— அழகு குணசீலன் —
அரசியல், இராணுவ பலவீனங்களை பயன்படுத்தி இராஜதந்திரம், இராணுவ மூல உபாயங்கள் ஊடாக எதிரியை வீழ்த்துவது என்பது ஒன்றும் புதியவிடயமல்ல. இது சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய உலகில் இவற்றிற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என்பன வழங்குகின்ற பின்புற காற்று வளம் இந்த இராணுவ, அரசியல் இலக்கு எல்லைகளையும் தாண்டி பொருளாதார இலக்குகளை அடைவதை இலகுபடுத்துகிறது. காலனித்துவ மேலாதிக்கம் ஈன்ற நவகாலனித்துவம் என்ற மறுபிறப்பும் மறுவடிவமும் இது.
இதை சம்பந்தப்பட்டவர்கள் சமானத்திற்கானபோர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஆக்கிரமிப்பு, ஜனநாயக மறுப்பு, அடக்குமுறை, சர்வதிகாரத்திற்கு எதிரான போர் என்று எப்படியும் கதைவிடலாம். ஆனால் ஒரு போர் அதற்கு கூறப்படும் காரணங்களையே மீள் பிரசவம் செய்வதாக அமைந்து விடுகிறது. இவற்றை செய்பவர்களே மீட்பர்களாகவும், மீட்பர்களே செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவற்றை ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் என்ற வார்த்தைகளின் மூலம் சர்வதேச அரசியல் சந்தையில் இந்த வியாபாரிகள் மிகவும் இலகுவாக விற்பனை செய்தும் விடுகிறார்கள்.
சமகாலத்தில் இடம் பெறுகின்ற மூன்று சண்டைகள் ஒன்றில் இருந்து ஒன்றை தனியாக பிரித்து பார்க்கமுடியாத ஒரு கோர்வை. உக்ரைனில் ஆரம்பித்து, பாலஸ்தீனத்தில் மீள் உச்சம் பெற்று, சிரியாவில் வந்து நிற்கிறது. இந்த மூன்று சண்டைகளும் இரு வல்லரசுகளுக்கு இடையிலான மோதல் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.. இதற்கு அனுசரணையாக அவர்களின் அணிகளும் பங்காளர்களாக உள்ளனர். பங்காளர்கள் வல்லரசுகளுக்கு பின்னால் குருட்டுத்தனமாக தொடர்கின்றனர்.
அமெரிக்க ஆதிக்க சக்தியின் பின்னால் இஸ்ரேல், மேற்கு ஐரோப்பிய நாடுகள்- முக்கிய அன்றைய காலனித்துவ நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, போர்த்துகல், ஸ்பெயின், ஒல்லாந்து என்பனவும் ஜேர்மனியும் அணிவகுத்துள்ளன. உக்ரைன் யுத்தம் பூகோள பிராந்திய அரசியல் அச்சம் காரணமாக மேலும் பல கிழக்கு, வட ஐரோப்பிய நாடுகள் தமது நடுநிலையில் இருந்து விலகி பக்கம் சார காரணமாக அமைந்துள்ளது. நேட்டோ அணியாக துருக்கியும் தம்பங்கை செலுத்தத் தவறவில்லை. இவை ரஷ்ய -உக்ரைன் யுத்தத்தில் ஆயுத,நிதி, இராணுவ வளங்களின் வழங்குனர்களாக, உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இந்த நிலைப்பாட்டை உக்ரைன் ஜனாதிபதி நன்கு பயன்படுத்துகிறார். எந்த சந்திப்பிலும் அவரின் கோரிக்கை அதிக ஆயுதமாகவே இருக்கிறது. போரை போரால் வெல்ல முடியும் என்ற நிலைப்பாடு.
மறு வல்லரசு தரப்பான ரஷ்யாவுடன் ஈரான், ஈராக், லெபனான், சிரியா என்பன ஓரணியில் இயங்குகின்றன. ஹாமாஸ் இயக்கம் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலும், நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்ட சூழலும் இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்த கதையாக அமைந்தது. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் அனைத்து அரச பயங்கரவாதத்தையும் அங்கீகரித்து, ஆதரவு வழங்கிய மேற்குலகம் வெறுமனே மனிதாபிமான உதவிகளை மட்டுமே வலியுறுத்தியது. அதையும் இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை. அமெரிக்க இறக்கைகளுக்குள் இருக்கும் இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.மட்டுமன்றி எந்த சர்வதேச அமைப்பும் ஒரு துரும்பை கூட நகர்த்த முடியவில்லை. இதற்கு போர்க்குற்ற சர்வதேச நீதிமன்றமும் விலக்கல்ல. ஐ.நா.செயலாளர் நாயகம் பதவி விலக வேண்டும் என்ற அளவுக்கு இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களமும், முடிவுகளும் இந்த சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவாறான ஒரு நிலையை எட்டின. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பலவீனமான ஜனாதிபதி ஜோ பைடன் வேட்பாளராகக்கூட போட்டியிட முடியாதவாறு ஜனநாயகக் கட்சியின் ஆதரவை இழந்தார். அவருக்கான பதிலீடாக ரொனால்ட் ட்ரம்க்கு முன்னால் தேர்தல் களத்தில் தாக்குப் பிடிக்கக்கைடிய அரசியல் சக்தியை கமலா ஹரீஷ் கொண்டிருக்கவில்லை. விளைவு, ட்ரம்பின் அமெரிக்கா பெ(f)ஸ்ற் கோஷம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றது.
நேட்டோ, ஐ.நா, என்பனவற்றிற்கு எதிராக நிதிவழங்கலை குறைத்தல், உள்நாட்டு பொருளாதார மேம்பாடு, இராணுவத்தை வெளிநாடுகளில் இருந்து மீளப்பெறல் , குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள், சமகால யுத்தங்களில் பைடனைவிடவும் மாறுபட்ட அணுமுறை என்பனவற்றை ட்ரம் இடமிருந்து எதிர்பார்க்கும் உலகத்தில் பைடன் நிர்வாகம் வெள்ளை மாளிகையை வரும் ஜனவரி 20ம் திகதி காலிபண்ணுவதற்கு முன்னர் அவசர அவசரமாக எடுத்த முடிவுகளில் ஒன்றே சிரியா கிளர்ச்சி.
யாரை பயங்கரவாதிகள் என்று கூறினார்களோ அவர்களையே பயன்படுத்தி அசாத் நிர்வாகத்தை அகற்றி ரஷ்யாவை பலவீனப்படுத்தும் நடவடிக்கை இது. ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவுக்கு எதிராக ஒசாமா பில்லாடனை வெள்ளை மாளிகையில் வரவேற்றதிற்கும் இந்த தந்திரோபாயத்திற்கும் இடையே வேறுபாடில்லை. இதன் மூலம் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தி இருக்கிறார்கள்.
1. உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவின் முழுக்கவனமும் திரும்பியிருந்த நிலையில் -சிரியாவுக்கு இராணுவ உதவிகளை அதிகரிக்க முடியாத பலவீனத்தை பயன்படுத்தி அசாத் ஆட்சியை வீழ்த்தியமை.
2. அசாத் நிர்வாகம் சீர்குலைந்த நிலையில் சிரியாவின் கோலான் குன்று பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தி இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கம் செய்தல்.
3. குர்திஷ்தான் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி -சிரிய எல்லையில் தாக்குதல் நடாத்தி துருக்கி தனது எல்லையை பலப்படுத்தல்.
ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திலும் அமெரிக்கா குர்திஸ்தான் தனியரசுக்கான வாக்குறுதியை வழங்கி அவர்களை பயன்படுத்திய பின்னர் நடுவழியில் கையைவிரித்த கதையும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஏற்கனவே குர்திஷ் விடுதலை அமைப்பின் தலைவர் ஒஸ்லான் மொஸ்கோ செல்லவிருந்த வழியில் ஆபிரிக்காவில் வைத்து சி.ஐ.ஏ, மொசாட் புலனாய்வு அமைப்புக்களினால் கடத்தப்பட்ட விடயத்தையும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தலாம்.
இன்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் கிளர்ச்சியாளர்கள் வேறுயாருமல்ல. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனம் செய்த அல்கைதா, ஐ.எஸ் அமைப்புக்களின் உறுப்பினர்கள். 2011 அரபுலக கிளர்ச்சிகளின் போது இருந்து ரஷ்யாவின் படைகள் சிரியாவிற்கு பக்கபலமாக இருந்துவருகின்ற போதும் 2015 இல் இருந்து இது வெளிப்படையானது. ரஷ்யா இரண்டு யுத்தங்களை ஏக காலத்தில் எதிர்கொள்ள முடியாத நிலையில் சிரியா கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்துள்ளது. அசாத் ரஷ்யாவுக்கு தப்பியோட வேண்டியேற்பட்டது.
லெபனானிலும், ஈரானிலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடாத்தும் எல்லை தாண்டிய அரச பயங்கரவாதம், ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கும் ஆதரவுக்கும், லெபனான் வழங்கும் ஆதரவுக்கும் எதிரானதாக அமைகிறது. ஹிஸ்புல்லா இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன அமைப்புக்களுடன் இணைந்து செற்படுவதனால் ஹாமாஸை மட்டும் அல்ல ஹிஸ்புல்லாவையும் அழிக்கும் இலக்கில் இது இடம்பெறுகிறது.
அமெரிக்க ஆசியோடு தருணம் பார்த்து இடம்பெற்றுள்ள அசாத் அரசின் வீழ்ச்சியின் போது கிளர்ச்சியாளர்கள் வழமைக்கு மாறாக அதாவது தமது அல்கைதா, ஐ.எஸ். வளர்ப்பு பின்னணிக்கு மாறாக நடந்துள்ளனர் என்று மேற்குலக ஊடகங்கள் பாராட்டுகின்றன. இன்றைய நிலையில் இதை மறுப்பதற்கில்லை. இதுவும் கிளர்ச்சியாளர்களுக்கான அமெரிக்க ஆதரவுக்கான நிபந்தனைகளுள் ஒன்றாகவே இருக்க முடியும். இது சிரிய மக்களுக்கு ஒரு பெரும் ஆறுதலையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இல்லையேல் அமெரிக்காவுக்கான எதிர்ப்பலை அரபுலகில் அதிகரித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கிளர்சிப்படையினரின் இந்த இனம்புரியாத அமைதி குறித்து அரபுலகில் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.
1971 முதலான அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரைன் யுத்தம், பாலஸ்தீன யுத்தம் என்பன அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மறு பக்கத்தில் இரண்டு தேசிய இனங்களான பாலஸ்தீன, குர்தீஸ் மக்களின் போராட்டங்கள் முடிவற்று தொடர்கின்றன. பாலஸ்தீன, குர்திஸ்தான் கேள்விகளுக்கு பதில் இன்றி இந்த பிராந்தியத்தில் அமைதி என்பது வெறும் வெற்று வார்த்தை. மேற்குலகம் பயங்கரவாதத்தையும், தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஒன்றாக போட்டு குழப்பியடிக்காமல் காலத்திற்கு பொருத்தமான அணுகுமுறையை கையாளாததவரை சமாதானத்திற்கான போர் என்பது அதற்கு எதிரான போரே.