பாராளுமன்ற தேர்தல்: படுவான்கரையின் தேவையும், தேர்வும் என்ன?(வெளிச்சம்:019)

பாராளுமன்ற தேர்தல்: படுவான்கரையின் தேவையும், தேர்வும் என்ன?(வெளிச்சம்:019)

 — அழகு குணசீலன் —

தேசிய மட்டத்தில் ஒரு ஜனாதிபதியின் தேர்வை  நிர்ணயம் செய்கின்ற காரணிகள் பாராளுமன்ற, மாகாணசபை, பிரதேச சபை தேர்தல்களில் அதே அளவான செல்வாக்கை செலுத்துவதில்லை. மாவட்ட ரீதியாக, விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 1989 முதலான கடந்த  35 ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் படுவான்கரையின் பாரம்பரிய விவசாய சமூகம், படிப்படியாக வர்த்தக, விவசாய சிறு கைத்தொழில் சமூகமாகவும், கல்விசார் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி, கல்வி, கலாச்சார, உட்கட்டுமான துறைகளிலும் அபிவிருத்தி அடைந்து வரும் இன்றைய சூழலில் இந்த தொடர்ச்சியை பேணுவதற்கான தேர்வு பாராளுமன்ற தேர்தலில் எதுவாக இருக்கமுடியும்?

இலங்கையின் எல்லா சமூகங்களினதும் பொருளாதார தேவைகள் பொதுவானவை எனினும் தென்னிலங்கைக்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் இடையிலான தேவைகள் சமூக, பொருளாதார அபிவிருத்தி மட்டத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளால் வேறுபடுகின்றன. இதே நிலை வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மட்டத்திற்கும் இடையிலான வேறுபாடாகவும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலும் இந்த முரண்பாட்டை காணமுடியும்.  இதில் எழுவான்கரைக்கும்,  படுவான்கரைக்கும் இடையிலான சமூக, பொருளாதார முன்னேற்றங்களும் சமமானவையாக அன்றி ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளன.

 இந்த நிலையில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான ஐந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஐந்து உறுப்பினர்களை அல்லது தமிழர்களுக்கான நான்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் படுவான்கரையின் பங்கு என்ன? அந்த வகிபாகத்தை எந்த அடிப்படையில் படுவான்கரை மக்கள் செய்யப்போகிறார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை மீளக்கட்டி எழுப்புதல் என்ற அடிப்படையிலா? அல்லது தமிழ்த்தேசியம் என்ற தோற்றுப்போன அகிம்சை, ஆயுத அரசியல் வார்த்தையாடல் அரசியலுக்கான ஆதரவின் ஊடாகவா?

உரிமை, அபிவிருத்தி தொடர்பான கருத்தியல்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால் அவையிரண்டையும் ஒன்றுக்கொன்று முரணானவையாகக்காட்டும் தமிழ்த்தேசிய அரசியல் 75 ஆண்டுகளை தாண்டியும் அதன் இலக்கை அடையவில்லை. காலத்திற்கு காலம் தமிழ்த்தேசிய அரசியல் உரிமைக்கோரிக்கைகள் அதியுச்ச தனித்தமிழ் ஈழத்தில் இருந்து இன்று நடைமுறைச்சாத்தியமான குறைந்த பட்ச உரிமைகளையாவது பெற்றுக்கொள்ளல் என்ற கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்துள்ளது. இந்த தோல்வியின் வெளிப்பாடே தமிழ்த்தேசிய அரசியலில் இன்று ஏற்பட்டுள்ள அனைத்து சிதைவுகளுக்கும், பின்னடைவுகளுக்கும் காரணம். தமிழ்த்தேசியம்  அதன் இலக்கை அடைவதற்கான ஜதார்த்தமான, நடைமுறைச் சாத்தியமான எந்த ஒரு வீதிவரைபடத்தையும் (ROAD MAP)  கொண்டிருக்கவில்லை  என்பது மட்டும் அன்றி மக்கள் முன் வைக்கவும் இல்லை. அவர்கள் இன்னும் மக்கள் முன் வைப்பது வெறும் கோரிக்கையே அன்றி அதை அடைவதற்கான வழிமுறைகள் அல்ல.

தேர்தல் பிரச்சாரங்கள் கொள்கை அடிப்படையில் அன்றி தனிநபர் தாக்குதல்களாக இடம்பெறுகிறது. ஏனெனில் ஒரே தமிழ்த்தேசியத்தை பேசுபவர்கள் ஒன்றுக்கு பத்தாக பிரிந்து நிற்கின்ற நிலையில் கொள்கை அடிப்படையில் அரசியல் செய்யமுடியாத அரசியல் வங்குரோத்து தவிர்க்க முடியாதது. இதனால் தனிநபர் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில்  கழுவித்துடைத்து  துப்பரவு செய்து ஓரணியில் நின்றவர்கள்  இப்போது  ஊத்தையை அள்ளி வீசுகிற்ர்கள். உண்மையில் அன்றய  ஆயுத இயக்கங்களில் இருந்து இன்று கட்சி அரசியலுக்கு வந்துள்ளவர்கள் எவரும் புனிதர்கள் அல்ல. ஆகக்குறைந்த பட்சம் ஒரு கொலையை, வன்முறையை , ஜனநாயக மறுப்பை, கருத்துச் சுதந்திரமறுப்பை  செய்யாதவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பில்லை. இவை எல்லாவற்றையும் தமிழ்த் தேசியத்தின் பேரில், அல்லது அதை எதிர்க்கிறோம் என்று தான் செய்தார்கள். இரத்த கறைபடியாத கட்சிகள் என்று தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் கூறுவதிலும் உண்மை இல்லை. ஏனெனில் கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து விட்டதில் இவர்களின் பங்கு எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

இதே நிலைதான் ஊழல், இலஞ்ச குற்றச்சாட்டுக்களிலும் நிலவுகிறது. காணி- சொத்து சேகரிப்பு,அபிவிருத்தி என்ற பெயரில் பெறப்பட்ட ஜனாதிபதி தேர்தல் கால நிதி, சாராயக்கடை  லைசன்ஸ் , மற்றும் முதலீடுகள் அனைத்திலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்ற போதும் அனைவர் மீதும் இந்தக்குறறச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதற்கு ஊழல், இலஞ்சம், அரசியல் தலையீடு பற்றி பேசுகின்ற கடந்த கால வரலாறும், அண்மைக்கால ஒருமாத வரலாறும் விலக்காக இல்லை.

அப்படி ” 22 கரட்  வேட்பாளர்களை” தேடினால் மக்களுக்கு இருக்கின்ற ஒரெயொரு மார்க்கம் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தான். ஏனெனில் ஜே.வி.பி.கூட தமிழ் இயக்கங்கள் போன்று பெயரை மாற்றிக்கொண்டு என்.பி.பி.யாக இன்று வேதம் ஓதுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான எந்த ஒரு கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து அறிக்கையை வாசித்தால் தமிழ்மக்களை எவ்வாறு முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள் என்று புரியும். இதனால் இவர்களை ஆதரிப்பதற்கான எந்த ஒரு காரணமும், ஆதாரமும் இதுவரை  இல்லை. இதனால் படுவான்கரை மக்கள் தங்கள் அன்றாட சமூக, பொருளாதார வாழ்வியல் தீர்வுகளுக்காகவே வாக்களிக்க வேண்டி இருக்கிறது.

தமிழ்த்தேசிய  அரசியல் போக்கு தமிழர் பிரதேசங்களில் பாரிய யுத்த அழிவுகளையும், அடிப்படை கட்டுமானங்களையும்,சமூகக் கட்டமைப்பையும், பொருளாதார வாழ்வாதார முறைமைகளையும் சிதைத்து தேசிய பிரச்சினையில் இருந்தும், வடக்கு கிழக்கு பிராந்திய பொதுவான சமூக, பொருளாதார பிரச்சினைகளில் இருந்தும் வேறுபட்ட  சமூகத்தை படுவான்கரையில் உருவாக்கி இருக்கிறது. இந்த சமூக, பொருளாதார நச்சு வட்ட சுழற்சியில் இருந்து விடுபடுவதன் மூலமே படுவான்கரை சமூகம் குறைந்த பட்சம் தன்னை எழுவான்கரை சமூக, பொருளாதார வளர்ச்சி மட்டத்திற்காவது  படிப்படியாக உயர்த்திக்கொள்ள முடியும். இது இரவோடிரவாக இருபத்து நான்கு மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் அல்ல திட்டமிட்ட அடிப்படையில் பல ஆண்டுகளுக்கூடாக தொடர வேண்டிய ஒன்று. 2008இல் இருந்து  படுவான்கரையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களும் , அபிவிருத்தியும் ஒரு தொடர்ச்சியை வேண்டி நிற்கின்றன. படுவான்கரைக்கான  கடந்த கால  அபிவிருத்தி முதலீடுகள் ஒரு தொடர்ச்சியை தேடுகின்றன.  தமிழ்த்தேசிய உரிமை அரசியலில்  ஏற்பட்டுள்ள தேக்கநிலையும், அபிவிருத்தி நோக்கிய கருத்தியல் மாற்றமும்  படுவான் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய முக்கிய புள்ளியாக உள்ளது.

அபிவிருத்தி, உரிமை அரசியல்கள் சமாந்தரமாக பயணிக்க முடியாது என்றும் சோறா? சுதந்திரமா? என்றும்  வெறும் கோஷங்களை எழுப்பி  தமிழ்மக்களை தேங்காய் சிரட்டையில். கஞ்சி குடிக்கின்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல்.  இது கடந்த தேர்தலில் வடக்கு , கிழக்கில்  பிராந்திய கட்சிகளையும் ,தென்னிலங்கை அரசியல் கட்சிகளையும் ஆதரிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.  இது இம்முறையும் தொடரவே செய்யும். தமிழ்தேசிய அரசியலால் படுவான்கரை இழந்தது அதிகம். இழப்பு என்பதன் தாக்கம் ஒரு சமூகத்திடம் எவ்வளவு இருந்தது அதில் எவ்வளவை இழந்திருக்கிறது என்ற வெறும் புள்ளிவிபரக்கணக்கல்ல. ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தில் இருந்து குறிப்பிட்டளவு இழப்பை சந்திப்பதற்கும், பின்தங்கிய பொருளாதார நிலையில் இருந்து அதே குறிப்பிட்டளவு இழப்பை சந்திப்பதற்குமான இழப்பீட்டு சுமை -தாக்கம் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக அதிகமானது. 

ஒப்பீட்டளவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு , கிழக்கின் ஏனைய பகுதிகளை விடவும் படுவான்கரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன்? வன்னியில் அல்லது முல்லைத்தீவில்  இறுதியுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்பை விடவும் படுவான்கரையில்  ஏற்பட்ட பாதிப்பு அதிகமானது. ஏனெனில் அது இறுதியுத்தகாலமான  குறுங்காலத்தில் நிகழ்ந்தது. படுவான்கரை  ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  போரின் பங்காளர்களான இருதரப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஏற்பட்ட  இந்த பாதிப்பும் ,இழப்புக்களும்  ஒப்பீட்டளவில் அதிகமானவை.

 அதே வேளை மீளக் கட்டுவதற்கான வசதிவாய்ப்புக்கள் மிகவும்  குறைவானவையாக உள்ளன. வடக்கில் இருந்து தென்னிலங்கைக்கு இடம் பெயர்ந்து  சமூக வாழ்வு சீரமைக்கப்பட்டது போன்றோ அல்லது மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து  வெளிநாட்டு பணம் வடக்குக்கு பாய்ச்சப்பட்டது போன்றோ படுவான்கரையில் நிகழவில்லை. எனவே மீளக் கட்டமைப்பு தனியார் துறையில் மிகவும் மெதுவாகவே நகர்கிறது. இதனால் அரசமுதலீடு சகல துறையிலும் படுவான்கரையின் அபிவிருத்திக்கு அவசியமானது.

இந்த நோக்கை படுவான்கரை மக்கள்  தமிழ்த்தேசிய  வேட்பாளர் ஒருவரை அல்லது  சிங்கள, பௌத்த மேலாண்மையை பாதுகாக்கின்ற கருத்தியலை கொண்டுள்ள ஜே.வி.பி.  போன்ற கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதன் மூலம் அடைய முடியாது என்பது கடந்த கால அநுபவம்.  அதை தீர்மானிப்பது  அந்த மக்களின் தேவைகளை ஒரு வேட்பாளர் ஓரளவுக்காவது பூர்த்தி செய்வாரா?  1989 இல் இருந்து  படுவான்கரைச்சேர்ந்த ஐந்து  தமிழ்த்தேசிய சார்பு எம்.பிக்கள்  தெரிவு செய்யப்பட்ட போதும் அந்த  மக்களின் அடிப்படை  தேவைகளை  அபிவிருத்தி செய்வதில் ஒரு சிறிய இலக்கும் எட்டப்படவில்லை.

படுவான்கரை மக்களின் சமகால சமூக , பொருளாதார, அரசியல்  தேவைகளும் , எதிர்கால சந்ததியின் தேவைகளும் என்ன? என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எழுவான்கரைக்கு சமமாக படுவான்கரையின் சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை எட்டுவதற்கும், அதனை தக்கவைத்துக் கொண்டு தொடர்ச்சியான ஒரு அபிவிருத்தி பாதையில் பயணிப்பதற்கும் படுவான்கரைக்கு  தேவையாக இருப்பது என்ன என்கின்ற பொருத்தமான தேர்வை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு  தமிழ்த்தேசிய அரசியலுக்கு பின்னால் கிழக்கு அரசியல் போன காலம் மாறி கிழக்கு  அபிவிருத்தி அரசியலுக்கும் , இணக்க அரசியலுக்கும் பின்னால்  வடக்கு பயணிக்க வேண்டிய தேவையை தமிழ்த்தேசிய அரசியல் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதுதான் அநுர ஆட்சியில் அமைச்சர் பதவிக்கான ஓட்டம். இராசதுரை, இராஜன் செல்வநாயகம், தேவநாயகம், கனகரெட்ணம், கருணா, பிள்ளையானை இதே காரணங்களுக்காக துரோகி என்றவர்கள் இப்போது அபிவிருத்தி சிக்னல் போட்டு திரும்புகிறார்கள்.   

இது மக்களின் அபிவிருத்தி குறித்த  அக்கறை மீதான உண்மையான கரிசனையா? அல்லது  மக்கள் அபிவிருத்தி நோக்கி திரும்புவதால்  வேறு வழியின்றி வாக்குச்சேகரிப்பதற்கான தந்திர உபாயமா?   படுவான்கரை  மக்கள் இதை புரிந்து கொண்டு தங்கள் வாக்குகளை தங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவேண்டும். இது  வெறும் வாக்கு போடும் தேர்தல் அல்ல. மாறாக இன்றைய தலைமுறை எதிர்கால சந்ததிக்கு செய்யும் அபிவிருத்திக்கான  சமூக முதலீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *