வாழைப்பழத்தை உரித்து கொடுத்த ரில்வின் சில்வா…!(வெளிச்சம்:027)

வாழைப்பழத்தை உரித்து கொடுத்த ரில்வின் சில்வா…!(வெளிச்சம்:027)

— அழகு குணசீலன் —

வீரகேசரி வார மலருக்கு (01.12.2024)  ஜே.வி.பி.யின் மூளையாக கருதப்படுபவரும், கட்சியில் சக்தி மிக்கவரும், சர்வ அதிகாரமும் கொண்டவருமான,  பொதுச்செயலாளர் ரில்வின்சில்வா வழங்கிய நேர்காணலைப் படித்த போது எழுந்த ஆதங்கமே இப்பதிவு.

‘இலங்கையர்’ என்பதை தவிர மற்றைய தனித்துவ அடையாளங்களை ‘இனவாதம் ‘ என்றும், சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை கோருவதை “இனவாதம்” என்றும் வர்ணிக்கும் என்.பி.பி. அரசாங்கம்  வடக்கு கிழக்கு மக்களின் அதிகாரப்பகிர்வு  கோரிக்கையையும் இனவாதம் என்று கூறி மாகாணசபை முறையை, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய மாற்று தீர்வை முன்வைக்காது  ஒழிக்க முயற்சிக்கின்றது.

இன்றைய ஜே.வி.பி. ரோகண விஜயவீர காலத்து ஜே.வி.பி. அல்ல என்றும், அது திருந்தி விட்டது என்றும், நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளுக்கு ஏற்ப நவீன சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் உள்வாங்கி உள்ளது என்றும் “வக்காலத்து வாங்கும்  மரபுவழி பழக்க தோஷ மற்றும் புதிய  தமிழ், முஸ்லீம் தோழர்களுக்கும்” சேர்த்து சிரசில் அடித்து புரையேற வைத்திருக்கிறது ரில்வின் சில்வாவின் பெருங்கதையாடல்.

 சில்வா:  “37 வருடங்களாகவுள்ள மாகாண சபை முறையால் நாட்டுக்கோ அல்லது தமிழ்மக்களுக்கோ எதுவிதமான பயனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அனாவசியமான பிரச்சினைகளை தோற்று விக்கும் நிலையே காணப்படுகிறது”.

வெளிச்சம்: மாகாணசபைகளின் அல்லது  13வது திருத்தத்தின் இந்த தேக்க நிலைக்கு ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத, இனவாத அரசியல்  முக்கிய பொறுப்பாக அமைகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்ட சிங்கள, பௌத்த வாதிகள் போன்றே சிவப்பு சட்டை ஜே.வி.பி.யும்  1987-1990 காலப்பகுதியில்  இதற்கு எதிராக செயற்பட்டது.

1987 ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி. வன்முறையில் ஈடுபட்டதுடன், ஒப்பந்தத்தை ஆதரித்த இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள், முற்போக்கு சக்திகள், மனித உரிமையாளர்களை இந்திய ஆக்கிரமிப்பு ஆதரவாளர்கள் என்றும், சிங்கள தேசத்தின் எதிரிகள், துரோகிகள் என்றும் ஜே.வி.பி.சுட்டுத்தள்ளியது. வடக்கு கிழக்கு  மாகாணங்கள் தனிநாடாக அமையப் போகிறது என்று ஜே.வி.பி.யினால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு, கடல்வளம் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். இந்திய இறக்குமதிகளை நிராகரிக்குமாறு மக்களை எச்சரித்தார்கள். 

 பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜே.வி.பி. வழக்கு தாக்கல் செய்ததால் பிரிக்கப்பட்டன. ஆக, மாகாணசபை முறையால் நாட்டுக்கோ அல்லது தமிழ்மக்களுக்கோ எதுவிதமான பயனும் கிடைக்காமல் போனதற்கான பொறுப்பில் பெரும் பங்கு ஜே.வி.பி.க்கு உரியது. ஆனால் தங்களின் கடந்த காலங்களை மறைத்து, அதை மாகாணசபை முறையின்  நடைமுறைக் குறைபாடு என்று காட்டுவதற்கு ரில்வின் சில்வா முயற்சிக்கிறார். தமிழ் தரப்பின் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு கோரிக்கையை மாகாணசபை முறை தவறானது என்று பூச்சுத்துகிறார்.

சில்வா தனது பேட்டியில் “அனாவசியமான பிரச்சினைகள்” என்று தமிழ்மக்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்கைக்கும், அதற்கான போராட்டங்களுக்கும் முத்திரை குத்துகிறார். இது பச்சை பேரினவாத மேலாதிக்க கருத்தியல். அதாவது அப்படி ஒரு நிர்வாகக்கட்டமைப்பு இருப்பதனால் தான் தமிழர்கள் அதிகார பகிர்வு கோருகிறார்கள். இது அவருக்கு ‘அனாவசிய பிரச்சினையாக’ தெரிகிறது. அவருக்கு ‘அனாவசியம்’ சிறாபான்மை மக்களுக்கு ‘அத்தியாவசியம்’. 

சில்வா  : “சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையான தீர்வுத் திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்” .

வெளிச்சம்:   அவரின்  இந்த கருத்து தீர்வுத்திட்டம் தமிழ் மக்களை விடவும், சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமையும் என்பதையே வெளிப்படுத்துகிறது.  மாகாணசபை முறையினால் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் எப்போது ? எங்கே ? பிரச்சினை ஏற்பட்டது என்று சில்வா சொல்வாரா? பிரச்சினைக்கு காரணம்  மக்கள் அல்ல. அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைமைத்துவங்களுமான சிங்கள கடும்போக்கு இனவாத சக்திகளுமே காரணம். தெற்கில் உள்ள மாகாணசபைகள் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவாகவே உள்ளன. கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிரப்படவேண்டும் என்று சிங்கள மக்களும் விரும்பும் நிலை உள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வை “தமிழ் ஈழமாக” புனைந்து பூதாகரமாக்கி சிங்கள மக்களுக்கான மாகாண சபைகளையும் மறுதலித்து கொழும்போடு அதிகாரங்களை கட்டிப்போடுவதாக ஜே.வி.பி.யின் அணுகுமுறை உள்ளது.

சில்வா:  ” நாட்டு மக்களின் விருப்புக்கு மாறாகவும், அமைச்சரவையின் அனுமதி பெறாமலும் (?) இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ஜே.வி.பி. எதிர்த்தது”. என்பது சில்வாவின் வாதம்.

வெளிச்சம்:  ரோகணவிஜயவீரவின் விடுதலை, ஜே.வி.பி.க்கு மன்னிப்பு வழங்கல், தடை நீக்கம் என்பனவற்றிற்கு  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன நாட்டு மக்களின் விருப்பை பெற்றிருந்தாரா?  நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற அதிகாரத்தை பயன்படுத்தியும், தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தியும் ஜனாதிபதியினால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.  மாகாணசபை முறையை, அதற்கான மாற்று வழிமுறையை முன்வைக்காமல்  ஒழிப்பதற்கு  ஜே.வி.பி. மக்களிடம் ஆணை பெற்றுள்ளதா ?அதே மாகாணசபையில் பங்கு கொண்டு செயற்படும் ஜே.வி.பி. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படவில்லை (?) என்று சுமார்  40 வருடங்களாக கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு  இப்போது தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த தூசிதட்டி காரணம் தேடுகிறது.

சில்வா: “1987ம் ஆண்டில் இருந்த இனப்பிரச்சினை தற்போது பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது”.

வெளிச்சம்:  மாற்றத்திற்காக மக்களிடம் வாக்கு கேட்ட சில்வாவிடம் ஒரு கேள்வி. மாற்றம் என்பது கூடுவதும் (+), குறைவதும் (-).  இலங்கை இனப்பிரச்சினையில் நீங்கள் காணும் மாற்றம் என்ன?  இனப்பிரச்சினை மேலும் மோசமடைந்திருக்கிறதா? அல்லது குறைவடைந்து இருக்கிறதா? இனப்பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாததினால் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமூக, பொருளாதார, அரசியலில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக அது உள்ளது. இந்த நிலையில் மாகாணசபை/13வது திருத்தத்திற்கும் அப்பால் சமஷ்டி, ஒருநாடு இரு தேசம் வரை சென்றிருக்கிறது.  நீங்கள் கூறுகின்ற மாற்றம் இதுவா?  அதற்காக  பொருத்தமான தீர்வுக்காக புதிய அரசியல் அமைப்பில்  மாகாணசபை முறையை நீக்கி சமஸ்டி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தப்போகிறீர்கள் என்றால் பாதியை விழுங்கி பாதியை கக்காமல் வெளிப்படையாக பேசுங்கள்.

ஆனால் ஜே.வி.பி.யின் கடந்த கால வரலாறு தமிழ்மக்களுக்கு தரும் பாடத்தின்படி நீங்கள் அதற்கு எதிர்மாறாக சிந்திக்கிறீர்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது. புலிகளின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டது.  தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்  பலவீனம் அடைந்து விட்டது. பேரம் பேசும் பலம் தமிழ்த்தரப்புக்கு இல்லை. ஜே.வி.பி.க்கு வடக்கு கிழக்கு மக்கள் “ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில்” வாக்களித்து இருக்கிறார்கள் என்ற அரசியல் சூழல் மாற்றங்களை காட்டி தமிழ்மக்களின் விருப்புக்குமாறாக  அரசியல் அமைப்பு சட்டரீதியான சில குறைந்தபட்ச சட்ட திருத்தங்களை /சீர்திருத்தங்களை மட்டும் செய்து சிங்கள மக்களையும் ஏமாற்றி சிறுபான்மை மக்களையும் ஏமாற்றப் போகிறீர்கள். மாற்றம் என்பது உங்களை பொறுத்தமட்டில் தமிழ்மக்களின் அரசியல் பலவீன சூழலை பேரினவாத நோக்கில் பயன்படுத்தி இருப்பதையும் இல்லாமல் செய்வது மட்டுமே.

சில்வா: “ஜே.வி.பி. 1965 இல் இருந்து நாட்டில் அரசியல் நடைமுறைகளில் ஈடுபடுகிறது. ஜனநாயகம், சமத்துவம், மற்றும் இனவாதம் அற்ற ஒரு அரசியல் மாற்றம், இதில் ஜே.வி.பி.க்கும், என்.பி.பி.க்கும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் எதுவும் இல்லை”.

வெளிச்சம்:  சில்வா குறிப்பிட்டுள்ள ஜனநாயகம், சமத்துவம், இனவாதமின்மை என்பனவற்றை கடந்த அறுபது ஆண்டுகளில் ஜே.வி.பி. நிலைநாட்டியிருப்பதற்கான சான்றுகள் இல்லை. ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் கூட இவற்றிற்கு முரணான பல நிகழ்வுகளை அவதானிக்க முடிகிறது. பன்மைத்துவ சமுகக்கட்டமைப்பில் இனவிகிதாசாரத்தை பேணாது வெறும் கோஷங்களை ஜதார்த்தமாக்க முடியாது. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் பதவி பங்கீடுகள், நியமனங்களை இனவாதம் கடந்தவை என்று நியாயப்படுத்துவது, சிறுபான்மை சமூகங்களின் சமத்துவத்தை, சமுக நீதிக்கான பங்கை, உரிமையை மறுப்பதுடன் பெரும்பான்மையினத்திற்கு பறித்துக் கொடுப்பது. இதை தமிழ், முஸ்லீம் மக்கள் நம்பவேண்டுமானால் தென்னிலங்கையில் சிங்கள இனத்தை கடந்து சிறுபான்மையினருக்கு அந்த சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

இது இடம்பெறாதவரை என்.பி.பி. அரசாங்கம் பேரினவாத அரசாங்கம் என்றே கொள்ள வேண்டும்.

சில்வா: “தமிழ் சிங்களம் என்ற வேறுபாடின்றி உலக நாடுகளில் உள்ள எமது நாட்டு ‘பிரஜைகள்’, அனைவரையும் ‘இலங்கையர்களாக’ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருதுகிறது “.

வெளிச்சம்:  இங்கு சில்வா பயன்படுத்தி உள்ள இரு வார்த்தைகள் விமர்சனத்திற்குரியவை. தமிழர்களையும் இலங்கையர்களாகவும், பிரஜைகளாகவும் சட்டத்தின் முன் சமனாக ஜே.வி.பி. எப்போதிருந்து கருதுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளுக்கும், இலங்கையர்களான தமிழர்களுக்கும் எதிராக சிங்கள கிராமங்களில் யுத்தம் செய்ய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்த உங்களுக்கு இதைச் சொல்லுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. தமிழர்கள் இலங்கை பிரஜைகள், இலங்கையர்கள் என்றால் இந்த நாட்டை விட்டு அகதிகளாக அவர்கள் ஏன் துரத்தப்பட்டார்கள். ஒட்டுமொத்த தமிழர்களும் பயங்கரவாதிகள் என்று அவர்கள் மீது ஏன் யுத்தம் திணிக்கப்பட்டது. யுத்தத்தின் போது ஆட்சியின் பங்காளியாக இருந்த ஜே.வி.பி. இந்த பிரஜைகள், இலங்கையர்கள் குறித்து கொண்டிருந்த  இடதுசாரி நிலைப்பாடு என்ன? அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அதன் செயற்பாடு எப்படி அமைந்தது?

 மேலும் ரில்வின் சில்வா இலங்கையின் பொருளாதாரம் குறித்த இரு சமகால கேள்விகளுக்கு வழங்கிய பதில்களும் இலகுவில் கடந்து செல்ல முடியாத தேர்தல் காலத்து சுத்துமாத்தாக அமைகிறது.

சில்வா:  “முதலாளித்துவ பொருளாதாரம் என்று பார்க்க முடியாது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். ஆனால் பொருளாதார நலன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சென்றடைய வேண்டும் “.

வெளிச்சம்: அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன “பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த பிசாசிடமும் உதவி பெறுவோம்” என்று இஸ்ரேலிடம் உதவி பெற்றதை நியாயப்படுத்திய கருத்தை, சில்வா இங்கு பயங்கரவாதத்திற்கு பதிலாக பொருளாதாரத்தை பயன்படுத்தி சொல்லியிருக்கிறார். பொருளாதார மீட்சி க்கு எந்த பேயிடமும் உதவி பெற அவர்கள் தயார். முதலாளித்துவ அணுகுமுறையில் தாராளவாத, உலகமயமாக்கல் சர்வதேச நிறுவனங்களிடமும், நாடுகளிடமும்  வெளிநாட்டு முதலீடுகளை பெற்று, அவர்களுக்கு வரிச்சலுகைகளையும் , அவர்களின் நிபந்தனைகளையும் நிறைவேற்றி, குறைந்த கூலியில் தொழிலாளர்களை விற்று, பொருளாதார நலன்கள் அனைவருக்கும் நியாயமான முறையில் சென்றடைவது எப்படி சாத்தியம்?. என்பது சில்வாவுக்கு தான் வெளிச்சம். 

சில்வா: “ஆனால் மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாணய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கமே முன்னெடுத்தது. நாம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. எனவே நடைமுறையில் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக எம்மால் மாற்ற இயலாது. அதனை மாற்றி அமைத்தால் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான ஒப்பந்தங்களை விலக்கிக் கொள்ளும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உலக நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை சரிவடைந்து நெருக்கடிகள் ஏற்படும்”.

வெளிச்சம்:  ஐயா! சில்வா  அவர்களே ! இதைத்தானே ரணில் விக்கிரமசிங்க படித்து, படித்து ஜனாதிபதி தேர்தல் மேடைகளில்  மக்களுக்கு சொன்னார். அப்போது நீங்கள் பேசிய பேச்சென்ன? ஆடிய ஆட்டம் என்ன? இப்போது நீங்கள் கொடுக்கின்ற பேட்டி என்ன?  மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் நீங்கள் எந்த கலர் போர்வையை போர்த்தியிருந்தாலும்  கலரில் தான் வேறுபாடு. மற்றும் ஏமாற்றுவதில் நீங்களும் மற்றைய நிறக்காரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.

தென்னிலங்கையில் என்.பி.பி. ஆட்சி குறித்து இரண்டு மாதங்களில் கடுமையான விமர்சன குரல்கள் சிங்கள புத்திஜீவிகள் மத்தியில் ஒலிக்கச் தொடங்கிவிட்டது. மக்கள் வீதியில் இறங்கி காலிமுகத்திடல் அரகறளயவை பத்தரமுல்லைக்கு கொண்டு வந்து விட்டார்கள். தமிழ், முஸ்லீம் மக்களைப் பொறுத்தமட்டில் வாழைப்பழத்தை  உரித்துக்கொடுத்து இலகுவாக திசைகாட்டியின் போக்கை வெளிக்காட்டியிருக்கிறது ரில்வின் சில்வாவின் பேட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *