— கருணாகரன் —
ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா?
பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும்.
சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும்.
இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக்கியிருக்காது. மக்களும் இனமாக, மொழியாக, மதமாகப் பிளவுண்டிருக்க மாட்டார்கள். வெளிச்சக்திகளின் அதிகரித்த தலையீடுகளுக்கு நாடு உட்பட்டிருக்காது. கடன் பொறிக்குள் சிக்க வேண்டியிருக்காது. யுத்தம், போராட்டம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் இழக்கப்பட்டிருக்காது. ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் நடந்திருக்காது. இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்ருக்காது. இயற்கை வளச் சிதைப்பு நிகழ்ந்திருக்காது.
ஆகவே நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.
பொருத்தமானவர்களை – சிறப்பானவர்களை – நல்லவர்களை – நற்சக்திகளை – தெரிவு செய்யாமல் புறக்கணித்து விட்டு, தவறானோரையும் பிழையான சக்திகளையும் தெரிவு செய்தற்கான தண்டனையையே மக்கள் பெற்றனர்.
தேர்தலில் மக்களுக்கு வழங்கப்படும் நல் வாய்ப்பைப் பொறுப்புடன் ஏற்றுச் செயற்படாமல் விட்டால், அதனுடைய விளைவுகளை மக்களே ஏற்க வேண்டும். நல்ல – சரியான தெரிவுகளைச் செய்தால் நன்மைகளும் சிறப்பும் விளையும். தவறான – பொருத்தமற்ற தெரிவுகள் என்றால், பின்னடைவுகளும் அழிவுகளும் ஏற்படும்.
ஜனநாயகத் தெரிவின் அடிப்படையே இதுதான்.
தவறானோரை அல்லது தவறான சக்திகளைத் தெரிவு செய்து விட்டால், அவர்களை மாற்றுவதற்கும் புறமொதுக்குவதற்குமே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர்தல் வருகிறது. அப்படி வரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, குப்பைகளைப் புறமொதுக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுவதே பல சந்தர்ப்பங்களிலும் நடக்கிறது.
இதற்கு என்ன காரணம்?
இதற்குரிய விழிப்புணர்வை உரிய தரப்புகள் மக்களுக்குச் செய்வதில்லை என்பது முக்கியமானது. ஊடகங்கள், புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற தரப்புகள் கூட பெரும்பாலும் மக்களை வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடம் அறிவூட்டலை – விழிப்புணர்வை – ஏற்படுத்துவதற்கு மாறாக ‘மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்‘ என்று தவறான முறையிலேயே செயற்படுகின்றன. மக்களுடைய பிழையான உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இழுபடுகின்றன.
ஆனால், ஜனநாயக அடிப்படையைக் கொண்ட நாட்டில் – சூழலில் ஊடகங்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக இயக்கங்கள் போன்ற தரப்புகளுக்கு முக்கியமான பங்குண்டு. இந்தத் தரப்புகள்தான் ஜனநாயகச் செழுமையை உண்டாக்க வேண்டியவை. இவைதான் ஜனநாயகத்தின் காப்பரண்கள். இவைதான் ஜனநாயகத்தின் ஊட்டச் சக்திகள்.
ஆனால், இங்கே என்ன நடக்கிறது?
ஜனநாயகச் சீரழிவுக்கு இவை துணைபோகின்றன. இவற்றின் செயலின்மை அல்லது செயற்பாட்டுப் போதாமை, ஜனநாயகச் சீரழிவுக்கு வழிவகுக்குகிறது.
ஆகவேதான் இலங்கை போன்ற நாடுகள் இன்னும் ஜனநாயக அரசியற் பண்பாட்டில் முன்னேறவில்லை.
என்பதால்தான் இங்கே இன்னும் பிரபுத்துவ மனோநிலை மக்களிடம் – சமூகத்திடம் அதிகமாக உண்டு. சாதியாகவும் மதமாகவும் இனமாகவும் மொழியாகவும் மக்கள் சமனற்ற நிலையில் காணப்படுவதற்கும் பிளவுண்டிருப்பதற்கும் ஜனநாயக அடிப்படையில் ஏற்பட்ட ஓட்டைகளே காரணமாகும்.
இந்த ஜனநாயக ஓட்டைகள் மக்கள் இயக்கங்களின், ஊடகங்களின், புத்திஜீவிகளின், எழுத்தாளர்களின், மாணவர் அமைப்புகளின் பொறுப்பின்மையினாலும் தவறுகளாலும் ஏற்பட்டவையே. என்பதால்தான் மக்கள் இன்னமும் தேர்தல்களின் தவறான தெரிவுகளை – அணுகுமுறைகளை – க் கையாள்கிறார்கள்.
தேர்தலின்போது வாக்காளர்கள் சில அடிப்படையில் பிரிந்து செயற்படுவதுண்டு.
1. தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சின்னத்துக்கு வாக்களிப்பது.
இது பெரும்பாலும் குறித்த கட்சியின் கொள்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கும். சிலவேளை அந்தக் கொள்கையில் சறுக்கல்கள் – சமரசங்கள் – வீழ்ச்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தாமும் தமது குடும்பத்தினரும் தொடர்ச்சியாக குறித்த கட்சியை அல்லது குறித்த சின்னத்தை ஆதரித்து வந்தவர்கள் என்பதற்காகத் தொடர்ந்தும் வாக்களிப்பது.
இங்கே அவர்கள் கட்சிக்கு அப்பால் எப்படிச் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படித்தான் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரையோ அவருடைய தகுதி மற்றும் பொருத்தப்பாடுகளையோ பார்ப்பதில்லை. அது அவர்களுக்கு அவசியமுமில்லை. தாங்கள் இன்ன கட்சியின் ஆதரவாளர்கள் என்பது மட்டுமே அவர்களுடைய புலனில் (தலைக்குள்) இருக்கும்.
இது ஒருவகையில் அடிமை மனோநிலைதான். அறிவியலுக்கு முரணான எதுவும் அடிப்படைவாதத்தில் – அடிமை நிலையில்தான் இருக்கும்.
இதில் அவர்கள் தேர்தல் என்பது ஜனநாயக விழுமியத்தின்பாற்பட்ட ஒன்று எனச் சிந்திப்பதேயில்லை. ஜனநாயகம் வழங்கும் சிறந்த பெறுமானத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கொள்கையை, பொருத்தமற்ற நடைமுறைகளை, பொருத்தமற்ற ஆட்களை விலக்குவதற்குக் கிடைக்கும் மக்களுக்கான அரிய வாய்ப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காதவர்களாகவே உள்ளனர்.
குறித்த கட்சியோ, வேட்பாளரோ கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்பு என்ன? சமகாலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடும் தகுதியும் எப்படியுள்ளது என்பதையும் பரிசீலிப்பதில்லை.
ஆக, தாங்கள் குறித்த கட்சிக்கும் (சின்னத்துக்கு) குறித்த வேட்பாளருக்கும் நிரந்தரமாக அடிமைச்சாசனம் எழுதப்பட்டவர்களாவே கருதிக் கொள்கிறார்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட அறிவையும் அனுபவத்தையும் வைத்துச் சிந்தித்து – பரிசீலித்து முடிவெடுப்பதற்கோ, பொருத்தமான தரப்பைத் தேர்வு செய்வதற்கோ இவர்களால் முடிவதில்லை.
எனவே இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தை மறுப்பவர்களாகவும் அதைத் துஸ்பிரயோகம் செய்வோராகவுமே உள்ளனர். எனவே இவர்கள் சமூக வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருக்கின்றனர். மட்டுமல்ல, சரியாகச் சிந்திப்போரின் ஆற்றலையும் தெரிவையும் கூட பாழாக்கி விடுகின்றனர்.
ஏனெனில், குறித்த கட்சியோ, அதன் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரோ, காலப்பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற கொள்கைப்பிரகடனத்தோடு வந்து முன்னே நிற்கும்போது அதைக் குறித்து கேள்விகளை எழுப்பாமல் இருப்பது எவ்வளவு தவறு? எவ்வளவு அறிவீலித்தனம்?
அதோடு கடந்த காலத்தில் உருப்படியாகச் செயற்படாமல் வெறுங்கையோடு வந்து நிற்கும்போது, அதை ஆதரிப்பது மன்னராட்சி, பிரபுத்துவக் கால அடிமை முறையன்றி வேறென்ன?
ஆகவே இவர்கள் இந்த நவீன யுகத்துக்குரிய ஜனநாயக – அறிவார்ந்த அடிப்படைக்குரியவர்களில்லை. என்பதால்தான் இவர்களை ஜனநாயக விரோதிகள் என மதிப்பிட வேண்டியுள்ளது.
2. தாங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது அவருக்கான விருப்பத்தை முதன்மைப்படுத்தி வாக்களிப்பது.
இதுவும் ஜனநாயக விழுமியத்துக்கும் அறிவுசார் நடத்தைக்கும் புறம்பான ஒன்றே. இதில் குறித்த வேட்பாளரின் உறவு வட்டம், சாதி, பிரதேசம், நட்பு, அவர் மீதான அபிமானம் போன்றவையே அதிகமாகக் காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் குறித்த வேட்பாளர் ஆற்றிய சேவைகளின் மீதான மதிப்பு நோக்கப்படுவதுண்டு. அது அபூர்வமானது.
அப்படித் தெரிவு செய்யப்பட்டால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறான ஆற்றலுடையவர், செயற்பாட்டுத்திறனைக் கொண்டவர், மக்களின் நலனில் அக்கறையுடையவர், பொறுப்புணர்ச்சியுள்ளவர், அரசியல் பண்புடையவர் பெரும்பாலும் நீடித்திருப்பது குறைவு. அவரிடம் என்னதான் நற்கூறுகளிருந்தாலும் போதிய பொருளாதார பலமில்லாமல் போகும்போது பணபலத்தோடு கலந்திருக்கும் தேர்தற் களத்தில் அவர் வெற்றி வாய்ப்பைப் பெறுவது கடினமாகவே உள்ளது. மக்கள் அந்த நேரத்தில் கிடைக்கின்ற சொற்ப சலுகைகளுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்து, சரியானவர்களைத் தோற்கடித்து விடுகிறார்கள்.
எனவே இங்கும் பெரும்பாலும் தவறான தெரிவுகளுக்கே வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இங்கும் ஜனநாயக விழுமியமும் அது வழங்கும் நல்வாய்ப்பும் பாழடிக்கப்படுகிறது.
3. தேர்தற்காலத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்குச் சார்பான அலை பொதுவெளியில் மிதக்கிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடுவோர்.
இவர்களும் பொருத்தமான அரசியலையும் தெரிவுகளையும் தமது சொந்த அறிவினாலும் அனுபவத்தினாலும் தேர்வுக்குட்டுப்படுத்துவதில்லை.
சிலபோது குறித்த அலையானது நற்தேர்வுகளுக்கு வாய்ப்பளிக்கும். பல சந்தர்ப்பங்களிலும் பிழையான தெரிவுகளுக்கே வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உதாரணம், கடந்த 2020 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டமை இவ்வாறான ஒரு அலையினால்தான்.
ஆகவே இவர்களும் ஜனநாயக அடிப்படைக்கு எதிராக – முரணாகவே செயற்படுகின்றனர். இப்படி ஜனநாயக அடிப்படைக்கு எதிராகச் செயற்படும்போது நாடும் ஏனைய மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. (இவர்கள் பெரும்பாலும் தாம் இப்படிச் செயற்படுவது தவறானது என்றே தெரியாமல்தான் செய்கிறார்கள்) தவறான தெரிவுகளைச் செய்ய வேண்டியேற்படுகிறது.
4. கொள்கை என்ன? அதனுடைய நடைமுறைகள் எப்படியுள்ளன? அவற்றின் பெறுமானங்கள் எத்தகையன? அவற்றைச் செயற்படுத்த முன்வந்திருப்போரின் தகுதியும் ஆற்றலும் பொறுப்புத் தன்மையும் எவ்வாறானது? எனக் கவனித்து – மதிப்பிட்டு வாக்களிப்போர் அல்லது தெரிவுகளைச் செய்வோர்.
இந்தத் தரப்பினரின் எண்ணிக்கை பல சந்தர்ப்பங்களிலும் குறைவாகவே உள்ளது. அதிலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இப்படிச் சிந்திப்போரின் செல்வாக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. அதனால்தான் மோசமான ஆட்சியாளர்களும் தவறான மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுகிறார்கள்; அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறார்கள். ஆக, இங்கே அறிவார்ந்த தெரிவு தோற்கடிக்கப்படுகிறது. புறக்கணிப்புக்குள்ளாகிறது.
சரியான – பொருத்தமான தெரிவுகளைச் செய்யக்கூடிய இவர்களுக்கான பொதுவெளி மிகச் சுருங்கியதாகவே காணப்படுகிறது. mainstream media வில் இவர்களுடைய கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்குமான இடம் அளிக்கப்படுவது குறைவு. மாற்றுக் கருத்துகளுக்கான உரையாடல் வெளி விரிவடைந்து mainstream media வில் இது இடம்பெறும்போதுதான் இவர்களுடைய தெரிவுக்கான அடிப்படைகள் விளக்கமடையக் கூடியதாக இருக்கும். அந்தப் பரப்பும் விரிவடையும்.
அது இப்போது குறைவு.
தற்போதுள்ள சூழலில், குறிப்பாகத் தமிழ்ப்பரப்பில் mainstream media வும் சமூக வலைத்தள வெளியும் மக்கள் அமைப்புகளும் புத்திஜீவிகளாகக் கருதப்படுவோரில் பலரும் மாணவர் அமைப்புகளும் சுய சிந்தனைக்கும் சொந்த அனுபவங்களுக்கும் உலக வரலாற்று அறிவுக்கும் மாறாகவே – தவறாகவே இருப்பதைக் காணலாம்.
எனவே இவர்களுடைய தெரிவுகள் செல்வாக்கைச் செலுத்துவது குறைவு. அதனால் எதிர்த்தரப்பினர் – தவறானோர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உண்டு. இதையே தற்போதைய தேர்தற் கணிப்புப் பற்றிய அடையாளமிடல்கள் நிரூபிக்கின்றன.
ஆகவே, நடக்கவுள்ள 17 ஆவது தேர்தலில் நாட்டில் மாற்றம் நிகழ்ந்தாலும் வடக்குக் கிழக்கில் (தமிழ்ப்பரப்பில்) அந்த மாற்றத்தின் அளவு என்னவாக இருக்கும்? எப்படியானதாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் தெற்கும் மேற்கும் (சிங்கள மக்கள்) தங்களைச் சுத்தப்படுத்துவதற்குத் தயாராகி விட்டது. வடக்கும் கிழக்கும்தான் பழைய குப்பைக்குழிக்குள்ளேயே தொடர்ந்தும் கிடக்கப்போகிறதா? என்ற இன்னொரு கேள்வியும் அருகிலே எழுந்து நிற்கிறது.
அரசியல் என்பது நடைமுறைப்பயன் விளைக்கும்அர்ப்பணிப்பானஉழைப்பினாலும் உபாயங்களின்விளைவினாலும் உருவாகுவது. முதன்மையாக அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். உணர்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. முற்று முழுவதும் அறிவுபூர்வமானது. ஆகவேதான் அதைக் கணிதம் என்று கூறப்படுவதுண்டு. கூடவே அரசியல் என்பது மக்களுடைய அதிகாரமாகும். கவனிக்க, மக்களுக்கான அதிகாரம் இல்லை.