பாராளுமன்ற தேர்தல் : தப்பிப்பிழைப்பாரா அநுரகுமார….?(வெளிச்சம்:011)

பாராளுமன்ற தேர்தல் : தப்பிப்பிழைப்பாரா அநுரகுமார….?(வெளிச்சம்:011)

  — அழகு குணசீலன் —

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியைப் பொறுத்தமட்டிலும், அவரின்  ஜே.வி.பியை பொறுத்த மட்டிலும் இது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர்கள் மக்களுக்கு வழங்கிய “மாற்றத்தை” செயல்படுத்த நிறைவேற்று அதிகாரம் மட்டும் போதாது , அரசியல் அமைப்பு சட்ட சரத்துக்களைப் பொறுத்து  பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை (113) முதல் மூன்றில் இரண்டு (150) பெரும்பான்மை வரை தேவை. இவை எல்லாவற்றையும் விடவும் புதிய ஜனாதிபதியினதும், அவரது கட்சியினதும்  எதிர்கால அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவும் இந்த பாராளுமன்ற தேர்தல் அமையப் போகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார, சஜீத், ரணில்,  நாமல், அரியநேத்திரன் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அந்த வேட்பாளர்களை சிபார்சு செய்த கட்சிகள் இப்போது அந்த வாக்குகளை தங்கள் தங்கள் கட்சிகளுக்கு அளிக்குமாறு கோரப்போகின்றன. இதனால் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டமாக கணித்து முன்னெப்போதும் இல்லாத வாறு இப்போது அரசியல் ஐக்கியம்/ ஒற்றுமை பற்றி பேசப்படுகிறது.  ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஸ்த்திரமற்ற அரசியல் சூழல் இந்த  ஒற்றுமை கூக்குரலுக்கு காரணமாகிறது. இந்த அரசியலை “பாராளுமன்றம் கூடினால் சண்டை, கலைந்தால் ஒற்றுமை” என்று சொல்லலாம் . ஏனெனில் கடந்த காலங்களில் கட்சி  கதிரை அரசியலை தவிர்த்து பலதரப்பும் நாட்டின் நலன்கருதி, ஒற்றுமையாக செய்யப்பட்டிருந்தால் இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

சுடச்சுட எம் முன்னால் உள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு நோக்கினால் வீகிதாசார ரீதியான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையலாம் என்று ஓரளவுக்கு எதிர்வு கூறமுடியும். ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாக உள்ள போதும், ஒரு எதிர்வு (கூடிய/குறைந்த  : +/- ) கூறலாக மட்டும் இதைக் கொள்ளலாம்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எமக்கு சொல்லும் செய்தி இது.

அநுரகுமார திசாநாயக்க: 40 வீதம் .

சஜீத் பிரேமதாச.                  : 32 வீதம் 

ரணில் விக்கிரமசிங்க.      : 18 வீதம்

ஏனேயோர்                               :10 வீதம்  

இந்த ஒழுங்கில் இவர்களின் கட்சிகள், கூட்டணிகள் பெறக்கூடிய பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இவ்வாறு அமைய முடியும்.

அநுரகுமார திசாநாயக்க: 90 பாராளுமன்ற உறுப்பினர்கள்.

சஜீத் பிரேமதாச.                  : 75 பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ரணில் விக்கிரமசிங்க.       : 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஏனையோர்.                             : 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்.

மொத்தம்.                                    : 225 பாராளுமன்ற  உறுப்பினர்கள்.

இதிலிருந்து புதிய பாராளுமன்றம் ஒரு நிலையான ஸ்திரத்தன்மையை அரசியலில் நிலைநாட்டுமா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது. நாற்பது வீதம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட  சமநேரத்தில் அறுபது வீதம் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் “தொங்குபால” ஆட்டம் காணும் அரசியல் இது.

மேற்குறிப்பிட்ட இந்த வாக்குகளுக்குள் சிபார்சு கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் உள்ளடங்குகின்றன. இவற்றில் சில வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டுக்குள்ளும் இருக்கலாம், கூட்டுக்கு வெளியேயும் இருக்கலாம். இன்னொரு வகையில் ஜனாதிபதி ஆதரவு 40 வீதம் வாக்குகள் 90 எம்.பி.க்களை  அவருக்கு பெற்றுத்தரும் நிலையில் அவரை நிராகரித்த 60 வீதம் வாக்குகள் எதிர்தரப்புக்கு 150 எம்.பி.க்களை பெற்றுக்கொடுக்க முடியும். 

எனவே எதிர்கட்சிகள் தப்பித்தவறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றாலும்,  சாதாரண பெரும்பான்மைக்கே தடுமாறும் அநுரகுமாரவின் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது. பிரதமர்  எதிர்க்கட்சியில் இருந்து தெரிவுசெய்யப்படலாம். இந்த நிலையில் பிரதமர் ஒரு கட்சியிலும், ஜனாதிபதி ஒரு கட்சியிலும் இருக்கின்ற ஒரு அரசையே எதிர்பார்க்க முடியும். இது நடந்தால் சஜீத்பிரேமதாசவே பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகமாக உண்டு. இதற்கு மாறாக நடப்பதாயின் ஜனாதிபதி தேர்தலில் நடந்தது போன்று ஒரு “அரசியல் அதிசயம்” நடக்கவேண்டும். அது சாத்தியமற்றது என்று முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அது மக்களின் கைகளில் இருக்கிறது. 

ஆனால் ….. ! அந்த  மக்கள் யார்? அவர்கள்  எதிர்கட்சி ஆதரவு வாக்காளர்கள். சிறுபான்மை சமூகங்களையும், அவை சார்ந்த கட்சிகளையும் சேர்ந்தவர்கள். மேலும் ரணில்,சஜீத், ராஜபக்சே ஆதரவாளர்கள். அவர்களை எதிர்வரும் ஒன்றரை மாதங்களில் ஜனாதிபதியினால் தன்வசப்படுத்த முடியுமா? என்பது மிக மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல் அனுபவமற்ற, சாதாரண மக்களில் இருந்து விலகிவாழ்ந்த, பலகலைக்கழக பேராசிரியர்களின் பல்துறை நியமனங்கள் மூலம் மட்டும் இது சாத்தியமா? அதுவும் இவர்கள் பலரும் ஏதோ ஒருவகையில் பல்கலைக்கழக காலத்தில் இருந்து ஜே.வி.பி. யுடன் இணைந்து செயற்பட்டவர்கள். கிழக்கு மாகாண ஆளுநரும் அவர்களில் ஒருவர். பேராசிரியர் மேலங்கிக்குள் அரசியல் நியமனங்கள் ஜே.வி.பி.யால் மறைக்கப்படுகின்றன.

இந்த தொங்குபால அரசியல் எதிர்பார்ப்பே கட்சிகளின் ஐக்கியத்திற்கான கூக்குரலுக்கு காரணம். ஒற்றுமையாக ஒரே சின்னத்தில் தேர்தலை எதிர் கொள்வதன் மூலம் மொத்த வாக்குகளை அதிகரித்து தேசிய பட்டியல் ஊடாகவும்  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அவை வியூகம் வகுக்கின்றன. ரணில் – சஜீத் ஒன்றிணைவு,  உள்ளும், புறமும் பிரிந்து நிற்கின்ற முஸ்லிம் கட்சிளை ஒன்றிணைத்தல், அதேபோன்று பிரிந்து நிற்கின்ற தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைத்தல் போன்ற கூட்டுக்கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து செயற்பட்ட பொது ஜன பெரமுனவும், புதிதாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியும் ரணில், சஜீத் தரப்பு போன்று வர்க்க நலம் சார்ந்து ஒன்றிணையமாட்டார்கள் என்று அடித்துச் சொல்லவும் முடியாது.

இன்னொரு பக்கத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து கொழும்பில் முன்னாள் எம்.பி.க்கள் ஹக்கீம், சுமந்திரன், மனோகணேசன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளதாக ஹக்கீம் பத்திரிகைகளுக்கு கூறியுள்ளார். ஆனால் அதை சுமந்திரன் மறுத்ததாகவும், தாங்கள் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றியே பேசியதாகவும் யாழ். பத்திரிகை ஒன்று கேட்டபோது அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த செய்தியை மனோகணேசன் மறுக்கவும் இல்லை, ஹக்கீம் தவறானது என்று சொல்லவும் இல்லை.  

 ஹக்கீமின் கூற்று உண்மையானால் பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், சிறப்பாக கிழக்குமாகாணத்லிலும் இந்த நிலைப்பாடு இன்றைய நிலையில் சுமந்திரனுக்கு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அவர் அதை அடக்கி வாசிக்க வாய்ப்புள்ளது.  அப்படியான ஒரு நிலைப்பாடு தமிழர் வாக்குகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக அமையும் என்று கிழக்கு தமிழர்கள் கருதுகிறார்கள்.

மறு பக்கத்தில் மனோகணேசனை பொறுத்த மட்டில் இது அவருக்கு தேவையான ஒன்று. ஏனெனில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ்த்தரப்புடன் இணைந்து தேர்தலில் நிற்பது கொழும்பு வாழ் யாழ்ப்பாணத்தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு வசதியாக அமையும்.  கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் பட்டியலில் இறுதியாக தப்பிப்பிழைத்தவர் மனோ கணேசன்.அதே போன்று வன்னியில் ரிஷார்ட் பதியூதீனினுக்கு எதிராக முஸ்லீம் காங்கிரஸ் தமிழர் வாக்குகளால் முன்னேற முடியும். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலும் ஒரு எம்.பி. ஏழில் இருந்து ஆறாக குறைவதால் முஸ்லீம் காங்கிரஸ், தமிழரசு கூட்டு இருதரப்புக்கும் உதவியாக இருக்கும்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் கிழக்கு அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள கட்சிகளும், அமைப்புக்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.ரி.எம்.வி.பி. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான அணியில் ரி.எம்.வி.பி.யுடன் இணைந்து ஒரே மேடையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின்   சந்திரநேரு சந்திரகாந்தன், ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி.சங்கர் ஆகியோர் மேடையேறி இருப்பதும், மட்டக்களப்பில் வியாழேந்திரன் மேடையேறியிருப்பதும், திருகோணமலையில்  தமிழரசு மீது தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியும்  இதற்கு கட்டியம் கூறுகின்றன. கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பலவீனங்களை பயன்படுத்தி தன்னை பலப்படுத்திக்கொண்ட கட்சியாக ரி.எம்.வி.பி.உள்ளது.

இதற்கிடையில்  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய சில வாக்குறுதிகளுக்கு – எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் பூகோள அரசியல்  ஜனாதிபதி அநுரகுமார வின் கைகளை கட்டிப்போட்டிருப்பதாக  ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ராஜபகசாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என சீனாவும், அதேவேளை சீனாவுக்கும் அநுரகுமார ஆட்சிக்கும் இடையிலான உறவு தமக்கு பாதகமாக அமையும் என்று கருதுவதால் இந்தியாவும், அமெரிக்காவும் வளாதிருக்கவில்லை. ரணில் -சஜீத் அணிகளை பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக களம் இறக்க முயற்சிக்கின்றன. இதற்கு இருக்கின்ற ஒரே “கௌரவத்தடை” ரணில் விக்கிரமசிங்க என்று அவை கருதுகின்றன. அதற்கான ஒரு கூட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்பொன்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பதவி வழங்கப்பட்டு கௌரவத்தடை நீக்கப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரங்களில்  காஸ் சிலிண்டர்  கசிவு ஏற்பட்டுள்ளது.

  இக்  கசிவு திட்டம் உண்மையானால்  …..? ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாற்றத்திற்கான திசைகாட்டி, மாற்றத்திற்கான திசையை அன்றி  மாற்று திசையையே காட்டும் . அப்படி நடந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய சிறிலங்காதான் பாராளுமன்ற தேர்தலுக்கும் பிந்திய சிறிலங்கா…!