இலங்கை இஸ்லாமிய இயக்கங்களும் அரசியலும்: இன்றைக்குத் தேவையான பார்வை

இலங்கை இஸ்லாமிய இயக்கங்களும் அரசியலும்: இன்றைக்குத் தேவையான பார்வை

— றியாஸ் குரானா —

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் ”தீன் வேலை” என்ற பெயரில் ”வீண் வேலை” செய்யும் அநேக இயக்கங்கள் இந்தியாவில் பிறந்தவையே. சூஃபி மற்றும் தௌஹீத் போன்ற அமைப்புக்கள் மத்திய கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவை. அதிலும், கடந்த 300 ஆண்டுகளாக சூஃபி இயக்கங்கள் இந்தியாவுக்குரிய ஒரு புதிய மாற்றத்தை தமது உள்ளடக்கத்தில் உருவாக்கியிருந்தன. அந்த உள்ளடக்கங்களுடனேயே சூஃபி இயக்கம் இலங்கையில் பரவியது. அது முற்றிலும் “நிலபிரபுத்துவ” அமைப்பைப் போன்று செயல்படும் ஓர் இயக்கம்.

இலங்கையில் மிகப் பழமையான அமைப்பாக தௌஹீத் சார்ந்த (வஹாபிசம்) கருத்தின் தாக்கத்தில் உருவான ”ஜம்மியதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா” என்ற அமைப்பையே கூறலாம். இது 1947 களிலேயே இலங்கையில் காலூன்றியது. 1948 களில் கண்டியில் இரண்டு கபுர்ஸ்தானங்களை உடைத்ததோடு பிலபலமானது.

பின்னர் கிழக்கில் மையம்கொண்டு செயல்படத் தொடங்கியது. எனினும், அன்றைய காலத்தில் அந்த இயக்கத்தினால் மக்களிடம் பாரிய வரவேற்பைப் பெறமுடியாது போயிற்று. இதை தாபித்த அப்துல் ஹமீத் பக்ரி அவர்களின் குடும்பத்திற்கே சவூதி அரேபியா குடியுரிமை வழங்கியது என்பது மிக முக்கியம். 1976ம் அவர் ஆண்டு சவூதியிலேயே மரணித்துவிட்டார்.

இந்த இயக்கம் அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்படும் என அவர் அறிவித்திருந்தபோதும், அது நிகழவில்லை.

இதைவிடப் பழமையான இஸ்லாமிய இயக்கமான ஷியாக்கள் அதற்கு முன்பே இலங்கையில் இருந்தபோதும், அவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை. வியாபாரங்களிலேயே கவனம் செலுத்தினர். 

80களிலேயே இதை வளர்க்கும் முயற்சி தீவிரமடைந்தது.

தப்லீஃக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி, காதியான்கள் என பல அமைப்புகள் இந்தியாவிலேயே பிறந்தன. 

முதாலாளித்துவ ஆதரவை தனது உள்ளகத்தில் பெரும் அக்கறைகொள்ளும் இயக்கமாக தப்லீக் இருக்கிறது. இது பாமர மக்களை அதிகம் கவர்ந்த ஓர் அமைப்பும் கூட. வெளிநாடொன்றுக்குப் பயணம் செய்வதற்காக இலங்கையினூடாகப் பயணித்த இந்தியர் ஒருவருக்கு இலங்கையில் சில நாட்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் ஒரு பள்ளியில் உரையாடிய தருணத்திலிருந்து அந்த அமைப்பு இலங்கையில் தோன்றியது.

ஜமாதே இஸ்லாமியும் அதேபோல்தான், தர்ஜூமதுல் குர் ஆன் விற்பனைக்காக இலங்கை வந்த இந்தியர் ஒருவரால் இங்கு ஜமாதே இஸ்லாமி உருவானது. அதன் முதலாவது தலைவரும் இந்தியாவைச் சேர்ந்தவரே.

இந்த இயக்கம் மாணவர்கள், படித்தவர்கள் என தேடித்தேடி தனது இயக்கத்தின் ஆதரவாளர்களாக பிடித்துக்கொண்டது. 80 களிலிருந்து ”இஹ்வானுல் முஸ்லிமீன்” போன்ற போர் குணம் கொண்ட அமைப்புகளின் நிழல் இந்த இயக்கத்தின்மீது படிந்தது. அதனால், தனது உறுப்பினர்களை வழிநடாத்தும் ஓழுக்கக் கோவைகளில் அந்த அம்சங்களை இணைத்துக் கொண்டனர். 

தப்லீக் ஜமாத் இயக்கம் தலித் (பாமர) மக்களை தமது ஆதரவாளர்களாகக் குறிவைத்துச் செயற்பட்டாலும், அதன் அதிகாரச் சக்திகளாக பெரும் பணக்காரர்களே இருந்துவந்தனர்; வருகின்றனர்.

ஜமாதே இஸ்லாமி கற்பனையான இறுக்கமான அரசியல் இயக்கங்களுக்கு நிகரான கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் ஆதரவாளர்களின்மீது திணித்து செயல்பட்ட மேட்டுக்குடி இஸ்லாமிய இயக்கம். 80 களில் தான் இது பரவலான கவனத்தைப் பெற்றது. முஜாஹிதீன்களை ஆதரித்ததினுாடாக இந்தக் கவர்ச்சி அந்த இயக்கத்திற்கு உருவானது.

சூஃபி இயக்கங்களோ, மயாஜால இஸ்லாமிய இயக்கமாக மாறிப்போனது. அதிசயங்களை நிகழ்த்தும் வாப்பாக்களை/தங்கல்களை” (தலைவர்களை) முன்வைத்து அவை செயல்பட்டன. எனினும், பள்ளிவாயல்களுக்குள் பெண்களின் நடமாட்டத்தை இந்த இயக்கம் அனுமதித்தது. அந்த பள்ளிகள் தரீக்காப் பள்ளிகளாக இருப்பது முக்கியமான ஒன்றே.

ஆனால், சுன்னத்துவல் ஜமாத் அமைப்பினர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் சில இயக்கங்கள் இருக்கின்றன. அதில் காதியான்களும் ஒன்று. ஆனால், இந்த காதியான்கள் தங்கள் பள்ளிவாயலில் ஜூம்மாக்களுக்குப் பெண்களை அனுமதித்தே வருகின்றனர். நீர்கொழும்பிலுள்ள அவர்களுடைய பள்ளிவாயலில் இதை அறிந்துகொள்ளலாம்.

இந்தியா வழி இலங்கைக்கு வந்த தௌஹீத் (வாஹாப்பிசம்) 90 களின் பின்னரே இலங்கையில் பெரும் கவர்ச்சிகரமான இடத்தைப் பெற்றது. உலகளவில் எழுந்த உலக ‘உம்மா” கருத்தும், தீவிர இனவாதத்தின் இழைகளும், அரசியல் அதிகாரத்தை அக்கறைகொள்ளும் விருப்பங்களும் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்குப் பின்னால் இருந்ததை அவதானிக்கலாம்.

ஏனைய இயக்கங்களில் ”தாருல் அர்க்கம்” கொஞ்சம் முக்கியத்துவமான அமைப்பு. இது ஜமாதே இஸ்லாமியிருந்த அதிருப்தியாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஒஸ்தாத் மன்சூரின் தலைமையில் ஆரம்பத்தில் இது நடந்தேறியது. இதில் அதிக இளைஞர்கள் இருந்தனர். சர்வதேச அளவில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இதன் உருவாக்கம் நடந்தது. இஸ்லாமிய வெறுப்பை மேற்குலகம் உலகெங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. அதை எதிர்கொள்வதில் பல வகையான கருத்து நிலைகள் உருவாகத் தொடங்கியிருந்தன. அந்த அனைத்துக் கருத்துநிலைகளிலும் பாதிப்படைந்திருந்த இளைஞர்கள் அதிகம்பேர் இந்த இயக்கத்தில் இருந்தனர். எனினும், இதுவும் அடிப்படைவாதத்தை அனுசரிக்கும் அமைப்பாகவே சுருங்கிப்போனது. முழுமையாக இப்படி கருத முடியாது. பிற இயக்கங்களைவிட இது சற்று முற்போக்கானது.

இதிலிருந்து முதலில் ஏபிஎம் இத்ரீஸ் வெளியேறினார். பின்னர், அதற்குள் உருவான தலைமைத்துவப் போட்டியும், பொருளாதார ரீதியிலான வரவுகளும், ஒன்றிணையும் புள்ளியில் ”மன்சூர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட மன்சூர்,  “மிஷ்காத்” என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்.

இலங்கையில் குர்ஆனுக்கு தப்ஸீர் எழுதக்கூடிய ஆற்றல் மிக்க இருவரை அடையாளப்படுத்தலாம். ஒருவர் ஏபிஎம். இத்ரீஸ். மற்றையவர், அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் மன்சூர். இருவரும் அந்த அமைப்பில் தற்போது இல்லை. வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு மாடுகளை அறுத்து பங்கிடுதல், கிணறுகள் அமைத்துக் கொடுத்தல் என்ற பிரத்தியேகமான பொருளாதார விசயங்களிலும் கவனம் செலுத்துகிறது, தாருல் அர்க்கம். 

இன்றைய நிலையில் அதிக விமர்சனங்களை முன்வைப்பதெனில், தௌஹீத் ஜமாத் மற்றும் தாருல் அர்க்கம் என்ற இரண்டு அமைப்புக்களின் மீதுமே நான் வைப்பேன். (பின்னர் அதை எழுதுகிறேன்.) இந்த இயக்கத்தவர்கள் ”உலக உம்மாவாதிகள்” எனத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள்.

மற்றயவை, முன்புள்ள இயக்கங்களுடன் முரண்பட்டுக் கொண்டு இலங்கையிலேயே உருவான அமைப்புக்கள்தாம்.

ஒட்டுமொத்தமாக அனைத்து அமைப்புக்களும், (அதிக அமைப்புகள்) 1924 ம் ஆண்டின் பின்னர் சரிந்த உதுமானிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகே தீவிரமாக இயங்கத் தொடங்கின. இந்த அமைப்புக்கள் பெரும்பாலும், உமர் (ரழி) அவர்களின் காலத்தில் உருவான இறுக்கமான பல நடைமுறைகளைத் தீவிரப்படுத்தினவே தவிர அவற்றை மீள் பரிசீலிக்கவில்லை.

உமர் (ரழி)யின் காலத்தில் தொடங்கிய, பள்ளியிலிருந்து பெண்களைத் துாரமாக்கும் நடைமுறை, 10ம் நுாற்றாண்டில் உச்சத்தை அடைந்தது. பெண் ஹதீஸ் கலை வல்லுனர்கள் 10ம் நுாற்றாண்டின் பின்னர் இல்லை. அவர்களுடைய வாசகங்கள் கூட மேற்கோள் காட்டப்படுவதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த வறண்டுபோன, போக்கையே இஸ்லாமியப் போக்குகளாகப் பரப்பியிருந்தனர். அதுவே நிறுவனமயப் படுத்தப்பட்டிருந்தது. அதை இந்த இயக்கங்கள் பின்பற்றின. அதையே தொடர்ந்து காப்பாற்றும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்தித்தன; முன்வைத்தன. பெண்கள் முற்றுமுழுதாகப் பள்ளிவாயலில் இருந்தும், கருத்துக்களை விவாதிப்பதிலிருந்தும், பொது உரையாடல்களில் பங்கேற்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர்.

கடைசியில், அவர்களை முற்றாக மூடி, சமையலறைகளிலும், படுக்கையறைகளிலும் சிறைவைக்கும் நிலைவரை சென்றுவிட்டனர்.

இந்த வறண்ட இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் நிலைப்பாடுகளை மீளப் பரிசீலிக்கும் மனநிலையில் இல்லை. இதை எழுதினால், காபிர், என எனக்கு ஃபத்வா தருவார்கள் என்பது தெரியும். அதைவிட வேறு என்ன இவர்களால் செய்ய முடியும்? வெறும் பத்வாக்களையே உற்பத்தி செய்து கொண்டிருக்கும் இயந்திரங்களே அவை.

இந்த இயக்கங்களின் நடவடிக்கைகள் மற்றும் போக்குகள் குறித்தும், அதன் இலங்கை உருவாக்கம் குறித்தும் விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டுதான். அதற்கு சற்று பொறுத்திருப்போம். 

இலங்கையின் அரசியல் கட்சிகளான ஜேவிபி, யூ.என்பி உட்பட தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் வரை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து செயற்பட்டனர் என்பது நாமறிந்ததே, இதே செயற்பாடுகளை இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் 90 களின் நடுப்பகுதியிலிருந்தே தொடங்கியிருந்தன. பல்கலைக் கழக மாணவர்களை தமது இயக்கக் கருத்தியலுக்கும், செய்பாடுகளுக்கும் பாவிக்கத் தொடங்கினர். இந்தப் பணியை ஆரம்பித்து வைத்தது தாருல் அர்கம் (DA) என்ற அமைப்புத்தான், அதைத் தொடர்ந்து ஜமாதே இஸ்லாமியும் களத்தில் இறங்கியது. 

அதுபோல, கடும்போக்கு பழமைவாத சிந்தனையை பின்பற்றும் பல அமைப்புக்கள் இலங்கையில் “தௌஹீத்” என்ற அடைமொழியோடுதான் செயற்பட முன்வந்தன. இந்த தௌஹீத் என்ற முக்கியமான இஸ்லாமியச் செயலை இன்று மிகமோசமான கண்ணோட்டத்திலும், அருவருப்புடனும் பார்ப்பதற்கு அதை அடைமொழியாக பயன்படுத்தி செயற்படும் பழமைவாத அமைப்புக்களே காரணம். 

தொண்ணுாறுகளின் நடுப்பகுதியிலிருந்து பல்கலைக் கழக மாணவர்களை இயக்கத்திற்கு சேர்க்கும் “ஆள்புடிக்கும்” பணியில் நடந்த போட்டா போட்டிகளில், அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் பின்னர் களத்தில் இறங்கின. அதுவே இன்று வளர்ந்து முகமற்ற பெண்களை உருவாக்கும் மாபெரும் தௌவா பணியை சாதித்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

000000000000000000000000000

இலங்கையில் இஸ்லாமிய இயக்ககங்களின் சுருக்கமான வரலாற்றையும் செயல்பாடுகளையும் ஏன் முன்வைக்கிறேன் என்றால், இலங்கையின் அரசியல் களத்தில் அதிகாரங்களை விளைபவர்களாகவும், கட்சிகளின் பரப்புரைகளைச் செய்பவர்களாகவும் முன்னணிக்குவருபவர்களும் வரத் துடிப்பவர்களும் மிதவாத இஸ்லாமிய இயக்ககங்களைச் சேர்ந்தவர்களல்ல. தீவிரத்தன்மை நிறைந்த இஸ்லாமிய இயக்கங்களிலும் பள்ளிகளிலும் இருந்தவர்கள். இவர்கள் முஸ்லிம்களின் மத்தியில் சிறுபான்மையினராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக மிதவாதம் உட்பட பல கருத்துநிலைகளை கொண்ட முஸ்லிம்களின் மத்தியில் அனைவருக்குமான அரசியல் பிரதிநிதிகளாகவும் அதிகார சக்தியாகவும் வர போராடுகிறார்கள் என்பதனால்தான் இவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது சிங்கள பௌத்த மத முகாமான ‘ராகுல” நிறுவனம், பௌத்த துறவிகளும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என முன்வைத்த கருத்துநிலையின் நிழல் வடிவமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. 

இலங்கையில் மக்கள் பிரதிநிதிகளாகவும், அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்தவர்களாகவும் இருந்த முஸ்லிம்கள் ஆரம்பத்திலிருந்தே மிதவாதிகளாகவும் தாராளவாதிகளாகவும் படித்தவர்களாகவும் இருந்தனர். அந்தக் காலகட்டங்களில் இஸ்லாமிய இயக்கங்கள் வளர்ந்திருக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இலங்கையில் முதன் முதலாக முஸ்லிம்கள் மத்தியில் உருவான அரசியல் கட்சி கூட இனவாதக் கட்சியல்ல. அது ஒரு சோசலிஷக்கட்சி. இந்தத் தகவல் அதிகம் பேருக்குத் தெரியாத ஒன்று. இஸ்லாமிய சோசலிஷ முன்னணி என்ற ஒரு கட்சியை  கலாநிதி பதியுத்தீன் முஹம்மது அவர்கள் உருவாக்கியிருந்தார். எச்.எம். பீ.முஹைதீன், இளங்கீரன் சுபைர், யாழ் ரவுப் காசீம், மூதூர் மஜீத் என்று ஒரு நீண்ட பட்டியலே இருந்தது. முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ‘இன்சான்’ என்ற இடதுசாரிப் பத்திரிகை ஒன்றும் வெளிவந்தது. அன்றைய நாளில் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகமிருந்தமையினாலும், தனியான ஒரு கட்சியை ஆதரிக்கும் வகையிலான பிரச்சினைகள் மேலெழுந்து முஸ்லிம்களின் மத்தியில் திரட்சியுறாதமையாலும் அந்தக் கட்சி செல்வாக்கிழந்து போயிற்று. 

80 களில், வடகிழக்கு முஸ்லிம்கள் நாட்டின் பிற தேசத்து முஸ்லிம்களில் இருந்து பிரத்தியேகமானதும், தனித்துவமானதுமான பிரச்சினைகளை எதிர்கொண்டபோது, அதற்கு தலைமைகொடுக்க முன்வந்த பல பிரதிநிதிகளும் இறுக்கமான இஸ்லாமிய இயக்கவாதிகளாக இருக்கவில்லை. அஷ்ரப் அவர்கள் இளவயதில் ஜமாதே இஸ்லாமி சாய்வுடையவராக இருந்தபோதும், லிபிய தலைவர் கடாபியின் சர்வதேச இயக்கத்தின் உறுப்பினராக மாறியதிலிருந்து அவருக்குள் ஒரு சோசலிஷ பார்வை வெளிப்பட்டிருந்தது. அத்தோடு, சேகு இஸ்ஸதீன் போன்ற சூஃபி நண்பர்களின் தொடர்புகளும் அஷ்ரஃபை இயக்க மனநிலையிலிருந்து தூரமாக்கியிருந்தது. இந்த எண்பதுகளில் இஸ்லாமிய இயக்கங்கள் அதிலும் தீவிர இயக்கங்கள் கனவில் அரசியல் அதிகார ஆசையையும், செயல்பாடுகளில் மதநடவடிக்கைகளோடு தமது அணிக்கு அதிக உறுப்பினர்களை இணைக்கும் அம்சத்திலேயே அதிக கவனத்தை கொண்டிருந்தன. 

90 கள் மிக முக்கியமான காலம். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க முயற்சியால் தௌகீத் அமைப்புக்கள் பெரும் நிதி உதவியுடன் தங்களுக்கான உலகளாவிய ஆதரவை முஸ்லிம்களிடமிருந்து உருவாக்கும் திட்டத்துடன் களத்தில் இறங்கின. அது மத்தியகிழக்கிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சவாலாக கருதப்பட்ட ஷியா முஸ்லிம் பிரிவின் ஆதிகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அணிதிரட்டும் பணியாக அமைந்தது. அப்படி உலகெங்குமுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களின் மத்தியில் பெரு நிதியோடு களமிறக்கப்பட்ட தௌகீத் அமைப்புக்கள், அதிரடியான அறிவிப்புக்களோடும் பணபலத்தோடும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தீவிரமான முஸ்லிம் மனநிலையை உருவாக்கியதோடு, இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்களே உலகத்தை கைப்பற்றிவிடப்போகிறார்கள் என்ற தப்பான பெருமிதத்தையும் ஊன்றி விதைத்தன. இதை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே இங்கிருந்த தீவிர மற்றும் மிதவாத அமைப்புக்களும் போட்டிபோட வேண்டிய தேவையை உணர்ந்தன. 

தங்களால் முடிந்தளவு தமது அமைப்பிற்கு சார்பான உலகநாடுகளின் பணஉதவியை நாடியபோதும் அதில் கிடைக்கப்பெற்றவைகள் தௌகீத் அமைப்புக்களோடு சமப்படுத்த போதுமான நிலையை உருவாக்கவில்லை. மிதவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் களத்தில் ஏற்கனவே இலங்கையில் செயல்பட்டபோதும், மரபான பண்பாட்டை கலைத்துவிடும் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. அவற்றை அநுசரித்துச் செல்லவே விரும்பியிருந்தன. ஆனால், தௌகீத் தீவிர அமைப்புக்கள் மரபானதும், பண்பாடாக கருதப்பட்டதுமான பல அம்சங்களில் அத்துமீறிக் கைவைத்தன. ஒருவகை சர்வாதிகாரத் தன்மையோடு கையில் பிரம்புகளை வைத்திருப்பதைப்போன்று நடந்துகொண்டன. தண்டனைகள் வழங்கின. எழுதப்படாத சட்டங்களை அச்சத்தினாலும், தண்டனைகளினூடாகவும் பாதுகாத்தன. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள்தான். அவர்கள் மரபாக அணிந்து கொண்டிருந்த ஆடைகள் கழற்றி எறிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். முகங்களை மூடி மூச்சுத்திணறும் எல்லைவரை திணிக்கப்பட்டனர். இதை மிக எளிதாக சாத்தியப்படுத்த மதநூல்களையும் ஹதீஸ்களை மட்டுமே கையிலெடுக்கவில்லை. அதிகாரம், தண்டனை, இழிவாடல் போன்ற ஒழுக்க மதிபீடுகளையும் பெண்களின் மீது சுமத்தினர். மரபான ஆடைகளில் இருந்து புதிய ஆடைகளுக்கு மாறுவதிலிருந்த தயக்கங்களை ஓரளவு நிவர்த்தி செய்ததில் இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பங்கும் கணிசமானது. 

திறந்த பொருளாதாரக் கொள்கையினடியாக ஆண்களும் பெண்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தமது பொருளாதாரத்தை நிவர்த்திக்கும் வழிகள் திறக்கப்பட்டபோது, பெண்கள் வெளிநாடுசெல்வதை கடுமையாக விமர்சித்து பள்ளிவாயல்களிலும் ஜும்மாக்களை ஓதியதை இங்கு நினைவுகூரவேண்டும். வெளிநாடு சென்ற பெண்கள் ‘ஸ்டைல்’ என்ற அளவில் புதிய ஆடைகளோடு நாட்டுக்குள் நுழைந்தும், வெளிநாடு சென்ற ஆண்கள் அதை இலகுவாக ஏற்றுக்கொண்டதும் முஸ்லிம் சமூக வெளியில் புதிய ஆடையின் மாற்றம் பரவுவதற்கு இருந்த சமூகத் தடையை ஓரளவு இலகுபடுத்தியிருந்தது. ‘ஸ்டைலாக” நாட்டுக்குள் அறிமுகமான புதிய ஆடையை, முஸ்லிம் பெண்களின் யூனிபோர்மாக மாற்றியமைத்ததும் அவர்களின் முகங்களை மறைத்து மூச்சுத் திணறவைத்தின் பின்னாலும் உள்ள பாரிய கள மற்றும் கருத்தியல் பங்களிப்பை கைகளில் பிரம்போடு நின்று சாதித்தது தௌகீத் அமைப்பினர்தான். அனைத்துப் பள்ளிப் பீக்கர்கள், தெருக்களில் திடீரென உருவாகும் பிரச்சார மேடைகள், சிடி(இறுவெட்டு) வெளியீடுகள் போன்ற பெரும் களச்செயயற்பாடுகளும் பங்களிப்பினைச் செய்தன. ஏன் தனியான இறுவட்டுக்கடைகளும் உருவாகின. 

புதிய மதக் காவலர்களாக மௌலவிகள் மாத்திரமன்றி அனைத்து ஆண்களும், குறைவான பெண்களும் மாற்றமடைந்திருந்தனர். முஸ்லிம்களின் ஊர்களெங்கும் வீதிகளெங்கும், தாடியும் ஜுப்பாக்களும் ஹபாயாவும், முகமூடிக் கொள்ளைக்காரர்களுமாக வலம் வந்தனர். எங்கும் ஒரே தீவிரப் பிரச்சாரமாக மாறிப்போனது. கலையும் கலைசார்ந்த அம்சங்களும் புறமொதுக்கப்பட்டன. இழுத்து மூடப்பட்டன. பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த காதுகளில், தொண்டை இறுகிப்போனவர்களின் காட்டுக்கத்தல்களும், வாகனங்களின் அடிபட்டு சாகுத் தருவாயில் கிடக்கும் நாயின் கேவல் போன்ற கீச்சுக்குரல் நாடகத்தனமான அழுகைகளும் நிறைந்திருந்தன.

குடியிருக்க மக்களுக்கு வீடுகளே இல்லை, ஆனால், எண்ணற்ற பள்ளிவாயல்கள் முளைத்தன. மத்ரசாக்கள் உருவாகின. 5ந்தில் ஒரு வீடு ஓதப்பள்ளியாக மாற்றப்பட்டன. சில ஆண்டுகளுக்குள்ளேயே முஸ்லிம் ஊர்கள் முற்றிலும் பரீட்சயமற்ற நாடுகளில் வசிப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. எங்களைப் போன்ற மாற்றுக் கருத்தாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டோம். எங்கள் சிந்தனை மையங்களான ‘ஞானமடம்” நரகத்தைப்போன்றது என்ற கதைகள் பரப்பப்பட்டன. முஸ்லிம்களின் சமூக வெளி, மற்றும் உரையாடல் கருத்துவெளிகளிலிருந்து தூரமாக்கப்பட்டடோம். அவப் பெயர்களாலும், திட்டமிட்ட புறமொதுக்கல்களாலும் துரத்தியடிக்கப்பட்டோம். நாங்கள் மெதுவாக ஒதுங்கி வாழ வேண்டிய தேவை வலிந்து உருவானது. படித்த படிக்காத அனைவரும் இந்த புதிய தீவிரவாத அறிஞர்களாக ஒரு சில ஆண்டுகளிலே சமூகக்களத்தில் முன்ணணிக்கு  வந்தனர். அனைவரின் கைகளில் பிரம்புகளும், அனைவரின் நாவுகளில் அவதூறுகளும் நிறைந்திருந்தன. 

இந்த நிலையை ஏதிர்கொள்வதற்கு ஏலவே இங்கு இயங்கிய பொருளாதரப் பலமற்ற தீவிர மற்றும் மிதவாத இயக்கங்கள் பெரும் சவாலுக்கு உட்பட்டன. தவிர்க்க முடியாமல், அவர்களும் இந்த தீவிர அலையில் மெல்ல மெல்ல இணைந்துபோகத் தொடங்கினர். அவர்களின் அமைப்புரீதியிலான திட்டங்கள் தீவிரத்தன்மைக்கு நெருக்கமாக மாற்றமடைந்தன. தமக்கான ஆதரவாளர்கள் குறைந்தவிடக் கூடாது என்ற வகையில், படித்த இளைஞர்களை அணியில் இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது, அனைவரும் பிரச்சாரம் செய்யும் ‘காடர்களாக’ ஆக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டங்கள் அமுலுக்கு வந்தன. எனவே, ஜேவிபி, போன்று பல்கலைக்கழக மாணவ மாணவியரைக் குறிவைத்து இணைக்கத்தொடங்கினர். அதிலும் பெண்கள் சமையலறை வேலைகள் போன்ற பணிகளுக்கே நியமிக்கப்பட்டனர். இதே நேரம், நளீம் ஹாஜியாரால் நிறுவப்பட்ட பள்ளிக்கூடம் மதத்தையும் பிற கல்வியையும் சமஅளவில் கலந்த ஒரு தலைமுறையை உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டது. அது ஒரு நிறுவனமாகவும் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், அன்றையச் சூழலில் தீவிர தௌகீத் வாதிகளை எதிர்கொள்வதாக இருந்தால், தாங்களும் தீவிரத்தன்மைகொண்ட ‘காடர்களை’ உருவாக்க வேண்டியிருந்தது. எனவே, படித்த மதத்தீவிரத் தன்மைகொண்ட நபர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் மெல்ல மெல்ல நிறையத் தொடங்கினர். அதற்காவே, நளீமியா தனது ஆரம்ப ‘சிலபசான’ எகிப்து பல்கலைக் கழகத்தின் உதவியோடு உருவாக்கபட்ட சூஃபித் தன்மைகொண்டதும் மிதவாத தன்மைகொண்டதுமான மத மற்றும் படித்த சமூகத்தை உருவாக்கும் பாடத்திட்டங்கள் கிழித்து வீசப்பட்டன. மத்திய கிழக்சைச் சேர்ந்த தீவிரத் தன்மை மேலோங்கிய படித்த, ஆனால். நேரடி தௌகீத் தீவிரவாதத்திலும் அழிச்சாட்டியங்களிலும் இருந்து வேறுபட்ட ஒரு பிரிவினரை உருவாக்க உதவியது. 

முஸ்லிம் சமூகத்தில் தொண்ணூறுகளில் உருவான இந்த சமூக மாற்றம் என்பது, மிலேனியத்தை தொடும்போது கணிசமான நபர்களை வெளியே தள்ளியிருந்தது. தௌகீத் அமைப்பினர் முஸ்லிம் களத்தில் அதிகார சக்தியாக வலம்வந்தபோதும், அரசியல் களத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால், முதன் முதலில் இலங்கையில் 1960 களில் தன்னை அரசியல் கட்சியாக பதிவுசெய்வேன் என அறிவித்துக்கொண்ட தீவிர தௌகீத் அமைப்பின் எண்ணங்கள் புதிய தௌகீத் அமைப்பிற்குள் நுழைந்தபோதும், படித்தவர்கள் குறைவாக இருந்தமையினால் சமூகக் களத்திலிருந்த அதிகாரங்கள் போதுமானது என்ற நிலைப்பாடும் அவர்களுக்கிருந்தது. 

ஆனால், தீவிர மதக்கல்வியையும் சமூக அரசியல் கல்வியையும் கற்றுக்கொண்ட புதிய தலைமுறையினர், தங்களுக்கான அதிகாரத்தை இந்த முஸ்லிம் சமூக வெளியில் நிலைநிறுத்துவதற்கான சமிக்ஞைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தினர். அதிலும் முதன் முதலாக உலக அரசியலை, அதிலும் உலகளவிலான இஸ்லாமிய அரசிலையையே முதலில் தேர்வு செய்தனர். அதன் நிமித்தமாக, இந்தப் புதிய தலைமுறையினர் அனைவருமே இலங்கைக்கு வெளியே அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் அரசியல் குறித்தே அனைவரும் அக்கறைகொண்டனர். அதையே பரப்பவும் செய்தனர். அதற்காக இஸ்லாமிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. அந்தப் பத்திரிகைகளை ஆழமாக மீளாய்வு செய்தால், ஏதோ பலஸ்தீனத்திலும், பிற முஸ்லிம் நாடுகளிலும் தமிழில் வெளிவந்த பத்திரிகையைப்போன்றே தோற்றமளிக்கும். 

தௌகீத் முகாமினர், சமூக களத்திலும், பண்பாட்டு கலாச்சார வெளியிலும் ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்துகிறார்கள். அவர்கள் பெரும் பணத்தை தம்வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களோடு போட்டியிடுவதாகவும், தாங்களும் அதிகாரங்களை கைப்பற்றுவதாக இருந்தாலும் மதம் மற்றும் பிற கல்வியை கற்றவர்கள் என்றும், அவற்றில் தேர்ச்சி உள்ளவர்கள் என்றும் சமூகரீதியில் பல நிறுவனங்களில் தொழில்புரிகிறார்கள் என்றவகையிலான ஒரு மேட்டுக்குடி முகத்தை வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருந்தனர். அதிகாரத்தை ஏதாவது முறையில் பெறுவதாக இருந்தால், தங்கள் கல்வி என்ற ஆயுதத்தையும் மதம் பற்றிய அறிதலுள்ளவர்கள், அரசாங்கத்தில் கௌரவமான தொழில்களில் உள்ளவர்கள் என்ற காரணங்களை மையமாக வைத்து, முஸ்லிம்களின் அரசியல் பிராந்தியத்தை பிடித்துக்கொள்ளலாம் என்று திட்டம் வகுத்தனர். 

ஆங்காங்கே உதிரிகளாக இருந்த இந்த ‘படித்த முஸ்லிம் பிராமணர்கள்” நீண்ட இயக்கத்தினூடாக ஒரு இணைந்த புள்ளியில் ஒருங்கிணைந்தனர். அதன் அடியாக கட்சிகளையும் உருவாக்கினர். அந்தக் கட்சிக்கு கணிசமான ஆதரவும் கிடைத்தது. அதற்கான சூழல் அன்றிருந்தது. மஹிந்த முகாமினரின் 15 வருட காலம் என்பது தீவிரமான இனவாத எழுச்சியின் காலமாக இருந்தமையால், முஸ்லிம் பிராமணர்களினாலும் கணிசமான மக்கள் ஆதரவை பெறக்கூடிய சூழல் ஏற்பட்டது. பின்னர், அந்தச் சூழல் கலகலத்துப்போனதினாலும், அவர்கள் இணைந்து செயல்பட்ட ஜேவிபி இவர்களை மெதுவாக ஓரமாக்கிவிட்டமையாலும் முஸ்லிம் களத்திலிருந்து இந்த ஓதிப்படித்த தீவிர தன்மைகொண்ட தலைமுறையினர் அதிகாரத்தை பெறும் எண்ணம் தாமதப்பட்டுப்போயிருக்கிறது. இனி அது இல்லாமல் கூட ஆகிவிடலாம். தௌகீத் வாதிகளின் அதிகாரங்களும் அமுங்கிப்போயுள்ளது. ஆனால், இந்த இருதரப்பினரும் மீண்டும் கிளர்ந்தெழுந்து, என்பிபிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். உதிரிகளாக தங்கள் நல்லெண்ணங்கள் என்ற வகையிலும், தாங்கள் கட்டமைக்கப்பட்ட முகாம்களை மறந்தும் பெருவாரியான மிதவாத முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைகொடுக்கும் தேர்வை அவாக்கொள்கின்றனர். இவர்கள் ஒருபோதும், இடதுசாரி கருத்தியலிலும் சமூக பன்மையான புரிதலிலும், பரிட்சயமுள்ளவர்களல்ல. அந்த சிந்தனை முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். இவற்றை முஸ்லிம் சமூகமும், என்பிபி அரசும் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் தலைமைகளின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டியதே தவிர, அதற்கு மாற்றீடாக இந்த புதிய தீவிர ஓதிப்படித்தவர்களை தேர்வு செய்யக்கூடாது. அதிலும், தீவிரவாத தௌகீத் முகாமைச் சேர்ந்த ரிஷாட் பதியுத்தீன் கணிசமான ஆதரவை வைத்திருப்பதும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

இன்றையச் சூழலில் முஸ்லிம்கள் தமது அரசியல் வகிபாகத்தை பற்றி சிந்திபதிலும், புதிய அரசு தமது முஸ்லிம் பிரதிநிதிகளைப் பற்றி பரிசீலிப்பதிலும் இது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். அதுவே இன்றையத் தேவை.