“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 57)

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்- 57)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

– செங்கதிரோன்-

 வட்டவிதானைமார் மூவரும் விடைபெற்றுச் சென்றதும் கோகுலன் தனித்துவிடப்பட்டான். மனைவி சுந்தரி குசினிக்குள் இராச்சாப்பாடு தயாரிக்கும் கருமங்களில் கண்ணாயினாள்.

 இலங்கை மக்களின் விவசாயப் பண்பாட்டை எண்ணிப் பார்த்தான். Agriculture எனும் ஆங்கிலப் பதத்தை எடுத்து அதில் வரும் ‘Culture’ எனும் வார்த்தையின் அர்த்தத்தை அலசினான். ‘Culture’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் ‘பண்பாடு” தானே. 1977 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அறிமுகம் செய்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்களின் பாரம்பரிய விவசாயப் பண்பாடு பாதிப்புற்று வருவதையெண்ணிக் கவலை கொண்டான்.

 நவீனம் என்ற பெயரில் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் விழுங்கப்படுவதையெண்ணி வேதனைப்பட்டான்.

 குறைந்த எண்ணிக்கையான ஏக்கர் வயல்நிலங்களைத் தன்கீழ் பாசனமாகக் கொண்ட சிறிய மற்றும் மத்தியதர குளங்களும் அதன் கீழ் இரண்டு, மூன்று , ஐந்து ஆகக் கூடியது பத்து ஏக்கர் நெற்காணிகளில் வேளாண்மை செய்யும் சிறு பயிர்ச் செய்கைச் சொந்தக்காரர்களுமே இலங்கையின் விவசாயப் பண்பாட்டின் ஆணி வேர்கள்.

 துரித அபிவிருத்தி என்ற பெயரில் முப்பது வருடங்களுக்குத் திட்டமிடப்பெற்ற இலங்கையின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆறு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு அதனைத் ‘துரித மகாவலி அபிவிருத்தி திட்டம்’ ஆக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியுள்ள நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் பல சமூக பொருளாதார அரசியல் மற்றும் சூழல் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்குக் காலாயமைந்து மக்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குப் பாதிப்பையேற்படுத்தப் போகின்றன எனப் பயந்தான். 

 துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களைவிடவும் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் போன்ற சிறிய திட்டங்களே விளிம்பு நிலை விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடியன என்பதே கோகுலனின் நிலைப்பாடாயிருந்தது.

 துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் பல பாரம்பரியக் கிராமங்கள் நீரில் மூழ்கப்போகின்றன. அந்த மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்வர். நிறையக் காடுகள் அழிப்பு நிகழப்போவதால் இயற்கைச் சூழ்நிலை பாதிப்புறும். காட்டு மிருகங்களின் வாழ்விடங்கள் அழியும். இவற்றினால் கிராமப்புற விளிம்புநிலை மக்களின் சமூக பொருளாதாரப் பண்பாட்டு விழுமியங்களில் பாதிப்புக்கள் நிகழும்.

 துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால் ஐம்பது, நூறு ஏக்கர் என்று விவசாயம் செய்யும் பெரும் பயிர்ச் செய்கைகாரர்களான நிலச்சுவாந்தர்களும் பாரிய நிர்மாணம், நிர்மாணப் பொருட்கள் விநியோகம் மற்றும் காடழிப்பு போன்ற வேலைகளை ஒப்பந்தம் எடுக்கும் பெரும் முதலாளிகளும்தான் அதிக நன்மைகளை அடையப் போகிறார்கள். சாதாரண சாமான்ய விவசாயிகள் அல்ல என்றே கோகுலன் எண்ணினான். செல்வந்தர்கள் மேலும் செல்வத்தைப் பெருக்குவதும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் கூடப்பொருளாதாரப் பிரச்சனைதானே. 

 இத்தகைய சிந்னைகளின் பின்னணியில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைத் திட்டத்தையும் வைத்து நோக்கினான். அரசியல்வாதிகளும் , அரசாங்க உயர் அதிகாரிகளும் துறைசார் தொழில்வாண்மையாளர்களும் விளிம்புநிலை மக்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைக் கணக்கிலெடுக்காது ஏனோதானோ எனச் செயற்படும் அவர்களது மேல்த்தட்டுவர்க்க மனோபாவத்தை வெறுத்தான். மக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைக்கூட இறங்கிவந்து பார்க்காது ‘பல்கனி’ யில் அமர்ந்து கொண்டு நோக்கும் அத்தகையோரது வித்துவச் செருக்கையும் பார்வைக் கோளாறுகளையும், பூர்சுவாத்தனத்தையும் பகைத்துக் கொள்வதில் தவறில்லை என்று தீர்மானித்தான். அரச நிர்வாகத்தின் சிவப்பு நாடாப் போக்கின்மீது சினம் கொண்டான்.

 ‘துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம்’ போன்ற பல கோடி ரூபாய்களை விழுங்கும் திட்டங்களைவிட சில இலட்சங்களே செலவு செய்து இலங்கை முழுவதிலுமுள்ள கிராமியக் குளங்களை முறையாக நிர்மாணித்துக் கொடுத்தால் அதுவே கூடிய பயனுடையதும் குறைந்த செலவுடையதுமாகும் என்றும், இதனால் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகள், சிறு பயிர்ச்செய்கைக்காரர்கள் கூடிய நன்மைகளைப் பெறுவர் என்றும் நினைத்தான். 

 மட்டக்களப்பு மண்டூரைச் சேர்ந்த பண்டிதர். வீ.சி.கந்தையா என்பவர் எழுதி வெளியிட்ட ‘மட்டக்களப்புத் தமிழகம்’ எனும் நூலில் ‘மட்டக்களப்பு கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள ஊர்க்குளங்கள் பலவும் நாடு முழுவதையுமே செல்வம் செழிக்கச் செய்து வந்திருக்கின்றன. அவை பாரிய நீர்ப்பாய்ச்சற் திட்டங்களின் கீழமைந்த குளங்களைப் பார்க்கிலும் மிகப் பெரிதும் பயன் தந்துள்ளன எனலாம். ஊர்க் கிணறுகளில் தண்ணீர் வற்றாதிருக்கவும் , காய்கறித் தோட்டங்கள் செழிக்கவும், மந்தைகள் வாழவும் வழிவகுத்து ஊர்தோறுமுள்ள சிறு நிலமெங்கினும் நல்வளம் செழிக்கும் நெல்வயலைச் செய்த சிறப்பு எல்லாம் அக்குளங்களுக்கே உரியது’ எனக் குறிப்பிட்டிருந்த வரிகள் அச்சொட்டாகக் கோகுலனின் நினைவில் குதிர்த்தன. பல வருடங்களுக்கு முன்பு படித்த புத்தகமானாலும் இவ்வரிகள் கள்ளிமரத்தில் ஏற்றிய ஊசியைப் போலக் கோகுலனின் நினைவுப் புத்தகத்தில் ஊன்றிப் பதிவாயிருந்தன. கிராமிய விவசாயம்தான் இலங்கையின் விவசாயப் பண்பாட்டின் அடித்தளம் என்பதைக் கோகுலன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தான். 

 உயர் அதிகாரிகளான அம்பாறைப் பிராந்திய நீர்ப்பாசனப் பிரதிப் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் இம்முறை கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள விவசாயிகளுக்குப் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் வைத்துக் கொடுக்காததை இத்தகைய சிந்தனைப்புலத்தில் நின்று நோக்கியதால்தான் தனது மேலதிகாரிகளின் தீர்மானங்களை மீறியும் சட்ட விதிகளைச் சற்று வளைத்தும் கஞ்சிக்குடி ஆற்றுக்குள விவசாயிகளுக்கு சிறுபயிர்ச் செய்கையாளர்களுக்குத் தனது வழமையான உத்தியோக ரீதியான வரம்புகளையும் கடந்து உதவ முன் வந்திருந்தான் கோகுலன். தான் எண்ணித் துணிந்த இக்கருமம் இழுக்கல்ல என்றும் எண்ணினான். 

 விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் வேளைக்கு விதைத்தால் வருடம் முடிந்து ஜனவரி மாதமளவில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திலிருந்து ‘ஒருதண்ணி’ (ஒரு தடவை) கொடுத்தாலே பயிர் விளைந்துவிடும் என்பதே கோகுலனின் எதிர்பார்ப்பாகவிருந்தது.

 நாட்கள் நகர்ந்தன.

அடுத்தவருடம் ஜனவரி மாதத்தொடக்கத்திலேயே கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளப் பாய்ச்சலின் கீழிருந்த கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் கண்டம்-சாவாறுக் கண்டம் – கோம்பக்கரச்சிக் கண்டம் ஆகிய பூமிகளில் செய்யப்பட்ட வேளாண்மை வயல்களெல்லாம் செழித்து விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் பழுப்புநிற நெற்கதிர்களை காற்றில் அசைத்தும் சாய்த்தும் தமது எஜமான் விவசாயிகளை இறும்பூது எய்தச் செய்தன.

 அறுவடை முடிந்து ஒரு நாள் மாலை வட்டவிதானைமார் மூவரும் கோகுலனின் வீட்டிற்கு வந்தார்கள். 

 ‘கேற்’ றடியில் வந்து நின்ற மூவரையும் உள்ளே அழைத்தான் கோகுலன். அவர்கள் மூவரும் முகம்மலர உள்ளேவந்து கோகுலனுடைய கை அசைவில் வரவேற்பு மண்டபத்தில் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்தார்கள். கோகுலன் மூவரையும் நோக்கி,

 “என்ன! எல்லோருக்கும் சந்தோசம்தானே, இந்த மாரிப்போகம் நல்ல விளைச்சலாம் எண்டு கேள்வி” என்று பேச்சை ஆரம்பித்தான்.

 “ஓம்! ஐயா! உங்கட புண்ணியத்தால எல்லாம் நல்லபடி நடந்திது. எங்களுக்கெண்டா நல்ல சந்தோசம்தான், மிகப்பெரிய நன்றி ஜயா” என்றார் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் கண்ட வட்டவிதானை கணேசமூர்த்தி, ஏனைய இருவரும் “ஓம்” என்று கூறித் தலையசைத்து கணேசமூர்த்தி கூறியதை மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார்கள்.

 “அது பெரிய விசயமில்ல. எண்ட கடமையைச் சரியாச் செய்தன் அவ்வளவுதான். குளம் உங்களுக்குரியது. குளத்தில் தண்ணியிருந்தது. இந்தமுறை பருவ மழையும் ஒழுங்காக இருந்ததால நீங்களும் நேரத்திற்கு விதைத்ததால தை மாசம் ஒரு தண்ணியோட வேளாண்மய விளைவிச்சி எடுத்திட்டீங்க. அதுக்குப்போய் பெரிசா எனக்கு நன்றியொன்றும் சொல்லத் தேவல்ல” என்றான் கோகுலன்.

 “இல்ல ஐயா! நீங்களும் மத்த உத்தியோகத்தர்கள் மாதிரி மேலதிகாரி சொல்லிறதிக்கெல்லாம் தலையாட்டிர ஆளா இருந்திருந்தா, இந்தமுற எங்கட பாடு வயல் செய்யாட்டி திண்டாட்டம்தான்” என்றார் சாவாறுக்கண்ட வட்ட விதானை மார்க்கண்டு.

 “சரி! சரி! இந்தக் கதைகள விடுங்க . இப்ப என்ன மூன்று பேரும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்கீங்க. என்ன பிரச்சனை?” என்று பேச்சின் திசையை மாற்றினான் கோகுலன்.

 பேச்சுக்கள் துரைராசரட்ணத்தைப் பற்றியதாகத் திசை திரும்பிவிடக்கூடாது என்பதில் கோகுலன் சற்று எச்சரிக்கையாகவே செயற்பட்டான்.

 கோகுலன் கூறியதைக் கேட்டதும் வட்ட விதானைமார் மூவரும் ஆளையாள் பார்த்து முகக் குறிப்பால் ஏதோ தமக்குள் பேசிக் கொள்வதை அவதானித்தான். 

 பரவால்ல. ஒண்டும் யோசியாம வந்த விசயத்தச் சொல்லுங்க” என்றான் கோகுலன்.

 வழமைபோல கணேசமூர்த்திதான் வாய் திறந்தார்.

 “எல்லாக் கண்டத்திலயும் வெள்ளாம வெட்டெல்லாம் முடிஞ்சிது. இந்த முற வெள்ளாமக்காரர் எல்லாரும் சேந்து வட்டக்குள்ளயும் புதிர் சாப்பிட்டுக் கொண்டாடப் போறம். அதுக்கு உங்களயும் கூப்பிடத்தான் வந்தநாங்க. ஏலா எண்டு சொல்லாம எங்கட இந்த அன்பான அழைப்ப ஏத்துக் கடடாயம் நீங்களும் உங்கட துணைவியாரும் வரவேணும். எங்கட மனிசிமாரும் அங்க வருவாங்க” என்றார் கணேசமூரத்தி.

 “புதிர் வீட்டிலதானே குடுப்பாங்க . அதென்ன நீங்க வயலுக்குள்ள புதிர் கொடுக்க எண்டு புதுவிதமாக் கதைக்கிறீங்க” என்று கோகுலன் தனது சந்தேகத்தை எழுப்பினான்.

 “இல்ல ஐயா! புதிர் குடுக்கிறதெல்லாம் எங்கட வீட்டில முடிச்சிட்டம். புதிர் சாப்படுற அண்டைக்கு மரக்கறிதானே ஆக்கிற. அதிலயும் பாவக்காய், பலாக்காய் கட்டாயம் ஆக்கவும் வேணும். நாங்க உங்கள வட்டைக்குள்ள கூப்பிடுறது வழமயான புதிர்ச் சாப்பாட்டுக்கில்ல. உங்களுக்கு ஆட்டுக்கிடா அடிச்சி வட்டைக்குள்ள ஒரு நல்ல சாப்பாடு போடவேணும் என்றிரதான் எங்கட ஆச. அதத்தான் நாங்க வட்டைக்குள்ளயும் புதிர் சாப்பிட்டுக் கொண்டாடப் போறம் எண்டு சொன்னநாங்க” என்று விளக்கமளித்தார் கணேசமூர்த்தி.

 “என்ன அழைச்சதுக்கு நன்றி. உங்களுக்கு நான் குளத்திலிருந்து தண்ணி திறந்துவிட்டதே களவில்தான். இப்பிடி வட்டைக்குள்ள புதிர் கொடுக்கிற எண்டு பெரிசாச் சாப்பாடு போட்டுக் கொண்டாடி நானும் அங்க வந்தா, இந்தக் கத துரைராசரட்ணத்திர காதுக்கு எட்டித்தெண்டா, தெரியும்தானே அவருக்கும் எனக்குமிடையில முதலிலேயே நல்லமில்ல. அதுதான் உங்கட அன்பான அழைப்ப ஏத்துக் கொள்ளமுடியாம இரிக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்க” என்று அவர்களது அழைப்பை இங்கிதமாக மறுத்த கோகுலன், 

 “மறுகா, சும்மாவே ஆடுற பேய்க்குச் சலங்கையும் கட்டி விட்டமாதிரித்தான் இரிக்கும்” என்று சொல்லிச் சிரித்தான். 

 “இல்ல ஐயா! நாங்க ஒண்டும் ஆரவாரமில்லாம அமைதியாக எல்லாம் செய்வம். உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராம நாங்க பார்த்துக் கொள்ளுறம். கட்டாயம் நீங்க மறுப்புச் சொல்லாம வரத்தான் வேணும், உங்களுக்காகத்தான் வட்டைக்குள்ள சாப்பாடு போடப்போறம்” என்று மூவரும் விடாப்பிடியாக நின்றார்கள்.

 கோகுலனும் வேறு வழியில்லாமல் அவர்களது அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களின் அழைப்புக்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

 அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. தம்பிலுவில் வாராந்தச் சந்தை கூடும் நாள். 

 தம்பிலுவில் மகாவித்தியாலயத்திற்கு இப்பால் சற்றுத்தள்ளி எதிரே பிரதான வீதியைத் தொட்டதாக கோகுலன் வாடகைக்குக் குடியிருந்த வீட்டிற்கு அண்மையில்தான் தம்பிலுவில் வாராந்தச் சந்தை கூடுமிடம் அமைந்திருந்தது.

 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஏழு மணிக்கெல்லாம் சந்தை ஆரவாரிக்கத் தொடங்கிவிடும் சேனைப் பயிர்ச்செய்கையில் விளைந்த வெண்டி, கத்தரி, பயற்றை, அவரை, கொத்தவரை. பூசணி , நாடை, கக்கரி, பாகல், பீர்க்கு போன்ற மரக்கறி வகைகளுடன் முளைக்கீரை, பொன்னங்காணி, திராய், வள்ளல் போன்ற இலைக்கறி வகைகளும் – கச்சான், சோளன் போன்ற தானிய வகைகளும் – மரவெள்ளி, வற்றாளை போன்ற கிழங்கு வகைகளும் வெங்காயம், பச்சைக்கொச்சிக்காய், உருளைக்கிழங்கு – அத்தோடு ‘உப்போடு கூடிய முப்பத்திரண்டு’ மளிகைச் சாமான்களும் – அரிசி, தேங்காய் மற்றும் முட்டையெனச் சகல சாமான்களும் கடை விரித்திருக்கும். வீடுகளின் கொல்லைப் புறத்திலே நட்டு வளர்த்துக் காய்த்துக் கிடைக்கும் முருங்கைக் காய்களும் நீளத்தில் வரிசையாகக் கிடக்கும். ‘சீசன்’ பார்த்து வெளி மாகாணங்களிலிருந்து வரும் மலைநாட்டு மரக்கறி வகைகளான கரட், பீட்றூட், கோவா, முள்ளங்கி, லீக்ஸ் என்பவையும் சிறியரக ‘லொறி’ வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வீதியோரங்களில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டிருக்கும். அதே போலவே ‘சீசனுக்கு’ வரும் அன்னாசி, றம்புட்டான், கடுபுளியம்பழம், நுரைப்பழம், மங்குஸ்தான் போன்ற பழவகைகளும் பரப்பப்பட்டிருக்கும். தோடை, எலுமிச்சை, கொலுமிச்சை, நாரத்தை, கொய்யா, மா, பலா.வாழை போன்ற உள்ளூர்ப் பழவகைகளும் குறைவில்லாமல் காணப்படும். ஓரமாக மண்சட்டி பானைகளும், ‘ரெடிமேட்’ உடுப்புக் கடைகளும், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரக் கடைகளும் குழந்தைகளுக்கான/ சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாமான்களும் கூட சந்தைக்கு மெருகூட்டும். சந்தை வளாகத்தின் ஓரத்தில் ஒரு ஒதுக்குப் புறமாகத் திருக்கோவில் பிரதேசத்தில் ‘துரை வளத்தான்’ என்றும் காரைதீவில் செப்பலி என்றும் பொத்துவிலில் ‘ஜப்பான்குறளி’ என்றும் பொதுவாகச் ‘செல்வன்’ என்றும் அழைக்கப்படும் ‘ஜப்பான்’, வரால், குறட்டை பனையான். கெழுத்தி, கொக்கிச்சான், உழுவை, ஒட்டி ,ஓரா, மணலை, திரளி, கிழக்கன், செத்தல் போன்ற குளம் மற்றும் களப்பு மீன்வகைகளும் கோரக்களப்பு நண்டு மற்றும் இறால்களும் பாரை, அறுக்குளா, வாளை, முரல், திருக்கை, கீரி போன்ற கடல் மீன் வகைகளும் தோலி, வரால், கணையான், சுங்கான், யப்பான், குறட்டை மீன் கருவாடுகளும் நாட்டுக் கோழிகளும் விற்பனைக்கு இருக்கும். முதல்நாள் வேட்டையில் ஏதும் மான், மரை, பன்றி அகப்பட்டிருந்தால் அவற்றின் இறைச்சிகளும் அவ்வப்போது தலைகாட்டும். றூபஸ்குள மற்றும் அலிகம்பைக் குறவர்கள் வேட்டை நாய்களைக் கொண்டு மறித்துப் பிடித்து உரித்த உடும்பு இறைச்சியும் சிலவேளைகளில் சந்தைக்கு வரும்.

 இடையில் பூச்சிமிட்டாய், தேன்குழல், பம்பாய் மிட்டாய் கடைகள் சிறுவர்களும் தேன் பூச்சிகளும் புடைசூழ இனித்துக் கொண்டிருக்கும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் காட்சிப்படுத்தப்படும் காவிரிப் பூம்பட்டினத்தின் காலங்காடி மற்றும் நாளங்காடிகளில் எழும் கொடுப்பார் ஓசையும் கொள்ளுவார் ஓசையும் போலத் தம்பிலுவில் சந்தையில் விற்போர் மற்றும் வாங்குவோர் போடும் சத்தம் காதுகளை அடைக்கும். சாமான்களைக் கூவிவிற்போர் எழுப்பும் குரல் எல்லாவற்றையும் மேவி எழும். இவற்றிற்கு மத்தியிலும் இப்பிரதேச மக்களுக்குச் சந்தை கூடும் நிகழ்வு சந்தோசமானதொன்றாகும்.

 திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி கோவிலின் வருடாந்த ‘ஆடி அமாவாசை’த் தீர்த்தக்கரைபோல் தம்பிலுவில் சந்தை ஞாயிற்றுகிழமைகளில் திகழும். அப்படியொரு சனக்கூட்டம் சந்தையில் அலைமோதும். 

 தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அனேகமாக ஆண்கள் வெளியில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே இருப்பர். ஞாயிறு காலை விடிந்ததும் நேரத்தோடு குளித்து வெளிக்கிட்டுச் சந்தைக்குப் போகத் தயாராவர். சைக்கிளிலும் நடையிலும் பைகளுடன் சந்தைக்குச் சென்று கொண்டு சென்ற வெற்றுப் பைகளையெல்லாம் அவை வெடித்துவிடுமோ என்றளவுக்குச் சாமான்களால் நிரப்பிக் கொண்டு வீடு திரும்புவர். ஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் ஓய்வு நாள்தான். வீடுகளில் தங்கியிருந்து மனைவி பிள்ளைகளுடன் உற்றார் உறவினர் நண்பர்களுடன் உறவு கொண்டாடி ஊடாடும் உன்னதமான நாள். அது அனேகமான வீடுகளில் வாரம் முழுவதும் வேலை வேலை என்று உழைப்பில் திரிந்த ஆண்களுக்கு ஓய்வெடுக்கவும் உடல் வருத்தம் போக்கவும் அன்று மதியம் சாப்பாட்டுக்கு முன் ‘எட்டுறாம்’ சாராயப் போத்தலும் எட்டித் தலைகாட்டும்.  

 “மருந்தோடாயினும் விருந்தோடு உண்” என்று விருந்தோம்பல் பண்பாட்டை வலியுறுத்தும் பழமொழி வார்த்தைகள் இடம்மாறி ஞாயிற்றுக் கிழமைகளில் “விருந்தோடாயினும் மருந்தோடு உண்” என ஆகிவிடுவதும் ஓர் அலாதிதான்.

 காலை ஏழுமணிக்கு ஆரவாரிக்கத் தொடங்கும் தம்பிலுவில் வாராந்தச் சந்தை பகல் ஒரு மணி தாண்டும்போது ஆரவாரங்களெல்லாம் அடங்கி அமைதியாகிவிடும். வெளியிடங்களிலிருந்து வந்த வியாபாரிகள் திரும்புவதற்குத் தயாராகிவிடுவர்.

 காலாதிகாலமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தம்பிலுவிலில் கூடும் வாராந்தச் சந்தை இப்பிரதேசத்து மக்களின் வாழ்வியலினதும்-பண்பாட்டினதும் ஒரு பிரிக்க முடியாத அம்சம் ஆகும்.

 அவ்வாறான ஞாயிற்றுக் கிழமையொன்றன்றுதான் கஞ்சிக்குடிச்ச ஆற்று வட்டையில் ‘புதிர்’ உண்ணும் நிகழ்வு என்று கோகுலனைச் சாப்பாட்டிற்கு அழைத்து அதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். அதற்குச் செல்லவேண்டுமென்பதால் கோகுலன் தன் மனைவியுடன் அன்று காலை ஏழு மணிக்கே தம்பிலுவில் சந்தைக்குச் சென்று அடுத்த வாரம் முழுவதற்கும் தேவையான சாமான்களையெல்லாம் கொள்வனவு செய்து வீட்டில் கொண்டு வைத்துவிட்டுக் காலைச்சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு ஒன்பது மணிபோல் மோட்டார் சைக்கிளின் பின் ‘சீற்றி’ல் மனைவியையும் ஏற்றிக் கொண்டு கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தான். தம்பிலுவிலிலிருந்து புறப்பட்டுத் திருக்கோவில் – கள்ளியன்தீவு – விநாயகபுரம் – கோரக்களப்பு – காஞ்சிரங்குடா தாண்டி றூபஸ்குளம் சந்தியில் வைத்து பிரதான வீதியிலிருந்து கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திற்குச் செல்லும் உள்வீதியுள் நுழைந்தான்.

 புதிர் உண்ணும் பண்பாடு கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு மாநிலத்தின் மக்களுடன் ஒன்றிப்போன விவசாயப் பண்பாட்டுக் கூறுகளிலொன்று.

 வானம் சுரந்து வயற்காடெல்லாம் மழைபெய்து வேளாண்மை விளைச்சல் கண்டு அறுவடையாகி நெல்மணிகள் அவணம் அளவைகளில் மூடைகளாக வீடு வந்து சேரும். நெல் வீடுகளில் ‘கொட்டு’ களிலும் ‘பட்டறை’ களிலும் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும்.

 வயல் விளைந்ததும் நல்ல நாளொன்றாகப் பார்த்து அல்லது வெள்ளிக் கிழமைகளில், வெளிறிய மஞ்சள் நிறத்தில் முற்றிப்பழுத்துப் பிஞ்சும் காயுமாகக் கிடக்கும் நெற்கதிர்களைக் கைகொள்ளுமளவுக்கு வெட்டி வீட்டிற்குக் கொணர்ந்து ‘உள்வீட்டு’ க்குள் தேங்காயெண்ணை விளக்கைக் கொளுத்திவைத்து முந்திய வருடம் ‘புதிர்’ எடுத்த கதிர்களில் சிலவற்றை புதுஓலைப் பெட்டியொன்றுள் இட்டு வெள்ளைச் சீலைத் துண்டால் பெட்டியின் வாயை மூடி வீட்டின் மனையாள் எடுத்துத்தர அதற்குள் வயலுக்குள் எடுத்து வந்த புதுநெற்கதிர்க் கற்றையைப் பக்தியுணர்வோடு பக்குவமாய் வைத்து உள்வீட்டுக்குள் கொளுத்தி வைத்த விளக்கின் சுடரொளியில் ‘புதிர்’ அடங்கிய பெட்டியை வைத்துக் கும்பிடுவர். இச்சடங்கே ‘புதிர்’ எடுத்தல்’ ஆகும்.

 வயலிலே விளைந்த நெல் வீடு வந்து சேர்ந்ததும் வசதியான ஒரு நாளில் புது நெல்லைக் காய வைத்தபின் உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கி அந்தக் கைக்குத்துப் புத்தரிசியில் சோறு சமைத்து பலவிதமான கறிகளும் ஆக்கி உறவினர்களையும் அழைத்து உண்டு களித்து விருந்துண்ணும் விவசாயப் பண்பாட்டு நிகழ்வுதான் புதிர் உண்ணும் நிகழ்வு.

 வீடுகளில் புதிர் உண்ணும் போது ஏழு மரக்கறிகள் சமைப்பார்கள். அதில் பாகற்காய், பலாக்காய் கட்டாயம் இருக்கும். புத்தரிசிச் சோற்றுடன் ‘மரக்கறி’க் கறிகளும் சேர்ந்து சுவையூட்டத் தயிர், வாழைப்பழம், கூழ் என்பன அந்த அறுசுவை அடிசிலுக்குப் பெறுமதி சேர்க்கும். 

 புதிர் உண்டபின்தான் விளைந்த நெல்லின் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும். “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற குறளையும் கோகுலன் நினைந்து கொண்டான்.

 தான் இப்போது கஞ்சிக்குடிச்ச ஆற்றுக் குளத்தை நோக்கிச் செல்வது வழமையான புதிர் உண்ணும் நிகழ்வாக இல்லாவிட்டாலும்கூட இவைகளையெல்லாம் நெஞ்சில் நினைந்தபடி வயலுக்குள் வைத்து விவசாயிகளுடன் சேர்ந்து புத்தரிசிச்சோறு சாப்பிடப்போகின்றோம் என்ற விடயம் மகிழ்ச்சியை ஊட்ட அந்த உற்சாகத்தில் தன் வாகனத்தை ஆர்முடுக்கினான் கோகுலன்.

(தொடரும் அங்கம் – 58)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *