(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
தனது புதுமனைவியின் ஒருவாரகாலப் பிரிவையும் தவிர்க்க முடியாமல் தாங்கிக்கொண்டு, கோகுலன் தனது வேலைகள் மேற்பார்வையாளர்களான இலட்சுமணன் – யேசுரட்ணம் – பிராங்ளின் – சண்முகநாதன் ஆகியோருடனும் வேலையாட்களுடனும் ‘ஜீப்’ பிலும் பெட்டி பூட்டப்பெற்ற உழவு இயந்திரத்திலுமாக மீண்டும் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் சென்று முன்பு தங்கியிருந்த அதே முதியவரின் வாடியில் முகாமிட்டு ஒருவாரகாலம் தங்கியிருந்து அவசியமான களவேலைகளை மேற்கொண்டான்.
இத்திட்டத்தின் பூர்வாங்க ஆய்வு அறிக்கைகளுக்கான தகவல்கள் மற்றும் தரவுகளைத் திரட்டியதோடு காலதாமத்தைக் குறைப்பதற்காக ஒரேயடியாகத் தேவையான நில அளவை மற்றும் மட்டம் பார்த்தல் வேலைகளையும் செய்து முடித்தான்.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்தடித் தங்கலின்போது தம்பிராசா அண்ணனின் நினைவும் அடிக்கடி எழுந்தது. எல்லோருமே அவரை அனுதாபத்துடன் நினைவு கூர்ந்தார்கள்.
ஒருவாரகாலம் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்தடியில் தங்கிக் காடுகளிலும் வயல்களிலும் வெயிலில் கால்நடையாகவே திரிந்து களவேலைகளை முடித்த கோகுலன் முகச்சவரம் செய்யாத முகத்துடனும், வெயிலில் அலைந்து முகம் கறுத்தும், ஒழுங்காக வாரிவிடப்படாத பறட்டைத்தலையுடனும் புழுதிகள் படிந்த உடையுடனும் ஒருவார காலம் புதுமனைவியைப் பிரிந்திருந்த விரகதாபத்துடனும் தம்பிலுவிலில் தனது வீட்டையடைந்தான்.
பகலிரவாகப் பணியாற்றிக் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைத்திட்டத்திற்குரிய ஆய்வறிக்கைகள் – வரைபடங்கள் – மதிப்பீட்டைத் தயாரித்துத் தன்வசம் வைத்துக்கொண்டான்.
கல்முனை நீர்ப்பாசன அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழமைந்த சாகாமக்குளம் – வம்மியடிக்குளம் – றூபஸ்குளம் – கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளம் – கோமாரி ஆலையடிக்குளம் அனைத்துமே சாகாமம் மற்றும் கோமாரிப் பிரிவுகளுக்குப் பொறுப்பான ‘ரி.ஏ’ ஆகக் கடமையாற்றிய கோகுலனின் பொறுப்பிலேயே இருந்ததால் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத் திட்டத்திற்கான மதிப்பீட்டைக் கேட்டு உத்தியோகப்பூர்வக் கடிதம் தனக்கே வரும் என்பது கோகுலனுக்குத் தெரிந்தேயிருந்தது.
கோகுலன் எதிர்பார்த்தது போலவே நீர்ப்பாசனத் திணைக்களத் தலைமை அலுவலகம், கொழும்பிலிருந்து கஞ்சிக் குடிச்ச ஆற்றுக் குளத் திட்டத்திற்கான மதிப்பீட்டைக் கேட்டு ஏப்ரல் மாதமளவில் அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதி கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் முன்னுரிமை கொடுத்து மதிப்பீட்டை மிக விரைவாக அனுப்பும்படி கேட்கப்பட்டிருந்தது. அமைச்சர் அத்திட்டத்தில் மிக ஆர்வமாகவும் அக்கறையாகவும் உள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுமிருந்தது.
கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஒரு நாள் கோகுலனை அழைத்து கஞ்சிக் குடிச்ச ஆற்றுக் குளத்திட்டத்திற்கான மதிப்பீட்டை உடனடியாகச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளும் உத்தியோகபூர்வக் கடிதத்தை நேரில் கையளித்து அமைச்சர் அதில் ஆர்வமாக உள்ளதால் தாமதியாது அதனைச் சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
கோகுலனும் ஒரு வார இடைவெளிக்குள் தான் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேலைத்திட்டத்திற்குரிய ஆய்வறிக்கைகள்-வரைபடங்கள்-மதிப்பீட்டைக் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் உரிய நடவடிக்கைகளுக்காகச் சமர்ப்பித்தான்.
திருக்கோவில் பிரதேச விவசாயிகள் கோகுலனின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளின் மீது அபிமானமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். 1974 ஆம் ஆண்டிலிருந்தே கோகுலன் இப்பகுதியில் கடமையாற்றத் தொடங்கியிருந்தான். அதனால் இப்பிரதேசத்து விவசாய சமூகத்தினர் அவனுக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார்கள். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலும் கோகுலனை ஊர்மக்களிடையே கூடுதலாகத் தெரியப்படுத்தியும் வைத்திருந்தது. கனகரட்ணத்துடனான அவனது நெருக்கமும் இப்பிரதேசத்தில் அவனது செல்வாக்கை உயர்த்தியிருந்தது.
சூறாவளி அனர்த்தங்களினால் சேதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வேலைகள் சம்பந்தமாகக் கோகுலன் சமர்ப்பித்திருந்த மதிப்பீடுகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகளும் வந்து சேர்ந்தன. அந்த வேலைகளையெல்லாம் அவ்வருடம் வடகிழக்குப் பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நிறைவேற்றி வைத்தான். அந்த வருடம் பருவ மழையை நம்பி மகாபோகச் செய்கை செய்யும் ‘வானம் பார்த்த பூமி’ எனச் சொல்லப்படும் மானாவரிச் செய்கைக்கார விவசாயிகள் அனைவரும் நம்பிக்கையோடு தங்கள் வேளாண்மைச் செய்கையை ஆரம்பித்தார்கள்.
மகாபோகப் – மாரிப்போகப் பயிர்ச்செய்கைக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் பயிருக்கு ‘ஒருதண்ணி’ பாய்ச்சினாலே போதும், விளைச்சலைப் பெற்றுவிடலாம் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாயிருந்தது. சூறாவளியால் பாதிக்கப்பட்டதென அறிக்கையிடப்பெற்ற அத்தனை கிராமிய நீர்ப்பாசனக் குளங்களும் நீரைப்பிடித்து வைக்கத் தயாராயிருந்தன.
கிராமியக்குளங்களை நிர்மாணம் செய்வதால் அவை நீர்ப்பாசனத் தேவைகளுக்காக மட்டும் உதவுவதில்லை. வரட்சிக் காலங்களில் கால்நடைகளும் காட்டு மிருகங்களும் பறவைகளும் நீர் அருந்துவதற்கும் அயலிலே வதியும் குடியாட்டங்களின் குளித்தல் மற்றும் கழுவுதல் போன்ற வீட்டுத்தேவைகளுக்கும் அயலிலே உள்ள குடிநீர்க்கிணறுகள் வரட்சிக் காலங்களில் வற்றிவிடாதிருப்பதற்கும் கூட உதவுகின்றன. மட்டுமல்ல குளங்களின் நீர்ப்பரப்பைத் தொட்டு வீசும் காற்றும் குளிராக இருப்பதால் வரட்சிக்காலங்களில் அக்காற்று உடலைத்தழுவும் போது இதமாகவும் இருக்கும். குளங்களில் வளரும் பனையான் – குறட்டை – வரால் – பொட்டியான் – கெழுத்தி – கொக்கிச்சான் – சுங்கான் – மசறி போன்ற மீனினங்கள் ஊர்மக்களின் உணவுக்கும் பயன்படும்.
இவற்றையெல்லாம் மனம்கொண்டுதான் கோகுலன் இப்பிரதேசத்தில் காடுகளிலும் வயல்புறங்களிலும் அலைந்துதேடி தூர்ந்துபோன குளங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பருவமழைக் காலத்தில் நீரைப்பிடித்து வைக்கும் வகையில் நிர்மாணம் செய்தான்.
மன்னன்குளம் – மலையடிக்குளம் – சின்னான்குளம் – இராமன்குளம் – பராசுராமன்குளம் – தாமரைக்கேணிக்குளம் – வலுவின்னக்குளம் – சோமன்குளம் – வைத்தியர்குளம் – வேப்பயடிக்குளம் – மும்மாரிக்குளம் – முருங்கந்தனைக்குளம் – கூணாப்பொக்கண்ணிக்குளம் – மண்டியாவெளிக்குளம் எனப் பல குளங்களைக் கட்டுவித்தான்.
கோகுலன் இவ்வாறு கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு உடனடி மேலதிகாரியாகவும் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் பதவிவகித்த மேர்சா சம்மாந்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்தில் அமைச்சராகவுமிருந்த அப்துல்மஜீத்தின் தங்கையை மணம் முடித்த அவரது மைத்துனன் ஆவார். அவரும் சம்மாந்துறையைச் சேர்ந்தவரே.
கோகுலன் இப்பிரதேசத் தமிழ் விவசாயிகளுக்கு ஓடிஓடிச் சேவையாற்றுவதும் கோகுலனுடைய தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல் ஈடுபாடும் – கனகரட்ணத்துடனான கோகுலனின் நெருக்கமும் – பல விடயங்களில் கோகுலன் எல்லாவற்றிற்கும் தன்னைக் கேட்காமல் தானே தீர்மானங்களை எடுத்துச் செயற்படுவதும் கோகுலனுக்கு இப்பிரதேச மக்களிடையே இருந்த செல்வாக்கும் அவனது உடனடி மேலதிகாரியான கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் மேர்சாவுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லையென்பது அவ்வப்போது அவரின் பேச்சுக்களிலிருந்து கோகுலன் புரிந்து வைத்திருந்தான்.
ஒருநாள் கோகுலனிடம் பேச்சுவாக்கில் சொன்னார்.
“நீர் கனகரட்ணம் எம்.பி சொல்கிற படிதான் வேலை செய்கிறீர். நான் சொல்வதைக் கேட்பதில்லை” என்று.
அதற்குக் கோகுலன்,
“நீங்கள் தானே எனக்கு மேலதிகாரி. நீங்கள் சொல்கிறபடிதான் செய்கிறேன். அப்படி நீங்கள் சொல்லி நான் செய்யாத ஒரு வேலையைச் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்” என்றான்.
அதற்கு அவர் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்.
கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அம்பாறைப் பிராந்திய நிர்வாகத்தின் கீழ் அமைந்திருந்தது. அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகப் பொறியியலாளர் துரைராசரட்ணம் விளங்கினார்.
கனகரட்ணம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான நேரத்தில் துரைராசரட்ணம் இலங்கையில் மாத்தளையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவிலைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அம்பாறைக்குக் கொண்டு வந்தால் அவர் மூலம் இப்பிரதேசத் தமிழ் விவசாயிகளுக்கு அதிகம் சேவை செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று கனகரட்ணத்திற்கு கோகுலன் வழங்கிய ஆலோசனையில்தான் கனகரட்ணம் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி துரைராசரட்ணத்தை மாத்தளையிலிருந்து மாற்றம் கொடுத்து அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக எடுப்பித்திருந்தார்.
வருடா வருடம் ‘மகாபோகம்’ மற்றும் ‘சிறுபோகம்’ வேளாண்மைச் செய்கைக்கு முன்னர் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழுள்ள காணிகளில் மேற்கொள்ளப்படும் வேளாண்மைச் செய்கையைச் சட்டரீதியாக்கும் நடைமுறையாக உரிய விவசாயிகளும் வேளாண்மைச் செய்கையோடு சம்பந்தப்பட்ட திணைக்களின் அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும்.
இதனை ‘ஆரம்பக் கூட்டம்’ என அழைப்பார்கள். இக்கூட்டங்கள் உரிய மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், அரசாங்க அதிபர் சமூகமளிக்காதபோது உரிய உதவி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறும். அப்போது உரிய மாவட்டத்தின் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களின் மாவட்டத் தலைமைகள், மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் சமூகமளித்திருப்பர். இக்கூட்டங்களில்தான் வேளாண்மைப் பயிர்ச்செய்கைப் பிரதேசங்களிலிருந்து கால்நடைகளை அப்புறப்படுத்தி அவற்றைத் தூர இடங்களுக்கு மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லல் – நீர்ப்பாசன வாய்க்கால்களின் துப்பரவு மற்றும் அவற்றைப் பராமரித்தல் – உழவு – விதைப்பு – நீர் வழங்கல் குறித்த கால அட்டவணையுடன் கூடிய ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு – கலந்துரையாடப்பெற்று முடிவுகள் மேற்கொள்ளப்படும். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு விவசாயிகளும் அரச அதிகாரிகளும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பது பொதுவான விதி.
இதற்கமைய 1979 ஆம் ஆண்டின் ‘மகாபோகம்’ வேளாண்மைச் செய்கைக்குரிய சாகாமம் மற்றும் றூவஸ்குளம் ஆகிய குளங்களின் கீழான காணிகளின் வேளாண்மைப் பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக்கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கூட்டங்களுக்கு அம்பாறைப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரும் கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் மேர்சாவும் வருகை தந்திருந்தனர். கோகுலனும் இக்குளங்களுக்குப் பொறுப்பான ‘ரி. ஏ’ என்பதால் சமூகமளித்திருந்தான்.
கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் அவ்வப்போது கோகுலனின் சேவைகள் குறித்துப் பாராட்டிக் கருத்துக்களைக் கூறினர். அவர்களின் பேச்சின்போது ‘கோகுலன் ஐயா கட்டித்தந்த அணைக்கட்டுத்தான்’ ‘கோகுலன் ஐயா கட்டித்தந்த குளம் தான்’ – ‘கோகுலன் ஐயா வெட்டித்தந்த வாய்க்கால்தான்’ என்றெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை வைத்து விட்டார்கள்.
கோகுலன் அவற்றைத் தன்னுடைய செலவில் செய்து கொடுத்தானா? இல்லை, தனது முயற்சியால் நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாகத்தான் செய்து கொடுத்தான்.
ஆனால், விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதே உண்மை.
ஆனால் விவசாயிகள் கூட்டத்தில் அவ்வாறு கோகுலனைப் பாராட்டிக் கதைத்தது பிரதிப் பணிப்பாளர் துரைராசரட்ணத்திற்கோ பொறியியலாளர் மேர்சாவுக்கோ பிடிக்கவில்லை என்பதை அவர்களின் முகக்குறிப்புகள் காட்டின.
பிரதிப் பணிப்பாளர் துரைராசரட்ணம் தம்பிலுவிலைச் சேர்ந்தவர். அவரது தந்தை யாழ்ப்பாணம். தாய் திருக்கோவில். தம்பிலுவிலில்தான் அவரது தாய் வீடு. தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்தவர்கள் பலரும் அவரது தாய்வழி உறவினர்கள். வசதியான குடும்பப் பின்னணியையும் கல்வித் தகைமையையும் உடையவர். ஆனால் ஊராட்களுடன் இறங்கிவந்து பழகாதவர். மேல்தட்டு வாழ்க்கை முறைக்கே பழக்கப்பட்டவர். நெருங்கிய சில உறவினர்களைக்கூடத் தமது உறவினர்கள் என்று கூற விரும்பாதவர்.
ஆரம்பக் கூட்டம் முடிந்ததும் துரைராசரட்ணம் கோகுலனைத் தனியாக அழைத்து,
“உம்மைப் பற்றித்தானே எல்லா விவசாயிகளும் பாராட்டிப் பேசினார்கள். நானும் இந்த ஊர்தானே. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். மட்டுமல்லாமல் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் உமக்கு மேலதிகாரி. என்னைப்பற்றிக் கூறாமல் எனக்குக் கீழ் பணிபுரியும் ‘ரி.ஏ’ ஆன உம்மையே பாராட்டினார்கள். ஏன்?” என்றார். அவரின் உளவியற்சிக்கலைக் கோகுலன் சட்டென்று உணர்ந்து கொண்டான்.
“நான் 1974 ஆம் ஆண்டிலிருந்தே இப்பிரதேசத்தில் கடமையாற்றி வருகிறேன். நீங்கள் போனவருசம்தானே அம்பாறைக்கு வந்த நீங்கள். இனித்தான் உங்களைப் பற்றி அறிய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் சேர்” என்றான் கோகுலன்.
கோகுலன் அவரோடு அப்படி நெருக்கமாகப் பேசக் காரணமும் இருந்தது.
கோகுலன் 1969 / 70 இல் கல்கமுவ நீர்ப்பாசனப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற காலத்தில் துரைராசரட்ணம் ‘மண்ணியல்’ மற்றும் ‘அளவையியல்’ பாடங்களுக்கு விரிவுரையாளராக இருந்ததனால் ஏற்பட்ட நெருக்கமே அது.
“என்னைப்பற்றித் தெரியாதா அவர்களுக்கு? நானும் இந்த ஊர் தானே!” என்றார்.
“நீங்கள் இந்த ஊராக இருந்தாலும் படித்தது, பின்னர் பணியாற்றியது எல்லாம் வெளியூர்களில்தானே. இனிமேல்தான் அவர்கள் உங்களையும் அறிந்தும் புரிந்தும் கொள்வார்கள்” என்று சமாளித்தான் கோகுலன்.
“எனக்கு அதுபற்றியெல்லாம் பெரிய பிரச்சினைகள் ஒன்றுமில்லை. சும்மா உம்மிடம் கூறிவைத்தேன்” என்று பிரச்சினைக்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்தார். கோகுலன் தான் பிரச்சினையிலிருந்து விடுபட்டால் போதும் என்றெண்ணினான்.
சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு நாள்,
கோமாரிக்கு வந்த அவர் கோமாரி உபதபாலதிபரான ‘ராஜூ போஸ்ட் மாஸ்ரர்’ வீட்டில் நின்று கொண்டு தன்னை வந்து சந்திக்கும்படி ஒருவர் மூலம் கோகுலனைக் கூப்பிட்டனுப்பினார்.
ராஜூ போஸ்ட் மாஸ்ரர் உறவு முறையால் கனகரட்ணத்திற்குத் தம்பி முறையானவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இளமைக் காலத்தில் ஒன்றாகக் கல்வி கற்றவர்கள் என்பதால் ராஜூவும் துரைராசரட்ணமும் பால்ய காலத்து நண்பர்கள். துரைராசரட்ணம் ஒரு வேட்டைப்பிரியர். ராஜூ போஸ்ற் மாஸ்ரரும் நல்ல வேட்டைக்காரர். துரைராசரட்ணம் அடிக்கடி கோமாரிக்கு வருவதும் அவரும் ராஜூ போஸ்ற் மாஸ்ரரும் சேர்ந்து வேட்டைக்குப் போவதும் ஏற்கெனவே கோகுலன் அறிந்த கங்கதிதான்.
கோகுலன் துரைராசரட்ணத்தைச் சந்திப்பதற்காய் ராஜூ போஸ்ற் மாஸ்ரரின் வீட்டை அடைந்தான். ராஜூ போஸ்ற் மாஸ்ரரின் வீடு கோகுலனின் ‘குவாட்டஸ்’ சிலிருந்து கிட்டிய தூரத்தில்தான் கோமாரி – பொத்துவில் பாதையில் கோமாரிப் பாடசாலையைத் தாண்டியதும் உபதபால் அலுவலகத்துடன் இணைந்ததாக இருந்தது. கோகுலன் தனது ‘குவாட்டஸ்’ சிலிருந்து நடந்தே சென்றிருந்தான்.
ராஜூ போஸ்ற் மாஸ்ரரின் வீட்டின் முன்புறத் திறந்த ‘விறாந்தை’யில் ராஜூவும் துரைராசரட்ணமும் கதிரைகளில் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் முன்பு போடப்பட்டிருந்த நீளமான ‘ஸ்ருல்’ லில் ஏற்கெனவே திறக்கப்பட்ட மதுப் போத்தலொன்றும் மது அரைவாசியளவு இருக்குமாற்போல மது குறைவான மட்டத்தில் இரு ‘கிளாஸ்’ களும் இருந்தன. ஏற்கெனவே இருவரும் மது அருந்த ஆரம்பித்து விட்டார்கள் என்பதைச் சூழல் அறிவித்தது. கோகுலனைக் கண்டதும் துரைராசரட்ணம் ‘வாரும்’ என்றார் இலேசாகப் புன்னகைத்துக் கொண்டே ராஜூவும் ‘வாங்க கோகுலன்’ என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனார்.
மூன்றாவது கதிரையொன்று அங்கு போடப்பட்டிருந்தபோதிலும் ஒரு மரியாதைக்காகக் கோகுலன் அதில் அமராது நின்று கொண்டே ‘வரச் சொன்னீங்களாம் சேர்’ என்றான்.
“ஓம்! இரும்” என்று கதிரையைக் காட்ட கோகுலன் பணிவுடன் அதில் அமர்ந்தான்.
உள்ளே போன ராஜூ வந்து ‘கிளாஸ்’ ஒன்றை ஸ்ரூலில் வைத்து விட்டுக் கோகுலனிடம் “எடுங்க கோகுலன்” என்றார்.
“இருக்கட்டும்” என்று இங்கிதமாக மறுத்தான் அந்தச் சூழலில் மது அருந்த.
துரைராசரட்ணம் “பரவாயில்லை எடும்” என்று சொல்லி ‘கிளாஸ்’ சில் அவரே அரைவாசிக்கு மதுவை ஊற்றினார்.
அதற்குப் பிறகும் தான் சும்மா இருப்பது நாகரிகமல்ல என்று நினைத்த கோகுலன் அருகிலிருந்த சோடாப் போத்தலை எடுத்து கிளாஸ்சில் இருந்த மதுவுடன் சோடாவைக் கலந்து ‘சியர்ஸ்’ என்று சொல்லிவிட்டு ‘கிளாஸ்’சை வாயில் வைத்து மதுவின் சில துளிகளை உமிஞ்சினான்.
ராஜூ எழுந்துபோய் ஒரு ‘டிஸ்’ நிறைய பாலில் பொரித்த காட்டுப்பன்றி இறைச்சியைக் கொண்டு வந்தார்.
கொச்சிக்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் கலந்த அதன் மணம் மூக்கைத் துளைத்தது.
அவர்கள் இருவரும் பன்றி இறைச்சித் துண்டுகளை எடுத்துச் சுவைத்த வண்ணம் கோகுலனையும் சாப்பிடச் சொன்னார்கள்.
கோகுலனும் இறைச்சித்துண்டொன்றை எடுத்து மென்று விழுங்கினான். நல்ல சுவையாகவே இருந்தது.
ராஜூவைப் பார்த்து “நல்ல ருசி. கொழுப்புப்பன்றி” போல என்றான்.
“ஓம்! கோகுலன். இரவு ஆலையடிக்குளப்பக்கம் வேட்டைக்குப் போனம். அங்கதான் சுட்டம்” என்றார்.
“மான் மரை அம்படல்லையா?” என்றான் கோகுலன்
“மான் ஒன்றக் கண்ட நாங்கதான். டோர்ச் லைட்டுக்குக் கண்ணக் குடுத்திட்டு உடனே பாய்ஞ்சு ஓடித்து” என்றார் ராஜூ.
“பன்றி நல்ல கொழுத்த பன்றி” என்றான் கோகுலன் மீண்டும்.
“ஓம்! நாலைஞ்சு பன்றி சேர்ந்த கூட்டம்தான் வந்த. கண்ட உடனயே வெடிவச்சன். ஒண்டுதான் விழுந்தது” என்றார் ராஜூ. இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கும் போதே பன்றியிறைச்சி ‘டிஸ்’ காலியானது. ராஜூ எழுந்து காலியான ‘டிஸ்’ சைக் கொண்டு போய் மீண்டும் பன்றியிறைச்சியால் நிரப்பிக்கொண்டு வைத்தார்.
வேட்டைக்கதை வந்த படியால் ராஜூக்குச் சொல்லுமாற்போல முந்தியவருடம் சூறாவளி அடித்த தினத்தன்று தான் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திற்குப் போன விடயத்தையும் சொல்லி அன்றிரவு வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன் இறந்த கதையையும் கோகுலன் துரைராசரட்ணத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தான். ராஜூவுக்குத் தம்பிராசா அண்ணனை நன்றாகத் தெரியும். ராஜூவும் அதற்குக் “கேள்விப்பட்ட நான். யேசுரட்ணம் வந்து சொன்னவர். பாவம் நல்ல மனிஷன்” என்றார்.
மூன்று நான்கு சுற்றுக்களையும் தாண்டி ‘கிளாஸ்’கள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இடையில் ராஜூ எழுந்துபோய் இன்னொரு மதுப்போத்தலையும் கொண்டு வந்து வைத்திருந்தார்.
துரைராசரட்ணம் ஒரு கட்டத்தில் கோகுலனைப் பார்த்து “உம்மோடு ஒரு விசயம் கதைக்க வேண்டும்” என்றார்.
எதைக் கதைக்கப் போகிறாரோ எனக் கோகுலனின் இதயம் சற்று அடித்துக் கொண்ட போதிலும், காட்டிக் கொள்ளாமல் “சொல்லுங்க சேர்” என்றான்.
“நீர் உம்மட அரசாங்கக் கடமைகளில் கவனம் செலுத்தாமல் கனகரட்ணத்துடன் சேர்ந்து அரசியல் வேலைகளில்தான் கூடுதலாக மெனக்கெடுவதாக ‘ஐ.இ.’ மேர்சா என்னிட்ட முறைப்பாடு செய்திருக்கிறார்” என்றார்.
துரைராசரட்ணம் எங்கே கடிக்க வருகிறார் என்பது கோகுலனுக்குப் புரிந்தது.
“சேர்! அது பிழை. அவர் விளங்காமல் அப்படி உங்களிட்டச் சொல்லியிருக்கிறார்” என்றான் கோகுலன்.
“இல்ல. இன்னும் சில பேரும் என்னிட்ட வந்து அப்படிச் சொன்னவங்கள்” என்றார் அவர்.
“சேர்! நான் இந்த அம்பாறை மாவட்டத்தச் சொந்த மாவட்டமாகக் கொண்டவன். முப்பது வருடங்களாகத் தமிழ்ப்பிரதிநிதித்துவமொன்று இல்லாமல் பல பின்னடைவுக்குள்ளான அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குக் கனகரட்ணம் எம்.பி யா வந்ததாலதான் என்னவாவது நடக்கத் தொடங்கியிருக்கு. அதற்கு ஆதரவாக இருந்து அவருடன் ஒத்துழைக்கிறேனே தவிர அவருடன் சேர்ந்து எந்தக் கட்சி அரசியலிலும் நான் ஈடுபடவில்லை” என்று தெளிவுபடுத்தினான் கோகுலன்.
“என்றாலும், கனகரட்ணத்தோட நீர் திரியிறத்தால உம்மிட நாளாந்த அரசாங்கக் கடமைகள் பாதிக்கப்படும்தானே!” என்றார் அவர்.
“இல்ல. அவர் இப்பிரதேச எம்.பி ஆக இருக்கிறபடியால இப்பகுதி நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாக அவரைச் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால என்னுடைய அரசாங்கக் கடமைகள் எதுவும் பாதிக்கப்பட்டதாக எனக்குத் தெரியல்ல. அப்படி என்னுடைய நாளாந்த அரசாங்கக் கடமைகளில் நான் தவறு விட்டிருந்தா அதத் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்” என்றான் கோகுலன்.
கோகுலனின் பதில் அவருக்குப் பிடிக்கவில்லைப்போலும்,
“நீர் கூடக் கதைக்கிறீர். கனகரட்ணத்தை நீர் சந்திக்கக் கூடாது. இது என்னுடைய உத்தரவு” என்றார் சற்றுக் கடுமையான குரலில். கோகுலன் அசந்துவிடவில்லை.
“சேர்! மன்னிக்கவும். நீங்கள் சொல்லுகிறீர்கள் என்பதற்காக நானாக அவரைச் சென்று சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்கிறேன். அது நான் உங்களுக்குத் தருகிற மரியாதை. ஆனால் அவர் என்னைச் சந்திக்கவந்தால் அதை என்னால் தவிர்க்க முடியாது. அவர் என்னைக் கூப்பிட்டனுப்பினால் அதனை என்னால் மறுக்கவும் முடியாது” என்று சற்றுக் குரலைத் தடிப்பாக்கிக் கொண்டு உறுதியாகச் சொன்னான் கோகுலன்.
வார்த்தைகள் இருபக்கத்திலும் சற்றுச் சூடேறுவதை அவதானித்த ராஜூ போஸ்ற் மாஸ்ரர் இருவருடைய கவனத்தையும் திசை திருப்பும் நோக்கில் சமயோசிதமாக “வாங்க சாப்பிடுவம்” என்றார்.
தொடர்ந்து துரைராசரட்ணத்துடன் வார்த்தையாடல்களில் ஈடுபட விரும்பாத கோகுலனும் கைகழுவும் சாட்டில் ‘கிளாஸ்’ சில் மீதியிருந்த மதுவையும் ஒரே மிடரில் உள்ளே தள்ளிவிட்டு எழுந்தான்.
சாப்பிடுவதற்கு என்று கோகுலன் எண்ணி வரவில்லையாயினும் சாப்பிடாமல் சென்றால் கோபத்தில் சென்று விட்டானோ என்று இருவரும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதால் கோகுலன் சாப்பிடத் தயாரானான்.
கோமாரிப் “போஸ்ற் மாஸ்டர்” ராஜூவின் வீட்டில் ராஜூவுடனும் துரைராசட்ணத்துடனும் அமர்ந்து பகலுணவை முடித்துக் கொண்டு ‘குவாட்டர்ஸ்’ க்குத் திரும்பிச் சென்றபோது காவலாளி கதிரேசு சொன்ன செய்தி கோகுலனுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
சற்று முன்பதாகப் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோகுலனைத் தேடிவந்து விசாரித்துவிட்டு நேரம் கிடைக்கும்போது தன்னை வந்து சந்திக்கும்படி கோகுலனுக்குத் தகவல் சொல்லும்படி கூறிவிட்டுச் சென்றதாகச் சொல்லியதே கோகுலனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனாலும், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை உடனே சென்று சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டு அன்று வெள்ளிக்கிழமையாததால் வாரவிடுமுறையை மட்டக்களப்பில் மனைவி வீட்டில் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் தம்பிலுவில் சென்று மனைவியையும் கூட்டிக்கொண்டு அன்று மாலை மட்டக்களப்பையடைந்தான்.
(தொடரும் …… அங்கம் – 55)