தமிழ்த்தேசிய சாராயக்கடை : செய்கூலியும், சேதாரமும்….!-(வெளிச்சம்:028)

தமிழ்த்தேசிய சாராயக்கடை : செய்கூலியும், சேதாரமும்….!-(வெளிச்சம்:028)

— அழகு குணசீலன் —

 சுவிவிஸில் இருந்து முல்லைத்தீவு பிரதேசத்தைச்  சேர்ந்த ஒருவர் புலிகளின் ஆட்சிக்காலத்தில்(?) ஊருக்கு போய் இருந்தார். இரவுச்சாப்பாட்டிற்கு முன் “மேல்நோக்காட்டிற்காக தண்ணி  பாவிப்பது” அவரது பழக்கம். நம்ம பாஷையில் சாப்பாட்டுக்கு முன் எடுக்கும் மருந்து. அவரை விடுமுறை முடிந்து வந்த பின்னர் ஒருநாள் சுவிஸில் தற்செயலாக சந்தித்த போது “என்ன? ஊருக்கு போனதாக அறிந்தேன். நாடு எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். அரசியல் ஆர்வலர் ஒருவரதும் தண்ணிக்கந்தர் ஒருவரதும் இரு வேறுபட்ட முன்னுரிமைகளுக்கு எனது கேள்வியும், அவரது பதிலும் அவரவர் நியாயம்.

“அதை என்னத்தை கேக்கிறீர். இங்கிருந்து போத்தல் போத்தலாய் வாங்கி, அதுக்குள்ள வைச்சி மறைச்சி, இதுக்குள்ள வைச்சி மறைச்சி கொண்டுபோனால் அங்க ஒரிஜினல் சரக்கு கூப்பிடு தூரத்தில் காலடியில் கிடக்குது” என்று லாவகமாக சொன்னார். என்ன DUTY FREE யை  சொல்கிறீர்களா என்றேன். “ச்சீ…. இல்லை . “பொடிகளின் கடையில் பெட்டி உடைக்காத விதம் விதமான புதுப்புது சரக்குகள் கிடக்கு” என்று அவர் பதில் வந்தது. அப்போது புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் கிளிநோச்சியை மையப்படுத்தி, வன்னியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் இந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. “வன்னி வரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்பு அதிகாரிகள் போன்றவர்களுக்காக புலிகள் ஹோட்டல் நடாத்துகிறார்கள், லிக்கர்சொப் நடாத்துகிறார்கள், உலகத்தரமான சாமான்கள் எல்லாம் ஆயுதத்தோடு ஆயுதமாக கப்பலில் கரைதட்டுகிறது” என்றார்.

புலிகளே அனைத்து மனித அறங்களையும் துறந்து தேசிய விடுதலைப்போராட்டத்தின் பெயரில் “காசுக்காக சாராயக்கடை” நடாத்தியிருந்த  போது, அவர்களின் பினாமிகளான பாராளுமன்ற அரசியல்வாதிகளிடம் இதை விடவும் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்?  இதனால் இந்த சாராய வியாபார அரசியல் ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. தமிழ்த்தேசிய மக்கள் திரட்சியை ஏற்படுத்துவதற்கு, மக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டாமா?  “மேல்நோக்காடு நோய்”  வெளிநாட்டுக்காரருக்கு மட்டுமா?  அதற்காக ஆஸ்பத்திரிகளுக்கு பதிலாக சாராயக்கடைகளை திறந்து வைத்தியம் செய்கிறார்கள் தமிழ்த்தேசிய எம்.பி.க்கள். “பழைய ஜனாதிபதியிடம் பெற்றது “மருந்துக்கடை” தான் என்றும் தமிழ்ப் பிரதேசங்களில் ஆஸ்பத்திரியில்லாத குறையை போக்க, மருந்து தட்டுப்பாடு நிலைமை போக்க இதைச்செய்தோம்” என்றும் இவர்கள் திரிக்காமல் இருந்தால் சரி.

கடந்த அரசாங்க காலத்தில் 361 சாராயக்கடைகளுக்கும், 172 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக  அரசாங்கத்தின் சபைமுதல்ரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இவற்றில் 

வடக்கு மாகாணத்தில் : 32.

கிழக்கு மாகாணத்தில் : 22 

சில்லறை மது விற்பனை நிலையங்களுக்கான 35  புதிய லைசென்ஸ்களில் ……, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் மட்டும் 25. குடாநாட்டிற்கு வெளியே அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மாவட்டங்கள் இவை  இல்லையா? இதனால் மருந்துக்கடை ஒதுக்கீடு 35:25. யாழ் மேலாதிக்கம், பிரதேச வாதம், புறக்கணிப்பு எல்லாவற்றையும் பொய்யாக்கி தண்ணீர்….தண்ணீர்… கிளிநொச்சி, வன்னியில் சலசலத்து ஓடுது. வடக்குக்கு மகாவலியை திசை திருப்பி இருக்கிறார்கள்.  மக்கள் பாவம் திசையை திருப்புவதில் தமிழ், சிங்கள தேசியங்களுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவுகிறது. இதனால் தான் திசைகாட்டி அநுர அரசாங்கத்தோடு ஒத்துழைக்க தயார் என்கிறார்கள் போலும்.

கிளிநொச்சி : 16.

யாழ்ப்பாணம்:05.

அம்பாறை: 05.

திருகோணமலை: 04.

வவுனியா: 02.

மன்னார்: 02.

மட்டக்களப்பு: 01.

முல்லைத்தீவு: 00.  

இது அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தமிழீழ  சில்லறை மதுபான விற்பனை நிலையங்களின் பட்டியல். கொழும்பு மத்திய அதிகாரத்திடம் இருந்து “போராடி” பெற்ற  தமிழர் தாயகத்திற்கான அதிகாரப்பகிர்வு. இவற்றை விடவும் சுமந்திரன், சாணக்கியன், செல்வம் ஆகியோருக்கும் மற்றும் அரசியல் வாதிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்து வாக்கு வாங்கிய குற்றச்சாட்டும் இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டம் இதில் தப்பிக்கொண்டுள்ளது. தமிழ்த்தேசியம் பேசி தமிழ்மக்களை சாராய மயக்கத்தில் வைத்து “விற்பனை”அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை விடவும் இது பரவாயில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆதரித்த இரு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தபோதும் இந்த கேவலமான சாராயக்கடை அரசியலை அவர்கள் செய்யவில்லை என்பது இப்போது மக்களுக்கு தெளிவாகி இருக்கிறது. 

மட்டக்களப்பு படுவான்கரையில் காஞ்சிரம்குடாவில் அமைக்கப்பட இருந்த ஒரு மதுபான விற்பனை நிலையத்தை தடுத்து நிறுத்துமாறு அன்றைய கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சி.சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது. 2023 டிசம்பர் 13ம்திகதி அன்று MI/ COL/EDS/2003/01 என்ற இலக்கக்கடிதத்தின் மூலம் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். மண்முனை மேற்கு பிரதேசம் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்றும், விவசாயம், மீன்பிடி, மற்றும் கூலித்தொழில்களை செய்யும் இந்த மக்கள் வறுமையால் வாடுகின்றனர் என்றும் அக் கடிதம் கூறுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட  இந்த அரசியல் இலஞ்ச விவகாரத்தில் ஆரம்பத்தில்  இருந்தே சி.சிறிதரன், சார்ல்ஸ் நிர்மலநாதன், விநோதரலிங்கம், விக்கினேஸ்வரன் ….. போன்ற தமிழ்த்தேசிய அன்றைய எம்.பி.க்களின் பெயர்கள் இது விடயமாக அடிபட்டன. “அப்படி ஒன்றும் இல்லை , முடிந்தால் நிரூபியுங்கள்” என்று சவாலுக்கு மேல் சவால் விடப்பட்டது. 

இந்த நிலையில் விக்கினேஸ்வரன் அவசரக்குடுக்கையாக முந்திக்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட, வறுமையில் உள்ள ஒரு கைம்பெண்ணுக்கே தான் மதுபான கடை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்ததாக அறிவித்தார். மூன்று விரல் திருநீற்று பட்டை,  சைவ தமிழ்த்தேசிய  நிறங்களான சந்தணமும் குங்குமமும் நெற்றியில், வெள்ளைவேட்டி, சால்வை போதாக்குறைக்கு தாடி  இவற்றோடு முள்ளில் சிக்கிய விக்கினேஸ்வரர் நிலைமையை கணக்கு போட்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் “இளையோர்க்கு” வழிவிட்டு விலகினார். இவர் செய்த பாவம் இளையோரையும் தோற்கடித்தது. இதனால்தான் கார்ல் மார்க்ஸ் “மதம் ஒரு அபின்” என்றார் போலும். 

சிவஞானம் சிறீதரன் தவிர மற்றைய “சிபார்சு சந்தேக  நபர்கள்”  பாராளுமன்ற தேர்தலில் கணக்கை சரியாகப்பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.  தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சிறிதரனுக்கு காய் வெட்டப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சுமந்திரனின் சிறிதரன் மீதான குற்றப்பத்திரத்தில் பொதுவேட்பாளரை ஆதரித்தது, கட்சி கட்டுப்பாட்டை மீறியது, பொதுவேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது என்பனவற்றுடன் சாராயக்கடை விவகாரமும் சேர்ந்து இருந்தது. என்றாலும் சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருந்த வேட்பாளர் தேர்வுக்குழு சிறிதரனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியது.  வாக்கு சேகரிக்கும் தேர்தல் வியூகத்தில்  பொதுவேட்ப்பாளரை ஆதரித்த  குற்றச்சாட்டுக்களை கொண்ட சிறிநேசனுக்கும்  வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டது. இங்கு, சிறிநேசன், சிறிதரனை மக்கள் தேர்தலில் தோற்கடிப்பார்கள் என்ற கணக்கு பிழைத்து இருவரும் வெற்றி பெற்றார்கள். சுமந்திரன் தோற்றுப்போனார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பல தடவைகள் நேரடியாக  சந்தித்தும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டும் பார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளின் பெயர்களை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் சுமந்திரன். சிறிதரனும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இப்போது பார் விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் அமைவிடங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதன் பின்னணியில் இருந்த அரசியல்வாதிகளின் விபரம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதற்கான கோரிக்கை வலுக்கிறது.

 எம்.ஏ. சுமந்திரன் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியும், இ. சாணக்கியன் பாராளுமன்றத்திலும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை அறிய போராடுகிறார்கள். சாணக்கியன் பேசும் போது கிளிநொச்சியை பெயர் குறிப்பிட்டபோது  அருகில் இருந்து பூனை முளுசுகிறதை பார்க்க பரிதாபமாக இருந்தது. பெயர் பட்டியல் வெளிவந்தால் ……..!

சிறிதரன் கொடுக்கப்போகின்ற விலை மிக அதிகமானதாக இருக்குமோ? இதில் சேதாரமும், செய்கூலியும் சேர்ந்து இருக்கும்.