(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
மறுநாள் விடிந்ததும், அன்று வாரவிடுமுறையின் ஆரம்ப நாளான சனிக்கிழமையாதலால் கண்விழித்தபடியே அலுப்பும் களைப்பும் தீரக் கட்டிலில் படுத்துக் கிடந்தபடியே சிந்தனை வயப்பட்டிருந்த கோகுலன் நீண்ட நாட்களாகச் சந்திக்காதிருந்த மரியசிங்கம் ‘என்ஜினியர்’ ஜச் சென்று சந்திக்க வேண்டுமென்று எண்ணினான்.
எழும்பிக் குளித்துச் சாப்பிட்டு வெளிக்கிட்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு ‘ரவுண்’ நோக்கிப் புறப்பட்டான்.
மட்டக்களப்பு நகரில் ஞானசூரியம் சதுக்கத்தில் அமைந்திருந்த மரியசிங்கம் என்ஜினியரின் வீட்டையடைந்தபோது மரியசிங்கத்தின் வீட்டில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தனக்கு மூன்று வருடங்கள் ‘சீனியர்’ ஆகப் படித்த நல்லரட்ணமும் மரியசிங்கமும் வரவேற்பு மண்டபத்திலிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். கோகுலனைக் ‘கேற்’ றடியில் கண்டதுமே இருவருமே ஏக காலத்தில் “வாங்க கோகுலன்’’! நீண்ட நாட்களுக்குப் பிறகு” என்று கூறி வரவேற்றார்கள். நல்லரட்ணம் அப்போது மட்டக்களப்புப் பொது வைத்தியசாலையில் ‘பார்மசிற்’ ஆகக் கடமை புரிந்து கொண்டிருந்தார். கோகுலனும் பதிலுக்குச் சிரித்து வணக்கம் கூறியபடி வரவேற்பறையில் போடப்பட்ருந்த ‘செற்’ றியில் போயமர்ந்தான்.
முதலிலே மரியசிங்கம் அம்பாறை மாவட்டத்தில் சூறாவளி அனர்த்தங்கள் குறித்துக் கேட்டறிந்தார். கோகுலனும் தான் நேரில் அனுபவித்த-கண்ணால் கண்ட-கேள்விப்பட்ட எல்லா விடயங்களையும் விலாவாரியாக ஒப்புவித்தான்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரிய நீலாவணையிலிருந்து நிந்தவூர் வரைக்கும் கரையோரப் பிரதேசங்களில்தான் சூறாவளிச் சேதங்கள் அதிகமானவை. அட்டாளைச் சேனையிலிருந்து பாணமை வரை அனர்த்தங்கள் ஒப்பீட்டளவில் ஐதானவை என்பதையும் கூறி வைத்தான்.
கல்முனை – சம்மாந்துறை – பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஆளும் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நிவாரண வேலைகள் கட்சி அரசியல் பேதங்களில்லாமல் தங்குதடையின்றித் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கோகுலன் கூறினான்.
கோகுலன் கூறியவற்றைக் கவனமாகக் காதில் விழுத்திய மரியசிங்கம் “மட்டக்களப்பு மாவட்டத்தில நிலம அப்பிடியில்லத் தம்பி. சூறாவளிக்குள்ள அரசியலும் நடக்கிது. அதப் பத்தித்தான் நாங்க ரெண்டுபேரும் இப்ப கதைச்சிக் கொண்டிருந்த நாங்க” என்று கூறித் தனக்கு முன்னாலிருந்த நல்லரட்ணத்தைக் காட்டினார்.
மரியசிங்கம் நீரப்பாசனத் திணைக்களத்தில் பொறியியலாளராகப் பணிபுரிபவர். 1968 ஆம் ஆண்டு கோகுலன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டு ‘நீர்ப்பாசன பயிலுனர்’ க்கு விண்ணப்பம் அனுப்பிய காலத்தில் செங்கலடியில் நீர்ப்பாசனப் பொறியியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்போது மட்டக்களப்புப் பிராந்திய பிரதம பொறியியலாளராக உயர் பதவியிலிருந்தார்.
1965 ஆம் ஆண்டிலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் புணாணை-வடமுனை-மரப்பாலம்-கித்துள்-றூகம்-புல்லுமலை அகிய இடங்களில் மலையகத் தமிழர்களைக் குடியேற்றுவதிலும் அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.டபிள்யூ.தேவநாயகத்தின் அனுசரணையுடன் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருபவர். கிழக்கு மாகாணத்தின் மண்ணினதும் மக்களினதும் சமூக, பொருளாதார அரசியல் மேம்பாட்டின்மீது அதீத அக்கறையும் வற்றாத வாஞ்சையும் கொண்டவர். ஊழலற்ற நேர்மையான அரச உயர் அதிகாரி, கடமையில் கர்மவீரர். 1960 களில் மரியசிங்கம் பொத்துவிலில் கல்முனைப் பிரிவு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் ‘ரி.ஏ’ ஆக வேலை செய்கின்ற நாட்களிலிருந்தே கோகுலன் மரியசிங்கத்தை அறிந்தும் கேள்விப்பட்டுமிருந்தான். பின்னாளில் அவர் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தில் இணைந்து படித்து நீர்ப்பாசனப் பொறியியலாளரானார்.
கோகுலனும் பின்னாளில் நீர்ப்பாசன திணைக்களத்தில் ‘ரி.ஏ’ ஆக இணைந்து கொண்டபோது இருவருக்கிடையிலான ஊடாட்டம் நெருக்கமானது.
அம்பாறை மாவட்டத்தில் கோகுலன் எவ்வாறு பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரட்ணத்துடன் நெருக்கமாக ஊடாடி அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தானோ அது போலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மரியசிங்கம் ‘என்ஜினியர்’ கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகத்துடன் நெருக்கமாக இருந்து மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களின் எதிரகால நலன்களுக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்தார். இருவருக்கும் பொதுவான கிழக்கு மகாண அபிவிருத்தி என்ற விடயம் இருவரையும் இறுக்கமாக இணைத்து வைத்திருந்தது. இந்தப் பின்னனியிலேயே மரியசிங்கத்தைக் கோகுலன் வந்து சந்தித்தான்.
நல்லரட்ணம் கோகுலனைப் பார்த்துத் “தம்பி! கோகுலன் அம்பாறையில நிலம வேற. அங்கிருக்கிற தொகுதிகள் எல்லாத்துக்கும் எம்.பி.மார் ஆளும்கட்சி ஆட்கள்தான். கல்முனத் தொகுதிய எடுங்க. எம்.பி.மன்சூர் யூ.என்.பி. சம்மாந்துறய எடுங்க. எம்பி.அப்துல்மஜீத், அவரும் யூ.என்.பிதான். பொத்தவில எடுங்க, அங்க வந்திருக்கின்ற முதலாவது எம்.பி. ஜலால்டீனும் இரண்டாவது எம்.பி.கனகரட்ணமும் கூட்டணியில நிண்டு வெண்டாலும் இப்ப அரசாங்கத்தின் பக்கம் மாறித்தார்தானே. ரெண்டுபேரும் ஆளும் கட்சிதான். அம்பாறத் தொகுதி எம்பி.தயாரட்ன அவரும் யூ.என்.பி. இப்படி எல்லாரும் அரசாங்க கட்சியில இரிக்கிறபடியா அங்க எல்லாம் சுமுகமாக நடக்கிது” என்றார்.
கோகுலன் “ஓம்! அதெண்டாச் சரிதான். ஆனா அங்கயும் சில பிரச்சனைகள் நடந்ததுதான். அம்பாறை மாவட்டத்தில அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுக்கல்முனைத் தொகுதியும் பொத்துவில் தொகுதியில காரைதீவு – நிந்தவூர் பிரதேசங்களும்தான். அப்படியிருந்தும் ஆரம்பத்தில கொழும்பில இரிந்து வந்த நிவாரணப் பொருட்களெல்லாம் அம்பாற நகரப் பகுதியிலதான் அதிகமாக விநியோகிக்கப்பட்டிரிக்கி. ஆனாப் புறகு கல்முன எம்.பி மன்சூர் தலையிட்டு அதச் சரிப்படுத்திப் போட்டார்” என்றான்.
“இதில என்னெண்டாக் கோகுலன் அரசாங்கமும் பாரபட்சமாகத்தானே நடக்கிது. அதிக அளவில சூறாவளியால பாதிக்கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு. ஆனா உடனடி நிவாரணங்கள அம்பாற மாவட்டமும் பொலனறுவ மாவட்டமும் பெற்றுக் கொண்ட அளவுக்கு மட்டக்களப்புக்குக் கிடைக்கல்லயே” என்றார் நல்லரட்ணம்.
“ஓம்” நானும் கேள்விப்பட்டதான். கொழும்பிலிரிந்து மட்டக்களப்புக்கு வந்த உணவுப் பொதிகள் ’லொறி’கள அம்பாறயிலயும் பொலனறுவயிலயும் வச்சி மறிச்சு அங்குள்ள ஆட்களுக்குக் கொடுத்ததாம் எண்டு. சூறாவளி நிவாரணம் வழங்கிறதிலயும் அரசாங்கம் இனவாதம் பாக்கிது” என்றான் கோகுலன்.
“ஓம் கோகுலன் அப்பிடியும் நடந்ததுதான். ஆனா மட்டக்களப்பில இப்ப ஒரு மாதிரிப் பிரச்சனயள் சரியாப்போய்த்து. ஒரு விசயத்தச் சொல்லோணும் தம்பி, சூறாவளி அடிச்சி மூணாம்நாளே யாழ்ப்பாணத்திலிரிந்து ‘தமிழ் இளைஞர் பேரவை’ப் பொடியனுகள் மட்டக்களப்புக்கு வந்து நிவாரண வேலைகளைத் தொடங்கிற்றாங்க.
வடபகுதியில இரிக்கிற பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் உணவு – உடை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள மட்டக்களப்புக்கு அனுப்பி வைச்சன. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் லயனல் பெர்ணான்டோவும் தானே முன்னிண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சாமான்கள் அனுப்பினவர்.
மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால பாதிக்கப்பட்ட செய்தியக் கேள்விப்பட்டொன்ன முதலில உதவ வந்தாக்கள் திருகோணமல, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆக்கள்தான். திருகோணமலத் தொகுதி எம்.பி.இரா.சம்பந்தன் திருகோணமலயிரிந்து இயந்திர வள்ளங்கள் மூலமா நிவாரணப் பொருட்களயும் தொண்டர்களயும் மட்டக்களப்புக்கு அனுப்பி வைச்சவர்.
சம்பந்தர்ர முயற்சியால கல்லடி நாவலடியில மூண்டு நாளைக்குள்ள முப்பது வீடுகளக் கட்டிக் குடுத்திருக்காங்க. வவுனியா எம்பி.தா.சிவசிதம்பரம் நல்லொரு திட்டம் வகுத்தார். கூட்டணி எம்பி மார் ஒவ்வொருவருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில ஒவ்வொரு கிராமத்தப் பொறுப்பெடுத்து நிவாரண வேலைகள முன்னெடுக்கவேணும் என்று சொல்லி அவரும் தொண்டர்களோடயும் பொருட்களோடயும் வவுனியாவில இரிந்து வந்து போக்குவரத்து வசதிகள் குறைந்த உட்கிராமங்களுக்கும் போய் உதவிகள் செய்தவர்.
யாழ்ப்பாணத்தில இரிந்த பல பொது அமைப்புகளும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களும் தாம் அங்கு சேகரித்த சுமார் பன்ரெண்டு லொறிகளோட வந்து நிவாரணப் பணிகளில ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாங்க. ஆயித்தியமலக் கிராம மக்கள பசி, பட்டினி, மழை, வெய்யில இரிந்து காப்பாத்தினது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்தான்”. நல்லரட்ணம் இவ்வாறு சொல்லிக் கொண்டுபோக கோகுலன் இடைமறித்து,
“ஓம்! எனக்கும் தெரியும். சூறாவளி அடிச்ச உடனேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில படிச்சுக் கொண்டிருந்த கிழக்கு மாகாணப் பொடியன்களோட சேந்து குணசேகரம் எண்ட யாழ்ப்பாணப் பொடியனும் வந்தவர். அதத் தொடர்ந்து புறகு இன்னும் பலபேர் வந்து சேதமடைந்த வீடுகளின் கூரயளச் செப்பனிடுறத்திலயும் உள்ளுர்ப் பாதைகளச் சீர்செய்வதிலயும் குடி தண்ணீர்க் கிணறுகளத் துப்பரவு செய்ரதிலயும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாங்க எண்டு கேள்விப்பட்ட நான்” என்றான்.
“ஆனா நம்மட எம்.பி மார் அதுக்குள்ளயும் அரசியல் வேறுபாடுகளயும் யாழ்ப்பாணத்தான் – மட்டக்களப்பான் என்ற பிரதேச வேறுபாடுகளயுமெல்லா தூக்கிப் பிடிக்கிராங்க” என்றார் நல்லரட்ணம்.
“ஏன்? பிறதர் என்ன நடந்தது?” என்று கேட்டான் கோகுலன்.
“வவுனியா எம்.பி சிவசிதம்பரம் மட்டுமில்ல திருகோணமல எம்.பி சம்பந்தர் மட்டுமில்ல எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத் தொகுதி எம்.பி யோகேஸ்வரன், மன்னார்த் தொகுதி எம்.பி. சூசைதாசன் ஆகியோரும் சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிர துயர்துடைக்க முன்வந்தவர்கள். இவர்கள் பல தடவைகள் நிவாரணப் பொருட்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வந்து போயிருக்காங்க” என்றார் நல்லரெட்ணம்.
“சூசைதாசன் எம்.பி மன்னார் வங்காலையைச் சேர்ந்தவர்! ‘ஸாம்பியா’ வில ‘அக்கவுண்டனா’ வேல செய்தவரத்தான். அமிர்தலிங்கம் கூப்பிடுவிச்சி மன்னார்த்தொகுதியில 1977 இல் ‘எலக்சன்’ கேக்க வைச்சவர். அழகக்கோன் செத்தாப் புறகு மன்னாரில வேற நல்ல ஆக்களும் இல்லத்தானே. அதுதான் அமிர்தலிங்கம் அவரக் கூப்பிட்டெடுத்த. அவர் ஆரெண்டு தெரியுமா பிறதர்? நம்மட தன்னாமுனையில இரிக்கிற ‘லீனா மாஸ்ரர்’ சூசைதாசன் எம்.பி. க்குச் சித்தப்பா?” என்றான் கோகுலன்.
“ஏன் திருகோணமல எம்.பி சம்பந்தன் நம்மட சாம். தம்பிமுத்து ஆக்களுக்குச் சொந்தம்தானே” என்ற நல்லரட்ணம், “அது ஒரு பக்கமிரிக்கட்டும் கோகுலன். விசயத்துக்கு வருவம்” என்று கூறி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
“நம்மட மட்டக்களப்பு எம்.பி மார் அதுவும் அரசாங்கச் சார்பு எம்.பி மார் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில இரிந்து அதுவும் யாழ்ப்பாணத்திலிரிந்து மட்டக்களப்புக்கு வந்து எவரும் நிவாரணப் பணிகளில ஈடுபடுறத விரும்புறாங்க இல்ல” என்றார் நல்லரட்ணம்.
“ஏன்? என்ன காரணம்”? என்ற வினாவை எழுப்பினான் கோகுலன்.
“அவங்க இஞ்ச சூறாவளியால பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு உதவுறமாதிரி வந்து தங்கட அரசியல வளக்கத்தான் வாறாங்களாம். கிட்டடியில மட்டக்களப்பு விமான நிலயத்தில வச்சி அமிர்தலிங்கத்திற்கும் தேவநாயகத்துக்குமிடையில நடந்த வாக்குவாதத்தக் கேட்டீங்க எண்டா” என்ற பீடிகையோடு அந்தச் சம்பவத்தை விபரித்தார் நல்லரெட்ணம்.
மட்டக்களப்புக் கச்சேரியில் ஜனாதிபதி தலைமையில் சூறாவளி நிவாரண மகாநாடு ஒன்று நடைபெறவிருந்தது. அம்மகாநாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் திரு.அமிர்தலிங்கம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திரு. மொண்டேகு ஜயவிக்கிரம, மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர் திரு.ம.கனகரத்தினம், பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கம், மட்டக்களப்புத் தொகுதி இரண்டாவது உறுப்பினர் ஜனாப் பரீத்மீராலெப்பை ஆகியோர் வந்து காத்திருந்தனர். கடைசி நேரத்தில் அம்மகாநாடு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு விமான நிலையத்தில் ஜனாதிபதி அவர்கள் ஒரு விசேட கூட்டம் நடாத்துவதாகக் கச்சேரிக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு காத்திருந்தவர்கள் அவசரம் அவசரமாக விமான நிலையத்திற்குச் சென்றனர். அதற்குள் ஜனாதிபதி கூட்டத்தை முடித்துக்கொண்டு அம்பாறைக்குப் பயணப்பட்டு விட்டார். அவ்வேளையில் நீதி அமைச்சர் திரு. தேவநாயகத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமிர்தலிங்கத்தைப் பார்த்து,
“நீங்கள் அரசியல் காரணங்களுக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நிவாரண வேலைகள் உங்கள் நோக்கமல்ல” என்றார் அமைச்சர் தேவநாயகம்.
“நீங்கள் நிவாரண வேலைகளில் அக்கறை காட்டவில்லை. ஜனாதிபதியை அழைத்துக் ‘கார்ணிவல்’ காட்டுகிறீர்கள்” என்றார் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம்.
அவ்வேளை நீதியமைச்சரின் அருகில் நின்றிருந்த திருமதி தேவநாயகம் அவர்கள் “இங்கு யாழ்ப்பாணத்து ஆட்கள் தேவையில்லை, நம்மை நாமே பார்த்துக்கொள்வோம்.” என்றார்.
“அப்படியானால், ‘மடம்’ நீங்கள் தான் முதலில் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லவேண்டும்” என்றார் திரு. அமிர்தலிங்கம்.
பிரதமர் திரு.ஆர்.பிரேமதாசா அவர்கள் தலையிட்டுத்தான் இவ்வார்த்தைச் சூறாவளியைத் தணிக்க நேர்ந்தது.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்ட நல்லரெட்ணம் “கோகுலன்! இன்னொரு விசயமும் சொல்லிறன் கேளுங்க” என்றார்.
கோகுலன் இடைமறித்து,
“ஓம்! பிறதர் பத்திரிகைகளில இவங்கட அறிக்கைகளப் படிச்ச நான்” என்ற கோகுலன்,
“மட்டுநகர் மாவட்டத்தின் புனர் நிர்மாணத்துக்கான எனது திட்டத்தை ஜனாதிபதியும், பிரதமரும் அங்கீகரித்துவிட்டனர். இந்நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியினர், மட்டுநகர் மக்களின் கண்ணீரில் சொந்த அரசியல் இலாபம் பெற முற்பட்டு வருவது வேதனைக்குரியதாகும். மக்களுக்கு நாம் செய்யவிருக்கும் நற்காரியங்களுக்குத் தடையாக இருக்காதீர்கள். உங்கள் அரசியல் இலாபத்தை வேறு இடத்தில் வேறு விதமாகத் தேடுங்கள். ஆனால் மக்களின் கண்ணீரை அதற்குச் சாதகமாக்கிக் கொள்ளாதீர்கள்.”
என்று தேவநாயகம் சொன்னதற்கு அமிர்தலிங்கம்,
“எம் உடன் பிறப்புக்களான கிழக்குமாகாண மக்கள் சூறாவளியாலும் வெள்ளத்தாலும் இன்று பாதிக்கப்பட்டு, சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்து வரும் வேளை இது. எனவே இரத்த பாசத்துடன் அவர்களுக்கு உதவி புரிய வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும். எனவே இந்த நேரத்தில் பிரதேச, அரசியல், மத வேறுபாடுகளைக் காட்ட முற்படுவது பெரும் பாதகமான செயலாகும்” என்று பதிலிறுத்திருந்ததை நினைவுபடுத்தினான்.
“ஓம்! கோகுலன், நானும் அதுகளைப் பத்திரிகைகளில படிச்சதான்” என்று ஆமோதித்த நல்லரட்ணம் தொடர்ந்தும் சில நிகழ்வுகளைக் கோகுலனிடம் கூறினார்.
மட்டக்களப்புக்கு வடபகுதியில் இருந்து கொண்டுவரப்படும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் போது ஒரு சாரார் அரசியல் பிரசாரம் செய்து வருவதாக மட்டக்களப்புத் தொகுதி முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராசதுரை, மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர் திரு. கனகரத்தினம் அவர்களிடமும், அரசாங்க அதிபர் திரு. டிக்சன் நிலவீரவிடமும் முறையிட்டிருந்தார். காசி ஆனந்தனின் பெயரால் அப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இராசதுரையின் குற்றச்சாட்டை நல்லரட்ணம் கூறக்கேட்ட கோகுலன்,
“காசி ஆனந்தன் ஊரிலயும் இல்ல. அவர் இப்ப மீண்டும் சிறையில. இராசதுரையிர குற்றச்சாட்டுத்தான் அரசியல் நோக்கமுடையது. போனமுற ‘எலக்சினில’ மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில கூட்டணியில தன்னையும் தமிழரசிக்கட்சியிர வீட்டுச் சின்னத்தில காசி ஆனந்தனயும் நிறுத்தினதால அமிர்தலிங்கத்தில இராசதுரைக்கு ஆத்திரம். காசி ஆனந்தன் தன்ன எதிர்த்துக் கேட்டதால காசி ஆனந்தனிலயும் ஆத்திரம். அத வச்சிக்கொண்டுதான் இராசதுரை இப்படிக் குற்றச்சாட்ட முன் வச்சிரிக்கார். இப்படிபட்ட ஆக்களத் தலைவன் என்று சொல்லவே வெட்கமா? இரிக்கி” என்றான் கோகுலன்.
“இப்படியான தலைவனத்தானே தம்பி மட்டக்களப்பு மக்கள் கடந்த 1956 ஆம் ஆண்டிலிரிந்து 1977 ஆம் ஆண்டு வரைக்கும் இருபது வருஷத்துக்குமேல வாக்குப்போட்டு வெல்லவச்சிவருகிதுகள்” என்றார் நல்லரட்ணம்.
“எல்லாம் இந்தத் ‘தமிழ்’ செய்யிற வேல. மேடையில நல்லாத் தமிழ அடுக்கு மொழியில பேசி ஆக்கள உசுப்பேத்தியுட்டா உணர்ச்சிவசப்படுற மக்கள் வாக்குகள அள்ளிப் போடுங்கள். இராசதுரை இருபது வருசத்துக்கும் மேலாக எம்.பி ஆயிருந்து என்ன செய்தவர். அரசியலில தன்ன வளத்துக் கொண்டாரே தவிர மக்கள உயத்தியுடல்ல. தமிழரசிக் கட்சிய வளத்துத் தானும் வளந்தவர். தமிழரசிக் கட்சிக்கும் அவர் மக்களுக்கு வேலை செய்யிராரோ இல்லையோ தங்கட கட்சிக்கு எம்.பி.கிடச்சாப் போதுமெண்டுதானே நடக்கிறாங்க. தமிழரசிக் கட்சியும் புறகு கூட்டணியும் மக்களிட்ட வந்து ‘பாலம் வேணாம்! பாடசாலைகள் வேணாம்! பாதைகள் வேணாம்! சோறு வேணாம்! சுதந்திரம்தான் வேணும்!’ என்று மேடையில உணர்ச்சிவசமாச் பேசினோண்ண நம்மட சனமும் ஏமாந்து வாக்குகள அள்ளிப் போடுதுகள். ஓடுறவனக் கண்டா துரத்திறவனுக்கு லேசுதானே. சனம் ஏமாறிற வரைக்கும் தலைவர்கள் ஏமாத்திக் கொண்டுதானே இரிப்பாங்க. இதுதான் இராசதுரயிட அரசியல்” என்று மூச்சுப்பிடிச்சுச் சொல்லி முடித்தான் கோகுலன்.
“அதுக்காக யாழ்ப்பாணத்தான் – மட்டக்களப்பான் எண்டு பிரதேச வாதம் பேசிறது பிழதானே” என்றார் நல்லரட்ணம்.
“அது பிழதான். நான் அதச் சொல்ல வரல்ல. கிழக்கு மாகாண அரசியல் வரலாற்ற எடுத்துப் பாருங்க. நல்லையா மாஸ்ரர் சட்டசபை உறுப்பினராக இரிக்கக் கொள்ளயும் புறகு கல்குடாத்தொகுதி எம்.பி யா இரிக்கக்கொள்ளயும் செய்த சேவைகளப்போல கிழக்கு மாகாணத்துக்கு வேற எவரும் சேவ செய்யல்ல. ஆனா அவரிட தகப்பன் வல்லிபுரம் யாழ்ப்பாணம்.
1956 ஆம் ஆண்டிலிரிந்து தொடர்ந்து மட்டக்களப்புக்கு எம்.பி யா இரிக்கிற இராசதுர ஆரு. அவரிர தகப்பன் செல்லையா யாழ்ப்பாணம்.
1965 ஆம் ஆண்டிலிரிந்து கல்குடாத் தொகுதிக்கு எம்.பியா இரிக்கிற இப்ப அமைச்சராகவும் இரிக்கிற தேவநாயகத்திர பெற்றோர்கள் ஆரு? யாழ்ப்பாணம்.
இப்ப பொத்துவில் எம்.பி யா இரிக்கிற மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் இரிக்கிற கனகரட்ணத்திர பெற்றோர்கள் ஆரு யாழ்ப்பாணம் அளவெட்டி.
ஆனா, இவங்க எல்லாரும் யாழ்ப்பாணத்தப் பூர்வீகமாகக் கொண்ட ஆக்களெண்டாலும் தமிழரசிக் கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்ணியினதும் யாழ் மேலாதிக்க அரசியலுக்கு எதிராகத்தானே தங்கட அரசியல முன்னெடுத்து வாறாங்க – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு என்ற பிரதேச வாதம் பிழதான். அதுக்காக யாழ் மேலாதிக்க அரசியல மட்டக்களப்பு ஆக்கள் ஏத்துக்கொள்ள ஏலாதுதானே. யாழ்ப்பாணத்தவர்களான நல்லையா மாஸ்ரர், இராசதுரை, தேவநாயகம், கனகரட்ணம் ஆக்களே யாழ் மேலாதிக்க அரசியல ஏத்துக்கொள்ளல்லத் தானே” என்றான் கோகுலன்.
இவ்வாறு கூறிய கோகுலன், நல்லரட்ணத்தை பார்த்து “இன்னொரு சம்பவமும் கேள்விப்பட்ட நான்” என்றான்.
“அதென்ன?” ஆர்வத்துடன் கேட்டார் நல்லரெட்ணம்.
மட்டக்களப்பு அரசடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சூறாவளி நிவாரண வேலைகளில் ஈடுபட்டு வந்த வடபகுதி இளைஞர் குழுக்களை 24 மணிநேரத்திற்குள் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுமாறு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மட்டுநகர் பொலிஸ் தலைமைக்காரியாலய இன்ஸ்பெக்டரும், மாவட்ட கல்வி அதிகாரியும் இந்தக் கட்டளையை அறிவித்தனர்.
இவ்வெளியேற்ற உத்தரவு குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.அமிர்தலிங்கம், மாவட்ட அமைச்சர் திரு.கனகரட்ணத்திடம் முறையிட்டபோது ”நான் வேளாண்மை வெட்ட வந்தவன் எல்லைபார்க்க வந்தவனல்ல” எனக் கூறியுள்ளார் கனகரட்ணம்.
இந்தச் சம்பவத்தைக் கோகுலன் குறிப்பிட்டபோது நல்லரட்ணம் “வடபகுதியில இரிந்து வந்துள்ள தொண்டர்கள் அரசியல் பிரச்சாரத்தில ஈடுபடுவதாகவும் அதனால் வடபகுதியிலிருந்து வரும் பொருட்கள மட்டக்களப்பு அரசாங்க அதிபரே பொறுப்பேற்க வேண்டும்” என்று இராசதுரை எம்.பி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“ஆனா இப்ப எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்தித்து எண்டுதான் அறிஞ்சநான்” என்றான் கோகுலன்.
“மட்டக்களப்பு மாவட்ட நிவாரணக் குழுவின் தலைவரும், நீதி அமைச்சருமான திரு.கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்கள் ஒழுங்கற்ற ஊடுருவலைத் தடுத்தமுறை சிறப்பானது. பொலனறுவை – மட்டக்களப்பு வீதி, பதுளை – மட்டக்களப்பு வீதி, அம்பாறை – மட்டக்களப்பு வீதி ஆகிய மூன்று முனைகளிலும் இராணுவ பொலிஸ் பாதுகாப்புகளை ஒழுங்குசெய்து, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வரும் நிவாரணப் பொருட்களைக் கச்கேரி நோக்கி ஒருமுகப்படுத்தியுள்ளார்.
தொண்டு புரிகின்றோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் எமது பகுதிக்குள் புகுவதை நான் விரும்வில்லை. நிவாரண வேலைகளில் ஈடுபட விரும்பும் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் புனருத்தாரண சபை மூலமாகவே சகலதையும் மேற்கொள்ள வேண்டும். வெளி உதவியாளர்கள் எமக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்” என்று நல்லரட்ணம் விளக்கமளித்தார்.
பின் கோகுலனிடம்,
“கோகுலன் இதுகளப்பத்தி நாம தொடர்ந்து விவாதிப்பம். இப்ப கிளிநொச்சியிலிருந்து பரந்தன் ராஜண்ட தலைமையில கொஞ்சப் பொடியன்கள் சூறாவளி நிவாரண வேலைகளுக்கெண்டு வந்திரிக்கிறாங்கள். அவங்க இப்ப வாழச்சேனப் பக்கம் போறதிக்கு ‘வான்’ னில வருவாங்க. நாங்கதான் அவங்கள வழிகாட்டி மரியசிங்கம் அண்ணன்ட காரில வாழச்சேனைக்குக் கூட்டிப் போகப்போறம். ஏலுமெண்டா நீங்களும் காரில எங்களோட வாங்களன் கோகுலன்” என்றார்.
“ஓம் நானும் வாறன். முகத்துவாரம் வீட்ட ஓடிப்போய்ச் சொல்லிப் போட்டுத் திரும்பி வாறன்” என்ற கோகுலன் வெளியே வீதிக்கு வந்து முகத்துவாரம் செல்வதற்குத் தனது மோட்டார் சைக்கிளை ‘ஸ்ரார்ட்’ செய்தான்.
(தொடரும் …… அங்கம் – 51)