— கருணாகரன் —
இலங்கையில் நான்கு தேசிய வைத்தியசாலைகளும் பதின்மூன்று போதனா மருத்துவமனைகளும் உண்டு. இதை விட மாவட்ட மருத்துவமனைகள், பிரதேச மருத்துவமனைகள், கண்மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், புற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், கிராமிய வைத்தியசாலைகள் எனப் பல உள்ளன.
ஆனால், யாழ்ப்பாண மருத்துவமனையில்தான் அதிகரித்த உயிரிழப்புகளும் மருத்துவக் கொலைகளும், மருத்துவத் தவறுகளும் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் பரப்புரையில் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளில் இருப்போர் தொடக்கம் பொழுதுபோக்காக எழுதுவோரும் ஈடுபடுகிறார்கள்.
இவற்றோடு இப்பொழுது மருத்துவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அருச்சுனாவும் ஒரு தொகையான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிடும்போது அது உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்று ஹன்ஸ்ஸாட்டிலிருந்தே நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் நோக்கப்பட்டு பாராளுமன்றப் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சமூக ஊடகங்களிலும் அருச்சுனாவினாலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மீதும் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரப்புரையில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. போதனா மருத்துவமனையில் நடந்த / நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குறைபாடுகள், குற்றங்கள் மற்றும் ஊழல் எனப்படுபவை.
மெய்யாகவே அங்கே பெருந்தவறுகளும் ஊழலும் தொடர்ச்சியாக நடக்கிறது என்றால் அதை ஆதரங்களோடு பட்டியற்படுத்த வேண்டும். ஆனால் அப்படி யாரும் முன்வைப்பதைக் காணமுடியவில்லை வைஷாலினி என்ற ஒரு குழந்தையின் (நோயாளியின்) கை துண்டிக்கப்பட்டது மட்டுமே மிகப் பெரிய குற்றச்சாட்டாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு, அது உரிய நிபுணர் குழுவின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தலில் தவறு இருந்தாலோ பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றாலோ குறித்த நோயாளரான வைஷாலினியின் பெற்றோர் – அல்லது அவர்கள் சார்பாக பொது அமைப்பினரோ யாரோ வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதன் மூலம் உரிய நிவாரணத்தைக் கோரலாம். குற்றவாளிகள் அல்லது தவறிழைத்தோர் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவர். இழப்பீட்டையும் கோரலாம். இதுதான் இந்த மாதிரியான பிரச்சினைக்கான அரசாங்க வழிமுறையாகும்.
ஆனால், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைஷாலினிக்கு ஆரம்ப நிலை மருத்துவம் தனியார் மருத்துவமனையொன்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது பலிதமாகவில்லை என்ற நிலையிலேயே போதனா மருத்துவமனைக்கு வைஷாலினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சையின்போது கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் போதனா மருத்துவமனையின் சிகிச்சையின்போது நடந்ததா அல்லது தனியார் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது உருவாகியதா என்பதை நிபுணர் குழுவின் அறிக்கையே சொல்லும். அதுவரை நாம் இது குறித்துப் பேச முடியாது. ஆனால், வைஷாலியின் விடயம் மிகப் பாரதூரமானது. அது நியாயமான முறையில் அணுகப்பட வேண்டியது.
இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைக்காகச் செல்கின்ற (சேர்க்கப்படுகின்ற) பலர், ஒரு கட்டத்தில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு போதனா மருத்துவமனைக்கு அல்லது மாவட்ட மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அப்படி வருவோரில் பலரும் உரிய சிகிச்சையைப் பெற்று சுகமடைந்து வெளியேறிச் செல்கிறார்கள். சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த உயிரிழப்புகள் தொடர்பான பதிவும் புள்ளி விவரமும் குறித்த மருத்துவமனைகளின் கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது.
இது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடப்பதல்ல. இலங்கை முழுவதிலும் அவதானிக்கப்படுகின்ற நிலையாகும். ஆகவே அப்படி வருகின்ற நோயாளர்களின் தொடக்க நிலைச் சிகிச்சை உண்டாக்கும் பாதிப்பை குறித்த அரச மருத்துவமனையே ஏற்க வேண்டியுள்ளது. இதற்கான தனியார் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைகளை முறித்துக் கொண்டு வருகின்ற நோயாளிகளை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரச மருத்துவமனைகள் சொல்ல முடியாது. ஆனால் அதைத் தனியார் மருத்துவமனைகள் சொல்லலாம். அவை சொல்லித் தப்பிக் கொள்கின்றன. இது ஒரு சுருக்கக் குறிப்புத்தான். இதைப்பற்றி விரிவாகப் பேசினால் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் புள்ளிவிவரங்களும் வெளியாகும்.
ஆகவே இந்தப் பிரச்சினையை இந்த யதார்த்தத்தோடு – உண்மையின் அடிப்படையிற்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தவிர, போதனா மருத்துவமனையில் ஊழல் நடக்கிறது என்றால், எந்தெந்த இடத்தில் ஊழல் நடந்துள்ளது? யாரெல்லாம் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என அவற்றைக் குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியம். அதுவும் இதுவரையில் யாராலும் முன்வைக்கப்பட்டதாக இல்லை.
ஆகவே பொத்தாம் பொதுவாக தமது கணக்குக்கு ‘தர்ம அடி அடிப்பது‘ என்று சொல்வார்களே, அதைப்போல ஒவ்வொருவரும் தமக்குப் பட்டதை எழுதித் தள்ளுகிறார்கள். அப்படி எழுதப்படும் எந்தச் சொல்லுக்கும் மதிப்பில்லை. ஏனென்றால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறாகவே கருதப்படும். உண்மையும் அதுதான். எனவே நடந்து கொண்டிருப்பது அவதூறு என்ற முடிவுக்கே நாம் வர முடியும். இப்படி அவதூறு செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
2. தனிப்பட்ட முறையில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதான நிர்வாகக் குறைபாடுகள் என்ற குற்றச்சாட்டுகள். அதாவது நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குற்றங்கள், குறைபாடுகள் தொடர்பாகப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்தோரைப் பாதுகாக்கின்றார் என்பது. அத்துடன் ஊழலுடன் சத்தியமூர்த்தி நேரடியாகச் சம்மந்தப்படுகிறார் என்பதாகச் சொல்லப்படுவது.
அத்துடன் போதனா மருத்துவமனையில் தொண்டு அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கான பணி நியமனங்கள் மற்றும் ஊதியம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியமை என்ற குற்றச்சாட்டு. இந்தப் பிரச்சினையைக் கையில் தூக்கிக் கொண்டே அருச்சுனா பணிப்பாளரின் பணிமனைக்குச் சென்றிருக்கிறார். உண்மையில் இதனுடைய தாற்பரியம் என்ன என்று அருச்சுனாவுக்குத் தெரியும். அவரும் ஒரு காலகட்டத்தில் மருத்துவ நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியவர். அத்துடன் வடக்கினதும் இலங்கையினதும் அரசியல் – நிர்வாகச் சூழலை விளங்கியவர். அப்படி விளக்கத்தைக் கொண்டுள்ள அருச்சுனா, இந்தத் தொழிலாளர் விவகாரத்தைத் தனியே பணிப்பாளர் தீர்த்து வைக்க வேண்டும். அல்லது பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கேட்பது நகைப்பிற்குரியது.
நிரந்தரப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை எந்தவொரு அரச நிறுவனத்தின் எந்த அதிகாரியும் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. அதற்கான அனுமதியைக் கோரி, அது கிடைத்த பின், அதற்குரிய நேர்முகத்தேர்வு என உரிய ஒழுங்குகளின் அடிப்படையிலேயே அதைச் செய்ய முடியும். அப்படித்தான் இதற்கு முன்னரும் பல நிறுவனங்களிலும் நடந்துள்ளது. ஆகவே அதற்கான குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் அருச்சுனா முன்வைத்தார் என்பது கேள்வியே. இது தனிப்பட்ட ரீதியில் ஒரே துறைக்குள் பணியாற்றிய இருவருக்கிடையிலான பிணக்காகவே பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையிலேயே அருச்சுனாவின் பாராளுமன்ற உரை நீக்கப்பட்டதும் போதனா மருத்துவமனைக்குள் தேவையில்லாமல் செல்லக் கூடாது என நீதிமன்றம் அருச்சுனாவைக் கட்டுப்படுத்தியதும் அமைகிறது.
சொல்லப்படும் ஊழல் விவகாரத்தைப் பேசுவதாக இருந்தாலும் அதையும் பட்டியற்படுத்துவது அவசியமாகும். அவை என்ன அடிப்படையில் தவறு எனத் தெரியப்படுத்துவது முக்கியமானது.
இங்கே சில கேள்விகள் எழுகின்றன.
1. இப்படிப் பரப்புரை செய்யப்படும் அளவுக்கு உண்மையில் போதனா மருத்துவமனையில் தொடர்ந்தும் தவறுகள் நடக்கிறதா? அதிலும் மருத்துவக் கொலைகள் என்பது மிகப் பாரதூரமானது. சிகிச்சையின்போது பல காரணங்களால் உயிரிழப்புகள் நேர்கின்றன. அது வேறு. மருத்துவக் கொலை என்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகும். அப்படி ஏதும் நடந்திருந்தால் அதைச் சீரியஸாக எடுக்காமல் விடும் தரப்புகளும் தவறுக்கு உடந்தையாகின்றன. ஆகவே இதைக்குறித்து உரிய தரப்புகள் சீரியஸாகவே சிந்திக்க வேண்டும்.
2. தவறுகள் தொடர்ந்து நடக்கிறது என்றால், அந்தத் தவறுகளை உரியவர்கள் ஏன் பட்டியற்படுத்துவதில்லை? ஏன் அவற்றை உரிய இடங்களுக்கு (ஆளுநர், சுகாதார அமைப்பு உட்பட்ட நிர்வாக அடுக்குகளுக்கு) உரிய முறையில் தெரியப்படுத்துவதில்லை?
3. அப்படித் தெரியப்படுத்தியிருந்தால் அவற்றின் விவரம் என்ன? அதாவது அதற்குப் பின் என்ன நடந்தது? உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? பொருத்தமான நடவடிக்கையை உரிய தரப்பினர் மேற்கொள்ளவில்லை என்றால் அந்தத் தரப்புகளும் தவறிழைத்ததாக அல்லவா கருத வேண்டும்? அவையும் தவறுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.
4. சொல்லப்படும் அளவுக்கு யாழ்ப்பாணப் போதனா மருத்துமனையில் தவறுகளும் மருத்துவக் கொலைகளும் நடப்பதாக இருந்தால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் உள்ள மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரும் மௌனம் காப்பது ஏன்? அவர்களும் இந்தத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிறார்களா? தவறுகளோடு போதனா மருத்துமனையைப் பாதுகாக்கிறார்களா?
அப்படிக் குறிப்பிடுமளவுக்கு அங்கே தவறுகளும் குற்றங்களும் மருத்துவக் கொலைகளும் நடக்கவில்லை என்றால், சமூக வெளியில் வாரியிறைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தத் தரப்புகள் மறுத்துரைக்காமலும் கேள்வி கேட்காமலும் மௌனமாக இருப்பது ஏன்? இவர்களும் தவறான சமூகப் போக்கை ஊக்கப்படுத்துகிறார்களா?
5. சமூக வெளியில் (வலைத்தளங்களிலும் YouTupe களிலும்) முன்வைக்கப்பட்டுச் சமூகத்தைக் கொந்தளிப்பாக்குவதற்கு முயற்சிக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசியற் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை என்ன? அவர்கள் கேளாச் செவியர்களாகவும் காணக் கண்ணர்களாகவும் இருப்பது ஏன்? சமூகத்தையும் மருத்துவமனையையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா?
6. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் இரண்டு மூன்று தொலைக்காட்சிகளும் உள்ளன. இவற்றை விட குறிப்பிடத்தக்க இணையத் தளங்களும் உள்ளன. இந்த ஊடகங்கள் மேற்படி சமூக வலைத்தளங்களின் / அருச்சுனாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவனம் கொள்ளாதிருப்பது ஏன்? டான் தொலைக்காட்சி மட்டும் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியுடன் ஒரு நேர்காணலைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. அதைத் தவிர்த்தால் பெரிய அளவில் இந்த விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனையவை அவ்வப்போது நிலவரச் செய்திகளை மட்டும் அளிக்கின்றனவே தவிர, உரிய கள ஆய்வைச் செய்வதைக்காணவில்லை. ஏற்கனவே ஒரு தடவை உதயன் பத்திரிகையில் பணிப்பாளரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டதொரு நேர்காணல் வந்திருந்தது.
7. 2000 பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒரு அத்தியாவசிய சேவை மையமே யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையாகும். ஏறக்குறைய 400 மருத்துவர்களும் 600 வரையான மருத்துவத் தாதிகளும் பல பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். 1300 நோயாளர் படுக்கைகள் உண்டு. கண், இருதயம், சிறுநீரகம், குழந்தைகள் பிரிவு, நரம்பியல், அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவுப்பகுதி என 100 க்கு மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன. தினமும் 2500 க்கு மேற்பட்ட கிளினிக் நோயாளர்கள் வருகை தருகின்றனர். 1000 க்கு மேலான வெளிநோயாளர் சிகிச்சை பெறுகின்றனர்.
அப்படியிருந்தும் தற்போது (கடந்த சில ஆண்டுகளில் அல்லது சில மாதங்களில்) அளவுக்கு அதிகமான மருத்துவக் கொலைகளும் தவறுகளும் குற்றங்களும் மெய்யாகவே (பொதுவெளியில் குறிப்பிடுவதைப்போல) நடப்பதாயின் அதற்கான பொறுப்பை இந்த மருத்துவ அணியினரும் ஏற்க வேண்டும். அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். இவை அனைத்துக்கும் நிர்வாகப் பணிப்பாளர் என்ற ரீதியில் மருத்துவர் சத்தியமூர்த்திக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தாலும் இவர்களுக்கும் கணிசமான பொறுப்புண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.
இதேவேளை பலரும் குறிப்பிடுவதைப்போல மருத்துவக் கொலைகளோ, குற்றங்களோ, தவறுகளோ அங்கே நடக்கவில்லை என்றால், அதை மறுத்துரைப்பதற்கான வழிகளில் மருத்துவ அணியினர் அதைச் செய்ய வேண்டும்.
ஏனென்றால், மருத்துவமனை என்பது மக்களின் – குறிப்பாக நோயாளரின் – நம்பிக்கைக்குரிய – நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய ஒரு மையமாகும். நோயாளரின் உளநிலை பொதுவாகவே சமனிலைக் குறைவுடனேயே இருப்பதுண்டு. தமது நோய் குணமாகுமா? அதற்கான போதிய சிகிச்சை நடக்கிறதா? அதற்குரிய வளங்கள் உள்ளனவா? என்ற கேள்விகள் நோயாளரின் உளநிலையில் பொதுவாகவே கொந்தளிப்பை ஏற்படுத்துவதுண்டு.
ஆகவே, அப்படியான சூழலில் மருத்துவமனையைப் பற்றி (மருத்துவ சேவையைப் பற்றி) பீதியூட்டும் செய்திகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டால், அதற்கு அனுமதியளித்தால் அவை உண்மையென்றே மக்களால் (நோயாளர்களால்) நம்பப்படும். அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். அவர்கள் மிகப் பெரிய அவல நிலையைச் சந்தித்துள்ளதாக உணர்வார்கள். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களாவர். அவர்களே கூடுதலாக அரச மருத்துமனைகளை நாடுகின்றவர்கள். அரச மருத்துவமனைகளே அவர்களுக்கு கதியாகும். இந்த நிலையில் உண்மையை வெளிப்படுத்தி, மக்களுக்கு (நோயாளருக்கு) நம்பிக்கையை அளிக்கும் பொறுப்புடன் நடக்க வேண்டியது மருத்துவ அணியினரின் கடமையாகும். அதுவே மக்களை (நோயாளரை) தெம்பூட்டும்.
8. பொறுப்பான தரப்புகளின் நடவடிக்கை. குறிப்பாக ஆளுநர், சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் உரிய குற்றச்சாட்டுகளைக் கவனத்திற் கொண்டு முறையான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும். உண்மைகளுக்கு அப்பாலான பொய்களைக் கட்டமைப்போரையும் அவதூறு செய்வோரையும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதைச் செய்யாமல் தவறினால் அது சமூகத்திற்குப் பாராதூரமான பாதிப்பையே ஏற்படுத்தும். மட்டுமல்ல, இந்தப் பரப்புரையாளரின் சதிக்கு உடன்படுவதாகவும் அமையும்.
மீளவும் இங்கே வலியுறுத்தப்படுவது இது நோயாளரின் உளநிலையுடன் சம்மந்தப்பட்ட பாரதுரமான விடயமாகும். இந்தக் கட்டுரை கூட நோயாளரின் பாதுகாப்பு, அவர்களுடைய உளநிலை மற்றும் பொது நிலைமையைக் குறித்தே விடயங்களைப் பேச முற்படுகிறது. ஒரு சொல்லும் போதனா மருத்துவமனை நிர்வாகத்தையோ மருத்துவ அணியினரையோ வலிந்து பாதுகாப்பதற்கு முற்படவில்லை. அதேவேளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பழிசுமத்தல்களையும் கண்டிக்கிறது.
எனவே நோயாளர்களை உளச்சோர்வடைய வைக்கும் தீய முயற்சிக்கு இடமளிக்காமல் உரிய தரப்புகள் அனைத்தும் உடனடியாக முறையான விசாரணைகளை (நடவடிக்கைகளை) மேற்கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். வடமாகாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் அரச மருத்துமனைகளையே பெரும்பாலானோர் நாடும் சூழலே பொதுவாக உண்டு. அயாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையே வடக்கின் ஆதார (மைய) மருத்துவமனையாக உள்ளது. அது எந்தச் சூழலிலும் நம்பகத்தன்மையை இழக்க முடியாது.
அப்படி நம்பகத் தன்மையை இழக்குமாக இருந்தால் அதனால் பயனடைவது தனியார் மருத்துவத்துறையாகவே இருக்கும். அது இந்தச் சமூகத்துக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும்.
இந்த நிலையில் நோக்கினால் யாழ்ப்பாணம் போதனா மருத்து மனை தொடர்பாகக் குறிப்பிடப்படும் விடயங்களைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தினால், அது
தனியார் மருத்துவத்துறையை வளர்ப்பதற்கே மறைமுகமாக உதவும்.
நாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான மருத்துவமனைகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மட்டும்தான் மிக மோசமான நிலை காணப்படுகிறதா? ஏனைய இடங்களில் தவறுகளே நடக்கவில்லையா? என்பதையும் அரசும் மக்களும் ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டும்.
வடக்கில் மன்னார், சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் அருச்சுனா வெளிப்படுத்திய பிரச்சினைகளைப் பற்றியும் விசாரிக்க வேண்டும். இங்கெல்லாம் பிரச்சினைகளின் உண்மைத் தன்மை என்ன? அவற்றை எப்படித் தீர்த்து வைப்பது என்பதற்கு அப்பால், அவற்றை வைத்தே தன்னுடைய அரசியல் அதிரடிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் உத்தியையே அருச்சுனா செய்கிறார். இதற்கு வாய்ப்பாக இன்றைய தகவல் உலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது தன்னைத் தானே ஹீரோவாக்கிக் கொள்ளும் ஒரு உத்தியாகும். நிஜமான கதாநாயகர்களைக் கண்ட வரலாற்றுக்கு இத்தகைய நகைச்சுவையாளர்கள் சிரிப்பையே வரவழைக்கும்.
எனவே இவற்றைத் தீர விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்கு மேற்குறிப்பிட்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியற் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் முயற்சிக்க வேண்டும்.
இல்லையெனில் நேர்மையான முறையில் அர்ப்பணிப்பாகச் சேவை செய்வோர் உளச்சோர்வடையக்கூடிய நிலையே ஏற்படும். மட்டுமல்ல, தவறான அபிப்பிராயம் சமூகத்தில் மேலோங்கியிருந்தால் அது மருத்துவமனையில் நோயாளருக்கும் மருத்துவத்துறையினருக்கும் எப்போதும் முரண்களையே உருவாக்கும். நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் இடைவெளி இருக்குமானால் அது சிகிச்சையையே பாதிக்கும். குறிப்பாக நோயாளியின் உள, உடல் ஆரோக்கியத்தை.
தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலுமிருக்கும் குறைபாடுகளையும் சீர்திருத்தம் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. அப்படியானால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை விடயத்திலும் அது கவனம் செலுத்த வேண்டும்.