தங்களுக்கிருக்கிற அரசியல் செல்வாக்கையும் பொருளாதாரத்தையும் தமிழர்களுடைய அசமந்தத்தையும் பாவிச்சு நல்லா ஊடுருவிற்றாங்க. அவங்களப் பிழை சொல்ல ஏலா. அதத்தான் அவங்க செய்வாங்க. இடமில்லாட்டிப் பக்கத்து ஊருக்குள்ளதானே ஊடுருவாங்க. காரைதீவு ஊராக்கள்தான் கவனமாக இருக்கணும்.
காரைதீவிர தெற்கு எல்லைதான் நிந்தவூர்ப் பக்கம் இருக்கிற வெட்டுவாய்க்கால். அந்த வெட்டுவாய்க்கால் ஒரு நீர் எல்லையாக இருக்கிறபடியால்தான் நிந்தவூர் பக்கமிருந்து முஸ்லிம்கள் அதைத்தாண்டி காரைதீவுக்குள்ள ஊடுருவாம இருக்காங்க. மற்றது வெட்டுவாய்க்கால் ஒரு வடிச்சல் வாய்க்கால். அதத் தொங்கல் வரைக்கும் கொண்டுபோய் தோணாவில இறக்கினாத்தான் வடிச்சல் தண்ணியும் பாயும். காரைதீவு – நிந்தவூர் எல்லையும் அறுக்கையாக இருக்கும்.” என்று கோகுலன் விளக்கமளித்தான்.
“அதற்கும் துரைராசரட்ணத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று ராஜூ கனகரட்ணத்தின் பக்கம் திரும்பிக் கேட்டார்.
“முஸ்தபாவும் முஸ்தபாட ஆட்களும் போய் வெட்டுவாய்க்காலத் திறக்கத் தேவயில்ல என்று சொன்ன இடத்தில இவரும் அவங்களோட சேர்ந்து நிண்டு அது அவசியமில்ல என்றிருக்கிறார். நான் எனக்கு ஆதரவாக அரசியல் செய்யச் சொல்லல்ல. வடிச்சல் வாய்க்காலை வெட்டிக் கொண்டுபோய் தொங்கலில தோணாவில விட்டாத்தான் வடிச்சல் தண்ணி வடியும். இதுதான் “இரிக்கேசன் என்ஜினியரிங்”. இதச் சொல்லிறதுக்குத் துணிவில்லாதவருக்கு என்னத்துக்கு ராஜூ என்ஜினியர் வேலை” என்று சற்றுத் தடித்த குரலில் கோபமாகத்தான் கனகரட்ணம் கூறினார்.
கனகரட்ணத்திற்கும் ராஜூவுக்கும் நடந்த இந்தச் சர்ச்சைக்குரிய சம்பாஷணையின்போது தான் பிரசன்னமாயிருப்பது கோகுலனுக்குச் சற்றுச் சங்கடமாயிருந்தது. “நான் அவசரமாகப் போக வேண்டும் பிறகு சந்திக்கிறேன்.” என்று கனகரட்ணத்திடம் கூறிவிட்டு ராஜூவிடமும் “போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் கோகுலன்.
நடக்கிற ஒவ்வொரு சம்பவமும் தனக்கும் தனது மேலதிகாரியாக இருக்கின்ற துரைராசரட்ணத்திற்கு மிடையிலான ஊடாட்டத்தில் ஒரு உரசலை ஏற்படுத்திவிடுவதைக் கோகுலன் உணரத் தவறவில்லை. அதனால் அப்படியான சம்பவங்களை இனிமேல் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கோகுலன் தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டுதான் உடன் அந்த இடத்தை விட்டு அவசரமாக அகன்றிருந்தான்.
இச்சமபவத்தை நினைவில் மீட்டிய கோகுலன் தான் வெளியேறிய பின்னர் இதுவரை என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாததை ராஜூவிடம் கேட்டறிய வேண்டுமென்பதற்காகத்தான் ராஜூவை இரண்டு நாள்களின் பின் சந்திக்க வேண்டுமென்று கோகுலன் எண்ணியதற்கான காரணம். இந்தச் சம்பவம் துரைராசரட்ணத்திற்கு எப்படித் தெரியவந்திருக்கும் என்பதும் கோகுலனின் மண்டையைக் குடைய ஆரம்பித்தது.
ராஜூ நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என்பதும் கோகுலனின் முடிவாயிருந்தது. ஏனெனில் ராஜூவும் துரைராசரட்ணமும் நெருங்கிய நண்பர்களாயிருந்தாலும்கூட கனகரட்ணத்தையும் துரைராசரட்ணத்தையும் பகைவர்களாக்கும் வேலையில் ராஜூ ஒருநாளும் இறங்கமாட்டார் என்பதும் கோகுலனுக்கு நன்கு தெரியும். துரைராசரட்ணத்திற்கு இச்சம்பவம் எப்படித் தெரியவந்திருக்கும் என்பதுதான் கோகுலனுக்குள் கேள்விக்கு மேல் கேள்வியாய் எழுந்து கொண்டிருந்தது. இரண்டு நாள்கள் கழித்து ராஜூவைச் சென்று சந்தித்தபோதுதான் கோகுலனின் சந்தேக முடிச்சு அவிழ்ந்தது.
கனகரட்ணம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டதால் தானே துரைராசரட்ணத்திடம் கனகரட்ணம் சொல்லும்படி சொன்னதைச் சொல்லும்படியாகிவிட்டது என்பதை ராஜூ கோகுலனிடம் மறைக்காது கூறினார்.
யானையும் யானையும் மோதிக் கொள்ளும்போது இடையில் தரையில் அகப்பட்ட தகரப் பற்றை போலாயிற்று கோகுலனின் நிலைமை.
(தொடரும் அங்கம் – 59)