சம்மா(ன்)ந்துறை -வீர(ர்)முனை:                   பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…!(பகுதி -12)

சம்மா(ன்)ந்துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…!(பகுதி -12)

 — அழகு குணசீலன் —

மட்டக்களப்புக்கு செல்லுகின்றபோதெல்லாம் அங்கு புறநகர்ப்பகுதிகளில் சிதறிக்கிடந்த வீரமுனை அகதிகளை ஆனந்தன் போய்ப்பார்க்க தவறுவதில்லை. அவர்கள் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மக்கள் அனுபவித்த துயரும், கண்ட வன்முறை காட்சிகளும் அவர்களை தேடித்தேடி துரத்துவது போன்ற உணர்வு. இவர்களின் அகதிவாழ்வு ஆனந்தன் போன்ற மானிட நேயர்களுக்கு பெரும் மனச்சுமையை கொடுத்திருக்கும் என்பதை ஆனந்தனை அறிந்தவர்கள் தெரிந்திருப்பார்கள். அவர்கள் வீரமுனைக்கு திரும்பிச் சென்று வாழ அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இதை நன்கு அறிந்தும், புரிந்தும் கொண்ட ஆனந்தனுக்கு  முன்னொருகால் அன்றைய அமைச்சர் மஹ்ரும் அஷ்ரப் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது.

வீட்டிற்கு வந்து கிடப்பில் போட்டதை தேடி எடுத்து அஷ்ரப்புக்கு ஆனந்தன் பதில் எழுதினார் என்று  சம்மாந்துறையின் மூத்த ஊடகவியலாளர் அபுநயத் சொன்னார். “அஷ்ரப் நானா எனக்கு நீங்கள் எந்த உதவியையும் தனிப்பட்ட வகையில் செய்யத் தேவையில்லை. நான் உங்களிடம் நம்பிக்கையுடன் கேட்பதெல்லாம் மட்டக்களப்பில் வீரமுனை அனர்த்த நினைவுகளோடு ஆதரவற்று அலையும் அந்த மக்களை குடியேற்ற வேண்டும் என்பதுதான். அதுவும் அவர்கள் வீரமுனைக்கு திரும்ப விரும்பவில்லை. அவர்களை வற்புறுத்தி இங்கு கொண்டு வரவும் முடியாது.  மட்டக்களப்பிலேயே ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்துவதே சரியென நினைக்கிறேன்.”

கடிதம் கிடைத்ததும் அஷ்ரப் ஆனந்தன் சந்திப்பு இடம்பெற்றது. ஆனந்தனின் காணி தேடும் படலம் ஆரம்பமாகிறது. அஷ்ரப் அதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு உறுதியளித்திருந்தார். மட்டக்களப்பு   திருப்பெருந்துறை- மன்ரேசா பகுதியில் தரிசாகக்கிடந்த காணியை ஆனந்தன் நண்பர்களுடன் அடையாளம் கண்டார். ஆனால் குறுக்கே வந்தது சிறைச்சாலைகள் திணைக்களம். அது தங்கள் திணைக்களத்திற்குரிய அரசகாணி அங்கு குடியேற்றம் செய்யமுடியாது என்று தடுத்தனர். பல்வேறு அதிகாரிகளையும் கண்டு, அலுவலகங்கள், அமைச்சுக்களின் படியேறி ஒருவாறாக அஷ்ரபின் ஆதரவுடன் ஆனந்தனின் கனவு நனவானது.  

வீரமுனையில் இருந்து இடம்பெயர்ந்த 45 குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டன. தலா 25 இலட்சங்களை அஷ்ரப் ஒதுக்கீடு செய்தார். இதில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலகம், மாவட்ட செயலகம், அஷ்ரப்பின் அமைச்சு என்பன போதுமானதும்,தேவையானமான ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள் என்று ஆனந்தனின் நண்பர்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

சம்மாந்துறையின் மூத்த ஊடகவியலாளர் அபுநயத் இன்னொரு விடயத்தையும் சொன்னார். அமைச்சர் அஷ்ரப் தன்னால் நிதிஒதுக்கீடு செய்யப்படும் செயற் திட்டங்களுக்கு தனது, அல்லது தங்கள் குடும்பத்தவர் பெயர்களை சூட்டுவதே அம்பாறை மாவட்டத்தில் வழக்கமாக இருந்ததென்றும்  திருப்பெருந்துறையில் அது இடம்பெறவில்லை என்றும் கூறினார். தமிழ்ப்பிரதேசம் ஒன்றில் ஏன் இந்த வம்பும், ஜல்லிக்கட்டும் என்றும் அஷ்ரப் நினைத்திருக்கலாம். அது அரசியல் நியாயம் அல்ல என்றும் நினைத்திருக்கலாம். ஊர்ப்பெயரில்  இல்லாவிட்டாலும் ஆனந்தனும்,அஷ்ரப்பும் அந்த மக்களின் இதயங்களில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இனி, வரவேற்பு வளைவு விவகாரத்திற்கு திரும்பினால்  சம்மாந்துறை அம்பாறை வீதியில் ஆண்டிச்சந்தியில் ஒரு பெயர்ப்பலகை இருந்துள்ளது. அது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்டது என்று தெரியவருகிறது. அதில் வீரமுனை 1 KM என்றும், மற்றொரு திசையில் கல்முனை 15 KM என்றும் எழுதப்பட்டு இருந்துள்ளது. இந்த இடம் மற்றும் தூரம் அடையாளப்படுத்தல் நடுகல் வரவேற்பு வளைவு அடிக்கல் நாட்டுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட திணைக்களத்தினால் திட்டமிட்டு அகற்றப்பட்டதாக சம்மாந்துறை மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் உண்டு.

அந்த கொங்கிரீட் பலகை நடப்பட்டிருந்த இடத்தில் இருந்து வீரமுனை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. அதனால் வீரமுனை வரவேற்பு வளைவை கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்னோக்கி அமைக்கவேண்டியதில் உள்ள நியாயம் என்ன என்றும் அவர்கள் கேட்கிறார்கள். இந்த கேள்வி முகநூல் பதிவுகளிலும் இடம்பெற்றுள்ளது. இங்கு இந்த தூரம் குறித்த நடுகல்லுக்கும் வீரமுனை கிராமத்திற்கும் இடையிலான ஒரு கிலோமீற்றர் தூரம் அரச தரிசுக்காணியா? அல்லது தனியார் காணியா? என்பதும் அந்த பகுதி நில அளவை வரைபடத்தின் படி எந்த கிராம எல்லைக்குள் அடங்குகிறது என்பதும் கண்டறியப்படவேண்டும். 

பல கிராமங்களில் கிராம எல்லை முன்னுக்கும் மக்கள் குடியிருப்பு பின்னுக்கும் இருக்கிறது. ஏதோ ஒரு வாழ்வியல் காரணத்தினால் புராதன கிராமங்கள்  அவ்வாறு அமைவது வழக்கம். இந்த புராதன அந்தஸ்து வீரமுனைக்கும்,சம்மாந்துறைக்கும் உரிய  வரலாற்று முக்கியத்துவமாகும். அப்படியான சூழலில் நடுகல் பிரதான வீதியை -சந்தியை மையப்படுத்தி அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.  பிரதான வீதியில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் மக்கள் குடியிருப்பு இருப்பதால் அந்த இடைப்பட்ட நிலப்பரப்பு வீரமுனைக்குரியதா? அல்லது சம்மாந்துறைக்குரியதா ? அல்லது இரண்டு கிராமங்களுக்கும் உரியதா? என்பதை கண்டறியவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உரியது.

இவ்வாறான காணி- எல்லை தகராறுகள் கிழக்கு மாகாணத்தில் பூதாகாரம் பெற்று வருகின்றன. இதற்கு அரசியல் பக்கபலமாக அமைகிறது. குறிப்பிட்ட ஒரு இனம் சம்பந்தமான ஒரு விடயத்தை மாற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அரசியல் வாதிகள், சிவில் அதிகாரிகள் பேசும்போது மக்கள் மத்தியில் ஏற்படும் பிரதிபலிப்பும் மாற்று இனத்தைச் சேர்ந்தாலும் பாதுகாப்பு அதிகாரிகள் பேசும்போது ஏற்படும் பிரதிபலிப்பும் சமூகங்கள் மத்தியில் ஒன்றாக இல்லை. உதாரணமாக கடந்த ஜூன்மாத இறுதியில் அல்லது ஜூலை ஆரம்பத்தில் சாய்ந்தமருது கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்.

“சாய்ந்த மருதை உலகறியச் செய்த சஹ்ரான் பயங்கரவாதக் குழுவினர்” என்று  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் அதிபர் அஜித் ரோகண நிகழ்வொன்றில் கூறியதை ஊடகங்கள் பலவும் வெளியிட்டிருந்தன. அவர் கூறியதன் முழுவிபரம் இதுதான்.

“உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரைப்பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும் இடமாக சாய்ந்தமருது உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியும். இதற்கு காரணம் சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் பயங்கரவாத குழுவினர் மறைந்திருந்த செயற்பாடும், அங்கு இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுமாகும்”.  இந்த உலகறியச் செய்த செய்தி சாய்ந்தமருதுவுக்கு பெருமையாக? சிறுமையா?  இவ்வாறான ஜதார்த்தங்களை நாம்,விரும்பியோ, விரும்பாமலோ விழுங்கிக் கொள்கிறோம்.காரணம் கூறியவர் ஒரு பாதுகாப்பு அதிகாரி.  இது விடயத்தில் பரதநாட்டியத்திற்கு ‘பரவசப்பட்ட’ மௌலவியும் வாய்திறக்கவில்லை. ஈஸ்டர் படுகொலை பற்றி பேசுவது தமிழ்த்தேசியம் என்ற தமிழ், முஸ்லீம் தரப்பும் வாய் திறக்கவில்லை.

அதேவேளை இந்த காலப்பகுதியில் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற இன்னோரு இன மத நல்லுறவு நிகழ்வையும் குறிப்பிட்டாகவேண்டும்.  அதுதான் கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கு  அங்கு வழிநெடுகிலும் வழங்கப்பட்ட நீராகார வரவேற்பு. இது வீரமுனை வரவேற்பு வளைவு விவகாரம் இடம்பெற்ற அதே நாட்களில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் மூலம் நாம் கற்றுக்கொள்வது என்னவெனில் கசப்பாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதும், இன மத வேலிகளை கடந்து  எம்மால்  விட்டுக்கொடுப்புடனும் ,சகிப்புத்தன்மையுடனும் வாழமுடியும் என்பதுமாகும். கட்சி அரசியலுக்கு அப்பால் இதைச் சாதிக்க முடியும் என்பதை சமூகங்கள் புரிந்து கொண்டால் கிழக்கில் இனமத நல்லுறவு ஒன்றும் பெரிய ‘பூதம் அல்ல ‘..

இந்த தொடரை முடித்து வைக்கும் வகையில் மட்டக்களப்பு தமிழகத்தின் கவிஞர்  நீலாவணன் பற்றி   எஸ்.பொ. எழுதிய நினைவுக்குறிப்பில் இருந்து சில  கருத்துக்களை கோடிட்டுக் காட்டமுடியும். இன நல்லுறவு பற்றி உரத்துப் பேசப்படும் இன்றைய சூழலில்  நீலாவணனின் சிந்தனைகளை எஸ்.பொ. இங்கு மறுவாசிப்பு செய்கிறார்.

“…….. இந்த வேளாண் தன்மையே மட்டக்களப்பு மண்ணின் உயிர்ப்பு என அவர் நம்பினார்.  

இதனைப்பிரசித்தப்படுத்தியும் அவர் வாழ்ந்தார்.

 மட்டக்களப்பு மண்மீது சிங்கள பேரினவாதத்தினால் 

 திட்டமிடப்பட்ட ‘மண்கொள்ளை ‘ குடியேற்றங்களைக் கண்டு மனம் வெதும்பி உக்கினார்.

எரியுண்ட வீரமுனைக்காக கண்ணீர் சிந்தினார். 

முஸ்லீம்களுடன் சௌஜன்ய உறவுகள் பாராட்டிய போதிலும் முதலியார் காரியப்பரின் தலைமையில் தமிழருடைய பாரம்பரிய மண் பறிக்கப்படுவதுகண்டு சினந்தார்.

மட்டக்களப்பு வேளாண்மையின் புனிதம் வர்த்தக மயமாக்கப்படுதலினால் சோரம் போவதைப்பார்த்து மனம் புழுங்கினார். 

மட்டக்களப்பு மண் பாரம்பரியமாகப் போற்றிய விழுமியங்களும், ஆசாரங்களும், சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் தனித்துவமானவை மட்டுமல்ல அர்த்தம் செறிந்தவையும் என அவர் நம்பினார். 

மானுஷீகத்தின் மிக உந்நத பண்புகளை மட்டக்களப்பின் வேளாண்மைக்காரர் காத்து வருவதாக அவர் வாய் மணக்க சொல்லுவார்”  .

என்ற எஸ்.பொ.வின் வரிகள்  அம்பாறை மாவட்டத்தின் சமகால  சமூக, பொருளாதார, அரசியல்  சூழலோடு பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவை .

‘வேளாண்மை காவியம் ‘ எழுதி முற்றுப்பெறாத அன்றைய  நிலையில் எஸ்.பொ. எழுப்புகின்ற இரு கேள்விகள் இங்கு இதயத்தை தொடுகின்றன.

ஒன்று, ‘ வேளாண்மையை பூர்த்தி செய்ய வல்ல இன்னொரு நீலாவணன் பிறப்பானா…….?  

இதற்கு பல்துறை கலை இலக்கிய ஆளுமை செங்கதிரோன் (தம்பியப்பா  கோபாலகிருஷ்ணன்) இன்னொரு நீலாவணனாக வேளாண்மை காவியத்தை எழுதிமுடித்து பதிலளித்துள்ளார்.

எஸ்.பொ.வின் அடுத்த கோள்வி : மட்டக்களப்பு மாநிலமே இன்னொரு வீரமுனையாக மாறிக்கொண்டிருக்கிறதா ……?

இந்தக்கேள்விக்கு மட்டக்களப்பு மாநில தமிழ் , முஸ்லீம் சமூகங்கள் அளிக்கப்போகின்ற பதில் என்ன…..?

முற்றும்.