அநுரகுமார முன்னிலையில்  13 வது திருத்தம் பற்றி  பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?

அநுரகுமார முன்னிலையில்  13 வது திருத்தம் பற்றி  பேசாமல் மோடி இலங்கை தமிழர்களுக்கு கூறிய செய்தி?

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கடந்த வாரம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் கடந்த வருடம் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயத்தில் இருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது? 

இலங்கையின் ஜனாதிபதிகள் பதவியேற்ற பிறகு தங்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக புதுடில்லிக்கு செல்வது ஒரு சம்பிரதாயமாக இருந்துவருகிறது. அதன் பிரகாரம் திசாநாயக்கவும்  இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார். 

மூன்றாவது தடைவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஏற்கெனவே நான்கு இலங்கை ஜனாதிபதிகளுடன் கையாண்டிருந்தார்.  திசாநாயக்க மோடி சந்தித்த ஐந்தாவது இலங்கை ஜனாதிபதியாவார். முன்னைய ஜனாதிபதிகளை விடவும் கூடுதலான அளவுக்கு பாராளுமன்ற தேர்தலில்  மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக திசாநாயக்க விளங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்திய பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கையின் மிகவும் பலம்பொருந்திய ஜனாதிபதிகளில் ஒருவரை மாத்திரமல்ல, இடதுசாரி ஜனாதிபதி ஒருவரையும் சந்திக்கிறார் என்று கடந்த வாரம் எழுதியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியுடனும் வழிகாட்டலுடனும் முன்னெடுத்த அதே பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வேறு வழியின்றி  தொடருகின்ற ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரையிலும் கூட விக்கிரமசிங்கவின் அணுகுமுறையே கடைப்பிடிக்கின்றார் போன்று தெரிகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி திசாநாயக்க நடத்திய பேச்சுவார்த்தைகளின் இறுதியில் கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை கடந்த வருடம் விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது  வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டவற்றை விட புதிதாக எதையும் கூறவில்லை என்பதே பரவலான அவதானிப்பாக இருக்கிறது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி திசாநாயக்கவிடம் புதிதாக எதையும் கூறியதாக தெரியவில்லை. அது விடயத்தில் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தவற்றையே புதிய ஜனாதிபதியிடமும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால், இலங்கை  செய்யவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பில் எதையும் நடைமுறையில் செய்யப் போவதாக ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளிக்காமல் அவை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். 

இந்தியாவுடன் சேர்ந்து முன்னெடுப்பதற்கு முன்னைய இலங்கை அரசாங்கங்கள் இணங்கிக்கொண்ட பல செயற்திட்டங்களை இரு தேசிய தேர்தல்களுக்கும் முன்னதாக கடுமையாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் தற்போது தங்களது அரசாங்கம்  மறுதலையாக எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதில் பெரிய சவாலை எதிர்  நோக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (Economic and Technological Cooperation Agreement — ETCA ) செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எட்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய பேச்சுவார்த்தைகளை  ஜே.வி.பி.யின் தலைவராக  திசாநாயக்க கடுமையாக  எதிர்த்தார். 

எந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அன்று திசாநாயக்க சூளுரைத்தாரோ  அதே உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு புதுடில்லியில் இணக்கத்தை தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே முன்னைய அரசாங்கங்களின் கீழ்  ‘எட்கா’  உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் 14 சுற்று பேச்சுவார்த்தைகள்   இடம்பெற்றிருக்கின்றன.

ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்திருக்கும் இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்தவாரம் பாராட்டி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான  ஒத்துழைப்பை ஆழமாக்கி வலுப்படுத்துவதற்கு ‘எட்கா’ தொடர்பிலும் திருகோணமலையை பிராந்திய  சக்திவலு மற்றும் கைத்தொழில்  மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி திசாநாயக்க இணங்கியிருப்பதை ஒரு பெரிய முன்னேற்றம் என்று  மெச்சுகிறேன்.” என்று விக்கிரமசிங்க அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எந்த ஒரு சிறிய பிரச்சினையையும்  தவறவிடக்கூடாது என்பதில் அதீத அக்கறையாக இருக்கும் எதிர்க்கட்சிகள் இந்திய — இலங்கை கூட்டறிக்கையில் தவறு கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இலங்கைக்கு துரோகமிழைக்கும் எந்த உடன்படிக்கையையும் தாங்கள் செய்துவிட்டு டில்லியில் இருந்து திரும்பிவரவில்லை என்று ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்கவை பொறுத்தவரை, 1980 களின் பிற்பகுதியில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி  அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். நிச்சயமாக அவரின் சிந்தனையில் இந்திய விரோத அரசியலுக்கு பிரதான  இடம் இருந்திருக்கும். தற்போது அவர் நாட்டின் ஜனாதிபதியாக இந்தியாவுக்கு விஜயம் செய்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருப்பதன் மூலமாக தனது அரசியல் வாழ்வில் ஒரு முழு வட்டத்தைச் சுற்றி வந்திருக்கிறார். 

அவரின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர உறவு முறைமையில் ஒரு முழுமையான அங்கீகாரத்தையும்  பெற்றுக் கொடுத்திருக்கிறது எனலாம்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பொருளாதார ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும்  மனந்திறந்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் குந்தகமான எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை மண்  பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்திருக்கிறார். இது முன்னைய ஜனாதிபதிகளும்  அளித்த உறுதிமொழிதான். 

இந்தியாவையும் சீனாவையும் சமதூரத்தில் வைத்து அவற்றுடனான உறவுகளை ஒரு சமநிலையில் பேணுவதில் ஜனாதிபதி அக்கறை கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக  சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளை பகைத்துக் கொள்ளாத வகையிலான  உறவுகளை பேணுவது இலங்கைக்கு அவசியமாகிறது. 

இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கின்றவை தொடர்பான பட்டியலுடன் நாடு திரும்பிய ஜனாதிபதி அடுத்த மாதம்  உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவிருக்கிறார். பெய்ஜிங்கில் இருந்தும் ஒரு பட்டியலுடன் தான் அவர் நாடு திரும்பவேண்டியிருக்கும்.  இலங்கையில் தங்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணுவதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டா போட்டிக்குள் இலங்கையை சிக்க வைக்காமல் வழிநடத்திச் செல்வது ஜனாதிபதிக்கு நிச்சயமாக ஒரு சவாலாகவே இருக்கும்.

இனப்பிரச்சினை:

===========

இது இவ்வாறிருக்க, இந்தத் தடவை ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பிரதமர் மோடி இலங்கை இனப்பிரச்சினை குறித்து தெரிவித்த கருத்து முன்னைய ஜனாதிபதிகளின் முன்னிலையில் அவர் கூறியவற்றில் இருந்து ஒரு பிரத்தியேகமான வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது.

முன்னைய ஜனாதிபதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் அவர்களுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் இந்தியப் பிரதமர்  இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால், கடந்த திங்கட்கிழமை புதுடில்லியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் மோடி 13 வது திருத்தம் பற்றி எதையும் கூறவில்லை. அந்த விலகல் பிரத்தியேகமான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

அது மாத்திரமல்ல, அரசியல், பொருளாதாரம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றை தழுவியதாக 31 அம்சங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியோ,  போரின் முடிவுக்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் தமிழர்களின் அபிலாசைகள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

“இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன்  மாகாணசபை தேர்தல்களையும்  நடத்தி அவர்கள் தங்களது கடப்பாட்டை நிறைவு செய்வார்கள் என்று நம்புகிறோம்” என்று மாத்திரம் மோடி செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார். 13 வது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை அவர் திட்டமிட்டே தவிர்த்தார் என்றே தோன்றுகிறது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி திசாநாயக்க, “வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று சகல மாகாணங்களையும் சேர்ந்த சகல சமூகங்களும் எமக்கு கிடைத்த ஆணைக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றன. மக்களினால் அத்தகைய ஒரு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் சாராம்சம் வெவ்வேறு வகைப்பட்ட அரசியல் சிந்தனைகள் மற்றும் குழுக்களின் சகவாழ்விலேயே தங்கியிருக்கிறது என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறேன்”  என்று குறிப்பிட்டார். 

கடந்தகால கூட்டறிக்கைகளில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய குறிப்புகளில் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் நிச்சயமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு நாடுகளினதும்  முக்கியமான பத்திரிகைகளையும்  அரசியல் அவதானிகளையும் போன்று  இந்த வித்தியாசத்தை அல்லது விலகலை  இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும்  கவனித்து அக்கறை காட்டியதாக் தெரியவில்லை.

‘ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ பத்திரிகை திசாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்து வெள்ளிக்கிழமை  எழுதிய  ஆசிரிய தலையங்கத்தில் 13 வது திருத்தத்தை திசாநாயக்க விரும்பவில்லை என்பதால் மோடி தமிழர் பிரச்சினையில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்து ஆங்கிலப் பத்திரிகையும் 13  வது திருத்தம் பற்றி மோடி  குறிப்பிடத் தவறியதை சுட்டிக்காட்டியிருக்கிறது. 

ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அதை ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.13 வது திருத்தமும் ஒரு அங்கமாக இருக்கும் அரசியலமைப்பையே  முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கூறியிருக்கிறார் என்றும் அதை தாங்கள் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தடவை 13 வது திருத்தத்தைப் பற்றி மோடி குறிப்பிடாமல் இருந்ததன் சூட்சுமத்தை சுமந்திரன் ஏன் மெத்தனமாக நோக்குகிறார் என்று விளங்கவில்லை.

ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உள்நாட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக தமிழர் பிரச்சினை தொடர்பில் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பதில் மோடி மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. பெருமளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் இந்தியா காலப்போக்கில்  13 வது திருத்தம் பற்றி பேசுவதை கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பெரும்பாலான  தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு கற்பனாவாத அரசியல் உலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த திருத்தத்தை பற்றி அக்கறை காட்டுவதில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் விரும்பாத ஒரு விடயத்தைப் பற்றி இந்தியா ஏன் வில்லங்கத்துக்கு அக்கறைப்படப் போகிறது? 

 இத்தகைய ஒரு பின்புலத்தில், இலங்கை ஜனாதிபதியின்  இந்திய விஜயத்துக்கு பிறகு  கடந்த வெள்ளிக்கிழமை இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுதிய ‘ இலங்கை தமிழர் பிரச்சினையில்  யதார்த்த நிலைவரத்தை தெரிந்துகொள்தல்’ (Reality check on Sri Lankan Tamil  question )  என்ற தலைப்பிலான கட்டுரையில் சில பகுதிகளை இங்கு கவனத்துக்கு கொண்டுவருவது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

“இலங்கை தமிழ்  அரசியல் சமுதாயம் பெரியதொரு சவாலை எதிர்நோக்குகிறது. அண்மைய பாராளுமன்ற தேர்தலில்  வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஒரு மாவட்டத்தை தவிர ஏறையவற்றில் பிராந்திய தமிழ் கட்சிகளை தேசிய மக்கள் சக்தி தோற்கடித்திருக்கிறது. தமிழ் வாக்காளர்கள் தெளிவான செய்தி ஒன்றைக் கூறிய பிறகு தமிழ் அரசியல் சமுதாயம் அதன் குரலை மீண்டும் பெறுவதற்கு பெரும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

” தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து பழக்கப்பட்டுவிட்ட பிறகு தமிழ் அரசியல் தலைமைத்துவம் அதன் சொந்த தோல்வியுடன் மல்லுக்கட்ட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. புதுடில்லியை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சினை இந்தியாவிற்குள்  நெருக்குதலை தரக்கூடிய ஒன்றாகவோ அல்லது இராஜதந்திர ரீதியில் செல்வாக்கைச் செலுத்த உதவக்கூடிய ஒன்றாகவோ இனிமேலும் இல்லை.  பிரச்சினை தீர்வுக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த உண்மையை விளங்கிக்கொள்வது நல்லது.

” தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அக்கறையும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டுபோகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நேரம் இது. தவிரவும்,  சிறுபான்மைச் சமூகங்களை நன்றாக நடத்துமாறு இன்னொரு நாட்டைக் கேட்பதற்கான தார்மீகத் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டுப்பார்க்க வேண்டும்.

” மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திலான ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள்,  இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆகியவற்றுடன்  ஊடாட்டங்களைச் செய்யும் தமிழ் அரசியல் சமுதாயத்தின் மையத் தந்திரோபாயம் களத்தில் கணிசமான முன்னேற்றத்தை  கொண்டு வரவில்லை என்பது தெளிவானது. தமிழ் அரசியல் சமுதாயம்  நம்பகத்தன்மையை மீளக்கட்டியெழுப்பி பொருத்தமான ஒரு சக்தியாக நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு தெரிவுகள் குறைவாகவே இருக்கின்றன.

” அவர்கள் தங்களை திருத்தியமைத்துக் கொண்டு, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்ற மக்களை மையப்படுத்திய அரசியலைச் செய்யவேண்டும். வேறு எங்காவது இருக்கின்ற சக்திகளுடன் வருடக்கணக்காக பேசுவதில் மூழ்கியிருக்கும் தலைவர்கள் இப்போது தமிழ் மக்கள் கூறுவதை உற்றுக் கேட்கவேண்டும். இதை அவர்களுக்கு அந்த மக்கள் நினைவுபடுத்த வேண்டும்.”