இலங்கைக்குக் கிடைத்துள்ள மாற்று அரசியல் தலைமை. வடக்குக்கிழக்குத் தமிழர்களுக்கு மதிநுட்பம் நிறைந்த மாற்று அரசியல் செல்நெறி அவசியம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!— சொல்-23)

இலங்கைக்குக் கிடைத்துள்ள மாற்று அரசியல் தலைமை. வடக்குக்கிழக்குத் தமிழர்களுக்கு மதிநுட்பம் நிறைந்த மாற்று அரசியல் செல்நெறி அவசியம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!— சொல்-23)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

   — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ல் நடந்து முடிந்து, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார்.

 தொகுதி ரீதியான-மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகளும் அனுரகுமார திசாநாயக்காவின் வெற்றியும் இலங்கையில் இன, மத வாதமற்ற-ஊழல் மோசடிகள் விரயங்களற்ற-வெளிப்படைத் தன்மையான-சட்டம் ஒழுங்கை முறையாகப் பேணுகின்ற-உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கின்ற-வாக்களிக்கும் மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஓர் அரச நிர்வாகத்தை அதாவது முறைமை மாற்றத்தையே பெரும்பான்மைத் தென்னிலங்கைச் சிங்கள சமூகம் அவாவி நிற்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

 வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை வலதுசாரிச் சிந்தனைகளைக் கைவிடாத-இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகளின்பால் பெருமளவு ஈர்ப்புக் காட்டாத அதேவேளை தமிழ்த் தேசியம் எனும் கருத்தியல் குறித்த தெளிவான சிந்தனைகளும் செயற்பாடுகளுமற்றதொரு மனோநிலையைத்தான் வெளிக்காட்டியுள்ளனர்.

 இதற்குக் காரணம் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்ட கட்சிகளால் ஊட்டப் பெற்ற போலித் தமிழ்த் தேசிய மாயையும் இணக்க அரசியல் கட்சிகளால் போதிக்கப்பட்ட சந்தர்ப்பவாத-வலதுசாரி அரசியல் சிந்தனைகளுமேயாகும்.

 இவற்றிலிருந்து வடக்குக் கிழக்கு தமிழர்கள் விடுபட வேண்டிய அல்லது விடுவிக்கப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

 தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு திருப்தியான அரசியல் தீர்வையும் பெற்றுத் தரமுடியவில்லை; குறைந்தபட்சம் உருப்படியான அதிகாரப் பகிர்வையும் எட்டமுடியவில்லை. அதேவேளை அபிவிருத்தியையும் அடைய முடியவில்லை.

 இணக்க அரசியல் கட்சிகளால் முழுமையான அபிவிருத்தியையும் அடைவாகப் பெறமுடியவில்லை; அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளையும் முன்னெடுக்க முடியவில்லை.

 இந்த அனுபவப் பின்னணியில் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வு முயற்சிகளையும் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் சமகாலத்தில் சமாந்தரமாகக் கொண்டு செல்லக்கூடிய ‘திசைகாட்டி’ யொன்று தேவைப்படுகின்றது.

 இத்திசை காட்டியை இது நாள் வரை தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளாலோ அல்லது இணக்க அரசியல் கட்சிகளாலோ தமிழ் மக்களுக்கு பெற்று தர முடியவில்லை. இனியும் முடியும் என்பதற்கான நம்பிக்கையுமில்லை.

 எனவே, வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கிடையே ஒரு புதிய அரசியல் கலாசாரமும் செல்நெறியும் தோற்றம் பெறவேண்டியதைக் காலம் இப்போது உணர்த்தி நிற்கிறது.

 இதனை அரசியல் மதிநுட்பத்துடன் கையாளக்கூடிய முற்றிலும் புதிய அரசியல் தலைமையொன்றினை-அரசியல் வழிகாட்டி ஒன்றினைத் தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

   இதனை அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரக்கூடிய பாராளுமன்றப் பொதுத் தேர்தலாகும்.

 தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் இதுவரை காலமும் நிலவிய சூழ்நிலையைக் கணக்கிலெடுக்கும் போது தேர்தல்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பதின்மூன்று தமிழ் அரசியல் கட்சிகளும் தனியாகவோ அல்லது தமக்குள் கூட்டுச் சேர்ந்தோ வடகிழக்கு மாகாண அரசியல் களத்தில் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கத்தான் போகின்றன.

 அப்படியானால், தமிழ் மக்களுடைய அரசியல் ஐக்கியம் என்பதும் அரசியல் பலம் என்பதும் ‘எண்ணெய்ச்சீலையை நாய்கள் இழுத்துப் பிய்த்தது’ போலவே ஆகும்.

 இந்த நிலையில் மேற்படி கட்சிகளையெல்லாம் முற்றாக நிராகரித்து முற்றிலும் புதிய தனியான அரசியல் வாய்ப்பாடு ஒன்றின் மேலெழுகையே தமிழ் மக்களுக்கு அரசியல் பலத்தைக் கொண்டு வரும்.

 அந்த அரசியல் பலத்தை அடைவதாயின் தேசிய அரசியல் நீரோட்டத்துடன் பயணிப்பதே அரசியல் மதிநுட்பம் வாய்ந்ததாகும்.

 இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் கைகுலுக்குவதற்குத் தமிழ் மக்கள் இப்போதிருந்தே தம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.