— அழகு குணசீலன் —
காலிமுகத்திடல் அரகலய காலம் முதல் இலங்கை அரசியலில் முறை மாற்றம் (SYSTEM CHANCE) பற்றி உரத்துப்பேசப்படுகிறது. இப்போது அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதிகளை வழங்கிய ஜே.வி.பி-என்.பி.பி. வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகி இருக்கிறார். இதன் அர்த்தம் இலங்கையின் நாற்பதுவீதமான மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்த மாற்றம் வேண்டி அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்.இனி எழுகின்ற கேள்வி இந்த மாற்றங்கள் எப்போது? என்பதுதான்.
முறை மாற்றம் என்றால் என்ன என்று ஜே.வி.பி. யால் வாக்காளர்களுக்கு விளக்கி சொல்லப்படவில்லை. அதை எப்படி நடைமுறைப்படுத்துவோம், எந்தெந்த முறைமைகள் மாற்றப்படும் என்பதும் மக்களுக்கு சொல்லப்படவில்லை. அதனால்தான் முறைமை மாற்றத்தை சரியாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் அவை சாத்தியமற்றவை என்று கூறின. ஜனாதிபதி தேர்தலில் சொல்லப்பட்டதெல்லாம் பொருளாதாரத்தை சீர்செய்வோம், சலுகைகள் மானியங்களை வழங்குவோம், ஊழலை ஒழிப்போம் என்பதுதான். இந்த சீர்திருத்தங்கள் பற்றியே எதிர்க்கட்சிகளும் பேசி இருக்கின்றன என்றாலும் அதை செய்வதற்கான வாய்ப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடைத்துள்ளது.
சீர்திருத்தங்களுக்கு பெயர் சிஸ்டம் சேஞ் அல்ல மாறாக சீர்குலைந்துள்ள துறைகளில் சில திருத்தங்களை செய்தல். சிஸ்டம் சேஞ் என்பது ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்துவது. பழைய கட்டமைப்பை அப்படி புரட்டிப்போடும் ஜனநாயக ரீதியான புரட்சி இங்கு எதிர்பார்க்கப்பட்டது. இதை செய்வதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு தேவை அதுவரை ஜனாதிபதி காத்திருக்க வேண்டும். அது விளங்கிக்கொள்ள கூடியதே. ஆனால் ஜே.வி.பி.யும் , ஜனாதிபதியும் தாங்கள் சொன்ன முறைமை மாற்றம் சீர்திருத்தம் தான் என்று சொல்லாமல் இருந்தால் சரி.
தற்போதைய ஜே.வி.பி.ஆட்சி குறித்து அது ஒரு இடதுசாரி ஆட்சி என்ற விம்பம் சர்வதேசத்தில் ஏற்பட்டு வருகிறது. இந்த பரப்புரை இலங்கை ஆட்சியாளர்களை ஊக்குவிப்பதற்கா? அல்லது குட்டிக்குனிய வைப்பதற்கா? என்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இதற்கு பின்னால் உள்ள சுருக்கை ஜனாதிபதியும் அவரது கட்சியும் அறியாமல் இருக்க முடியாது. சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் “இடதுசாரி ஆட்சி” என்பது அரசியல் மேலாதிக்க சக்திகளால் அவர்களின் நலன்களுக்காக ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியாக உருவகப் படுத்தப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இந்திய,மேற்குலக ஊடகங்கள் பலவும் இந்த கண்ணாடி கொண்டே ஜே.வி.பி.யின் வெற்றியை பார்க்கின்றன. இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மக்களின் நம்பிக்கைக்கு மாறாக வெறும் சீர்திருத்த ஆட்சியாக அமைவதற்கான -நகர்வதற்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.
சீர்திருத்தங்கள் புரட்சிக்கு எதிரானவை. புரட்சி என்று கருதக்கூடிய சமூக, பொருளாதார, அடிப்படை மாற்றங்களை தடுத்து எதிப்புரட்சியாக திசை மாற்றம் செய்யக்கூடியவை. இலங்கையில் இதற்கு மிகப் பிந்திய உதாரணம் அரகலய. இதனால்தான் திசைகாட்டி மாற்றத்திற்கான திசையை காட்டாது சீர்திருத்தத்திற்கான திசையையே காட்டும் என்று கூறவேண்டி உள்ளது. ஏனெனில் இந்த சீர்திருத்த போர்வையில் தான் முதலாளித்துவம் தம்மை தக்கவைத்துக்கொள்கிறது. சோஷலிஸ்ட்களாக தங்களை காட்டிக்கொள்கின்ற இடதுசாரிகளும் தங்களை தக்கவைத்துக்கொள்கிறார்கள். இந்த இரண்டு தளங்களும் மார்க்சிய தொழிலாளர் வர்க்க ஜனநாயகபுரட்சி கருத்தியலுக்கு எதிரானவை. இரு தரப்பும் மார்க்சிய கருத்தியலை பகுதியாக உள்வாங்கி தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர். அரபுலக வசந்தம் மேற்குலகின் நிழலில் நடாத்தப்பட்டு அந்த நாடுகள் இருந்ததையும் இழந்து நிற்பதற்கு இதுதான் காரணம்.
சமகால சர்வதேச பூகோள அரசியல் சூழலில் ஆயுதப்போராட்டம் மூலமான ஒரு புரட்சி சாத்தியமற்றது என்பதை இரு தோல்விகளில் இருந்து கற்று, பாராளுமன்ற ஜனநாயக அரசியல் திசை நோக்கி ஜே.வி.பி.நகர்வதற்கு இதுவே காரணமாகவும் இருந்தது. இந்திய எதிர்ப்பு வாதம், மேற்குலக முதலாளித்துவ எதிர்ப்பு வாதம் என்பவற்றிற்றுடன் சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜே.வி.பி. எந்த புள்ளியில் தரித்து நின்று செயற்படப்போகின்றது.? இதனால் அரகலய காலத்து அதிதீவிர நிலைப்பாடுகளுக்கு மாறாக சர்வதேச நாணய நிதியம், வெளிநாட்டு முதலீடு, அரசியல் அயல்உறவு என்பனவற்றில் விட்டுக்கொடுப்புடன் செயற்படும் நிலைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உதவி வழங்கும் நாடுகளின் நிபந்தனைகளில் இருந்து ஜனாதிபதியினால் விலகி ஓடமுடியாது. வேண்டுமானால் அவர்களின் நிபந்தனை பாதையில் தான் பயணிக்கவில்லை என்பதை காட்டுவதற்காக சந்தர்ப்பத்தை பொறுத்து தங்கள் சக்திக்கு உட்பட்டு குறுக்கு ஒழுங்கைகளில் பயணிக்கலாம். இந்த குறுக்கு ஒழுங்கை பயணத்தை கூட எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளே நிர்ணயிக்கப்போகின்றன. அந்த பயணத்திலும் ஒரு ‘பிரேக்’ (BREAK) போடுவதற்காகவே ஒத்த கருத்துள்ள தாராள பொருளாதார முதலாளித்துவ, சக்திகளை தென்னிலங்கையில் ஒன்றிணைக்கவும், தமிழ்த்தேசிய தரப்பை அதற்கு சமாந்தரமாக ஆதரவளிக்க தூண்டும் வகையிலும் இந்தியாவும், அமெரிக்காவும் களத்தில் நிற்கின்றன.
பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின் பெரும்பான்மையை குறைத்தால்/தடுத்தால் தமது நலன் சார்ந்த இலக்குகளை, இன்னும் சொன்னால் ஜனாதிபதி தேர்தலில் சறுக்கிய இலக்கை அடையலாம் என்று அந்த சக்திகள் நம்புகின்றன. ஜே.வி.பி.யின் சீனச்சார்பு அரசியல் அயலில் மட்டுமன்றி,மேற்கிலும் புளியைக்கரைப்பதாக உள்ளது. இதைத் தடுக்க ஜே.வி.பி.க்கு “நாணயக்கயிறு குத்த” (மூக்கணாங்கயிறு) முயற்சிகள் நடக்கின்றன. இதன் மூலம் தாங்கள் விரும்பும் திசையை நோக்கி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி அதிகாரத்தை நெறிப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். அதாவது இயலுமானவரை இடதுபக்கம் திரும்பாமல் இருக்கும் வரை நாணயக்கயிற்றை விட்டுப் பிடிப்பது. இல்லையேல் வலது பக்கம் பலமாக பிடித்து இழுத்து திருப்புவது.
நவம்பர் 14 இல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி. வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி இந்த களநிலை சவால்கள் தவிர்க்க முடியாதவை. இன்னோரு வகையில் சொன்னால் கொழும்பு ஆட்சி என்பது பிராந்திய, சர்வதேச அரசியல் தலைவர்களாலும், அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களாலும் நிரணயிக்கப்படுவதாக உள்ளது. இந்த சக்திகள் முழுமையான அடிப்படை கட்டமைப்பு முறைமை மாற்றத்திற்கு எதிராகவும்,சீர்திருத்தங்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவை வழங்குவனவாகவுமே இருக்கப்போகின்றன.
இதன் வெளிப்பாடே மக்களை திருப்திப்படுத்தும் வகையிலான சில அவசர விலைக்குறைப்புக்கள். இது ரணில் ஆட்சியின் பொருளாதார அணுகுமுறை மூலமான நன்மை. சில சலுகைகள், மானியங்கள் இது ரணில் ஆட்சியின் சேமிப்பு. மேற்குலகைத் திருப்திப்படுத்த ஜனநாயக நடைமுறை, படையினர் மீளப்பெறல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், மனித உரிமைகள், நீதி, நிர்வாக சுதந்திர செயற்பாடுகளை அநுரகுமார செய்ய வேண்டி உள்ளது. அதை அவர் செய்கிறார்.
இவ்வாறான நீதி, நிர்வாக மற்றும் ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் செய்யமுடியாமல் போனதற்கான முக்கிய காரணம் பாராளுமன்றத்தில் அவர் தனித்து நின்றதும், தனது பதவிக்காலத்தை காப்பாற்ற ஒத்து ஓட வேண்டியிருந்ததுமாகும். ரணிலின் கரங்கள் பாராளுமன்றத்தினால் கட்டப்பட்டிருந்ததன. ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வர்த்தக முதலைகளுக்கும் எதிராக அவரது ஆட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அப்படி எடுத்திருந்தால் அவரது ஆட்சி ஆளும், எதிர்த்தரப்புக்களால் கவிழ்க்கப்பட்டிருக்கும். அதற்கு அன்றைய நிலையில் ஜே.வி.பி.யும் ஆதரவளித்திருக்கும்.
இந்த நிலையை தவிர்த்து. தனது ஆட்சியை உறுதிசெய்யவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. தனது சீர்திருத்தங்களுக்கு தேவையான, போதுமான வெற்றியை பெறவில்லையானால் மீண்டும் ஒரு அரசியல் ஸ்த்திரத்தன்மை அற்ற நிலையே ஏற்படும். அப்போது எதிர்க்கட்சிகளின் அரசியல் நெருக்குதல்களும், பூகோள அரசியல் அழுத்தங்களும் புதிய ஜனாதிபதிக்கு பெரும் தலையிடியாகவும், சவாலாகவும் அமையும். இந்த இடியப்ப சிக்கல் அரசியலில் இருந்தும், நாணயக்கயிறு திசை திருப்புதலில் இருந்தும் ஜே.வி.பி. எவ்வாறு தன்னை விடுவித்துக்கொள்ளப்போகிறது என்பதற்கான பதிலை நவம்பர் பதினான்காம் திகதி சொல்லும்.