— வீரகத்தி தனபாலசிங்கம் —
இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது.
இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்று வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவிக்கு வந்ததைப் போன்று, ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. பண்டாரநாயக்க ஹர்த்தாலை ஆதரிக்காமலேயே அதன் விளைவாக மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஹர்த்தாலை நடத்திய இடதுசாரி தலைவர்களினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அந்த போராட்டத்தின் வெற்றியினால் தடுமாறிப்போன அவர்கள் அடுத்த நகர்வை செய்வதற்கு பயனுறுதியுடைய தந்திரோபாயத்தை வகுக்க முடியாதவர்களாக அப்போது இருந்தார்கள்.
ஆனால், திசாநாயக்க ‘அறகலய’வுக்கு தலைமை தாங்கவில்லை என்றபோதிலும், அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கியது. அந்த போராட்டத்தின் விளைவாக நாட்டின் அரசியல் நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பயனாக அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார். அன்றைய இடதுசாரி தலைவர்களினால் அவர்களது சொந்தத்தில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இடதுசாரி அரசியல்வாதியை நாட்டின் தலைவராக உச்சநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
அவரது வெற்றி ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆட்சியில் ஏகபோகத்தை தங்கள் பிறப்புரிமை போன்று அனுபவித்த பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு கைமாற்றியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “திசாநாயக்க”வின் வெற்றி குறித்து கருத்துக் கூறியபோது குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் நிராகரித்திருப்பது பற்றி எதுவும் கூறாமல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று நாட்டின் உயர்பதவிக்கு வந்ததற்கு தனது தந்தையார் மண்டாரநாயக்க 1956 ஆண்டில் செய்த ‘புரட்சியே’ காரணம் என்று உரிமை கோரியிருக்கிறார்.
இலங்கையின் முக்கியமான அரசியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும் மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கையில் முதற்தடவையாக மார்க்சியவாதி ஒருவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. பாரம்பரிய அர்த்தத்திலான மார்க்சியவாதியாக திசாநாயக்கவை இன்று நோக்கமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த பிறகு அவர் முன்னைய போக்குகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட முறையிலேயே கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றால் திசாநாயக்க கட்சியின் போக்குகளில் செய்த மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணம்.
தெற்காசியாவில் நேபாளத்திற்கு பிறகு இடதுசாரி தலைவர் ஒருவரை அரசாங்க தலைவராக தெரிவு செய்த நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக விளங்கிய நேபாளத்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாவோவாத கம்யூனிஸ்ட் ஆயுதக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய பிரசண்டா முதற் தடவையாக 2008 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். இதுவரையான 18 வருடங்களில் அவர் மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வந்தார். இப்போதும் அவரே பிரதமராக இருக்கிறார்.
மாவோவாதியான பிரசண்டாவும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த காலப்பகுதியில் அவர்களின் அணுகுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் அவர்களை நேபாளத்தின் ஏனைய தாராளவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பெருமளவுக்கு வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கி விட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
இலங்கையில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஏற்கெனவே ஒரு இடதுசாரிப் போக்கில் இருந்து பெருமளவுக்கு விடுபடத் தொடங்கி விட்டது. தீவிர வலதுசாரியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துவந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதாக உறுதியளிக்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தி மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வேளைகளில் எல்லாம் திசாநாயக்க அடிப்படைக் கொள்கைகளை கைவிடவில்லை என்ற போதிலும் தற்போதைய சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்ற முறையில் தங்களது அணுகுமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார். உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாத காரணத்தால் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கமளித்தார்.
பொருளாதார நெருக்கடி உட்பட தாங்கள் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அரசியல் சக்திகளின் தவறான ஆட்சிமுறையே காரணம் என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் மத்தியில் பொது வாழ்வை தூய்மைப்படுத்துவது குறித்து திசாநாயக்க அளித்த உறுதிமொழி பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலுக்கு எதிரான அவரின் செய்தியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக அளித்த வாக்குறுதியும் முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இளம் வாக்காளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.
நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட பழைய பிரதான அரசியல் கட்சிகளையே மாறிமாறி ஆட்சிக்கு கொண்டுவந்து சலித்துப்போன மக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பநிலைக்கு பிறகு பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உண்மையில் இது மக்கள் செய்து பார்க்கத்துணிந்த ஒரு பரிசோதனையே என்பதில் சந்தேகமில்லை.
பாரம்பரிய அதிகார வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்த மக்கள் ‘மாற்றத்துக்கான’ வேட்பாளராக திசாநாயக்காவை நோக்கினார்கள். கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தன்னால் சாதிக்க முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரசாரப்படுத்திய ‘உறுதிப்பாட்டையும் வழமை நிலையையும்’ அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்த பிரிவினரே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு விக்கிரமசிங்க தனது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் முழுமையாக தங்கியிருந்தது அவரின் தந்திரோபாயங்களில் இருந்த மிகப்பெரிய குறைபாடாகும். நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வளமான அறிவையும் கொண்ட அவருக்கு நாடு அண்மைக்காலமாக எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பொருளாதாரக் காரணியை மாத்திரம் மனதிற்கொண்டு வாக்களிக்கப் போவதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை.
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆர்வத்தில் மக்கள் இதுகாலவரையான தவறான ஆட்சிமுறை, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் முன்னென்றும் இல்லாத ஊழலை மறந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தாரோ?
தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத நிலையில் ராஜபக்சாக்களின் கட்சியில் இருந்தும் வேறு கட்சிகளில் இருந்தும் வந்த அரசியல்வாதிகளை நம்பி கூட்டணி ஒன்றை அமைத்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று விக்கிரமசிங்க நினைத்தது பெரும் தவறு. முன்னரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களும் அவரை இந்த தடவை ஆதரிக்க முன்வரவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பெரும்பாலான மக்கள் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே நோக்கினார்கள். அவருக்கு இது ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தோல்வி. திசாநாயக்கவிடம் தோல்வி கண்டாலும் கூட விக்கிரமசிங்கவை தோற்கடித்துவிட்டதில் பிரேமதாச ஒருவிதத்தில் திருப்தியடைந்திருக்கக்கூடும்.
ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மற்றைய வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இந்த தடவையே ஏற்பட்டது. தனக்கு கிடைத்த ஆணையின் தன்மையை அவர் விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.
கொழும்பில் அதிகார ஏகபோகத்தைக் கொண்டிருந்த மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து திசாநாயக்கவும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் கண்டிருக்கும் வெற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற வைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடக்கிய மாற்றத்தை நோக்கிய அரசியல் நிகழ்வுகளின் சுழற்சியை நிறைவு செய்கிறது என்று எவரும் மெத்தனமாக நினைத்து விடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்க சமாளிக்க முடியாத எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார்.
பாராளுமன்றத்தை கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான இடைவெளிக்குள் பொதுத்தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் கண்ட தோல்வியின் தாக்கத்தில் இருந்து மற்றைய கட்சிகள் விடுபடுவற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
பொருளாதாரத்தை உறுதிப்பாட்டுக்கு கொண்டுவரவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று திசாநாயக்க தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களிடம் கோருவார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது அவருக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் புவியியல் ஒழுங்கை கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.
தென்னிலங்கையில் இருந்து குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் அதிகப்பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்று திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மயைகத்திலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்குமே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள்.
சிறுபான்மைச் சமூகங்கள் திசாநாயக்கவுக்கு முற்றாக வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் தான் அவரை வெற்றிபெற வைத்தன. அதற்காக கோட்டாபய ராஜபக்ச போன்று சிங்கள மக்களே தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று திசாநாயக்க ஒருபோதும் சொல்லப்போவதில்லை.
கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.
அதேவேளை, தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக திசாநாயக்கவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளில் கணிசமான பிரிவினர் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அந்த தேசியவாத சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக திசாநாயக்க நடந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். தங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து புதிய அணுகுமுறையை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.
சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகளை வியாக்கியானம் செய்யமுடியாது. சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்குள் தங்களது அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி.
எது எவ்வாறிருந்தாலும், இதுகாலவரை இலங்கை அரசியல் அதிகாரத்தை தங்களது ஏகபோகத்தில் வைத்திருந்த ஒரு வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒரு ‘ தோழர்’ ஜனநாயக வழிமுறையின் மூலமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவத்துவம் உரியமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும்.