அரசியல் தலைவர்களே! சிலு சிலுப்பு வேண்டாம்! பலகாரங்களைப் படையுங்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-29)

அரசியல் தலைவர்களே! சிலு சிலுப்பு வேண்டாம்! பலகாரங்களைப் படையுங்கள் (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-29)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)

     — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரகாலத்தில் ஜேவிபி யின் செயலாளர் ரில்வின் சில்வா ‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்தால் சரி’ எனும் பொருள்பட ஊடகங்களுக்குத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டுப் பின்னர் அவர் அவ்வாறு கூறவில்லை; கூறியிருக்கமாட்டார் என ஜேவிபி யின் முக்கியஸ்தரான விமல் ரட்ணாயக்க விளக்கம் தந்தார். அந்த விளக்கத்துடன் அந்த விவகாரம் அடங்கிப் போயிற்று.

 இப்போது என்னவென்றால் மீண்டும் பூதம் புறப்பட்டது போல, ரில்வின் சில்வா தமிழ் அச்சு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் ’13 ஆவது திருத்தம் இல்லாது ஒழிக்கப்படும்’ என்று கூறியதாக ஒரு விடயம் வெளிக்கிளம்பி அதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீதரன் மற்றும் சாணக்கியன் (தமிழரசுக் கட்சி) -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்க் காங்கிரஸ்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) -செல்வம் அடைக்கலநாதன் (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி/ரெலோ) ஆகியோரிடமிருந்து எதிர் வினைகளும் ஆற்றப்பட்டுள்ளன. ரில்வின் சில்வா ”13′ ஒழிக்கப்படும் என்று நான் கூறவேயில்லை; புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தம் நீக்கப்படாது’ என வியாக்கியானம் வேறு கொடுத்துள்ளார்.

 03.12.2024 அன்று நடைபெற்ற புதிய பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின்போது சாணக்கியனிடம் சபை முதல்வர் விமல் ரட்ணாயக்க மாகாண சபை முறைமை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிடம் பேசும்படியும் அதற்கான நேரம் ஒதுக்கித்தரப்படும் எனவும் கூறியதைத் தொடர்ந்து மறுநாளே (04.12.2024) தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்று அச்சந்திப்பில் ‘சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ள முடியும்’ என ஜனாதிபதி குறிப்பிட்டதாகத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் ஸ்ரீதரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையில் ஸ்ரீதரன் அதற்கு முன்பு ஏதோ தமிழரசுக் கட்சியின் ஆதரவில்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பது போல் புதிய பாராளுமன்றக் கன்னியமர்வில் ‘சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்’ என்றும் அறிவிப்புச் செய்துள்ளார்.

 இவற்றைவிட அடுத்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற-புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களுக்குப் பின்னரே உருவாக்கப்படும் என்ற அரச தரப்பு அறிவிப்புக்கள் வேறு.

 இவற்றையெல்லாம் நுணுகி நோக்கும் போது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் தெளிவான நிலைப்பாடு அல்லது வரையறை அல்லது உறுதிப்பாடு அரசாங்கத் தரப்பிலும் இல்லை: தமிழர்தம் அரசியல் தரப்பினரிடத்திலுமில்லை என்றேபடுகிறது. ’13’முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டுமாயின் முதலில் தேவை அதற்கான அரசியல் விருப்பமாகும் (Political Willingness). ஆனால் இந்த அரசியல் விருப்பம் இருதரப்பாரிடத்திலும் இல்லை; இருந்தால் இந்த விவகாரம் இவ்வாறு எடுப்பார் கைப்பிள்ளையாகி ஒத்துப்பட்டுத்திரியத் தேவையில்லை; அதற்கான அவசியமுமில்லை.

 13 ஆவது திருத்தம் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பின் ஒரு அங்கமாய் உள்ளது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உள்ளது.

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் மூன்றிலிரண்டு பங்கு பாராளுமன்றப் பெரும்பான்மையையும் தம்வசம் வைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும் விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவது அவசியம்.

 ஏனெனில், 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா காலத்திலிருந்து கடந்த ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க காலம்வரை 37 வருடகாலமாக அது முழுமையாக அமுல்செய்யப்படவேயில்லை.

 ‘முறைமை மாற்றம்’ என்பது வினைத்திறன்மிக்க அதிகாரப்பகிர்வுப் பொறிமுறையையும் உள்ளடக்கியதுதான் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உணரவேண்டும்.

 எனவே, 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கம் பற்றி அரசாங்கத் தரப்பு வெறுமனே வாய் மெல்லும் வியாக்கியானங்களைக் கொடுத்துக்கொண்டு காலத்தைக் கடத்தாமல் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான படிமுறை நடவடிக்கைகளில்-செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

 தமிழர் தரப்பைப் பொறுத்தவரை சும்மா சுய நிர்ணய உரிமை-சமஸ்டி என்று சொல்லாடல்களை உச்சாடனம் பண்ணிக் கொண்டு திரியாமல் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டியதன் அவசரத்தையும் அவசியத்தையும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முன்னெடுப்பதற்கான மக்கள் இயக்கத்தை-வெகுஜனப் போராட்டத்தை-ராஜதந்திர நடவடிக்கைகளைத் தாமதியாது ஆரம்பிக்க வேண்டும்.

 இல்லையேல், இந்த அரசாங்கத்தின் பதவிக்கால முடிவில் அரசாங்கத் தரப்பில் சில உறுதிமொழிகளும் தமிழர் தரப்பில் பாராளுமன்ற உரைகளும்-பத்திரிகை அறிக்கைகளும்-ஊடகச் சந்திப்புக்களுமே மிஞ்சும். தமிழ் அரசியல்வாதிகளே! சிலு சிலுப்பு வேண்டாம்! பலகாரங்களைப் படையுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *