— அழகு குணசீலன் —
அ: அகிம்சை.
ஆ: ஆயுதம்.
இ: இராஜதந்திரம்.
அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும், தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும்.
இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது.
அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது.
ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும் அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அனுரகுமார திசாநாயக்கா இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832.
தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள்.
மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன.
இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில் வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா? அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி சங்கூதிய தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள் காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால் சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது.
இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.
சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார்.
சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார். இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு.
வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும் பொதுவேட்பாளர் அரசியல் கோமாளித்தனம்.
ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன?
* வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள்.
* இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
*வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர்.
*ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
* மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் .
* சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.
இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……!