(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி (யாழ் மாவட்டம்-03, வன்னி-02) அதிகப்படியான ஆசனங்களைக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கைப்பற்றியிருப்பதால் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது என்றும், கிழக்கு மாகாணத்தில் அவ்வாறு நடைபெறாததால் (மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அதிகூடிய 03 ஆசனங்களை வென்றுள்ளதால்) கிழக்கில் தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டுவிட்டது என்றும் ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ‘தமிழரசுவாதி’களும் இதனையே உரத்து வாசித்துக்கொண்டு திரிகிறார்கள்.
யதார்த்தபூர்வமாக இக்கருத்துக்கள் இரண்டுமே தவறானவை. வடக்கு மாகாணத்தில் தோற்கடிக்கப்பட்டவர்கள் ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகளேதவிர தோற்றது ‘தமிழ்த் தேசியம்’ அல்ல. அதுபோல் கிழக்கு மாகாணத்தில் வென்றுவந்துள்ளவர்களும் ‘போலித் தமிழ் தேசியவாதி’களேதவிர வென்றது தமிழ்த் தேசியம் அல்ல. இங்கு வென்றது ‘போலித் தமிழ்த் தேசியமே’.
உண்மையான ‘தமிழ்த்தேசியம்’ என்பது ஒருபோதும் தோற்கடிக்கப்படமுடியாத கருத்தியல் (concept) ஆகும்.,
தேர்தல் அரசியலுக்குமப்பால் தமிழ்த் தேசியத் தளத்தில் மக்களைத் திரட்டுகின்ற ஒரு முற்போக்கான ‘மாற்று அரசியல் அணியே’ இன்றைய தேவை.
கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை அரசியலைப் பொறுத்த வரை அது அஹிம்சைப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் சரி-பின்னர் தமிழீழத் தனி நாட்டுக்கான ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் சரி-2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர (?) அரசியலிலும் சரி அவற்றில் தத்துவார்த்தப் பலவீனங்களும் தவறான அணுகுமுறைகளும் அறம் சாராத செயற்பாடுகளும் இருந்திருக்கலாம். அவை விமர்சனங்களுக்கு உட்பட்டவை. இவை அரசியல் மற்றும் ஆயுத இயக்கத் தலைமைத்துவத்தின் தவறுகளால் விளைந்தவை.
ஆனால், மக்களைப் பொறுத்தவரை பலவகைப்பட்ட அழிவுகளுக்குள்ளாலும் கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக அரசியல் மற்றும் ஆயுத இயக்கத் தலைமைத்துவங்களின் சரிபிழைகளுக்குமப்பால் இப்போராட்டங்களின் பங்காளர்களாகத் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறார்களென்றால் அதற்குக் காரணம் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தாம் வாழும் நிலப்பரப்பில் தமது நிலம், மொழி, பண்பாடு, கலை இலக்கியங்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, சூழல் பாதுகாப்பு என்பவற்றைத் தாமே, எந்தவிதமான அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் சுயாதீனமாகப் பரிபாலனம் செய்து பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுத்துத் தமது அடையாளத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ளும் வேணவாவினாலாகும். அந்த வேணவா நெஞ்சில் எப்போதும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருக்கும்.
இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணம் உட்பட இலங்கை முழுவதிலும் தேசிய மக்கள் சக்தி பாரிய தேர்தல் வெற்றியை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டியிருக்கிறதென்பதற்காகக் கடந்த எழுபத்தைந்து வருடங்களாகத் தமிழ் மக்களின் மனதில் உள்ள அரசியல் அபிலாசைகள் இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் ‘இலங்கையர்’ என்ற சொல்லாடலால் அவர்களை விட்டு அகன்று விடாது.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில், தமிழ் மக்களுடைய போராட்டத்தின் அறுவடையான-அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையான மாகாண சபை முறைமையை எக்காரணம் கொண்டும் இழப்பதற்கோ அல்லது பலவீனமடையச் செய்வதற்கோ அம்மக்கள் சம்மதிக்கமாட்டார்கள்.
மட்டுமல்ல, மாகாணசபை முறைமை முழு இலங்கை நாட்டிற்கும் பொதுவாக நடைமுறையிலிருந்தாலும்கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை நல்லதோ கெட்டதோ, இன மத வர்க்க பேதமற்ற-ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்களற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றிப் பேணுகின்ற-பொருளாதார சுபீட்சத்தைப்பெற்றுத் தரக்கூடிய அரச நிர்வாகத்தைக் கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படும் தேசிய மக்கள் சக்தி என்றாலும்கூட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றிடம் அது எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும்கூட ஒப்படைத்துவிடத் தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள். இதனைத் தேசிய மக்கள் சக்தி புரிந்து கொண்டுதான் தமது அரசியல் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் தொடரவும் வேண்டும். இதுதான் உண்மையான முறைமை மாற்றம் ஆகும். தேசிய இனங்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து நடப்பதுதான் உண்மையான பண்பு மாற்றமாகும். தேசிய இனங்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளை இடதுசாரித்துவம் எப்போதும் அங்கீகரித்தும் வந்துள்ளது. இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி ஏனைய தென்னிலங்கைக் கட்சிகளைப்போல் வெறுமனே கட்சி அரசியலுக்குள் மூழ்கித் தவறிழைக்குமானால் தமிழ் மக்களின் மனதை அதனால் வெல்ல முடியாது போகும். அது கூறும் முறைமை மாற்றமும் அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.
தேசிய மக்கள் சக்தியினால் இன்று உச்சரிக்கப்படும் இலங்கைத் தேசியம் என்பது இதுவரை இலங்கைத் தேசியம் என்ற போர்வையில் நடைமுறையிலிருந்த பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புப் பேரினவாதத்திலிருந்து வேறுபட்டதாக-மாறுபட்டதாக-முற்போக்கானதாக இருக்கலாம். இது வரவேற்கக் கூடியதே. இதனை வேறுபடுத்தி விளங்கிக் கொள்வதற்காக ‘முற்போக்குச் சிங்களத் தேசிய வாதம்’ என அடையாளப்படுத்தி அழைக்கலாம். ஆனால், இந்த முற்போக்குச் சிங்களத் தேசிய வாதத்திற்குள் அது முற்போக்கானது என்பதற்காகத் தமிழ் தேசியம் கரைந்து காலவோட்டத்தில் காணாமல் போய்விடுவதைத் தடுத்தாகவேண்டிய தேவைகளும் தமிழ் மக்களுக்கு உண்டு.
முற்போக்குச் சிங்களத் தேசியமும் (சுதந்திர இலங்கையில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த சிங்களப் பேரினவாதம் அல்ல) முற்போக்குத் தமிழ்த் தேசியமும் (‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகளால் தற்போது உச்சரிக்கப்படும் குறுந்தமிழ்த் தேசியவாதம் அல்ல) தத்தம் தனித்துவமான தளங்களில் காலூன்றிநின்று கைகளைக் கோர்த்துக் கொள்வதுதான் பலமிக்க இலங்கைத் தேசியத்திற்கு வழிவகுக்கும். இதனைச் சாத்தியப்படுத்தத் தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி எழுந்ததுபோல் வடக்குக் கிழக்குத் தமிழர்களிடையேயையும் ‘மாற்று அரசியல் சக்தி’ யொன்று மேற்கிளம்பவேண்டும்.